Previous Epi - 11. சொல்லாத கதை
12. மழையும் புயலும்
பேச்சுலர்ஸ் பார்டிக்காக, ECR-ரில், அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில், நண்பன்
ஒருவன் உதவியின் மூலமாக பெரிய பிரைவேட் ப்ராப்பர்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கே கல்யாண மாப்பிள்ளையாகிய வருண், அவன் நண்பர்களாகிய விக்னேஷ்,
விக்ரம், விவேக், விஜய் மற்றும் மணமகனின் மைத்துனனும் வினோதினியின் தம்பியுமான
விஷ்ணுவும், நெடுநேர பயணத்தின் பிறகு அங்கு வந்து
சேர்ந்தனர். லேசாக தொடங்கிய மழை, நன்கு வழுபெற்று, விடாது பெய்தது.
“என்ன டா.. நைட் ஃபுல்லா மழை விடாது
போலயே.. வீட்டுக்குள்ளயே உக்காந்து சரக்கு அடிக்கிறதுக்கா இவ்ளோ தூரம் வந்தோம்..?
வந்ததே வேஸ்டா?”
“இருடா.. மணி 8:30 தான ஆகுது.. நைட்ல
இன்னும் எவ்ளோவோ நேரம் பாக்கி இருக்கு.. டோன்ட் வொர்ரி.. உன் பேச்சுலர்ஸ் பார்ட்டி
கல கட்டும்..”
கொட்டும் மழையினில் கூகிள் மேப்பின்
உதவியோடு அந்த பங்களாவை வந்து சேர்ந்தனர். ஒன்றரை ஏக்கர் நிலப்பகுதியின் மத்தியில்
பத்து சென்டில் அமைக்கப்பட்டிருந்தது அந்த பங்களா. டபுள்-ஹெட் லிவ்விங் ரூம் என்று
அழைக்கப்படும் இரண்டு மாடி உயரம் கொண்ட கூடம் வைத்து, நவீன காலத்து முறையில்
கட்டப்பட்டிருந்தது. கூடம், இரண்டு மாடியின் அளவும், கீழே மூன்று அறைகளும், மேல்
மாடியில் மூன்று அறைகளும் இருந்தது. ஒவ்வொரு அறையிலும் குளியலறை மற்றும் கழிப்பறை
இருந்தது போக கூடத்திலும் ஒரு கழிப்பறை இருந்தது, மிக பிரம்மாண்டமான சமையலறையும்,
பன்னிரெண்டுபேர் அமர்ந்து உண்ணக்கூடிய பெரிய அவிழக மேசையும் (டைனிங் டேபிள்) அந்த
பங்களாவில் இருந்தது. அத்தனையும் மிக சுத்தமாக பராமரிக்கப் பட்டிருப்பதைப்
பார்த்து அனைவரும் வியந்தனர். முதல் ஒருமணிநேரம் பங்களாவை சுற்றிப்பார்ப்பதும்,
அவரவர்கள் அறைகளை தேர்ந்தெடுப்பதும், ஆடை மாற்றி, பார்டிக்கு தயாராவதுமாக நேரம் கழிந்தது. அடுத்த ஒன்றரை மணி
நேரம், விவேக், அந்த பங்களாவின் பரப்பளவு
பற்றியும், பங்களாவின், பின்தடுப்பு சுவர் வாசல் வழியாக வெளியே சென்றால்,
கால் பதிக்கும் முதல் இடம் கடற்கரை என்றும், மழை நின்றால் கண்டிப்பாக அங்கேதான்
முதலில் செல்லவேண்டும் என்றும் அனைவரின் ஆசையையும் தூண்டிக்கொண்டிருந்தான். ஆனால்
வெகுநேரமாக மழையின் வேகம் குறைந்தபாடில்லை. அதை கண்டு வருத்தப்பட்ட வருணுக்கு
விஜய் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.
“டேய் பீர் எங்க டா?”
“வந்த ஒடனே ஃபிரிஜ்ல வச்சிட்டேன் மச்சி”
“இதுக்கு தான் விஜய் வேணுங்கறது..
சூப்பர் மாமா நீ”
“என்ன பிரயோஜனம்.. மழை ஓயலயே..”
“அட சலிச்சிக்காதீங்க மாப்பிள்ளை சார்.. வாங்க.. வந்து
டைனிங் டேபிள்ல உக்காருங்க”
“என்ன விக்கி.. என்ன பிளான்?”
“நீங்களும் வாங்க விஜய் சார்..
சொல்றேன்..”
வருத்தத்தில் இருந்த வருணையும், அவனுடன் ஆறுதலாக
பேசிக்கொண்டிருந்த விஜயையும், ஒரு குட்டி குளியல் போட்டுவிட்டு தனது அறையிலிருந்து
வெளியே வந்த விஷ்ணுவையும், அந்த பங்களா பற்றிய பல அம்சங்களை சொல்லிக்கொண்டிருந்த
விவேக்கையும் அழைத்து, சமயலறை அருகில் பெரிதாக போடப்பட்டிருந்த அவிழக மேசையில்
விக்னேஷ் அமரச் செய்தான்.
“மச்சீ.....”
வாய் நிறைய பற்களோடு தனது அறையிலிருந்து, ஒரு அடி உயரமுடைய, சக்கரம் பதிந்த,
மேசை ஒன்றை உருட்டிக்கொண்டு, விக்ரம், அனைவர் முன்பும் வந்தான். அந்த மேசையில்,
செவ்வக வடிவத்தில் ஏதோ ஒன்று, துணியால் போர்த்தப்பட்டிருந்தது. அது என்ன என்பதுபோல
அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்க, விக்ரம் அந்த போர்வையை, வாயில் தாளம்
போட்டுக்கொண்டே, மிக கவனமாக, விலக்கினான்.
“டன்.. டடன்.. டடன்.. டன் ட ட ட ட..
டன்.. டடன்.. டன்.. டான் ட ட ட டடன்”
போர்வை விலக விலக, விக்ரம் முகத்தில் இருந்த அந்த மகிழ்ச்சியும்,
ஆச்சரியமும், அனைவர் முகத்திலும் படர்ந்தது. அவனுடன் சேர்ந்து, சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்ட் இசையை, அனைவரும் வாயில்
தாளமிட்டனர்.
“டன்.. டடன்.. டடன்... டன் ட ட ட ட.. டன்.. டடன்.. டன்.. டான் ட
ட ட டடன்”
முழு போர்வையும் விலகியவுடன் “மச்சான்…” என்று கத்திக்கொண்டே அனைவரும் வந்து விக்ரமை கட்டியணைத்துக்கொண்டார்கள்.
பின்பு, அனைவரும் சேர்ந்து அந்த பெரிய ஸோனி போர்ட்டபிள் புளுடூத் ஸ்பீக்கரை எங்கே
வைப்பது என்பது பற்றிய ஆலோசனையை தொடங்கி ஆளுக்கொரு இடம் சொல்ல,
“டேய்.. எவனுமே கீழ் ரூமோட பேக்ஸைட்
டோர ஓபன் பண்ணி பாக்கலையா?”
விவாதித்துக்கொண்டிருந்த அனைவரும்
சட்டென்று அமைதியாகி, விவேக் என்ன சொல்கிறான் என்று பார்த்தனர்.
“என்னங்க டா திருதிருன்னு
முழிக்கிறீங்க? அட ச்சீ இந்த ரூம் உள்ள போங்க”
விஷ்ணு தேர்ந்தெடுத்த அறையின் உள்ளே அனைவரையும்
போகச்சொல்லிவிட்டு, புளுடூத் ஸ்பீக்கரை தள்ளிக் கொண்டு தானும் உள்ளே சென்றான்.
வாசலுக்கு நேராக, பெரிய கட்டில் ஒன்றும், அதன் வலதுபுறம்
துணிகள் வைக்கும் அலமாரி ஒன்றும், கட்டிலுக்கு நேர் எதிரில் சுவற்றில் மாட்டப்பட்ட
டி.வி. ஒன்றும், அதன் கீழே சுவரோடு ஒட்டியதுபோல நீளமான மேசையும், அதன் மீது தண்ணீர்
ஜாடியும், ஒரு கண்ணாடி கிளாஸும், ஆஷ் ட்ரேவும் வைக்கப்பட்டிருந்தது. கட்டிலின்
இடதுபுறம் மிகப்பெரிய ஜன்னல் ஒன்று பெரிய திரை போட்டு மூடப்பட்டிருந்தது. இவை
எல்லாம் போக, ஆறுபேர் தாராளமாக புழங்கும் அளவிற்கு அந்த அறையில் இடமும் இருந்தது.
அனைவரும் அந்த அறையை சுற்றிப்பார்த்துகொண்டிருக்க, விவேக்
நேராக சென்று அந்த பெரிய ஜன்னலின் திரையை விலக்கினான். அது வெறும் ஜன்னல் அல்ல,
கதவுகளும்கூடதான். அந்த கதவை திறந்து வெளியே சென்று வெளிவிளக்குகளை போட்டான்.
மழைநீர் அறைக்குள் வராதவாறு வெளியே தளம் போடப்பட்டு இரண்டு தூண்களும் இருந்தது.
அந்த இடத்தில் போர்ட்டபிள் புளுடூத் ஸ்பீக்கரை நகர்த்திக்கொண்டுவந்து வைத்தான்.
“பவர்?”
“எதுக்கு?”
“ஸ்பீக்கர்க்கு”
“இது பேட்டரில ரன் ஆகும் விஷ்ணு..
மேக்ஸிமம் 12 ஹவர்ஸ் தாங்கும்.. ஸோ நோ இஷ்யூ”
“ப்ளஸ்.. இங்க ஸோக்கெட்டும் இருக்கு”
“சூப்பர் மச்சி..!” விஜயும்
விவேக்கும் ஹைஃபை செய்துக்கொண்டார்கள்.
மழை
வேகம் லேசாக குறைந்தது. இடியும் மின்னலும் அவ்வப்போது தோன்றியது. காற்றின் வேகம் லேசாக
அதிகரிக்கத் தொடங்கியது. புளூடூத் ஸ்பீக்கர் திரண்பேசியுடன் (ஸ்மார்ட் ஃபோன்)
இணைக்கப்பட்டு, என்ன என்ன பாடல்கள் கேட்கலாம் என்று விக்ரமும், விஷ்ணுவும்
சேர்ந்து, பிளேலிஸ்ட் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவிழக மேசையை சுற்றி
போடப்பட்டிருந்த பன்னிரெண்டு நாற்காலிகளில் ஆறு நாற்காலிகளை, விக்னேஷூம், வருணும்
சேர்ந்து, அந்த அறையின் பின் வாசலுக்கு கொண்டுவந்து போட்டார்கள்.
“ஒரு டேபிள் இருந்தா நல்லா இருக்கும்ல?”
வருண் சொல்ல, விக்னேஷூம், அவனும்
சேர்ந்து அந்த பங்களாவில் டேபிளை தேடிப் பார்த்தனர். தலைவாசலின் வெளியே ஒரு அறை
பூட்டப்பட்டிருந்ததை உள்ளே வரும்போது கவனித்த வருண்,
“அந்த ரூம்ல பாப்போமா?”
“மச்சான்.. அல்ரெடி இது பூத் பங்களா
மாதிரி தான் இருக்கு.. உள்ள வந்ததுல இருந்து ஒரு பேட் வைப்ஸ் இருக்கு.. இந்த
சிட்சுவேஷன்ல.. இந்த மழைல.. அந்த தேக்கு கதவ தொறந்து.. என்ன இருக்குன்னு தெரியாத
ரூம்குள்ள போகனுமா?”
அந்த நொடிவரை எந்த பயமும் இல்லாமல்
இருந்த வருணுக்கு, விக்னேஷ் பேசியதை கேட்டதும் லேசாக பயம் வந்தது. பெரிய தேக்கு
கதவும், வெளியே கொட்டும் மழை சத்தமும், உள்ளே நண்பர்கள் பேசும் சத்தமும், ஃபிரிஜ்
ஓடும் சத்தமும், ஜன்னல் வழியாக வெளியே தெரியும் இருட்டும், அந்த இருட்டில் ஆடும்
மரங்களும், அருகில் நிற்கும் விக்னேஷின் முகமும் அவனை ஏதோ செய்தது.
“சரி மச்சி.. கீழ கூட
உக்காந்துக்கலாம்.. ஒண்ணும் பிரச்சன இல்ல”
“இல்ல மச்சி.. உனக்கு டேபிள் தான்
வேணும்னா சொல்லு.. நான் உன் கூட வரேன்.. நீ உள்ள தனியா பேய்..” என்று தடுமாறி,
வாய் குளறுவதுபோல பாவனை செய்து “அது.. தனியா போய்.. டேபிள தேடி கண்டுபுடிச்சி.. வெளிய
கொண்டு வர வரைக்கும்.. நான் இங்கயே வெயிட் பண்றேன்.. மச்சி.. போறியா?”
என்று கேட்டு புருவத்தை உயர்த்தி காட்டினான்.
“ஆணியே புடுங்க வேணாம்.. மூடிட்டு உள்ள
போடா”
‘தப்பிச்சோம்டா சாமி’ என்று மனதில் சொல்லியபடி விக்னேஷ்
செல்ல, அவனை பின்தொடர்ந்து வருணும் சென்றான்.
பயம்! ஒரு மனிதனை என்னவெல்லாமோ செய்யவைக்கும்.
முயற்சியின் வேகத்தை முறிக்கும்,
தோல்வியின் இன்பத்தை கெடுக்கும், வெற்றியின் களிப்பை வேரறுக்கும், முழுமையான
அன்பில் மூழ்க விடாமல் தயக்கம் தரும், அதையும் மீறி மூழ்கினால், அந்த பாசத்தை பரீட்ச்சிக்கும்.
பயம், சில சமையம் செய்யாத தவறுக்கு பழி வந்தபோது, எதிர்த்து போராடாமல், தப்பியோட
யோசனையளிக்கும். அதன் விளைவாக, தப்பியோட முயன்ற பாண்டுவை, ஏ.கே.,வின் அடியாட்களில் ஒருவரான வேலு, தடுத்து
நிறுத்தி, கை கால்களை கயிறினால் கட்டி, தங்கள் மஹிந்த்ரா தாரின் பின்சீட்டில்
ஏற்றினார். வேலு வண்டி ஓட்ட, அவர் அருகில் இருந்த சீட்டினில் ஒரு அடியாளும்.
பின் சீட்டில் பாண்டுவின் அருகில் இரண்டு அடியாட்களும் அமர்ந்திருந்தனர்.
‘பேச்சுலர்ஸ் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி போறாங்க..’ என்று
பாண்டு சொன்னதை நம்பி, பாண்டிச்சேரி நோக்கி அவர்கள் பயணித்தனர். இதற்கிடையில்,
துரையின் உதவியின்மூலம், அருண் தாபாவின் பாதுகாப்பு கேமராவில் பதிவுகளை ஏ.கே.,
பெற்றார். வேலுவிற்கு அப்படங்களை அனுப்பி, அவர் பாண்டுவிடம் காட்ட, வருண், அவன்
நண்பர்கள் மற்றும் அவனது வாகனம்பற்றிய விவரங்களை அனைவரும் அறிந்துக்கொண்டனர்.
“சார், நான் நம்ம ஆளுங்ககிட்ட எல்லாம்
விசாரிச்சிட்டேன்.. இந்த பசங்க யாருமே பாண்டி எண்ட்ரன்ஸ் செக்போஸ்ட தாண்டல”
“ரூம்ஸ்? ரிசார்ட்ஸ்?”
“இவ்ளோ பெரிய பொருள் வாங்குற பசங்க,
கண்டிப்பா ரூம் எடுக்க மாட்டாங்க.. ஸோ, ரிசார்ட்ஸ்ல மட்டும்தான் விசாரிச்சோம்..
அங்கேயும் இந்த நம்பர் பிளேட் போட்ட காரோ, இல்ல இந்த பசங்களோ இல்லை”
“ம்ம்ம்..”
“ஒரு ஹாஃப் அன் ஹவர் வெயிட் பண்ணலாம்..
ரூம்ஸ் பத்தின டீடெயில்ஸும் கெடச்சிடும்.. அதுபோக நம்ம ஆளுங்ககிட்ட எல்லாம்
இன்ஃபார்ம் பண்ணியாச்சு சார்.. கண்டிப்பா பாண்டில பசங்க இருந்தா.. புடிச்சிடலாம்
சார்”
“புல் ஓவர்”
இரண்டு கார்களும் ECR சாலையில், ஒரு ஒற்றையடி பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டது. வெளியே மழை
விடாது பெய்தது. இடியும் மின்னலும் அவ்வப்போது வந்து சென்றது. கார்கள் நிறுத்தப்பட்டு
சில நிமிடங்கள் ஆகியும், ஏ.கே.,விடம் இருந்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்த
காரணத்தினால், கொட்டும் மழையில் வேலு தனது காரை விட்டு இறங்கி ஏ.கே.,விடம்
சென்றார். காரின் ஜன்னல் கண்ணாடி இறக்கப்பட்டது. அவர் செல்போனில் ஏதோ ஒரு
புகைபடத்தை பார்த்தவண்ணம், முகம் வாடியபடி, இருந்தார்.
“என்ன ஆச்சி சார்?”
தனது செல்போனை
வேலுவிடம் காட்டினார். துறை அனுப்பிய, வருண் மற்றும் அவன் நண்பர்களின்
புகைபடத்தில், ஒரு உருவத்தை மட்டும் பெரிதாக்கி ஏ.கே., காட்டினார். வேலுவின் முகம்
மாறியது. கொட்டும் மழை, அவர் தலையில் இருந்து முடிவழியே இறங்கி முகத்தில் ரேகைகளாக
ஓடியபோதிலும், சாலையில் வெளிச்சம் மிகக்குறைவாகவே இருந்தபோதிலும், வேலு முகத்தில்
பயமும் பதட்டமும் மிக தெளிவாக தெரிந்தது. அந்த பதட்டத்தில் லேசாக கால்
தடுமாறுவதுபோல இருந்தது. தடுமாறியது. அவ்வாறு தடுமாறி ஒரு அடி பின்னால் எடுத்து
வைத்தபோது காலில் ஏதோ தட்டுப்பட்டது. அது என்னவென்று வேலு எடுத்துப்பார்த்தார்.
அது ஒரு கைக்கு அடக்கமான டப்பா. நகைகள் போடும் அட்டை பெட்டி போல இருந்தது. திறந்துப்பார்த்தால்
அதில் ஒரு சுருக்குப்பை இருந்தது. அதனுள் ஒரு கழுத்து செயின் மற்றும் குட்டி
புகைப்படமும் இருந்தது.
அதுவரை காருக்குள் அமர்ந்திருந்த ஏ.கே., கதவை திறந்து கீழே
வந்து வேலுவின் கையில் இருந்த அந்த செயினை வேகமாக பிடுங்கினார். செயின் மற்றும்
குட்டி புகைப்படத்தை பார்த்ததும், அவர் வேகமாக மஹேந்திரா தார் வண்டியின் பின்கதவை
நோக்கி நடந்தார். மழை தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்தது. காரின் பின் கதவை திறக்க,
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரின் அடியாட்கள் சூழ, பாண்டு இருப்பதை
பார்த்தார்.
“கட்ட கழட்டுங்க“
பாண்டு
விடுவிக்கப்பட்டார். கீழே இருந்த அவரை எழுப்பி சீட்டினில் அமர்தினார்கள். ஏ.கே.,
கண்காட்ட, அடியாட்கள் மூவரும் கீழே இறங்கி, வேலுவுடன் சேர்ந்து, ரோல்ஸ் ராய்ஸ்
வண்டியில் ஏறி அமைதியாக அமர்ந்தனர். ஏ.கே., மஹிந்த்ரா தாரின் பின் கதவு வழியே உள்ளே சென்று, பாண்டுவின் எதிரில் அமர்ந்தார். அதே நேரத்தில், வானில் பளிச்சென்று
மின்னலும், அதை தொடர்ந்து
இடியும் இடித்தது.
மழையின் வேகம் லேசாக குறைந்தது. புளூடூத் ஸ்பீக்கர் ஆன்
செய்யப்பட்டு, அதில் போடவேண்டிய பாடல்களை தேர்வுசெய்து கேட்க, விக்ரமும்,
விஷ்ணுவும் தயாராக இருந்தனர்.
“விஜய் அண்ணா, விவேக் ரெண்டுபேரும்
காணும்.. எங்க போனாங்க?”
“ரெண்டும் திருட்டுக்கொட்டு.. நம்மல விட்டுட்டு
பார்ட்டி ஸ்டார்ட் பண்ணிடாய்ங்களோ..?? விஜய்.. ” என்று அழைத்தான்.
“இதோ வந்துட்டோம் மச்சி”
“என்னடா.. எங்க போனீங்க?”
என்று கேட்டுக்கொண்டே சத்தம் வந்த பக்கம் விக்ரம் பார்த்தான். அந்த
பெரிய அறையின் பின்கதவின் வெளியே, வராண்டாவில், புளூடூத் ஸ்பீக்கர் வைக்கப்பட்ட
இடத்தை தாண்டி புல்வெளியில் இருந்து விஜயின் சத்தம் கேட்டது. வராண்டாவில்
போடப்பட்டிருந்த விளக்கு, வராண்டா தாண்டி வெளிச்சம் தரவில்லை. மை இருட்டாக இருந்த
புல்வெளி பக்கமிருந்து விஜயின் குரல் வந்ததும் அந்த இருட்டை நோக்கி விக்ரமும், விஷ்ணுவும்
உற்றுப்பார்த்தனர். குரல் வந்து சில வினாடிகள் ஆனபோதிலும் யாரும் அங்கேயிருந்து
வரவில்லை. அதே நேரத்தில் டேபிள் தேடிச் சென்ற வருணும், விக்னேஷூம், அங்கே வந்து
சேர்ந்தனர். இருட்டில் இவர்கள் எதையோ தேடுவதை பார்த்ததும், பின்னாலிருந்து,
“என்னடா.. என்ன தெரிகிறது..?”
“இல்லடா.. விஜய், விவேக் ரெண்டு
பேரையும் காணும்... குரல் கொடுத்தா.. இதோ இந்த ஸைட்ல இருந்து சவுண்ட் வருது”
என்று சொல்லி, இருட்டை நோக்கி
விக்ரம் கை காட்டினான்.
“இரு பாக்கலாம்..” என்று சொல்லி, தனது
செல்லில் டார்ச் லைட் ஆன் செய்து, அந்த இருட்டின் பக்கம் வருண் திருப்பினான்.
“பாய்ஸ்..”
செட்டென்று அனைவரும் அந்த
வரண்டாவில் இருக்கும் ஸ்விட்ச் போர்ட் பக்கம் திரும்பினர். சிரித்த முகத்தோடு
விஜய் அங்கு நின்றுக்கொண்டிருந்தான். ‘என்ன?’ என்பதுபோல அனைவரும் பார்க்க,
“லைட்ட போட்ரா..”
என்று சூப்பர் ஸ்டார் தொனியில் விவேக் குரல் கேட்டது. விஜய்
ஸ்விட்ச்சை போட்டான். மை இருட்டாக இருந்த பக்கத்தில், பளிச்சென்று ஒளி பரவியது. மழை
பெய்துக்கொண்டிருந்த நேரத்தில், பெரும் மரக்கூட்டமும், அழகிய செடிகளுக்கும்இடையே,
அந்த புல்வெளி சுற்றி, விளக்குகள் எரிந்தது கண்களுக்கு மிக அழகான காட்சியாக
இருந்தது. பார்த்த நால்வரும் வாயடைத்து ஆங்காங்கே நின்றபடி இருந்தனர்.
“மக்களே.. அப்டியே ஒரு நாலு ஸ்டெப்
இந்த பக்கம் வாங்க”
புல்வெளிபக்கம் வரும்படி, அனைவரையும்,
விவேக் அழைத்தான். லேசாக மழை பெய்துக்கொண்டிருந்தது. இந்த பங்களாவில் இன்னும் என்ன
என்ன அழகு காட்சிகள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் நால்வரும் புல்வெளியில்
காலெடுத்து வைத்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
அந்த புல்வெளியில் நாலடி எடுத்து
வைத்ததும், விஜய் மற்றொரு ஸ்விட்ச்சை போட்டான். பூமியின் கீழிருந்து ஒளி
பிரகாசித்தது. அது ஒரு பெரிய நீச்சல் குளம். அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி
குதித்தனர்.
“ஹேப்பி பேச்சுலர்ஸ் பார்ட்டி..” என்று
கத்திக்கொண்டே விஜயும் விவேக்கும் சேர்ந்து, வருணை தூக்கி அந்த பெரிய நீச்சல்
குளத்தில் போட்டு, தாமும் உள்ளே குதித்தனர். அவர்களை தொடர்ந்து விஷ்ணு, விக்கரம்
குதிக்க, விக்னேஷ் மட்டும் தயங்கி நின்றான்.
“என்ன டா?” என்று விஜய் கேட்க,
பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே ஓடினான். எதுவும் புரியாமல் அனைவரும் வராண்டாவையே
பார்த்துக்கொண்டிருக்க, திடீரென்று புளூடூத் ஸ்பீக்கரில் ‘மச்சி.. ஓபன் தீ
பாட்டில்’ பாடல் ஒளிக்கத் தொடங்கியது. நீச்சல் குளத்தில் இருந்த அனைவரும்,
சந்தோஷத்தில் ஆடத்தொடங்கினர்.
“டேய் முட்டா பசங்களா.. இப்போதான்டா
ஆக்சுவலா அவனுக்கு விஷ் பண்ணனும்”
என்று சொல்லிக்கொண்டே, ஃபிரிஜில் இருந்த பீர் கேசை கொண்டுவந்த விக்னேஷ், தண்ணீருக்குள் பீர் கேசுடன் குதித்தான். அனைவரும் மீண்டும் ‘ஹேப்பி பேச்சுலர்ஸ் பார்ட்டி..’ என்று வாழ்த்தி ஆளுக்கொரு மினி பீர் பாட்டிலை எடுத்து ‘சீயர்ஸ்’ சொல்லி வானை நோக்கி உயர்த்தினர். அதே நேரத்தில், வானில் பளிச்சென்று மின்னலும், அதை தொடர்ந்து இடியும் இடித்தது.
தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 13 – காதல் புயல்
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
Episode 01 - காதலும் குழப்பமும்
Episode 02 - கல்யாண வீடு
Episode 03 - ரத்தின வியாபாரி
Episode 04 - நட்பு சரித்திரம்
Episode 05 - மணமகள் வீடு
Episode 07 - என்ன பிளான்..?
Episode 08 - அருண் தாபா
Episode 09 – காதல் பயணம்
Episode 10 – பார்ட்டி பிகின்ஸ்
Episode 11 – சொல்லாத கதை
Episode 12 – மழையும் புயலும்
Episode 13 – காதல் புயல்
Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு
Episode 15 – இதுவும் கடந்து போகும்
__________________________________________

Comments
Post a Comment