09. காதல் பயணம்

 ஆஹா கல்யாணம் 

Previous Epi - 08 - அருண் தாபா 

09.  காதல் பயணம்

“இன்னும் எவ்ளோ தூரம் போகணும்? பாண்டி உள்ளயா.. இல்ல ஔட்டர்லயா?” 

“ஹொ.. ! சாரி..! என்னோட மொபைல்ல லொகேஷன் இருக்கு..”

அருண் தாபாவில் பர்சேஸ் எல்லாம் முடித்துவிட்டு எங்கே போகின்றோம் என்று தெரியாமல் பாண்டிச்சேரி நோக்கி தனது ஸ்கார்பியோவை ஓட்டிக்கொண்டிருந்த விஜய், விவேக்கிடம் வழி கேட்டான். கூகிள் மேப்பில் லொகேஷன் எடுத்து காரின் மொபைல் ஸ்டாண்டில் விவேக் தன் செல் ஃபோனை வைத்தான்.

“என்னடா.. ஏதோ காட்டுக்குள்ள போகுது? ரோட்ல இருந்து 5 kms உள்ள காட்டுது.. அங்க ரோடே இல்ல”

“டிரஸ்ட் மீ விஜய்.. யூ வில் லவ் இட்”

“நீ டிரைவ் பண்றியா?”

“நோ வே.. பர்சேஸ் பண்ற அப்போ கொஞ்சம் சாம்பிள் பாத்தேன்.. ஸோ ந்..நோ”

“அடப்பாவி” பின்னாலிருந்து நால்வரும் ஒரே சமயத்தில் சொன்னார்கள். விஜய் மட்டும் லேசாக சிரித்தான்.

“டேய்.. உனக்கு ஏற்கனவே தெரியுமா? ஏன் சிரிக்ற?” பின் சீட்டிலிருந்து வருண் கேட்டான்.

“வாங்குனது ஒரு கேஸ் மினி பீர்.. நான் தான் அதை சீட் கீழ வச்சேன்.. அவன் சும்மா சொல்றான் டா”

“ஹான்ன்ன்.. பொய் தான்.. பொய் தான்..” விவேக் போதையில் இருப்பவன் போல பேசினான்.

விஜய் அவனை உற்றுப் பார்த்தான். அவன் பாக்கெட்டில் ஒரு டப்பா இருப்பதை கவனித்தான். சிகரெட் டப்பா போல இருந்தது. வெறும் சிகரெட் பிடித்ததற்கா கார் ஓட்ட மறுக்கிறான் என்று யோசித்தான்.

“அதை வெளிய எடு”

“எதை?”

“பாக்கெட்ல இருக்க பாக்ஸை”

தயக்கத்துடன் தன் சட்டை பையிலிருந்து ஒரு சிகரெட் டப்பாவை எடுத்து விஜய் கையில் கொடுத்தான். பின் சீட்டில் இருந்த விக்னேஷ் மற்றும் வருண், கடைசி சீட்டில் இருந்த விஷ்ணு மற்றும் விக்ரம் ஆகிய நால்வரும் விஜய் என்ன சொல்லுவான் என்று ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர். ‘பேச்சுலர்ஸ் பார்ட்டி என்ற பெயரில் ஒரு நாள் குடிப்பது போல ஒரு நாள் புகைத்தால் என்ன?’ என்ற கேள்விதான் எல்லார் மனதிலும் ஓடியது, விஜய் ஒருவனைத்தவிர.

“அது சிகரெட் இல்லதான?” கோபம் கலந்த குரலில் கேள்வி வந்தது.

“கரெக்ட்”

பின்னாலிருந்த அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர். விஜய் தனது காரை  ரோட்டின் ஓரமாக நிறுத்தினான்.

“எத்தன நாளா இந்த பழக்கம்?” கோபமும் பொறுமையும் கலந்த குரலில் விவேக்கை கேட்டான்.    

“வாட்..? டேய்... பழக்கம்லா இல்ல... இங்க சேல் பண்ணுவாங்கனு தெரியும்... ட்ரை பண்ணலாமேனு வாங்குனேன்...”

“ஆஃப்டர் மஹி அக்கா...!”

விவேக் தெளிவான குரலில் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது கடைசி சீட்டில் இருந்த விஷ்ணு வேறு விளக்கம் கொடுத்தான். அனைவரும் விஷ்ணுவை திரும்பி பார்த்தனர். யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. வண்டி அமைதியில் மூழ்கியது. விவேக்கின் திறன்பேசியின் வழிபடி வண்டி நகரத்தொடங்கியது.

“இட்ஸ் நாட் எ பிக் டீல்” அமைதியை கலைத்து ரோட்டை பார்த்தபடி விவேக் சொன்னான்.

“சாரி..!” சோக குரலில் விஜயிடம் இருந்து ஒரு வார்த்தை மட்டும் வந்தது.

“பாட்டு போடலாமே..!” அமைதியின் அழுத்தம் தாங்காத விக்னேஷ் பரிதாபமாய் கேட்டான்.

“பேசிட்டே போலாமே..” கல்யாண மாப்பிள்ளை யோசனை சொன்னான்.

“என்ன பேசறது..?” பின் சீட்டில் இருந்து விக்ரம் கேட்டான்.

“மாப்பிளைக்கு நீ கொஞ்சம் அட்வைஸ் பண்ணலாம்.. இங்க இருக்கிறதுலயே நீதான் எக்ஸ்பீரியன்ஸ்டு பெர்சன்!”

“ஹொ..! தட்ஸ் சிம்பிள்.. டோன்ட் கெட் மேரீட்..!”

“அடப்பாவி..! யாழினி கிட்ட இத நான் கன்வே பண்றேன்”

“அட போடா.. அவளும் அதேதான் சொல்வா..!”

“ஏன் மச்சி? நீங்க லவ் மேரேஜ்தான.. அப்றம் ஏன் சலிச்சிக்ற? உன்னோட லவ் ஸ்டோரி சொல்லேன்.. கேட்டுட்டே போலாம்..” அமைதியை கலைத்து கலகலப்பு கூட்ட விஜய் கேட்டான்.

மிகவும் மெல்லீசான ஒலியுடன் காதல் பாடல்கள் போடப்பட்டதும், தன் காதல் கதையை அழகாக படம் போட்டு காண்பித்தான் விக்ரம்.

விக்ரமின் சொந்த ஊரான ஒரு அழகிய கிராமத்தில் பொங்கல் பண்டிகையின்போது மாமன் மகளை சந்தித்து காதலித்து கரம்பிடித்த கதைதான் அது.

யாழினி...! பெயர் போலவே அன்பும் பண்பும் நிறைந்த அழகிய பெண் அவள். எத்தனையோமுறை முறைமாமனை பார்த்தபோது தோன்றாத நாணமும் இனம்புரியாத இன்பமும் ஒரு பொங்கல் பண்டிகையில் வேட்டி சட்டையில் விக்ரமை பார்த்தபோது மனதில் தோன்றியது. ஆசை நாயகன்மீதும் ஆசை நாயகியின்மீதும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் அழகு சம்பிரதாயம் ஒரு விளையாட்டாய் இன்றும் கடைபிடிக்கப்படும் ஊர் அது. தன்னையறியாமல் விக்ரமின் மீது தன் கையில் இருந்த மஞ்சள் நீரை ஊற்றினாள். புது சட்டையும் வேட்டியும் கரையான கோபத்தில் யாழினியை ஒரு முறை முறைத்துப் பார்த்தான். தான் தவறு செய்துவிட்டோமோ என்று யாழினி பயந்தாள். யோசிக்காமல் செய்துவிட்டோமோ என்று பதறினாள். அவள் கண்கள் கலங்க, அவன் மனம் கனிந்தது. அவன் கோபப்பார்வை அவள் கலங்கிய கண்களை கண்டதும் காணாமல் போனது. லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அந்த சிரிப்பை பார்த்த அவள் மனம் மீண்டும் இனம்புரியாத இன்பத்தில் ஆழ்ந்தது.

ஒரு வருடம் கழிந்தது. மீண்டும் பொங்கல் பண்டிகைக்கு தனது கிராமத்திற்கு விக்ரம் பெற்றோருடன் வந்தான். மீண்டும் புது வேட்டி சட்டை, மீண்டும் அதே மஞ்சள் தண்ணீர் ஊற்றும் அழகு சம்பிரதாயம், மீண்டும் அதே யாழினி. ஆனால் இம்முறை அவள் மஞ்சள் நீர் ஊற்றவில்லை. முறைமாமனை பார்த்தபடி தயக்கத்துடனும் நாணத்துடனும் நின்றுக்கொண்டிருந்தாள். காதலின் விளிம்பில் நெளிந்துக்கொண்டிருந்த யாழினியிடம் சென்று,

“மறுபடியும் சட்டய கரையாக்கிட மாட்டியே?”

“ம்ம்ம் ஹும்ம்ம்” வெட்கம் ததும்ப ததும்ப பதில் வந்தது.

     மறு நொடி, விக்ரம் தனது கையினில் மறைத்து வைத்திருந்த ஒரு சொம்பு நிறைய மஞ்சள் தண்ணீரை அவள் தலையில் ஊற்றினான். ஈரம் சொட்ட சொட்ட அவனை கண்ணோடு கண் பார்த்தாள். மீண்டும் வெட்கம் பற்றிக்கொண்டது. சிறித்துக்கொண்டே வீட்டினுள் ஓடினாள். அத்தை மாமாவிடம் அவனே சென்று பெண் கேட்டான். பெற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். திருமணமும் முடிந்தது. கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தபோதிலும் பட்டின வாழ்க்கை அவளுக்கு கசக்கவில்லை. காரணம் விக்ரம். தனை நம்பி வந்தவளை மிக கம்பீரமாக பார்த்துக்கொண்டான். ஊர் சுற்றினார்கள், வழி கற்றுக்கொள்ள. வங்கி சென்றார்கள், விதவிதமான படிவங்களை ஆராய்ச்சி செய்ய. ஷாப்பிங் சென்றார்கள், செலவுகள் சரிபார்க்க. வாகனம் பயின்றார்கள், நேரத்தை சேமிக்க. கரம் பிடித்த நாள் முதல் கண்மூடும் நாள்வரை ஒருவரையொருவர் உயரத்திற்கு அழைத்துச் செல்ல உணர்வுபூர்வமாக சத்தியம் செய்தார்கள். அதன்படியே வாழ்க்கையும் நடத்தினார்கள்.

     எல்லாம் அழகாய் அமைந்தபோதிலும், அந்த காதல் என்னும் கள்ளத்தனம் மட்டும் வாழ்வில் மிக சிறிய பகுதியாக அமைந்ததே விக்ரம் யாழினி இருவருக்கும் வருத்தம். தங்களை ‘காதலர்கள்’ என்று சமுதாயம் அழைத்த நாட்கள் மிக குறைவு. அந்த வருத்தத்தின் வெளிபாடே ‘டோன்ட் கெட் மேரீட்’ அறிவுரை.

     காதல் பாடல்களின் இனிமையிலும், விக்ரம் யாழினியின் காதல் கதையினிலும் மூழ்கிபடி வாகனம் ECR-ல் நகர்ந்துக்கொண்டிருந்தது. கதை கேட்டபடி அனைவரும் அமர்ந்திருக்க, விவேக்கின் பாக்கெட்டில் இருந்த சிகரெட் டப்பாவில் இருந்தது சிகரெட் இல்லை என்றால் வேறு என்ன என்ற கேள்வி விக்னேஷ் மனதில் வெகு நேரமாக ஓடிக்கொண்டிருந்தது.

“நைஸ் ஸ்டோரி மச்சி.. அல்ரெடி தெரிஞ்சதுதான்.. இருந்தாலும் நைஸ் ஸ்டோரி.. நவ் கெட் பேக் டு தட் லெந்த்தி சிகரெட்”

அனைவரும் அந்தக் கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க, ‘லெந்த்தி சிகரெட்’ என்ற வார்த்தையை கேட்டதுமே விஜயும், விவேக்கும் லேசாக சிரிக்க ஆரம்பித்தனர். பின்னால் அமர்ந்திருந்த அனைவரின் முகத்திலும் உள்ள எதிர்பார்ப்பை பார்க்க பார்க்க சிரிப்பின் வேகம் அதிகரித்துக்கொண்டே சென்றது. சில வினாடிகளில் அந்த சிரிப்பு வண்டியில் இருந்த அனைவரிடமும் பரவியது. காரணமின்றி குலுங்க குலுங்க அனைவரும் சிரித்தனர். அந்த சிரிப்பு அடங்க, சில கண்ணீர்த்துளிகளும் மணித்துளிகளும் பிடித்தது. ECR-ன் ஓரமாக ஒரு ஒற்றையடி பாதைக்கு அருகில் கார் நிறுத்தப்பட்டது.

“லெட்ஸ் பூம் இட்”

“இங்கயா?” விஜய் சொன்னதை கேட்ட அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனை பார்த்தான் விவேக்.

“ய்யப்”

“ஆர் யு சூர்?”

“அட எறங்குங்கடா எல்லாரும்” பின்சீட்டில் அமர்ந்திருந்த வருண் மற்றும் விக்னேஷயும் மற்றும் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் விக்ரமையும் பார்த்து விஜய் சொல்லிவிட்டு தன் கையில் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தானும் இறங்கினான். அவனைத் தொடர்ந்து அனைவரும் புத்துணர்ச்சியுடன் வண்டியிலிருந்து கீழே இறங்கினார்கள். கடைசியாக விஷ்ணு இறங்கியபோது அவன் காலில் ஏதோ சிக்கி தடுமாறி கீழே விழுந்தான்.

“ரொம்ப அவசர படாதடா.. உண்ண விட்டுட்டு போய்டமாட்டோம்...” விக்னேஷ் கிண்டல் செய்து விஷ்ணுவை தூக்கிவிட்டான். காரை லாக் செய்துவிட்டு அந்த ஒற்றையடி பாதையினுள் அனைவரும் சென்றனர்.

“டூ யூ வான்ட் டு?” என்று கேட்டு தனது சட்டை பையில் இருந்த டப்பவை எடுத்து விஜயிடம் விவேக் நீட்டினான்.

     சிறிய சிரிப்போடு அதை வாங்கி உள்ளே இருந்த ‘லெந்த்தி சிகரெட்’டை எடுத்து பற்ற வைத்தான். அது சிகரெட்புகை போல இல்லாமல் அதிகமாக புகைந்தது. வாசனையில் ஒரு கசப்பு தெரிந்தது.

“நைஸ் ரோல்.. நீயா பண்ண?”

“வாட்..? நோ வே.. நான்தான் சொன்னனே.. இப்டி தான் சேல்ஸ் பண்றாங்க”

     விஜய் பற்ற வைத்து விவேக்கிடம் கொடுத்தான். அவன் ஒரு இழு இழுத்துவிட்டு மற்றவர்களுக்கும் கொடுத்தான். ஒரு நிமிடத்தில் அங்கு வெறும் புகையும் இருமல் சத்தமுமாக கேட்டது. இரண்டாவது முறை விஜயிடம் அந்த ரோல் வந்தபோது அவன் அதை கீழே போட்டு தனது கையில் இருந்த பாட்டிலை திறந்து அதன் மீது தண்ணீர் ஊற்றினான்.

“இட்ஸ் எனஃப்” விவேக்கை பார்த்து சொன்னான்.

“ஐ எம் ஓகே வித் தட்”

     விஜயும் விவேக்கும் பேசிக்கொள்ள, ஒன்றும் புரியாமல் மற்ற நால்வரும் இருமிக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்கள். தொண்டையின் கசப்பும் கண்களில் ஏற்பட்ட எரிச்சலும் குறையும்வரை அனைவரும் அங்கேயே நின்றபடி காற்று வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

“உக்காரலாமா?” விஷ்ணு கேட்டான்.

விஜயும் விவேக்கும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“கார்க்கு போய்டலாம்.. இட்ஸ் அல்ரெடி லேட்..” விவேக் பதில் சொன்னான்.

“ஆமா ஆமா.. வந்த வேலைய பாப்போம்..” விக்னேஷ் படபடப்பாக பேசினான்.

“ஏன் பயப்பட்றீங்க.. நத்திங் வில் ஹேப்பென்.. கூல்..!”

“யாரு நானா..? கார்ல இருந்து இறங்கரப்போ மண்ணுக்கு முத்தம் கொடுத்தது  நீயா நானா?”

அனைவரும் சிரித்தனர். முன்பு சிரித்தத்துப்போல இந்த சிரிப்பு வெகுநேரம் நீடிக்கவில்லை. அமைதி ஆனார்கள். ஹைவே ஓரத்தில் அந்த ஒற்றையடி பாதையில் அவர்கள் நின்ற இடத்தில் நன்கு காற்று வீசியது. அதன் குளுமையை சிறிது நேரம் ரசித்தார்கள். சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் ஒற்றையடி பாதை வழியே காரை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

திடீர் என்று போலீஸ் சைரன் சத்தம் மிக அருகில் கேட்பது போல தோன்றியது. அறுவரின் ஈரக்கொலையும் நடுங்கியது. மரக்கிளைகள் வழியே பார்த்தபோது காரின் அருகில் சைரன் விளக்குகளும் சில போலீஸ் அதிகாரிகளும் இருப்பதை விஜய் கவனித்தான். அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். மற்றவர்கள் அனைவருக்கும் பயத்தில் கால்கள் நடுங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் ஆறு ஆடவர்களும் முழித்துக்கொண்டு அந்த ஒற்றையடி பாதையிலே நின்றனர்.


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments