Previous Epi - 13. காதல் புயல்
14. மறைக்கப்பட்ட வரலாறு
“நீ என்ன மச்சி.. மொத்த மேட்டர்லயும்
அமைதியா இருக்க?”
“லவ் மேட்டர்லாம் அவன் பேச மாட்டான் டா”
விஜய் விவேக்கிடம் கேட்ட
கேள்விக்கு, வருண் பதில் சொன்னான்.
“என்னப்பா பண்றது, எல்லாருக்கும் நல்ல
பொண்ணு அமையுமா?”
‘நல்ல’ என்ற வார்த்தையை விக்னேஷ் அழுத்திச் சொன்னான். அவன்
கேலிப்பேச்சு இம்முறை உண்மையிலேயே அனைவரையும் கோபப்படச் செய்தது. அவன் சொன்னதை
கேட்டதும், பதில் எதுவும் சொல்லாமல் விவேக் மௌனமாக எழுந்து, புல்வெளியின்
வெளிச்சம் படராத பக்கம் நடந்து சென்றான். அவனை தடுத்து நிறுத்த விஜய் முயற்சி
செய்தபோது, வருண் அவனை போகவிடுமாறு சைகை செய்தான். விஜயும் அமைதிக் காத்தான்.
“ஏன் டா..?”
“என்ன ஏன் டா”
“இப்போ அதபத்தி பேசனுமா”
“டேய்.. நான் ஒண்ணும் இல்லாத விஷயத்த
சொல்லல.. இருக்றத தானே சொன்னேன்..”
“இந்த டைம்ல.. என் பேச்சுலர்ஸ்
பார்ட்டில தான் பேசனுமா”
“இல்ல மச்சி.. இத பத்தி யாராவது பேசி
தான ஆகணும்..”
“ம்ம்ம்.. அப்படி சொல்லு மாமா.. ஆனா..
ஊனா.. என்னையே திட்றது”
“மச்சி பீல் பண்றியா?”
“ச்சை.. இந்த நாய் சொல்றதுக்குலாம்
யார் ஃபீல் பண்ணுவா? ஏதோ மாப்பிளையா போயிட்டானேன்னு மரியாதை கொடுக்றேன்.. அவ்ளோதான்”
“மஹியோட எக்ஸாக்ட் ஸ்டேட்டஸ் தான்
என்ன?”
மஹி என்கின்ற மகேஷ்வரி, விவேக்கின்
முதல் மற்றும் கடைசி காதல். கல்லூரி நாட்களில் இந்த கூட்டத்தில் முதலில் காதல்
வலையில் விழுந்தவன் விவேக்தான். மகேஷ்வரி ஒரு பணக்கார அப்பாவின் செல்லமான மகள்.
அம்மா இல்லாத காரணத்தினால், கண்டிப்பில்லாமல், வழித்தவறிய இளம் மொட்டு. பணத்தின்
மிகுதியினால், கூடாநட்புகள் சில அமைந்தது. மது, போதை போன்ற பழக்கங்களுக்கு சிறு
வயதிலேயே அடிமைபட்டாள். இதையறியாமல் விவேக் அவள் மீது காதல் கொண்டான். தன்னை
முழுமையாக தெரிந்துக்கொண்டப் பின்னும், தனது நற்குணத்தை நேசிப்பதாகவும், மற்ற
குணங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும், சேர்ந்து போராடி இதிலிருந்து வெளியே
வருவோம் என்றும் வாக்களித்தான். தனது வாழ்வில் அவளுக்கு கிடைத்த ஒரே உறுதியான
பிடிமானம் அவன் காதல்தான்.
ஆனால் அது வெகுநாட்கள்
நீடிக்கவில்லை. தன்னால் இவன் வாழ்க்கை பாதிக்குமோ என்ற பயம் அவளுக்கு வந்தது. அந்த
எண்ணம் வளர்ந்தது. இவனை விட்டு விலக முயன்றாள். அதற்கு விவேக் அனுமதிக்கவில்லை.
விலகி, தனது சொந்த நரகத்திலிருந்து தாமாகவே வெளியே வந்து, அவனுக்கும்,
அவன் கனவுகளுக்கும், தகுதியான பெண்மணியாக அவன் முன் நிற்க வேண்டும் என்று
முடிவெடுத்தாள். எப்படியேனும் அவனை விட்டு விலக எண்ணி, மாயமானாள்.
அவள் சென்ற சோகத்தில், விவேக்
சிறிது காலம் மதுவிற்கு அடிமையானன். வினோவின் அம்மா தான், விவேக் அந்த
பழக்கத்திலிருந்து வெளிவர பெரிதும் உதவினார்கள். நமது நண்பனின் வாழ்க்கையை சிறிது
காலம் நரகமாக்கியவள் மஹி என்பதனால், இவர்கள் யாருக்கும் மகேஸ்வரியை பிடிக்கவில்லை.
ஆனால் விவேக்கால் அவளை வெறுக்க முடியவில்லை. இன்றும் அவள் நினைப்பில்தான்
இருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கோபத்தின் வெளிபாடே, விக்னேஷின்
கேலிப்பேச்சில் இருந்தது. அதை உணர்ந்த விவேக்கின், கோபத்தின் வெளிபாடே, இருட்டில்
தனிமையை நோக்கி அவன் சென்றது.
கோபத்தை வெளிபடுத்தும் முறை
மனிதருக்கு மனிதர் மாறுபடும். சிலர் கத்துவதுண்டு, பொருட்களை தூக்கிப்போட்டு
உடைப்பதுண்டு, சிலர் சண்டையில் ஈடுபடுவதுண்டு, சிலர் சண்டை பயிற்சியில் ஈடுபடுவதுண்டு,
சிலர் மௌனம் காப்பதுண்டு, பெரும்பாலானோர் கோபத்தில் அழுவதுண்டு.
ECR சாலையில், ஒரு ஒற்றையடி பாதை ஓரமாக, கீழே கிடந்த
அட்டைப்பெட்டிக்குள், சுருக்குப் பையில் இருந்த செயின்னும், ஒரு குட்டி
புகைப்படமும் ஏ.கே.,விற்கு கோபத்தை தந்தது.
“இந்த போட்டோல இருக்கறது யாருனு
தெரியுதா பாண்டு?”
மஹிந்த்ரா தாரின் பின் சீட்டில் தனது எதிரில், அடிவாங்கி சோர்ந்து
இருக்கும் பாண்டுரங்கனிடம் கேட்டார். அடியாட்கள் அடித்ததில் கண்களை சுற்றி
ரத்தம் கட்டியிருந்த நிலையில், பாண்டு அந்த புகைப்படத்தை பார்த்தார். அதில்
இருக்கும் இரண்டு உருவங்களில் ஒரு உருவம் பாண்டுவிற்கு மிக பரிச்சயமான உருவம்.
அந்த உருவத்தின் அருகில் இருப்பது யார் என்பது பாண்டுவிற்கு தெரியவில்லை.
குழப்பத்தோடு ஏ.கே.,வை நிமிர்ந்து பார்த்தார்.
“யு நோ பாண்டு..? அந்த போட்டோல இருக்க
பொண்ணு.. தட்ஸ் மை டாட்டர்”
‘ஆம்’ என்று பாண்டு தலையசைத்தார்.
“கூட ஒரு பையன் இருக்கான் பாரு.. அவன்
யாருன்னு தெரிதா?”
கோபமும், ஏமாற்றமும் நிறைந்த
குரலில் ஏ.கே., பேசினார். அவர் கண்கள் கலங்கி இருந்தது. என்ன நடக்கிறது என்று
பாண்டுவிற்கு புரியவில்லை. தனது கையில் இருந்த திறன்பேசியை எடுத்து, பாண்டுவிடம் காட்டினார்.
அதில் துரை அனுப்பிய, வருண் மற்றும் அவனது நண்பர்களின் புகைப்படத்தில் இருக்கும்
ஒரு உருவமும், ஏ.கே., காட்டிய குட்டி புகைப்படத்தில் இருந்த ஆண் உருவமும் ஒன்று.
பாண்டுரங்கன், மேலும் குழம்பினார்.
“வாழ்க்கைல நான் யார இனிமேல் பாக்கவே
கூடாதுனு நினைச்சனோ.. இன்னிக்கு, நீ எங்கயோ பண்ண தப்புனால, பாக்கவேண்டியதா
போச்சி..”
“சார்.. எனக்கு ஒண்ணுமே புரியல சார்.
நான் நிச்சயமா சொல்றேன், உங்ககிட்ட பொய் சொல்லி ஏமாத்தனும்னு நான் கனவுல கூட
நனைக்கல சார். என்ன இப்படியே விட்டுடுங்க சார். என் பொண்ணு அமெரிக்கா போரா..
நானும் அவ கூட போகணும் சார்.. பிளீஸ்..”
தீனக்குரலில் பேசி அழுகத் தொடங்கினார்.
“ஷட் தி ஹெல் அப்” கோபத்தின்
உச்சியில் ஏ.கே., கத்தினார். பாண்டுவின் உடல் நடுங்கியது.
கல்லூரி நாட்களில் தனது மகளின்
காதலனான அவன், இன்றும் தன் மகளின் நினைவாக, அவள் கழுத்துச் செயினையும், புகைப்படத்தையும்
வைத்திருப்பதை அறிந்துக்கொண்ட ஏ.கே.,விற்கு தலை கால் புரியாமல் கோபம் வந்தது.
அவனால் தான் அடைந்த நஷ்டங்கள் ஏராளம். தலைவனாக இருந்த ஏ.கே., எதுவும் வேண்டாம்
என்று அனைத்தையும் உதறிவிட்டு இன்று அமைதியில் வாழ்வதற்கு காரணம் அவரின் செல்ல
மகள். அந்த மகளையே தன்னிடமிருந்து பிரித்து செல்ல முயன்றவன் அவள் கல்லூரி காதலன்.
மகளின் கல்லூரி நாட்களிலேயே,
எத்தனையோ முறை அவனை தீர்த்துக்கட்ட முயன்றும், அது பலிக்கவில்லை. அவன் உண்மையில்
தைரியசாலி, வீரன் மற்றும் புத்தி கூர்மையுடையவன். தான் யாரென்பதை தன் மகளுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்டியவன். அதன் விளைவாக இரண்டு ஆண்டுகள் அவள் ஏ.கே.,விடம்
இருந்து, தள்ளிச்சென்று வாழ்ந்தாள். ‘மகள் என்ற உறவா? தாதா என்ற பட்டமா? நீங்களே
முடிவு செய்யுங்கள்’ என்று சொல்லி, தன் பாசத்தை உதறிச்சென்றாள். இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு, ஏ.கே., தாம் பத்து ஆண்டுகளாக தலைமை தாங்கிய மாஃப்பியா
கும்பலை விடுத்து, தனதுச் செல்ல மகளின் பாசத்திற்காக அரச பட்டத்தை விடுத்து,
சராசரி வாழ்க்கைக்கு பழகிக்கொண்டிருக்கிறார். அந்தச் செல்ல மகளுக்கு பரிசளிக்கவே
பாண்டுரங்கனிடம் இருக்கும் வைரங்களை வாங்க முற்பட்டார். அதில் ஏமார்ந்த கோபமும்,
இன்று மீண்டும் அந்த முகத்தையும், தன் மகளின் செயின் மற்றும் அந்த குட்டி புகைப்படத்தை
அவன் வைத்திருக்கிறான் என்பதை அறிந்ததும், வெறி தலைக்கு ஏறியது.
“வேலு..”
காரிலிருந்து கீழே இறங்கியதும் வேலுவை அழைத்தார். மழை நின்றுவிட்டது. குளுமையான
காற்று அடித்துக்கொண்டிருக்க, ஏ.கே., மட்டும் சூடாக இருந்தார். வேலு அவரிடம் ஓடி
வந்தார்.
“சொல்லுங்க சார்”
“வேலு.. என்ன பண்ணுவியோ தெரியாது,
இன்னிக்கு நைட்டே அவன் கதை முடியனும். என்னோட காரை நியர் பைல எங்கயாச்சும்
நிறுத்திவச்சிட்டு, வீ வில் கோ டுகெதர்” படபடப்பாக வேலுவிடம் பேசினார்.
“சார்.. நீங்க ஏன் அலையனும்.. நாங்க பாத்துக்குறோம்..
பாப்பாக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகும்”.
“நான் என்ன செய்யணும்னு நீ எனக்கு
சொல்லாத.. போ.. சொன்னத செய்.. அவனை என் கையாலையே அடிச்சிக் கொல்லனும்” கண்களில் அனல்
பறக்க பேசினார்.
“உங்கள இப்படி பாத்து ரெண்டு வருஷம்
ஆச்சி சார்” சந்தோஷம் கலந்த
தொனியில் வேலு சொன்னார்.
“நியர் பைல நம்ம முனுசாமியோட ரிசார்ட்
ஒன்னு இருக்கு சார். அங்க உங்க காரை விட்டுட்டு நம்ம இவன தேடி கிளம்பலாம்”
“எவ்ளோ தூரம்?”
“ஜஸ்ட் 30 மினிட்ஸ்”
இரண்டு கார்களும் ECR சாலையில், அந்த இரவு வேளையில், வேட்டையாட கிளம்பியது.
“ஹலோ முன்ஸ்.. நான் வேலு பேசறேன்பா..
எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் டா.. நீ எப்படி
இருக்க..? என்ன சமாச்சாரம்?”
“ஒண்ணுமில்ல.. ஒரு சின்ன வேலையா ECR பக்கம் வந்தோம்.. நம்ம ஏ.கே., சாரோட
வண்டிய ஒரு நாள் நைட் நிறுத்த பிளேஸ் வேணும், உன் ரிசார்ட் காட்டுக்குள்ளதான
இருக்கு.. அதான் அங்க பார்க் பண்ணிக்கட்டுமானு கேக்கலாமேனு பாத்தேன்”
“அட.. நம்ம தலைவருக்கு பண்ணாமலா..
தாராளமா நிறுதிக்கோ பங்காளி..”
“ரொம்ப நன்றி பங்காளி.. வைக்கட்டுமா”
“வெறும் கார் தானா? ஆள் யாரும் தங்கலைல?”
“என்ன பங்கு.. இப்போ தான ‘நம்ம
தலைவருக்கு பண்ணாமலா’னு டயலாக் விட்ட.. தங்குனாதான் என்னவாம்?”
“அதுக்கு இல்லடா.. என் பையன் பாஸ்கர்
இருக்கான்ல.. அவனோட ஃப்ரெண்ட்ஸ் யாரோ அங்க இன்னிக்கு நைட் ஹால்ட்டாம்.. ரொம்பநாளா
கேட்டு, இன்னிக்குதான் வந்தானுவலாம்.. வயசு பசங்கள டிஸ்டர்ப் பண்ணா நமக்கு தான
அசிங்கம்”
“புரிஞ்சிதுப்பா.. புரிஞ்சிதுப்பா..
ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நம்ம வண்டி மட்டும் தான்”
“ரைட் பங்கு, செக்யூரிட்டி நம்பர்
அனுப்புறேன்.. வச்சிக்கோ.. நான் இன்ஃப்பாம் பண்ணிடறேன்”
“தாங்க்ஸ் பங்கு”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“ஹலோ.. நான் முனுசாமி பேசறேன்”
“ஐயா.. சொல்லுங்க ஐயா”
“என்ன முருகேசா.. எப்படி இருக்க?”
“உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்
ஐயா”
“இருக்கட்டும் இருக்கட்டும்.. என்னோட
நண்பர் வேலுன்னு ஒருத்தர் கொஞ்ச நேரத்துல வருவாரு.. அவரோட காரை இன்னிக்கு நைட்
நம்ம ரிசார்ட்ல நிப்பாட்ட போராராம்.. கார் ஷெட் சாவிய கொடுத்து விடு..”
“ஐயா ஏற்கனவே இங்க ஆறு பசங்க தங்கிருக்காங்க
ஐயா.. நம்ம பாஸ்கர் அய்யாவோட ஃபிரண்ட்சுங்க”
“தெரியும்யா.. கார் மட்டும்தான்
தங்கும்.. ஆளுங்க யாரும் இருக்க போறது இல்ல.. சாவிய கொடுத்து விடு..”
“சரிங்க ஐயா.. இப்போ உள்ள சின்னய்யாவோட
பிரண்ட்ஸ்ங்களுக்கு சாப்பாடு கொடுக்க போறேன்.. வந்ததும் அந்த கார் ஷெட் சாவிய
எடுத்து ரெடியா வச்சிக்கிறேன் ஐயா”
“ம்ம்ம்.. செய் செய்”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“என்னடா.. அவன் அந்த பக்கம் போய் ரொம்ப
நேரம் ஆச்சி.. ஆளே காணும்?”
விவேக் சென்ற பாதையை பார்த்து கவலையாக விஜய் கேட்டான்.
சட்டென்று விவேக் தண்ணீரிலிருந்து எழுந்தான்.
“அவனை தேட போறியா மச்சி..? நானும்
வரவா?”
“டேய்..! ஒன்னுக்கு போறேன்டா.. உனக்கு
வேணும்னா நீ தேடிப்போ”
விஜய் தேடிப்போனான். இருட்டில்,
வழி கண்டுப்பிடித்து அந்த பங்களாவின் பின்பக்க காம்பவுண்ட் சுவரை அடைந்தான். அங்கு
கதவு ஒன்று இருப்பதாக விவேக் சொன்னது நினைவிற்கு வந்தது. தேடினான். கண்டுப்பிடித்தான்.
நிலாவின் ஒளி அன்று இல்லை. முழுமையாக இருண்டுபோன யாமம் என்னும் சிறுபொழுதில்,
கடற்கரை மணலில், தன்னந்தனியாக விவேக் அமர்ந்திருந்தான்.
“விவேக்..?”
“வா விஜய்.. உக்காரு”
“ஏன்டா தனியா வந்துட்ட..? அவன்
எப்பவும் பைத்தியம் மாதிரி தான பேசுவான்.. அதை ஏன் பெருசா எடுத்துக்குற.. ஃப்ரீயா
விடு”
பேசிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தான்.
விவேக்கின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்தான். ஆறுதல் சொல்வதைவிட, அமைதியாக
அவனுடம் அமர்வதே இந்த சூழ்நிலைக்கு பொருத்தம் என்று முடிவெடுத்தான். விஜயின்
செல்ஃபோன் ஒளித்தது.
“சொல்லு வருண்..”
“சாப்பாடு வந்துடுச்சிடா.. அவர் பாவம்
ரொம்ப நேரமா கதவ தட்டுனாரு போல.. விக்கி உள்ள போனதுனால ரிசீவ் பண்ணிடான்.. கொஞ்சம்
சீக்ரம் வாங்க.. அல்ரெடி சூடு கொரஞ்சி போச்சி...”
“இதோ கிளம்பிட்டோம் மச்சி”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“வா விவேக் சாப்ட்டு எல்லாரும் ஒன்னா
வரலாம்”
“இன்னிக்கு தான் லாஸ்ட் டே”
“புரியல டா”
“நான் தனியா இப்படி உக்காந்து ஃபீல் பண்றது
இன்னிக்கு தான் லாஸ்ட் டே விஜய்”
“நல்லது.. நாளைல இருந்து என்ன மாற
போகுது?”
“எல்லாமே”
“முழுசா சொல்லு”
“மஹி இஸ் பேக்”
“என்னடா சொல்ற?”
“ஆமா மச்சா.. லாஸ்ட் வீக் அவகிட்ட
இருந்து மெசேஜ் வந்துச்சி.. நான் மொதல்ல நம்பல.. வீடியோ கால் பண்ணி பேசுனா..
அவதான் டா.. ஷீ இஸ் பேக்”
விவேக் சொல்ல சொல்ல அவன் கண்களில்
நீர் கட்டியது, தொண்டை மகிழ்ச்சியில் அடைத்தது. விஜய்க்கு என்ன சொல்வது என்று
புரியவில்லை. காரணம் மஹிக்கும் விவேக்குக்கும் உள்ள உறவின் ஆழம் அவனுக்கு
தெரியாது. உண்மையில் அது யாருக்கும் தெரியாது. இந்த பயணத்தில் அதை தன் நண்பர்களோடு
பகிர்ந்துக்கொள்ளும் ஆசையில் இருந்தான். விக்னேஷின் அந்த ஒரு வார்த்தை இவன் மனதை
சுக்கு நூறாக உடைத்தது.
“மச்சி.. இவ்ளோ நாள் எங்கடா இருந்தா?”
“அவங்க அப்பா கூட.. பெர்சனல் ரீஹாபிலிட்டேஷன்
பிராசஸ்ல இருந்தா.. எனக்காக மாறனும்னு தான்டா என்னவிட்டு தள்ளி இருந்தா. எனக்காக!”
அழுதுக்கொண்டே சொன்னான். ஆதரவாக
விஜய் அவனை அணைத்துக்கொண்டான். சிறிது நேரம் இருவரும் கடற்காற்று வாங்கியபடி
அங்கேயே நிற்கவும், நடக்கவும் செய்தார்கள்.
“பசிக்குதுடா.. சாப்ட போலாமா?”
விஜய் கேட்க, விவேக்
ஒப்புக்கொண்டான். இருவரும் காம்பவுண்ட் உள்ளே சென்றார்கள். நீச்சல் குளம்
வெறுமையாக இருந்தது. புளுடூத் ஸ்பீக்கர் அமர்த்தப்பட்டிருந்தது. பங்களா மிக
நிசப்தமாக இருந்தது. பங்களாவின் உள்ளே, படுக்கையறை வழியே, கூடத்திற்கு சென்ற
விஜயும், விவேக்கும் ஒரு நிமிடம் ஆடிப்போனார்கள். பொருட்கள் எல்லாம்
உடைக்கப்பட்டும், ஆங்காங்கே சிதறியும்கிடந்தது. தங்கள் பைகள் எல்லாம் மேசையின்
அருகில் குவிந்திருந்தது. அவிழக மேசையில்
வருணும், யாரோ ஒருவர், அடிபட்டு இரத்தகாயங்களுடனும் அமர்ந்திருந்தனர். மற்ற
மூவரும் கீழே முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்தனர். மேசையின் மறுபக்கம் யாரோ
அமர்ந்திருப்பது தெரிந்தது. மேசையை நோக்கி, கூடத்தில் கால் வைத்த அந்த நொடி,
இருவரையும், யாரோ தாக்கி, கீழே தள்ளினார்கள்.
சில நிமிடங்களுக்கு முன்....
முருகேசன் வந்து சாப்பாடு கொடுத்துவிட்டு சென்றார்.
“டேய்.. சாப்பாடு ஆறிகிட்டு இருக்கு..
அவனுங்கள வரச்சொல்லு..”
“பேசுரது எல்லாம் நீ பேசிட்டு.. அப்றம்
அவன கூப்டு.. இவன கூப்டுன்னு சொல்லு”
“அவனுங்க சாப்ட்டா எனக்கு என்ன..!
சாப்டலனா எனக்கு என்ன..! போடா”
விக்னேஷ், விக்ரம், விஷ்ணு மூவரும்
சாப்பிட தொடங்கினர். அதே நேரத்தில் பங்களாவின் வாசலில் ஏ.கே.,வும் அவர்
அடியாட்களும் வந்து சேர்ந்தனர்.
“யாருப்பா அது? யார் வேணும்? இது
பிரைவேட் ப்ராப்பர்டி.. இங்க எல்லாம் நிறுத்தக் கூடாது.. கிளம்பு கிளம்பு”
“ஐயா.. முனுசாமி அண்ணே சொல்லி அனுப்புனாரு,
காரை நைட் இங்க விட்டுட்டு போகணும்”
“ஆமா ஆமா.. ஃபோன் பண்ணாரு.. வாங்க
வாங்க.. வேலு தான உங்க பேரு?”
எல்லாம் விசாரித்து,
சரிபார்த்தபின்பு உள்ளே அழைத்து, கார் ஷெட் சாவியை கொடுத்தார். தனது காரை
செக்யூரிட்டி அறைக்கு அருகிலிருக்கும் ஷெட்டில் ஏ.கே., நிறுத்திவிட்டு வெளியே
வருகையில், பங்களாவின் வாசலில் கறுப்புநிற கார் ஒன்று நிற்பதை பார்த்தார். அங்கு
நிற்பது கறுப்பு மஹிந்த்ரா ஸ்கார்பியோ என்பதை பார்த்ததும், துரை அனுப்பிய படங்களை
எடுத்து காரின் எண்ணை பார்த்தார். இரண்டும் பொருந்தியது. வேலுவிடம் தகவல் சொல்லி,
அனைவரையும் உள்ளே அழைத்துச்சென்றார். தடுக்க முயர்ச்சித்த முருகேசனை, அவர் அறையில்
வைத்து பூட்டினார்கள். வெளியே நின்ற காரின் நான்கு சக்கரத்திலும் காற்றை பிடுங்கிவிட்டார்கள்.
இருவர் பங்களாவைச் சுற்றிவர, வேலு கதவை தட்டினார்.
விஜயிடம் ஃப்போனில் பேசிவிட்டு,
சாப்பிட அமர்ந்த வருண், கதவு தட்டும் சத்தம் கேட்டு, கதவை திறக்கச் சென்றான். கதவு
திறக்கபட்ட மறு நொடி, வருண் முகத்தில் வேலு ஒரு குத்துவிட்டார். மூக்கு உடைந்து
ரத்தம் கொட்டியது.
“சார் அவன் கல்யாண மாப்பிள்ளை.. மூஞ்சி
ஏதாச்சும் ஆச்சி.. பொண்ணு வருத்தப்படும்”
சாப்பிட்டுக்கொண்டிருந்த விக்னேஷ், வேகமாக ஓடி வந்து வருணை
தூக்கினான்.
“ஹொ! சார் தான் மாப்பிள்ளையா.. சரி அவன
அடிக்கல.. நீ வா..”
வருணை ஒரு நாற்காலியில்
அமரவைத்துவிட்டு விக்னேஷ் திரும்பினான். விக்ரம் மற்றும் விஷ்ணு அவனுடன் சேர்ந்து
நின்றார்கள். நீச்சல் குளத்தில் இருந்து பெட்ரூம் வழியே உள்ளே வந்த இரண்டு
அடியாட்கள், வேலுவை பார்த்து, பங்களாவைச் சுற்றி யாரும் இல்லை என்று
அறிவித்தார்கள்.
“என்ன டா.. நாலுபேரு தான் இருக்காங்க..
நம்ம கணக்குப்படி ஆறு-ல?” என்று வேலு கேட்டுக்கொண்டே பங்களாவை சுற்றும் முற்றும்
பார்த்தார்.
“டேய் மேல யார்னா இருக்காங்களா பாரு”
“பாஸ், கொஞ்சம் பொறுங்க பாஸ்.. யார்
நீங்க? எதுக்கு உள்ள வந்தீங்க? இது பிரைவேட் ப்ராப்பர்டி.. செக்யூரிட்டி
சொல்லலயா?”
“இதோ டா.. ரூல்ஸ் பேசுது கொயந்தை”
என்று சொல்லி, முஷ்டியை முறுக்கி
விக்ரமை குத்த கை ஓங்கினார் வேலு. ஓங்கிய கை விக்ரமின் முகத்தை பதம் பார்ப்பதற்கு
முன், விக்ரம் அவர் வயிற்றில் ஒரு குத்துவிட்டான். அடியாளாக இருந்தபோதிலும் அந்த
குத்தின் வலி அவர் மார்பு வரை பரவியது. காதுகள் அடைக்க, கண்கள் கலங்கியது. மற்ற
மூன்று அடியாட்களும் அவர் அருகில் வந்து,
“என்ன ண்ணா?” என்றார்கள்.
“ஒன்னும் இல்லடா.. டச் விட்டு
போச்சில்ல.. அதான்” என்று மூச்சு தினறியபடியே பேசினார்.
இந்த இடைவெளியில், வருணுக்கு
மூக்கில் ரத்தம் கொட்டுவது நின்றுவிட்டது. தானும் எழுந்து வந்தான்.
“நீ உக்காரு மச்சி.. அவங்களும் இப்போ
மூணு பேர் தான.. நாங்க பாத்துக்குறோம்.. நாளைக்கு நிச்சயத்த வச்சிக்கிட்டு உனக்கு
எதுக்கு வைலன்ஸ்.. இந்தா.. லெக் பீஸ் சாப்டு..”
என்று சொல்லி, ஹாட் பாக்ஸில்
இருந்து ஒரு ஃப்ரைட் லெக்பீஸ் எடுத்து வருணுக்கு கொடுத்துவிட்டு. விக்ரமுடன் வந்து
விக்னேஷூம் நின்றுக்கொண்டான். விஷ்ணுவும் அவர்கள் அருகில் வந்து இணைந்து, முஷ்டியை
மடக்கி, மூவரும் நின்றுக்கொண்டார்கள். அவ்வாறு நின்றவர்களை நோக்கி மூன்று
அடியாட்களும் வந்தார்கள்.
அந்த சண்டை வெறும் மூன்று
நிமிடங்கள்தான் நடந்தது. அடியாட்கள் மூவரும் சோர்வடைந்து, ஆளுக்கொரு இடம் பார்த்து
அமர்ந்தார்கள்.
“தண்ணி குடிக்கிறீங்களா பாஸ்” விக்னேஷ் கேட்டான்.
முதலில் அடிவாங்கிய வேலு, முழுவதுமாக தெளிந்தார். இரண்டாம்
சுற்று சண்டைக்கு அனைவரும் தயாரானார்கள். அந்த நேரம், பங்களாவினுள் ஜீன்ஸ்
பேண்டும், முழுக்கையை அரை கை வரை மடித்துவிட்டு டைட் ஃபிட் ஷர்டும், பிரவுன்
ஷூவும் அணிந்து மிக கம்பீரமாக கிராப் தலையுடன், மிலிட்டரி ஆபீசர்
அன்-யூநிஃபார்மில் வருவது போல ஏ.கே., உள்ளே வந்தார். அடியாட்கள் நால்வரும், அவர்
உள்ளே வந்ததும் அமைதியானதை கவனித்த விக்ரம்,
“சார்.. உங்க ஆளுங்க தானா? என்ன
ப்ராப்ளம் இப்போ? எதுக்காக இங்க பிரச்சனை?”
“சொல்றேன் சார்.. பிளீஸ் வந்து
உக்காருங்க”
“அடடே.. சாரு எவ்ளோ மரியாதையா பேசராரு..
தண்ணி குடிக்கிறீங்களா பாஸ்?” என்று விக்னேஷ் கேட்டான்.
“ஹொ எஸ்!” என்று ஏ.கே.,
சொல்லி, தண்ணீர் பாட்டிளை வாங்கினார். மூடியை திறந்து ஒரு வாய் நீர்
அருந்திவிட்டு, விக்னேஷை பார்த்து சிரித்தார். அவன் பதிலுக்கு சிரிக்க, தனது
தலைக்கொண்டு அவன் உதட்டில் நச்சென்று இடித்தார். விக்னேஷ் வாயிலிருந்து ரத்தம்
வந்தது. தண்ணீர் பாட்டில் பிடித்திருந்த கையின் முட்டியை வைத்து அவன் மார்பில் ஒரு
இடி இடித்தார். அவன் கீழே விழுந்தான். பின்னால் இருந்து அடிக்கவந்த விக்ரமை, லேசாக
விலகி, அவனை முன்னே வரச்செய்து, தனது காலினால் அவன் தொடையில் ஒரு மிதி
மிதித்தார். கீழே முட்டிப்போட்டு அமர்ந்தவனை, காலின் முட்டியினால் வாயில்
இடித்தார். அவன் வாயிலிருந்தும் ரத்தம் வந்தது.
“தாங்க்ஸ் தம்பி” என்று சொல்லி, அந்த
தண்ணீர் பாட்டிளை மூடி போட்டு, விஷ்ணுவிடம் நீட்டினார். அவன் முஷ்டியயை முறுக்கிக்கொண்டு
குத்த வர. ஒரு அடி முன்னே நகர்ந்து, தண்ணீர் பாட்டிளை தலைகீழாக திருப்பி, மூடியை
வைத்து அவன் கழுத்தில் குத்தினார், அதே சமயம், அவன் கால்களுக்கு இடையில் தன் காலை
விட்டு கீழே விழச்செய்தார்.
கீழே விழுந்தவனை, விக்னேஷ் பற்றி
இழுத்து, அவன் வாயை தன் கையினால் பொத்தினான்.
“தெளிவான புள்ள” என்று ஏ.கே.,
விக்னேஷை பாராட்டினார். அடுத்து வருண் எழுந்துவர, வேண்டாம் என்று விக்னேஷ் தலையசைத்தான்.
“அவன் சொல்றத கேளுப்பா.. உக்காரு”
வருணை அமரச்செய்து, தானும் அவிழக
மேசையின் ஒருபக்கம் அமர்ந்தார். அடியாட்களைப் பார்த்து கண் காட்ட, அவர்கள் வீட்டை
சோதனையிட்டனர். அனைத்து அறைகளில்
இருந்த பைகளையும் எடுத்துவந்து கூடத்தில் போட்டார்கள். ஆட்கள் யாரும் இல்லை என்று
உறுதி செய்தார்கள்.
“நாளைக்கு கல்யாணமா?”
“நாளை மறுநாள் சார்”
“பேச்சுலர்ஸ் பார்ட்டின்னு சொன்னாங்க..
புட்டியும் காணும், குட்டியும் காணும்.. என்ன கைண்ட் ஆஃப் பார்ட்டி பண்றிங்க..?”
என்று ஏ.கே.,
விசாரித்துக்கொண்டிருக்க, வாசலில் யாரோ அமர்ந்திருப்பது போல தெரிந்தது. அது யார்
என்று வருண் உற்றுப் பார்த்தான்.
“பாண்டு அங்கிள்..?” என்று ஆச்சரியமும்
திகிலும் நிறைந்த குரலில் கத்தினான்.
“ஹொ..! இந்த அங்கிள் தான்ப்பா நாங்க
இங்க வரதுக்கு ஹெல்ப் பண்ணாரு. வேலு.. அவரை இங்க கூட்டிட்டு வா”
நடக்க சிறிது சிரமப்பட்டு, வேலு
பாண்டுவை அழைத்துவந்து, நாற்காலியில் அமரச் செய்தார்.
“என்னப்பா..? வயசாயிடுச்சி போல.. சின்ன
பசங்களோட கூட சண்டை போட முடியலையா?”
“பாக்க தான் சார், அப்படி
இருக்கானுங்க.. நல்ல ஸ்ட்ராங்க் சார்..”
“அவனோட ஃபிரண்ட்ஸ்ல.. அப்படித்தான்
இருப்பானுங்க”
பல்லை கடித்துக்கொண்டு, கோபமும்,
நக்கலும், வெறியும் சேர்ந்து பேசினார்.
“யாரோட ஃபிரண்ட்ஸ் சார்?” வருண் கேட்டான்.
அந்த நேரத்தில், பெட்ரூம் உள்ளே இருந்து விவேக் மற்றும் விஜய் உள்ளே கூடத்தில்
நுழைந்தனர். ஒரு கணம் கூட தாமதியாமல், வேலுவும் மற்றொரு அடியாளும் சேர்ந்து
இருவரையும் தாக்கி கீழே தள்ளினர்.
உருண்டு மீண்டும் எழுந்து,
முஷ்டியை முறுக்கிக்கொண்டு சண்டைபோட தயாராக விவேக் நின்றான். கீழே முட்டிபோட்டு,
வாயில் ரத்தம் வழிய அமர்ந்திருந்த விக்னேஷ் அவனை அழைத்து, ‘வேண்டாம்’ என்று சைகை
செய்தான்.
“ஹேய்.. எனக்கு இந்த பையன
புடிச்சிருக்குயா.. ரொம்ப தெளிவா இருக்கான். ஒழுங்கா அவன் சொல்றத கேளு.. ஃபைட்
பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாத”
“ஃபைட் பண்றது வேஸ்ட்டுன்னா.. உங்க வாழ்க்கைல
முக்கால்வாசி வேஸ்ட் தான மிஸ்டர் அருண் குமார்.. ஹொ..! சாரி.. சாரி.. ஐ ஷுட் கால்
யு... மிஸ்டர். ஜான் விக்!”
ஏ.கே.,வின் எதிரில், முஷ்டியை முறுக்கி
நின்றுக்கொண்டிருந்த விவேக்கின் பின்னால் இருந்து, மிக கம்பீரமாக பேசினான் விஜய்.
விவேக் கைகளை கீழே போட்டான். அவன் நண்பர்கள் அனைவரும் அவனை ஆச்சரியமாக
பார்த்தார்கள். முட்டிப்போட்டு அமர்ந்திருந்த தனது நண்பர்களை எழுந்து வாசல் பக்கம்
போகச் சொன்னான். வருணும், மற்றவர்களோடு இணைந்தான். விவேக் மீண்டும் முஷ்டி முறுக்க,
விஜய் அவனை தடுத்து,
“இட்ஸ் மை ஃபைட்” என்று சொன்னான்.
“ஹிஸ்டரி?”
“வில் டெல் யு”
இருவரும் பேசிமுடிக்கும் வரை அவிழக மேசையில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஏ.கே.
பேச்சு முடிந்த மறு நொடி,
“லெட்ஸ் பிகின்” என்று சொல்லி,
தனக்கு அருகிலிருந்த நாற்காலியை எடுத்து விஜய் மீது எறிந்தார். அவன்மீது பட்டு அது
உடைந்தது.
நின்ற இடத்திலிருந்து ஓடிச்சென்று,
அவிழக மேசையின்மீது கால் வைத்து ஏறி, ஏ.கே.,வின் வாயில் தனது முட்டியை வைத்து
இடித்து, மேசையின் மேல் கம்பீரமாக நின்றான் விஜய். இடி வாங்கிய வேகத்தில், பின்னாலிருந்த
சுவற்றில் மோதி, ஏ.கே., கீழே விழுந்தார். அப்படி விழுந்தவரை, விக்னேஷ் எட்டிப்
பார்த்தான். அவர் வாயிலும் ரத்தம் வந்தது. சிரித்த முகத்தோடு அவரிடம் சென்று,
‘அவனோடு சண்டை போட வேண்டாம்’ என்று சைகை செய்தான்.
“நான் தெளிவான பையன்.. சொல்றத கேட்டு
நடந்துக்கோங்க” என்று நக்கல் பேச்சு பேசினான்.
இதற்கிடையில் விஜய், மற்ற
நால்வரிடமும் கண்களினால் பேசினான். அவன் சொன்னது அனைவருக்கும் புரிந்தது. ஏ.கே.,
விஜய் சண்டை ஒருபக்கம் நடக்க, ஏ.கே.,வின் அடியாட்களை விக்ரம் மற்றும் விவேக்
ஆளுக்கொரு பக்கம் சண்டைக்கு இழுத்தனர், விஷ்ணு மற்றும் வருண், தங்கள் பைகளை
எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே தூக்கிப்போட்டனர். இந்த அமலிதுமலிக்கு இடையில், பாண்டுரங்கன் எப்போதோ நழுவி, அந்த
பங்களாவின் வாசல் நோக்கி ஓடிவிட்டார். வாசல் தாண்டி அந்த காட்டுவழியே ECR சாலையை அடைந்தார்.
விஜய் மற்றும் ஏ.கே.,வின் சண்டை
வெகுநேரம் நடந்தது. நீச்சல் குளத்தின் அருகில் சண்டை நடந்துக் கொண்டிருந்தபோது,
ஏ.கே.,வின் தலையின் விஜய் தொடர்ந்து ஆறு காலி பீர் பாட்டில்களைக் கொண்டு அடித்து
உடைத்தான். அவர் மயக்கமானார். வீட்டினுள்ளே, மற்ற நண்பர்கள் இணைந்து, அடியாட்களை
அடித்து, ஒரு பெட் ரூமில் அடைத்தனர்.
“டேய்.. சீக்கிரம் கிளம்புங்க.. ரொம்ப
நேரம் தாங்காது” பதட்டத்துடன் பேசிக்கொண்டே விஜய் உள்ளே வந்தான்.
“மச்சி பேக்ஸ்?”
“எல்லாம் காருக்கு போயாச்சி”
“ஃபைன்.. லெட்ஸ் மூவ்”
அனைவரும் அந்த பங்களாவைவிட்டு
வெளியே சென்றனர். அழகிய பங்களா அருண் தாபா போல காட்சியளித்தது.
நீச்சல் குளத்தின் அருகில்
மயங்கிக்கிடந்த ஏ.கே., கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தார்.
தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 15 – இதுவும் கடந்து போகும்
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
Episode 01 - காதலும் குழப்பமும்
Episode 02 - கல்யாண வீடு
Episode 03 - ரத்தின வியாபாரி
Episode 04 - நட்பு சரித்திரம்
Episode 05 - மணமகள் வீடு
Episode 07 - என்ன பிளான்..?
Episode 08 - அருண் தாபா
Episode 09 – காதல் பயணம்
Episode 10 – பார்ட்டி பிகின்ஸ்
Episode 11 – சொல்லாத கதை
Episode 12 – மழையும் புயலும்
Episode 13 – காதல் புயல்
Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு
Episode 15 – இதுவும் கடந்து போகும்
Episode 16 – இனி எல்லாம் சுகமே
Episode 17 – ஆஹா கல்யாணம்
__________________________________________

Comments
Post a Comment