01. காதலும் குழப்பமும்

 ஆஹா கல்யாணம் 

01. காதலும் குழப்பமும்

அழகிய மாலை பொழுது ஒன்றில் பல நாள் கனவுகள் நிஜமாகப் போகிறது என்ற களிப்போடும், முகம் மலரும் சிரிப்போடும், இன்றைய காதலனும் நாளைய கணவனுமான வருணின் முகத்திலுள்ள சில தழும்புகளின் காரணமறியாத குழப்பத்தோடும், தன்னுடைய ரிசப்ஷனில் போட்டோவிற்கு போஸ் கொடுக்க வினோதினி தயாராகிக் கொண்டிருந்தாள். குறித்த நேரத்தை விடவும் ஒருமணி நேரம் தாமதமாகி விட்டது.

“நம்ம ஊர்ல எது நேரத்துக்கு நடந்துருக்கு..?” 

“இதோ.. நேரதுக்கு இவ்ளோ அழகா ரெடியாகி உக்காந்திருக்காளே நம்ம வினோ.. அதுவும் மாப்பிள்ளை  ரெடி ஆகுறதுக்கு முன்னாடி..”

“அவள விடு டீ... ஷீ  இஸ் எக்ஸ்செப்ஷனல்.. ஸ்கூல் காலேஜ் எல்லாமே அவ அப்புடிதான.. இப்போ ப்ரொஃபஷனல் வேற மேடம்! அப்படி தான் இருப்பாங்க”

“அதெல்லாம் இல்ல டீ... எல்லாம் லவ்வ்வ்வு..”

மணமகள் அறையில் கிண்டலும் கேலியுமாக மணப்பெண்ணை தோழிகள் வம்பிழுத்துக்கொண்டு இருந்தார்கள். அறை முழுக்க கலகலவென்றிருக்க வினோ மட்டும் ஒப்புக்கு சிரித்தவளாய் அமர்ந்திருந்தாள்.

“நல்லாத்தான் சிரியேன் டீ.. நான் போட்டு விட்ட மேக்கப் ஒண்ணும் உதுந்துராது” பியூடீஷன் தோழி வினோவின் மனவோட்டாம் தெரியாமல் தன் பியூடீஷன் கலையின் பெருமை பேசினாள்.

“டேய் கண்ணா.. மாப்பிள்ளை ரெடி... ஆல் குட்... ஸ்டேஜுக்கு போலாமா?” வினோவின் அம்மா மணமகள் அறையில் இருக்கும் அனைவரையும் நோக்கி அழைப்பு விடுத்தார்கள்.

     மணப்பெண்ணின் தோழிகள் மணமகளை மிக பத்திரமாக கொண்டுவரும் கண்ணாடி பொருள் போல இருபுறமும் அணைத்தப்படி அழைத்து வந்து மேடையின் மத்தியில் நிற்க வைத்தனர்.

“பெரியவங்கள கும்புட்டுக்கோ மா ..!” ஒரு குரல் கேட்டது.

           அனைவரையும் வணங்கினாள்.

கூட்டத்தில் இருந்தவர்கள் அத்தனைபேரும் மணமகளை வாழ்த்தியபடி சிரித்த முகத்துடன் மறுவணக்கம் செய்தார்கள். அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அண்ணி, அண்ணி குழந்தைகள், கல்லூரி நண்பர்கள், பள்ளி நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார்கள் தனது கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், என்று வந்திருந்த அணைத்து சொந்த பந்தங்களையும் வினோதினி நன்கு அறிந்திருந்தாள். அவர்களும் வினோதினியை நன்கு அறிந்திருந்தனர். தன் வீட்டில் நடக்கும் மங்கள நிகழ்ச்சியின் ஆனந்தமும் மனநிறைவும் போல வினோதினியின் திருமண நிகழ்ச்சி அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது என்பது ஒவ்வொருவர் முகத்திலும் பிரதிபலித்தது.

வினோதினியின் முகத்தில் கல்யாண கலை படர்விட்டிருந்தாலும் மனதில் பல கேள்விகளும் குழப்பங்களும் ஓடிக்கொண்டிருந்தன. எத்தனை குழப்பம் இருந்தாலும் முகம் மட்டும் எப்போதும் மலர்ந்திருக்க வேண்டும் என்பதில் வினோதினி மிக கவனமாகவே இருந்தாள். கல்யாண கலகலப்பில் அவள் மனவாட்டத்தை அவள் அம்மா கூட கவனிக்கவில்லை. மணமகன் அறையில் இருந்து வருண் எப்போது வெளியே வருவான் என்று காத்துக்கொண்டிருந்தாள்.

மணமகன் அறை திறக்கப்பட்டது. வினோதினியின் தம்பி விஷ்ணு வெளியே வந்தான். வெளியே வந்தவனை சிரிப்பும் கோபமும் கலந்த முக பாவனையில் அருகில் அழைத்தாள் வினோதினி. அந்த முகபாவத்தின் அர்த்தமும் அவள் தவிப்பின் ஆழமும் விஷ்ணு நன்கு உணர்ந்தே இருந்தான். இருப்பினும் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை. வந்தவர்கள் அனைவரையும் வரவேற்பதுபோல் வணங்கிக்கொண்டே மேடையில் நிற்கும் தன் அக்காவின் அருகில் பொறுமையாக சென்றான்.

“கங்ராட்ஸ் சிஸ்டர்” என்று வாழ்த்துவதுபோல சிரித்த முகத்துடன் கையை நீட்டினான்.

“மொகரகட்ட... ஏன் டா லேட்? கால்ல என்ன? ஏன் இவ்ளோ ஸ்லோவா வாக் பண்ற? என்னத்த பண்ணிதொலச்சிங்க ஆறு பேரும் சேர்ந்து?” வாழ்த்து சொல்ல வந்த கையை இழுத்துப் பிடித்துக்கொண்டு மேடைக்கு கீழே அமர்ந்து இருப்பவர்களின் கவனத்தை சிறிதும் ஈர்க்காதவாறு மிக கவனமாக கேள்வி கனைகளை அக்கினியோடு தோய்த்து விஷ்ணு மீது எய்தாள் வினோதினி.

“கூல் வினோ.. நத்திங் டூ வொர்ரி..! இதோ மாப்பிள்ளை வராரு பாரு.. அங்க கேளு..” என்று கூறி கண்ணடித்தான். அவள் முகம் லேசாக வாட தொடங்கியதை கவனித்தவன் “ரிலாக்ஸ் கா.. இட்ஸ் யுவர் வெட்டிங்.. சிரிச்ச மூஞ்சியா இரு.. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று ஆறுதல் கூறினான்.

    வயதில் சிறியவன் ஆனாலும் சூழ்நிலையை புரிந்து நடப்பவன் விஷ்ணு என்பது வினோதினிக்கு நன்கு தெரியும். அவன் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று சொன்னால் உண்மையில் ரிலாக்ஸாக இருக்கலாம். ஆனாலும் அவன் நடையும், உள்ளங்கையினில் இருக்கும் சிறு சிறு காயங்களும், சிவந்து கிடக்கும் கண்களும், எதையோ அவன் மறைக்கிறான் என்பதும் வினோதினிக்குப் புரிந்தது.

     பல சிந்தனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருக்க அந்த இளவரசியை தனது மகாராணியாக மணம் முடிக்க ராஜ நடை போட்டு மிக கம்பீரமாக வந்தான் வருண்.

மணமக்களை வாழ்த்த வந்த சொந்தங்கள், உடனிருக்கும் பந்தங்கள், மேடையில் இருந்த மணப்பெண் தோழிகள், தன் மைத்துனன் விஷ்ணு, வருங்கால மாமா, அத்தை என்று எவர் மீதும் பார்வை செலுத்தாமல் நேராக வினோதினியை நோக்கி நடந்தான். தனது இரு கரங்களினால் வினோதினியின் கரங்களைப் பற்றி,

“எக்ஸ்ட்ரீம்லி  சாரி டா..! சாரி ஃபார் தி டிலே..! ஐ கேன் எக்ஸ்ப்ளெய்ன்.. கொஞ்சம் டைம் குடு” என்று கூறி சமாதானப் படுத்திவிட்டு அனைவரையும் வணங்கி நின்றான் வருண்.

‘எக்ஸ்ட்ரீம்லி  சாரி டா’ என்ற வார்த்தையோடு வினோதினி கரைந்துவிட்டாள். மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் வந்த இடம் அறியாமல் காணாமல் போனது. முகம் முற்றிலுமாக மலர்ந்தது.

மேடையின் ஓரமாக இருந்த மணமகன் அறையிலிருந்து மற்ற நால்வரும் வெளியே வந்தனர். ஒருவன் வேகமாக மேடையிலிருந்து கீழே சென்று ஒரு நாற்காலியை ஓரமாக போட, இருவர் இணைந்து மற்றொருவனை கைத்தாங்களாக அந்த நாற்காலியில் அமர்த்தி அவர்களும் அருகில் அமர்ந்தனர். இதை பார்த்த விஷ்ணு வருணின் காதில் ஏதோ சொல்ல, வருண் அவர்களை நோக்கி ‘ஆல் குட்‘ என்பது போல கட்டை விரலை காட்டி  சைகை செய்தான். பதிலுக்கு மேடைக்கு கீழே ஓரமாக அமர்ந்திருந்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு லேசாய் சிரித்துக்கொண்டு ‘ஆல் குட்‘ என்பது போல கட்டை விரலை காட்டி  சைகை செய்தார்கள்.

இதனை கவனித்தும் கவனிக்காதவளாக மேடையில் நின்றுக் கொண்டிருந்தாள் வினோதினி என்கின்ற வினோ!   

தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 02 - கல்யாண வீடு


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி



Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்



__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments