11. சொல்லாத கதை

 ஆஹா கல்யாணம் 

Previous Epi -  10. பார்ட்டி பிகின்ஸ்

11.   சொல்லாத கதை

வெயிலின் உஷ்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதுபோல தெரிந்தது. தாபாவில் கூட்டம் குறைந்தபாடில்லை. அருண் தாபாவின் எல்லா மூலைகளிலும் வியாபாரம் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தது. கார் பார்க்கிங், லாரி பார்க்கிங் என அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்தன. மது, மாது, துரித உணவு வகைகள், தாபாவின் ஸ்பெஷல் உணவுப் பொருட்கள் என அனைத்தும் ஜோராக விற்றுக்கொண்டிருந்தது.

தனது தாபா கலகலப்பாக கல்லா கட்டிக்கொண்டிருக்க, தாபாவின் உரிமையாளரான, துரை, சோகத்தின் உச்சியில் அமர்ந்துக்கொண்டிருந்தார்.

“சார்.. நீங்க வரீங்கன்னு முன்னாடியே தெரியும்.. ஆனா இந்த மாதிரி வருவீங்கன்னு எதிர்பாக்கல சார்...”

“......”

“இது எப்போ சார் முடியும்?”

     தாபாவின் உரிமையாளர் அறையில் மிகப்பெரிய மேஜை ஒன்றின் ஒருபக்கத்தில் உரிமையாளரின் இருக்கை இருந்தது. அதன் எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த, துரை, ஏ.கே.,விடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த அறையின் நான்கு மூலையிலும் ஏ.கே.,வின் நான்கு பாடிகார்டுகள் நின்றுக்கொண்டிருந்தனர். உரிமையாளர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டிருந்த ஏ.கே., துரையின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ யோசித்தவண்ணம் தனது கையில் வைத்திருந்த செல் ஃபோனை முறைத்துக்கொண்டிருந்தார்.

“சார்.. ஏதாச்சும் கேள்வியாவது கேட்டுட்டு பதில் சொல்லவிட்டுட்டு அப்றம் அடிக்கலாம்ல? பேசவே விடாம அடிச்சி யாருக்கு என்ன லாபம்?”

     அதே அறையில் ஒரு நாற்காலியில் பாதி மயக்க நிலையில் அமர்த்தப்பட்டிருந்த பாண்டுரங்கனைப் பார்த்து, பரிதாபப்பட்ட துரை, பதட்டமாக ஏ.கே.,விடம் கேட்டார். அதே நேரத்தில் ஏ.கே., கையில் இருந்த பாண்டுவின் செல் ஃபோன் ஒலித்தது. தரணி என்ற பெயரில் கடந்த இரண்டு மணிநேரத்தில் பன்னிரெண்டு அழைப்புகள் பாண்டுவின் செல் ஃபோனிற்கு வந்திருந்தது. அத்தனை நேரமும் அந்த ஃபோன் ஏ.கே.,-வின் கையில் தான் இருந்தது. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாத பாண்டுவிற்கு இத்தனைமுறை அழைப்பு வந்தது ஏ.கே.விற்கு சந்தேகம் அளித்தது. பதிமூன்றாவது முறை தரணி அழைத்தபோது ஏ.கே., அழைப்பை ஏற்றார். ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு தனது பாடிகார்டை அழைத்து பாண்டுவிடம் கொடுக்கச் சொன்னார்.  

“அப்பா..! மீட்டிங்ல இருக்கீங்களா? சாரி டு டிஸ்டர்ப்.. பேசலாமா?” இனிமையான குரலில், மிக கனிவாக, தரணி பேசினாள்.

“ம்ம்ம்ம்..” தீனக்குரலில் பாண்டு பதிலளித்தார்.

‘அப்பா’ என்ற வார்த்தையை கேட்டதுமே அந்த அறையில் இருந்த ஏ.கே., அவரின் அடியாட்கள், மற்றும் துரை முதற்கொண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

பாண்டு பற்றியும், அவர் வாழ்க்கை முறை பற்றியும் பெரும்பாலானோர் அறிந்திருந்தனர். பொய்யும் பித்தலாட்டமுமாக வாழ்க்கையை நடத்தியவர், வாக்கில் சுத்தம் இல்லை, வியாபாரம் என்று வந்தால் பணம் மட்டுமே குறி, நம்பிக்கை நாணயம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இவரை விட அவர் விலை அதிகம் தருவதாக சொன்னால் கடைசி நேரத்திலும்கூட தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் பொருளை அதிக விலைக்கு கைமாற்றுவார். பிறர் அடையும் கஷ்ட நஷ்டங்களை பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டார். 

பெரும்பாலும் அவர் வாங்கி விற்பது கடத்தல் பொருட்களாகவே இருக்கும். தங்கம், வைரம், விலை உயர்ந்த ஆபரணங்கள், கண்ணாடி பொருட்கள், அபூர்வமான உலோகங்களில் செய்யப்பட்ட அழகு பொருட்கள், வாசனை திரவியங்கள் என உலகில் பல மூலைகளில் கிடைக்கும் பொருட்களை தனது உலகப்பயண நண்பர்களின் உதவியினால் இந்தியா வரவழைத்து இங்குள்ள பணக்காரர்களிடம் விற்பனை செய்வார்.

பணம் ஒன்றே குறியாக இருந்த காரணத்தினால் அவர் மீது நம்பிக்கை உள்ள நண்பர்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. அவரின் நடுத்தர வயதினிலேயே சில நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறினார்கள். காலப்போக்கில்  மொத்த நண்பர்களும் மறைந்தும் போனார்கள். வெறும் வியாபார ரீதியான உறவுகள் மட்டுமே பாண்டுவிற்கு இருந்தது. தனக்கென்று நகைக்கடை ஒன்றை அமைத்துக்கொண்டார். சென்னையில் சொந்த வீடுகளும், அப்பார்ட்மெண்ட்களும் பல இடங்களில் வாங்கினார். வாடகை பணத்தையும் நகைக்கடை வருமானத்தையும் சேர்த்துவைத்து நகைக்கடையை விரிவடைய செய்தார். பழைய பழக்கம் விட்டுப்போகாமல் இருக்க இன்றும் கடத்தல் பொருட்களை நகைக்கடை வழியாக நுகர்வோர்களை கண்டுப்பிடித்து விற்றுவந்தார்.

ஒரு நாள் அதிகாலையில் எப்போதும்போல படுக்கையில் இருந்து எழுந்து கிழக்கு பார்த்து அமர்ந்து நன்கு மூச்சை இழுத்து விட்டு, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்தார். ஆனால் அன்று, மனம் ஏனோ தெளிவாகவில்லை. வாழ்க்கையில் ஒரு வெறுமை தோன்றியது. எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கின்றோமோ என்ற சந்தேகம் பாண்டுரங்கனின் மனதில் உதித்தது. அந்த சந்தேகம் உதிக்க முக்கிய காரணம், தரணி.

தரணி, பாண்டுவின் மைலாப்பூர் வீட்டில் மேல் மாடியில் வசிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சின்னப்பெண். பல ஆண்டுகளாக தரணியும் அவள் பெற்றோரும் அந்த வீட்டில்தான் வாழ்ந்துவந்தார்கள். வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் அவள். ஒரு வருடம் முன்பு, காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் தரணி இழந்தாள். பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவளுக்கு ஆறுதலாக சொந்தங்கள் யாரும் இல்லை என்பதால், பாண்டு அவளுடன் ஆறுதலூக்காகவும் பாதுகாப்புக்காகவும் இருக்க நேரிட்டது. மேலும், அவள் பெற்றோர் வாங்கிய கடனிற்காக, கடன் கொடுத்தவர்கள், காப்பீடு பணம் மொத்தத்தையும் தங்களுக்குள் பிரித்து எடுத்துக்கொள்ள, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தரணியின் கனவு வெறும் கனவாகவே சென்றது.

பாசத்திற்காக ஏங்கிய தரணிக்கு ஆறுதலாக பாண்டு இருந்தார். தரணியின் அன்பும், பாசமும், தான் இத்தனை நாட்கள் சம்பாதித்த பணம் ஒன்றுமே இல்லையோ என்ற கேள்விக்கு வழிவகுத்தது. கேள்வியின் பதில், நல்ல குடும்பமும், பாசமான உறவுகளுமே வாழ்க்கைக்கு பணத்தைவிட அவசியமாக தேவை என்று உணர்த்தியது. தனது வாழ்க்கை எத்தனை வெறுமையாக இருக்கிறது என்று பாண்டு உணர்ந்தார். தரணியின் படிப்பில் அவர் அக்கறை காட்டினார். நாட்கள் செல்ல செல்ல அப்பா மகள் என்ற உறவு வளர்ந்தது. சரியான நேரத்திற்கு உணவு உண்டாயா? இன்றைய நாள் எவ்வாறு சென்றது? எப்போது வீட்டிற்கு வருவீர்கள்? நாளை விடுமுறையா? எங்கேனும் வெளியே செல்வோமா? என்ற கேள்விகளெல்லாம் அந்த ஐம்பத்தியாறு வயதில் பாண்டுவிற்கு ஒரு விதமான ஆனந்தத்தை நல்கியது.

தரணியின் படிப்பில் ஆர்வம் காட்டிய பாண்டு, அவளை மருத்துவம் படிக்க வைக்கவும் உதவுவதாக சொன்னார். அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பரீட்சை முடிவுகள் வெளிவந்தபின்பு, தன்னை அவளது லீகல் கார்டியன் என்று வக்கீலை வைத்து சான்றிதல் பதிந்துக்கொண்டார். தனது தொழில் சார்ந்த நண்பர் ஒருவரின் உதவியின் மூலம் ப்ரிட்ஜ்டவுனில் உள்ள அமெரிக்கா யூனிவர்சிட்டி ஆஃப் பார்படோஸில் மருத்துவ சீட்டு வாங்கினார். தரணி மிகவும் ஆனந்தமானாள். அந்த ஆனந்தம் பாண்டுவிற்கு ஒருவித அமைதியை அளித்தது. இத்தனை நாட்கள் வாழ்க்கையில் ‘அடுத்தது என்ன?’ என்ற நிலையே நீடித்திருந்தது. ஆனால் முதல் முறையாக ‘இது நீடிக்குமா?’ என்ற கேள்வி வந்தது. 

எல்லாம் புதிதாக இருந்தபோதிலும், பழைய பழக்கங்களை அவர் விடவில்லை. நகைக்கடை ஒருபுறமும், கடத்தல் பொருள் கைமாற்றம் ஒருபுறமும் நடந்ததுக்கொண்டுதான் இருந்தது. இதுவரை அவர் வாங்கி விற்ற பொருட்களிலேயே ஏ.கே.விடம் விலைபேசிய வைரங்கள் தான் விலையில் மிகவும் அதிகமானது. அருண் தாபாவில் வருணிற்காகவும், ஏ.கே.விற்காகவும் திறந்தவெளியில் போடப்பட்டிருந்த டேபிளில் பாண்டு அமர்ந்து காத்துக்கொண்டிருந்தபோது, தனது ரிட்டையர்மெண்ட் பற்றிய ஒரு சிறிய ஆசை துளிர்விட்டது. தரணி மறுநாள் காலை மூன்று மணி விமானத்தில் அமெரிக்கா செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அவள் சென்ற இரண்டாம் நாளே தானும் அவளுடன் சென்று அங்கேயே நிரந்தரமாக, தரணியின் அப்பாவாக இருந்துவிடலாம். மகள் போல பார்த்துக்கொள்ளலாம். வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகாலம் இல்லாத இந்த இனிமையை இன்னும் ஒரு ஆறேழு வருடம் அனுபவிக்கலாம். தரணி படிப்பு முடித்து அங்கேயே பணிபுரிவாள். பின்பு அவளின் கல்யாணம் அதன் பிறகு கடவுள் விட்ட வழி. என்ன ஆனாலும் சரி, இந்த கைமாற்றத்தை முடித்துவிட்டு இனிமேல் கடத்தல் தொழிலில் ஈடுபடவே கூடாது என்று முடிவெடுத்தார்.

ஆனால், எங்கோ ஒரு சிறிய தவறு நேர்ந்தது. அதன் விளைவாக, அருண் தாபாவில், துரையின் அறையில், ஏ.கே.வின் அடியாட்களால் அடிக்கப்பட்டு, கண்கள் சுற்றியும், கண்ணங்கள், ரத்தம் கட்டியதால் வீங்கியும், உதடு கிழிந்து, வாயிலிருந்து ரத்தமும் எச்சிலும் வழிந்தவண்ணம், ஒரு மூலையில் அமர்த்தப்பட்டிருந்தார். அந்த நிலையில்தான் தரணி ஊருக்கு செல்லும் முன்பு வளர்ப்பு தந்தையாக இரண்டு ஆண்டுகள் இருந்த பாண்டுவுடன் நேரம் செலவழிக்க விரும்பி ஃபோன் செய்தாள். கடை வியாபாரம் சம்பந்தமாக பாண்டு யாரிடமோ வெகுநேரமாக பேசிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்த தரணி ‘மீட்டிங்ல இருக்கீங்களா? சாரி டு டிஸ்டர்ப்.. பேசலாமா?’ என்று கேட்டாள்.

“ம்ம்ம்ம்..” தீனக்குரலில் பாண்டு பதிலளித்தார்

“சீக்கிரம் வீட்டுக்கு வருவீங்கன்னு நெனச்சேன்.. நான் கார் எல்லாம் புக் பண்ணிட்டேன்.. நைட் டின்னர் ஒன்னா சாப்பிடலாம்னு ஆசப்பட்டேன். நீங்க சீக்ரம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க.. நான் முழுச்சி தான் இருப்பேன்” என்று வேகமாக பேசிவிட்டு ஃபோனை துண்டித்தாள்.

     இதற்கு முன்பு பலமுறை இவ்வாறு வியாபார சம்பந்தமான பேச்சுவார்த்தையின் நடுவில் ஃபோன் செய்தபோதெல்லாம் இவ்வாறே பேசிவிட்டு, தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக, பதிலுக்கும் கூட காத்திருக்காமல் ஃபோனை துண்டித்துவிடுவாள். இப்போதும் அவ்வாறே செய்தாள்.

ஃபோன் துண்டிக்கப்பட்டதும், ஏ.கே., தனது நாற்காலியில் இருந்து எழுந்தார். துரையும் எழுந்தார். துரை அமர்ந்திருந்த நாற்காலியை இழுத்து பாண்டு அமர்த்தப்பட்டிருந்த நாற்காலிக்கு அருகில் போட்டு அமர்ந்து, பாண்டுவைப் பார்த்து,

“டாட்டர்..!?” என்று ஆச்சரியமாக கேட்டார்.

     பாண்டு ஆம் என்று தலையசைத்தார்.

“அடாப்டட்?”

“ம்ம்ம்..”

“என்ன ஏஜ்?”

“பதினேழு”

“அவளுக்காகதான் என்ன ஏமாத்த பாத்தியா?”

“இல்ல சார்.. சத்தியமா இல்ல.. அந்த பாக்ஸ்ல இருந்த டைமன்ட் எங்க போச்சினு சத்யமா எனக்கு தெரியல.. ஆனா நான் உங்கள ஏமாத்த நெனைக்கவே இல்ல சார்.. பிளீஸ் பிலீவ் மீ”

     இத்தனை நேரம் கேள்வி எதுவுமே கேட்காமல் அடிக்க மட்டுமே செய்தார்கள். முதல் கேள்வி வந்ததுமே கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப நடுங்கும் குரலில்  தனது நிலையை சொல்லித் தீர்த்தார்.

ஏ.கே., சற்று யோசித்தார். அதே நேரத்தில் தாபாவில் ஏதோ சண்டை என்று துரையின் பணியாள் ஒருவர் வந்து தகவல் சொல்லியதால் துரை எழுந்து வெளியே போனார்.

“நான் வரதுக்கு முன்னால யார்கிட்டயோ பேசிட்டு இருந்தியே அது யாரு?”

எந்த சூழ்நிலையில் டைமண்ட் தொலைந்துப்போனது என்று தெரிந்துக்கொள்ள நடந்ததை நினைத்துப்பார்த்து வினவினார்.

“அது வருண் தம்பி சார். ஆடிட்டர் மகன்”

“எதுக்கு இங்க வந்தான்?”

“அவனோட ஃபியான்ஸிக்கு ஒரு ரிங் கேட்டிருந்தான்.. பேச்சுலர்ஸ் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி போறாங்க.. வழில ரிங்கை கலெக்ட் பண்ணிக்கத்தான் சார் வந்தான்..”

     தானும் நடந்ததை எல்லாம் நினைத்துப்பார்த்து ஏ.கே.,வின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார். ஏ.கே.,வும் தான் காரிடம் செல்லும் வரை நடந்ததை எல்லாம் நன்கு நினைவுப்படுத்திப் பார்த்தார். நிச்சயமாக அவரிடம் இருந்து தவறி எங்கும் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று மிக தெளிவாக இருந்தார். ஒன்று, பாண்டு தன்னை ஏமாற்ற முயற்சித்திருக்க வேண்டும். அல்லது, பாண்டு எங்கேனும் எமாந்திருக்க வேண்டும், என்று ஒரு முடிவிற்கு வந்தார்.

     அதே நேரத்தில் தாபாவில் ஏதோ அமளி துமளி ஆரம்பித்துவிட்டது போல இருந்தது. துரை சென்ற சில நிமிடங்களில், அந்த அறைக்கு வெளியில், கூச்சல் சத்தம் கேட்கத் தொடங்கியது. நேரம் போகப்போக சத்தம் இன்னும் அதிகமாகியது.

“வேலு.. என்ன சத்தம்னு பாரு”

     அந்த அறையின் வாசல் கதவின் அருகில் இருந்த ஏ.கே.,வின் பாடிகார்ட், கதவை திறந்துப்பார்த்தார். 'தடால்' என்று, துரை, அறையின் உள்ளே வந்து விழுந்தார். வேலு அவரை கைகொடுத்து எழுப்ப, தட்டுத்தடுமாறி எழுந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுமாக, கம்பீரமாக இருந்த துரை அழுக்குப் படிந்த பழைய பாத்திரம் போல உள்ளே வந்தார். ஆடை முழுக்க சோறும், குழம்பும், தக்காளி சாஸும், மிளகாய் சாஸும் இன்னும் பெயர் தெரியாத ஏதேதோ பொருட்களும் கலந்த கலவையாக வந்து சேர்ந்தார்.

“சார்.. பின் வாசல் வழியா கிளம்புங்க.. சீக்கிரம்”

     கதவு திறந்த அந்த ஒரு நொடியில் வெளியில் நடப்பதை பார்த்த ஏ.கே.,விற்கு துரையின் பதட்டமும், தங்களை வெளியேறச் சொல்லும் காரணமும் புரிந்தது.

பைரெட்ஸ் ஆஃப் தீ கரேபியன் படத்தில் வரும் ‘டார்டூக்கா தீவு’ போல தாபா மாறியிருந்தது. தாபாவின் திறந்தவெளியில் அந்த நிலை பரவுவதற்குள், அங்கு இருந்த குடும்பங்களை ஏதேதோ காரணங்கள் சொல்லி துரையின் ஆட்கள் கிளப்பி அனுப்பினர். எதிர்த்து கேள்வி கேட்டவர்களையும், சத்தம் போட்டவர்களையும், லேசாக முறைத்தும், மிரட்டியும் துரத்திவிட்டனர்.

“என்ன சண்டை?”

“எப்பவும் போல தான் சார்.. சாப்பாடு லேட்டு.. பீர் கொண்டு வரவன் வேகமா வரல.. அது இதுன்னு சொல்லி சண்டைய ஆரமிச்சிட்டானுங்க.. காட்டுமிராண்டி பசங்க”

     மிக சாதாரணமாக சொல்லியபடி ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து மூச்சுவாங்கியபடி தன் மீது இருந்த அழுக்கை தட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

“பொருள் எல்லாம் சேஃப் சார். இத மாதிரி நடக்குறது இங்க ஒண்ணும் புதுசு இல்ல.. பசங்க எல்லாம் பக்காவா பேக் பண்ணிட்டாங்க.. டேபிள் சேர்ஸ் தான் ஒடையும்.. அதுவும் இவனுங்க வெறி தீருர வரைக்கும்தான் இந்த ஆட்டமெல்லாம்.. அப்றமா அப்டியே போயிடுவானுங்க.. நீங்க சேஃப்பா கிளம்புங்க சார்.. பின்னாடி வழி இருக்கு.. ரோட் இருக்காது.. பட் கார் போகலாம்.. பாத்து கிளம்புங்க”

“எப்டி மெயிண்டய்ன் பண்ண பிளேஸ்ஸ இப்டி ஆக்கி வச்சிர்க்கியே துரை” வெறுப்பும் வேதனையும் கலந்த குரலில் ஏ. கே., சொல்ல அனைவரும் ஒரு நிமிடம் அமைதியானார்கள்.

     அறையின் ஓரத்தில் இத்தனை நேரமும் அமைதியாக அமர்ந்து இருந்த பாண்டு, அடிவாங்கியதால் இழந்துபோன தனது சக்தியை எல்லாம் மீண்டும் ஒன்று திரட்ட முயற்சித்தார். அவரை நாற்காலியோடு கட்டிப்போடவேண்டிய அவசியம் இல்லை என்று அங்கு இருந்த அனைவரும் நினைத்தது தவறு என உணரும் வகையில் பாண்டு ஒரு காரியம் செய்தார். அதன் விளைவுகளில் ஒன்றாகத்தான் கணேசன் சார் ஸ்கார்பியோவின் பின் சீட்டை செக் செய்யாமல் அவசர அவசரமாய் சென்றது.

     சக்திகளை ஒன்று திரட்டிய பாண்டு, சட்டென்று அந்த அறையிலிருந்து துரை காட்டிய பின் வாசல் வழியே ஓட்டம் பிடித்தார். உண்மையில் அது சமையல் கூடத்தின் மற்றொரு வாசல். கதவை திறந்ததும் அங்கு என்ன இருக்கிறது என்று பாராமல் கண்டபடி ஓடினார். சில விநாடிக்குள் உடல் சோர்ந்துவிட்டது என்பதை அவரால் உணர முடிந்தது.

     பாண்டு ஓடியதை தொடர்ந்து வேலு அவரை பின்தொடர்ந்து ஓடினார். அருண் தாபாவில் நடக்கும் அமளி துமளி காரணமாக துரையின் ஆட்கள் ஏற்கனவே சமையல் கூடத்தை பாதி காலி செய்துவிட்டனர். மீதமிருந்தது காய்கறிகளின் வெட்டப்பட்ட குப்பைகளும், அமர்த்தப்பட்ட விறகு அடுப்பும், கேஸ் அடுப்பும் மற்றும் கேஸ் சிலிண்டர்களும் தான்.

     அந்த சமையல் கூடத்தின் மறுபக்கம் இருந்த கதவு ஒன்றை பாண்டு கவனித்தார். அவர் அதை நோக்கி ஓட்டம் பிடிக்க, வேலு, தான் கையில் கிடைத்த பாத்திரம் ஒன்றை தன் முழு பலம் கொண்டு அவர் மீது எறிந்தார். அது பாண்டுவின் காலில் பட்டு, அவர் கீழே விழுந்து புரண்டார். தூக்கி எறிந்த வேகம் தாழாமலும், தரையில் இருந்த காய்கறிகளாலும், சமநிலை தவறி வேலுவும் கீழே விழுந்தார். பாண்டுவின் கண்கள் கலங்கியது. வளர்ப்பு மகளை பார்க்க வேண்டும் என்ற நினைப்பு மனதில் நீங்காமல் ஓடியது. மற்ற எதுவும் அவர் மனதில் அந்த நொடியில் தோன்றவில்லை. தரணியின் முகமும், அவள் சிரிப்பும், பாசமும் மட்டுமே பாண்டுவின் உயிரை காப்பாற்றிக்கொள்ளத் தூண்டியது. கையில் கிடைத்த பொருட்களைப் பற்றிக்கொண்டு தரையில் மெதுவாக தவழ்ந்துக்கொண்டே அந்த மறுபக்க கதவை நோக்கி ஊர்ந்து செல்ல முயன்றார்.

அவ்வாறு செல்கையில் தன்னையறியாமல் ஒரு கேஸ் ட்யூப்பை பற்றி இழுக்க, அது சிலிண்டரில் இருந்து அவிழ்ந்து, அதில் இருந்த கேஸ் அந்த அறையில் மெதுவாக பரவத் தொடங்கி அறை முழுக்க படர்ந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து, பாண்டு கதவை அடைந்தார். கீழே விழுந்த வேலு வேகமாக எழுந்து வந்து பாண்டுவின் கழுத்தைப் பிடித்து தூக்கி தானே அந்த கதவை திறந்தார். கதவின் மறுபக்கம் பார்த்ததும், பாண்டுவின் முகம் வாடியது. உடலின் மொத்த வலுவும் போயிற்று. கதவின் அந்த பக்கம், லேசாக சிரிக்கும் உதடுகளும், கூர்மையான பார்வையோடும், ஒரு கையில் தனது கூலிங் கிலாஸை ஸ்டைலாக பிடித்தபடி, கதவின் சாளரத்தில் சாய்ந்து, ஏ.கே., நின்றுக்கொண்டிருந்தார். பொறுமையாக பரவத்தொடங்கிய எரிவாயு, அணைக்கபட்ட விறகு அடுப்பின் கனல் அடங்காத விறகின் மீது பட்டு குப்பென்று தீ பற்றியது. ஒரு நொடிக்கூட தாமதிக்காமல், ஏ.கே., பாண்டு, நான்கு அடியாட்கள் மற்றும் துரை அனைவரும் சமையல் கூடத்தின் பின்வாசல் வழியாக தாபாவின் குப்பைகள் கொட்டும் இடம் வழியே, வெளியே சென்று, கார் பார்க்கிங் அடைந்தனர். தாபாவில் திபுதிபுவென்று தீ பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேற அவர்களுடன் சேர்ந்து ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரும், மஹேந்திரா தார் ஜீப்பும் வெளியேறி ECR சாலையை அடைந்து இடபுறம் திரும்பி அருகாமையில் வந்த யு வலைவில் திருப்பி பாண்டிச்சேரி நோக்கி பயணப்பட்டது.


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 12 – மழையும் புயலும்


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments