15. இதுவும் கடந்து போகும்

 ஆஹா கல்யாணம் 

Previous Epi - 14. மறைக்கப்பட்ட வரலாறு 

15.  இதுவும் கடந்து போகும்

உடம்பில் காயம் படாத இடங்கள் மிக மிக குறைவு. கால்களால் அத்தனை வேகமாக நடக்க முடியவில்லை. அந்த ஐம்பத்தியாறு வயது ரத்தின வியாபாரி, ஏ.கே.,விடம் இருந்து தப்பி, பங்களாவின் வாசலை அடைந்தார். தட்டுத்தடுமாறி, பெரிய இரும்பு கதவைத் தாண்டி, மரங்களின் உதவியோடு ECR சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். கால்கள் வலுவிழந்து போனது, மூச்சு சீராக வரவில்லை, கோபமும், அதன் வெளிப்பாடாக அழுகையும் வந்தது. வீங்கிய கண்களோடு, அழுதுக் கொண்டே, தளர்ந்த உடலோடு, மரங்களை பிடித்துக்கொண்டே இரவு பன்னிரெண்டரை மணிக்கு, அந்த காட்டு வழி கடந்து ECR சாலையை அடைந்தார். சென்னை செல்லும் வண்டியில் லிஃப்ட் கேட்டு வீடு போய் சேர எண்ணமிட்ட அவர், சாலையை கடந்து, மறுபக்கம் அடைந்தார். சாலை வெறிச்சோடி இருந்தது. இருட்டாகவும், குளிராகவும் இருந்தது. பாண்டுரங்கனால் வெகுநேரம் நிற்க முடியவில்லை. சாலையின் அடியில் ஓடை ஒன்று இருக்க, சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த சுவர் மீது ஓய்வெடுக்க அமர்ந்தார்.

     பங்களாவினுள்ளே, தேக்கு மரத்தினால் செய்யப்பட்டிருந்த பெட்ரூம் கதவினை உடைத்து, தங்களை விடுவித்துக்கொள்ள அடியாட்கள் பெரும் முயற்சி செய்துக்கொண்டிருந்தனர்.

“டேய்.. எல்லாரோட பேக்கும் கரெக்ட்டா இருக்கா?” விஷ்ணு கொண்டுவந்த  ட்ராவலர்ஸ் ஸ்பெஷல் பேக்கை தன் முதுகில் மாட்டிக்கொண்டு, அனைவரின் நிலைமையைப் பற்றி, விஜய் விசாரித்தான்.

“அடேய்.. கிளம்பலாம் டா.. பேக் முக்கியமில்ல.. உசுரு முக்கியம்.. அந்த ஸ்நாக்ஸ் பேக்கும் முக்கியம்” சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இந்த அமலிதுமலி ஆரம்பித்த காரணத்தினால், ஒழுங்காக சாப்பிடாத விக்னேஷ், வருத்தத்தில் பேசினான்.

“என்னோட பேக் சேஃப்” மாப்பிள்ளை தனது மணமகளுக்காக வாங்கிய வைர மோதிரம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு சொன்னான். 

“அந்த ஆல் கூட பிசினஸ் பண்ண வேண்டாம்னு அப்போவே சொன்னேன் கேட்டியா” விக்ரம் புலம்பினான்.

“அத பத்தீல்லாம் அப்றம் பேசலாம்.. ஆளுக்கொரு கை குடுங்க.. இந்த வண்டிய பின்னாடி தள்ளுனாதான் நம்ம வண்டிய எடுக்க முடியும்”

     ஏ.கே.,வின் அடியாட்கள் நிறுத்திய மஹிந்த்ரா தார் வண்டியை கைகாட்டி விஜய் சொன்னான். அந்த ட்ராவலர் பேக்கில் இருந்து கம்பியை போல ஏதோ ஒன்றை வெளியே எடுத்து, அதன் தலையை பிடித்து திருக, அந்த கம்பி, இரும்பு தடிபோல உயரமானது. அதை வைத்து, காரின் ஜன்னல் கண்ணாடியை மிக எளிதாக உடைத்து, உள்ளே தனது கையை விட்டு, ஹாண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்தான். மீண்டும் அதன் தலையில் கைவைத்து அழுத்த, வெறும் கைபிடி உயரத்திற்கு அந்த கம்பி சுருங்கியது. அதை ட்ராவலர்ஸ்  பேக்கில் போட்டான். அனைவரும் வந்து, வண்டியை தள்ள உதவினர்.

     அதே நேரத்தில், நீச்சல் குளத்தின் அருகில், பாட்டிள்களால்  தாக்கப்பட்டு, மயங்கி விழுந்துகிடந்த ஏ.கே., கண்விழித்தார். தலையிலிருந்து ரத்தம் வந்துக்கொண்டிருந்தது. பங்களாவினுள்ளே 'டம்.. டம்..' என்று சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எழுந்து தல்லாடியபடி நடந்து வீட்டினுள் போனார். கூடத்தை அடைந்தபோது, அந்த 'டம்.. டம்..' சத்தம் படுக்கை அறையில் இருந்து வருவதையும், அந்த அறையின் கதவு வெளியே தாழிட்டு இருப்பதையும் கவனித்தார். தலையில் இருந்து வழிந்து அவர் முகத்தில் ஓடிய ரத்தத்தை துடைத்தபடி, படுக்கை அறை கதவை நோக்கி நடந்தார். அதே நேரம் வெளியே ஏதோ சத்தம் கேட்க, அது என்ன என்று முதலில் பார்க்க எண்ணி, வாசல்கதவை நோக்கி நடந்தார்.

“மச்சி.. இன்னும் கொஞ்சம் தல்லனும் டா.. புஷ்.. புஷ்”

     அறுவர் இணைந்து, மஹிந்த்ரா தாரை பின்னுக்கு தள்ளி, தங்கள் மஹிந்த்ரா ஸ்கார்பியோ வெளியே செல்ல வழி செய்துகொண்டிருப்பதை கவனித்தார். தன் சட்டையிலும், பாண்ட்டிலும் எதையோ கைவைத்து தேடினார். மீண்டும் நீச்சல் குளத்தின் அருகில் சென்றார். தான் விழுந்துக்கிடந்த இடத்தின் அருகிலிருந்து எதையோ கையில் எடுத்தார். மிக கம்பீரமாக நடந்து, பங்களாவின் வெளிப்புறம் சுற்றி, விஜயும் அவன் நண்பர்களும் காரை தள்ளிக்கொண்டிருந்த இடத்திற்கு தூரத்தில் நின்றார். தனது குட்டி துப்பாக்கியை வைத்து, வண்டி தள்ளிக்கொண்டிருந்தவர்களை குறி பார்த்தார்.

     வண்டியை பின்னுக்கு தள்ளிக்கொண்டிருந்த விஜய் சட்டென்று  திரும்பி பார்க்க,

“டேய்.. ஓடுங்க.. டா..” என்று கத்தினான்.

அனைவரும் விஜய்யை பார்க்க, அவன் பார்க்கும் திசையில் அனைவர் பார்வையும் திரும்பியது. இருட்டில் ஒரு உருவம் தெரிந்தது, ஆனால் முகம் தெரியவில்லை. அந்த உருவம் நிச்சயமாக ஏ.கே.,வாக தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தனர். அந்த உருவம், கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு நிற்பதை பார்த்த அனைவர் மனதிலும் திகில் சூழ்ந்தது. அடிதடிக்கு அஞ்சாத அந்த நெஞ்சங்கள், துப்பாக்கியை கண்டதும் நடுங்கியது. ஒரு நொடி கூட தாமதிக்காமல், தாங்கள் வந்த காரை நோக்கி அனைவரும் ஓட, விஜய் அங்கேயே நின்று, இருட்டில் இருந்த உருவத்தை உற்றுப் பார்த்தான். வெறி தலைக்கேறி, பேயின் கண்கள் போல, ஏ.கே.,வின் கண்கள் இருப்பது, அவனுக்கு நன்கு புலப்பட்டது. மறு நொடி, துப்பாக்கியிலிருந்து குண்டு வெளிபடும் சத்தம் கேட்டது, தாங்கள் வந்த வண்டியில் ஏறி, ஓட்டுனர் சீட்டில் இருந்த விஷ்ணு, அவன் அருகில் இருந்த விக்ரம், மற்றும் பின் சீட்டில் இருந்த, வருண், விவேக் மற்றும் விக்னேஷ், அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள். கண்சிமிட்டும் நேரத்தில் வெளியே வந்த குண்டு, விஜய் மீது பாய்ந்ததா, இல்லையா என்று யாருக்கும் புரியவில்லை.

துப்பாக்கியிலிருந்து குண்டு புறப்பட்ட மறு நொடி, விஜய் அந்த மஹிந்த்ரா தாரின் சக்கரத்தின் அருகில் விழுந்தான். கீழே விழுந்தவனை, அனைவரும் பார்த்தனர். சட்டென்று அந்த ட்ராவலர்ஸ் பேக்கில் இருந்து எதையோ எடுத்து, வண்டியின் முன் சக்கரத்தில் குத்தினான், பின் சக்கரத்தை குத்த அவன் நகர்ந்த போது மீண்டும் ஒரு குண்டு சத்தம். பின் சக்கரத்தை குத்திய பின்பு, எழுந்து ஓடி, வண்டியின் மறு பக்க சக்கரங்களையும் ஓட்டையாக்கினான். இதற்கிடையில் பல குண்டு சத்தங்கள் கேட்டது. மரத்திலும், சுவற்றிலும், விஜய் காலுக்கு அருகிலும், தலைக்கு அருகிலும், இன்னும் எங்கெல்லாமோ குண்டு சென்றது. அனைத்திலிருந்தும் தப்பி, காரின் பின் சீட்டில் நான்காவது ஆளாக உள்ளே புகுந்தான்.

     குண்டுகள் தீர்ந்ததும், இவர்களை நோக்கி அந்த உருவம் நடக்கத் தொடங்கியது. மிக வேகமாக அந்த உருவத்திற்கும், தங்கள் காருக்கும் இருக்கும் இடைவெளி குறைந்துக் கொண்டிருந்தது. பயத்தில் அனைவருக்கும் உடல் நடுங்கியது.

“கிளம்பு.. கிளம்பு..” என்று விஜய் சொல்லி கத்த, “எனக்கு ஓட்ட தெரியாது” என்று அழுதபடி விஷ்ணு சொன்னான். அந்த உருவம், அருகில் வந்துக்கொண்டிருந்தது.

     விக்ரம், விஷ்ணுவை பிடித்து தன் சீட்டின் பக்கம் இழுக்க, பின் சீட்டிலிருந்த விஜய், அப்படியே ஓட்டுனர் இருக்கைக்கு தாவ முயற்சிக்க, அனைவரும் அவனை தூக்கிவிட்டார்கள். இதற்கிடையில் அந்த உருவம் மிக அருகில் வந்து காரின் கதவில் கை வைத்தது. முகம் முழுக்க ரத்தமும், கண் முழுக்க வெறியுமாக, பார்க்கவே மிக கடூரமாக ஏ.கே., இருந்தார்.

வண்டி ஆன் செய்யப்பட்டது. பின்னால் இருந்த காரை இடித்துக்கொண்டு, வாசலை நோக்கி சென்றது. அப்படி போகையில், விஜய் தனது கையில் இருந்து ஏதோ ஒன்றை, ஓட்டுனர் இருக்கையின்  ஜன்னல் வழியே, ஏ.கே., மீது போட்டான். அது ஒரு காலி டப்பா. அது அவர் நெஞ்சில் பட்டு, கீழே விழுந்தது. அதை கையில் எடுத்து பார்த்தவர் முகம் மேலும் கோபத்தீயில் எரிந்தது. மீண்டும் வானத்தில் மின்னலும் இடியும் தோன்றியது.

“என்ன மச்சி, வெடிகுண்டா?”

     விஜய் தூக்கிப்போட்ட நேரமும், இடி இடித்த நேரமும் ஒன்றாக இருக்க, விக்னேஷ் அவ்வாறு கேட்டான்.

“டேய்”

“பின்ன என்ன டா?.. அந்த பேக்ல இருந்து என்ன என்னவோ எடுக்குற... நீ ‘ட்ராவலர்ஸ் பேக்’னு சொன்னப்போ புரியல.. இப்போ கொஞ்சம் புரியுது.. நீ எங்கலாம் டிராவல் பண்ண?”

கேட்டுக்கொண்டே, அவனிடமிருந்த பேக்கை வாங்கி, உள்ளே கைவிட்டுப் பார்த்தான். இரண்டு பர்பி பாக்கெட்டும், நான்கு முறுக்கு பாக்கெட்டும், ஒரு தேன் மிட்டாய் பாக்கெட்டும் தான் இருந்தது. பசியில் இருந்த அவன், முறுக்கு பாக்கெட்டை பிரித்து சாப்பிடத் தொடங்கினான்.

“கொஞ்சம் வேகமா போலாம்ல?” கல்யாண மாப்பிள்ளை கவலையோடு கேட்க,

“எந்த டையர்லையும் காத்து இல்ல, மெயின் ரோட் போனா, கொஞ்சம் வேகமா போகலாம்.. ரொம்ப ஸ்பீட் இல்ல, பட் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் தாங்கும்”

     அந்த பங்களாவின் மெயின் கேட்டை தாண்டவே ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியது. மெயின் கேட்டின் ஒருபக்கம் திறந்தே இருந்தது. அவசரத்தில் உள்ளே வந்தவர்கள் கதவை அடைக்காமல் வந்துவிட்டனர் என்று அனைவருக்கும் புரிந்தது. மஹிந்த்ரா ஸ்கார்பியோ வெளியே செல்ல, அந்த பாதி திறந்த கதவின் வழியே போதுமானதாக இருந்தது. செக்யூரிட்டி அறை வெளியே இருந்து பூட்டப்பட்டிருப்பதை அனைவரும் கவனித்தனர். முருகேசனுக்கு, உதவி செய்யும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை என்பதை நினைத்து வருந்தினர். வண்டி அசைந்து அசைந்து, காட்டு வழியே, ECR-ஐ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

வெகு நேரம் கடந்தும், தன்னை காப்பாற்ற எந்த வாகனமும் வராமல், வலியுடனும், தன் மகள் அந்நேரம், அமெரிக்கா செல்லும் விமானத்தை பிடிக்க, நிச்சயமாக புறப்பட்டிருப்பாள், வழியனுப்ப முடியாமல் போனதே என்ற கவலையோடும் பாண்டு, சாலையோரம் இருந்த கால்வாயின் தடுப்புச்சுவரில் அமர்ந்துக்கொண்டிருந்தார்.

தனது துப்பாக்கியிலிருந்து வெளியே தப்பி சென்ற காரின் வேகத்தை தன் மனதில் ஏ.கே., குறித்துக்கொண்டார். கார் சென்ற பிறகு, பங்களாவினுள் சென்றார். படுக்கையறையின் கதவை உடைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்த அவரின் அடியாட்கள் அதுவரை உடைத்தபாடில்லை. பொறுமையாக நடந்து, கூடம் தாண்டி, சமையலறையின் அருகில் இருந்த அவிழக மேசையின் ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு மூச்சு வாங்கியபடி அமர்ந்தார். தண்ணீர் பாட்டிளை எடுத்து, படுக்கை அறையின் கதவை பார்த்துக்கொண்டே, நிதானமாக தண்ணீர் குடித்து, முகமும் கழுவினார். அவர் பாட்டிளை மூடும் நேரமும், அந்த தேக்கு மரத்து கதவு உடையும் நேரமும் ஒன்றாக இருந்தது.

உள்ளே இருந்து நால்வரும் ஒன்றாக ஒரே நேரத்தில் அந்த கதவின் மீது பாய்ந்து, கதவை உடைத்துக்கொண்டு, கூடத்தில் வந்து விழுந்தனர். நிமிர்ந்து பார்த்தபோது, எதிரில், புன்முறுவல் செய்தபடி ஏ.கே., அமர்ந்திருந்தார். தங்கள் மீதிருக்கும் தூசிகளை தட்டிவிட்டபடி, நால்வரும் எழுந்தனர்.

“சார்.. நீங்க சேஃப் தான?”

“ம்ம்ம்.. உயிரோட தான் இருக்கேன்” மிக நிதானமாக பதில் சொன்னார்.

“துப்பாக்கி சத்தம் கேட்டுது.. ஆல் காலியா சார்?”

     ஏ.கே.,வின் முகத்தில் இருந்த பொறுமையின் சாயலை பார்த்ததினால் வேலுவிற்கு வந்த சந்தேகம் அது.

“இல்ல வேலு, கால் காலி..”

யாருக்கும் அவர் சொன்னது புரியவில்லை. மனதளவில் சோர்ந்துவிட்டார் என்பது மட்டும் அனைவராலும் உணர முடிந்தது.

“அந்த பெட் ரூமோட பேக் ஸைட்ல ஒரு டோர் இருக்கு தெரியுமா?” கனிந்த குரலில் ஏ.கே., கேட்க, அனைவரும் திரும்பி அந்த அறையை நோக்கினர். எவ்வாறு பக்கத்து அறையின் பின்பக்கம் ஒரு வாசல் இருக்கிறதோ அதே போல இவர்கள் நால்வரும் அடைக்கப்பட்ட அறையிலும் பின் வாசல் இருக்கிறது என்பதனை அப்போதுதான் அவர்கள் பார்த்தார்கள். என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல், அனைவரும் தலைகுனிந்து நின்றுக்கொண்டிருக்க,

“லெட்ஸ் மூவ்..!” என்று ஏ.கே., கர்ஜித்தார்.

     அவர் மனம் சோர்வடையவில்லை என்பதும், தங்கள் முட்டாள்தனத்தின் மீது இருக்கும் கோபத்தின் வெளிபாடே அந்த அமைதியின் காரணம் என்றும், புரிந்துக்கொண்டார்கள். ஏ.கே.,வின் கர்ஜனை, அனைவரைவும் துரிதப்படுத்தியது. வேகமாக வெளியே சென்றனர். தங்கள் கார் டையர்கள் காத்து இல்லாமல் இருந்த போதிலும், அதிலே அனைவரும் ஏறி, வாசல் நோக்கி, பயணப்பட்டனர்.

“எங்க சார் போகணும்?”

“ECR ரீச் பண்ணி ரைட் எடு, அங்க தான் பசங்க இருப்பானுங்க.. ஐ கெஸ்”

மிகவும் எதார்த்தமாக ஏ.கே., சொல்ல, அதில் நிச்சயம் ஏதோ அர்த்தம் இருக்கும் என்று வேலு நம்பி, நான்கு சக்கரங்களிலும் காத்து இல்லாமல் கேட் வரை மஹிந்த்ரா தாரை ஓட்டிச் சென்றார். அங்கிருந்து, தனது ரோல்ஸ் ராய்ஸை ஏ.கே., எடுத்து, மிக நிதானமாக பங்களாவின் வெளியே சென்றார். அவரை பின்தொடர்ந்து மஹிந்த்ரா தார் சென்றது.

     ஆடி அசைந்து ஒரு வழியாக ECR சாலையை மஹிந்த்ரா ஸ்கார்பியோ அடைந்தது. விஜய் வண்டியை ஓட்டிக்கொண்டும், அவன் அருகிலிருந்த இருக்கையில் விக்ரமும், அவன் மடியில் விஷ்ணுவும் அமர்ந்திருந்தார்கள். பின் சீட்டில் விவேக், மற்றும் வருண் ஆளுக்கொரு ஜன்னல் பக்கம், தலை சாய்ந்து அமர்ந்துக்கொண்டிருக்க, மத்தியில் அமர்ந்து, விக்னேஷ், முறுக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ECR சாலையை அடைந்து, வலதுபுறம் திரும்பி, அருகே இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல அவர்கள் எண்ணமிட்டிருந்தார்கள்.  ரோட்டின் மறுபுறம் கடக்க, வண்டி காத்திருந்தபோது,

“யாருக்காவது முறுக்கு வேணுமாடா..? லாஸ்ட் பாக்கெட்” என்று விக்னேஷ், அறிவித்தான்.

“ம்ம்ம்..” என்று சொல்லி, பின்னால் திரும்பிய விஷ்ணு. விக்னேஷ் முகம் முழுக்க ரத்தமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான். பின்சீட்டில் இருந்து விஷ்ணுவின் அந்த விரிந்த கண்களை பார்த்த மூவரும், தங்கள் வண்டியின் பின்னால் யாரோ வருகிறார்கள் என்று நினைத்து பதறிப்போய் பின்னால் திரும்பி பார்த்தனர். தூரத்தில் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிந்தது.

“பயப்படாத டா.. நாம வேகமா போயிடலாம்.. அவங்க வண்டிலையும் காத்து இருக்காது” என்று சொல்லிக்கொண்டே முன்னாள் திரும்பிய விக்னேஷின் முகத்தை வருண் பார்த்தான்.

“டேய்.. மூஞ்சில என்ன ரத்தம்..?” என்று கத்தினான்.

     அனைவரும் பதறி, அவனுக்கு எங்கு அடிப்பட்டிருக்கிறது என்று தேடினர். அவ்வாறு தேடும்போது தான், வருண் மற்றும் விவேக்கின் கைகளிலும் ரத்தக் கறை இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். உள்ளே அனைவரும் குழப்பத்தில் இருக்க, கார் ரோட்டை கடந்து, கட்டுப்பாடு இழந்து, கண்மண் தெரியாமல் ரோட்டில் அலைந்தது.

வண்டியிலிருந்த அனைவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் கத்தி கூப்பாடு போட்டனர். ECR-ரில், இரவு ஒன்றரை மணிக்கு அந்த அலறல் சத்தம் வெகுதூரம் கேட்டது. ஆனால் உதவிக்கு வர யாரும்இல்லை.

தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அந்த தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த பாண்டு, ஏதோ ஒரு வண்டி கட்டுப்பாடு இன்றி தம்மை நோக்கி வருவதை கண்டு உடல் நடுங்கினார். எழுந்து ஓட முயற்சித்தபோது, கால் தவறி ஓடையினுள் தலைகீழாக விழுந்தார். 

அனைவரும் அலறிக்கொண்டிருக்க, ஒரு தடுப்புச்சுவற்றில் மோதி, சுவர் உடைந்து, அந்த கருப்பு மஹிந்த்ரா ஸ்கார்பியோ, தானாகவே நின்றது. விஜய் மயங்கிக்கிடந்தான். வருண் வேகமாக இறங்கி வந்து காரின் முன்னாள் சென்று பார்த்தான். அந்த தடுப்புச்சுவரின் கீழே ஒரு ஓடை இருந்தது. அன்று இரவு  பெய்த மழையின் காரணமாக ஓடையில் நீரின் வேகம் அதிகமாகவே இருந்தது. சாலையின் ஓரமிருந்த தடுப்புச்சுவரோ அல்லது காரின் முன்பக்கமோ ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளவில்லை. மயங்கிவிழும் முன்பே, விஜய் காரை நிறுத்திவிட்டான் என்று வருண் புரிந்துக்கொண்டான். ஆனால் சுவர் இடிந்து உள்ளே விழுந்ததுபோல சத்தம் கேட்டதே, அது என்ன என்று புரியாமல் வருண் குழம்பினான்.

காரின் உள்ளே இருந்த அனைவரும் கீழே இறங்கி விஜயின் நிலைமை என்ன என்று பார்த்தனர். கைத்தாங்களாக ஓட்டுனர் இருக்கையில் இருந்து அவனை கீழே இறக்கி சாலையின் ஓரமாக மண்ணில் அமர்த்தினர். அப்போது, அவன் காலில் இருந்து ரத்தம் வருவதை விவேக் கவனித்தான்.

“வண்டில ஃபர்ஸ்ட் எய்ட் கிட் இருக்கா பாருங்க” விஷ்ணு படபடப்பாக பேசினான்.

     அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருக்க, விஷ்ணு சொன்னதை செய்தார்கள். இந்த இரவில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று கவலையானார்கள். முதலுதவி செய்யும் பொருட்களை எடுத்து அவன் காலுக்கு கட்டுப்போடலாம் என்று நினைத்தபோது, தாங்கள் வெளியே வந்த காட்டு வழியில் இருந்து மற்றொரு வண்டி சீறிக்கொண்டு வருவதை வருண் கவனித்தான்.

“கைஸ்.. நம்ம கிளம்பனும்” என்று பயத்தில் கத்தினான்.

     அந்த காரின் வேகத்துக்கு தங்கள் காரினால் செல்ல முடியாது என்பதனால் சாலை வழியை தவிர்க்க முடிவு செய்தனர். விக்ரம் மற்றும் விவேக் சேர்ந்து, விஜயை தூக்கிக்கொண்டார்கள். வண்டியிலிருந்து தங்கள் பைகளையும், முதல் உதவி செய்யும் பொருட்களையும் எடுத்துக்கொண்டர்கள். ஓடையின் அருகில் நிறைய மரங்களும், புதர்களும் இருக்க, அங்கு மறைந்துக்கொள்ள எண்ணி வருண் ஓடினான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் ஓடினார்கள். வானிலிருந்து மழை கொட்டத் தொடங்கியது.

     தலை கீழாக ஓடையில் கால் தவறி விழுந்த பாண்டுரங்கன், உடலில் இருக்கும் அத்தனை காயங்களுடன், நீந்த முயன்றார். உடல் வேகமாக சோர்ந்தது. தண்ணீரின் குளுமை, கை கால்களை வேகமாக உணர்விழக்கச் செய்தது. தண்ணீர், மெதுவாக மூக்கின் வழியே உள்ளே சென்று, நுரையீரலில் நிரம்பியது. மூச்சுக் காற்று செல்ல வழி இல்லாமல் இருதைய துடிப்பு வேகமாக உயர்ந்து மெல்ல மெல்ல குறைந்து, துடிப்பு நின்றுவிட்டது. நீரின் வேகத்தோடு, பாண்டு அடித்துச் செல்லப்பட்டார். தனது ரிட்டையர்மெண்ட் கனவு, வேறு விதமாக முடிந்தது. அவருக்காக காத்திருந்த தரணி, தன் வாழ்க்கையின் அடுத்த வாயிலுக்குள், வளர்ப்பு தந்தையும் இல்லாமல், தனியாக நுழைந்தாள்.

     வாழும் நாட்களில் அமைதி காணாத வாழ்க்கை, உண்மையான வாழ்க்கையல்ல. எத்துனை தூரம், எதை நோக்கி ஓடினாலும், அதை அடைந்த பிறகு கிடைக்கும் வெற்றிக்களிப்பு தீர்ந்தபின்பு, மனதில் அமைதி வேண்டும். அப்படி அமைதி தராத வெற்றி, வெற்றியல்ல. அந்த அமைதியை தராத களிப்பு, உண்மையில் களிப்பு அல்ல. சோகமோ, சுகமோ, வலியோ, வேதனையோ, பாசமோ, தியாகமோ, காதலோ, காமமோ, அதன் முடிவில் அமைதி காணவேண்டும். மனம் நிறைய அமைதி காண வேண்டும். அந்த அமைதிநிலை வாழ்வில் கொஞ்சக்காலம் கிடைக்க காரணமாக இருந்த தரணிக்கு நன்றி சொல்லி, இந்த உலகை விட்டு பாண்டுரங்கன் என்கின்ற பாண்டு மறைந்தார்.

தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 16 – இனி எல்லாம் சுகமே


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்

Episode 16 – இனி எல்லாம் சுகமே

Episode 17 – ஆஹா கல்யாணம்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!

படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments

  1. ஆஹா கல்யாணம் கதை நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.சரளமான நடை.வேகமான ,தெளிவான கதைப் போக்கு.சுபமான முடிவு.well done.

    ReplyDelete

Post a Comment