08. அருண் தாபா

 ஆஹா கல்யாணம் 

Previous Epi - 07 - என்ன பிளான்..? 

08.  அருண் தாபா

பெருவாரியான மக்களுக்கு தாபா என்றாலே திறந்தவெளியில் போடப்பட்டிருக்கும் கயித்துக் கட்டில்களும் டேபிள்களும் தான் நினைவிற்கு வரும். இந்த தாபா அதையும் தாண்டி சில தனித்தன்மைகள் உடையது. அகலத்திலும் நீளத்திலும் மிகப்பெரியது. எப்போதுமே கூட்டம் நிறைந்தது. தாபாவை தேடி வரும் மக்கள் அருண் தாபாவின் முன் பகுதியில் மட்டுமே நேரம் செலவழிப்பர். அதன் அகலத்திலும் நீளத்திலும் என்ன நடக்கிறது என்று கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

ECR சாலையில், சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பாதையில், கல்பாக்கம் என்னும் ஊரைத்தாண்டி வலதுபுறத்தில் இருக்கும் தாபா அது. ஐம்பது பேருக்கு மேல் அங்கு அமர்ந்து உண்ணலாம். இருபது முதல் இருபத்தி ஐந்து லாரிகள் அங்கு நிற்க வைக்கும் அளவிற்கு இடமுண்டு. அது போக கார் பார்க்கிங்கும் உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை மிஸ்டர் ஏ.கே., தான் அதற்கு சொந்தக்காரர். ‘அருண் குமார் தாபா’ இப்போது ‘அருண் தாபா’ என்றாகி விட்டது. பெயர் மாறியதோடு அங்கு இருந்த கலாச்சாரமும் மாறிவிட்டது. ‘நாலு பேரும் நல்லா இருந்த ஊரும்’ என்னும் படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் ஊர் போல மிக பாதுகாப்பாக இருந்த (கடத்தல் பொருள் கைமாற்றும்) இடம் இப்போது அந்த படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ஊர் போல மாறிவிட்டது.

ஏ.கே., இந்த தாபாவை கௌரவத்திற்காகவும் சில பெரிய மனிதர்களின் நட்புக்காகவும் மட்டுமே நடத்தினார். இப்போது உரிமையாளராக இருக்கும் துரை என்பவர் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மது, மாது என்று தொடங்கி அத்தனை பொருட்களும் விற்கும் இடமாக மாறிவிட்டது. தாபா உணவு மட்டுமின்றி பீர், பிராந்தி, விஸ்கி போன்ற பானங்களும், ஹெராயின், கொக்கேன் போன்ற போதை பொருட்களும் அருண் தாபாவில் கிடைக்கும்.

அந்த தாபாவில், திறந்தவெளியில் போடப்பட்டிருந்த டேபிள் ஒன்றில், ஆறு டைமண்ட் கற்களும், ஒரு டைமண்ட் மோதிரமும் தனி தனி சுருக்குப் பைகளில் போட்டு ஒரே மாதிரியான அட்டைப்பெட்டிகளில் கைக்கு அடக்கமாக பேக்செய்து தனது பேண்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டு மிக பவ்யமாக அமர்ந்திருந்தார் பாண்டு. அந்த மதிய வேளையில் அங்கு வந்த முகங்களில் பலர் பாண்டுவிற்கு பரிச்சயமானவர்கள்தான். ஆனால் ஒருவர் கூட நண்பர்கள் இல்லை. சமயம் கிடைத்தால் அவரிடம் இருக்கும் பொருளை திருடவும் தயங்காத கூட்டம் சிலவும் அங்கு இருந்தது. அவரிடம் இருக்கும் டைமண்ட் பற்றியும் அதை வாங்குபவர் யார் என்பது பற்றியும் அங்கிருந்த அனேகருக்குத் தெரியும். எனவே அவரை யாரும் சீண்டவில்லை.

கால் மேல் கால் போட்டு மெத்தனமாக பாண்டு அமர்ந்திருந்தாலும் மனம் பரபரப்பாகவே இருந்தது. அமைதியாக இருக்கும் அருண் தாபா நொடி பொழுதில் பைரெட்ஸ் ஆஃப் தீ கரேபியன் படத்தில் வரும் ‘டார்டூக்கா தீவு’  போல அமலிதுமலியாக மாறக்கூடியது என்பதால் மிக எச்சரிக்கையாகவே இருந்தார். எத்தனை சீக்கிரம் இந்த வணிகத்தை முடிக்க முடியுமோ முடித்துவிட்டு தானும் ஏ.கே., போலவே ரிட்டயர் ஆகவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

“எப்பவுமே இவ்ளோ எக்ஸைடடா தான் டிரைவ் பண்ணுவியா?” சிரித்த முகத்துடன் ஸ்கார்பியோ S11-ஐ ஓட்டிக்கொண்டிருந்த விவேக்கைப் பார்த்து விஜய் கேட்டான்.

“எல்லா நாளும் இந்த மாதிரி புது புது வண்டி கெடச்சா கண்டிப்பா இவ்ளோ எக்ஸைடடா தான் டிரைவ் பண்ணுவேன்” பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தபடியே பதில் சொன்னான்.

     வண்டி கிளம்பி சிட்டி லிமிட் தாண்டியதும் ஒரு துரித உணவு கடையில் மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினார்கள். பாடல்களுக்கு என்று கானா, ஸ்பாட்டிஃபை, ஜியோ சாவன் என்று பல ஆப்கள் இருந்தாலும் தனக்கு பிடித்த பாடல்களை விரலியில்(பென்டிரைவில்) ஏற்றி இது போன்ற பயணங்களில் கேட்பது தனி சுகம்தான். தங்களுக்கு பிடித்த பாடல்களை விரலியில் பதிவு செய்து இந்த பயணத்தின் முதல் பாடலை கேட்க ஆரம்பித்தார்கள். ‘மச்சி ஓபன் தீ பாட்டில்’ என்று முதல் பாடல் காதை கிழித்தது. விண்டோக்கள் மூடப்பட்டிருந்தும் வெளியில் இருப்பவர்கள் கூட பாடல்களின் அதிர்வை உணரும் வண்ணம் வால்யூம் வைக்கப்பட்டிருந்தது. கல்பாக்கம் நெருங்கியதும் வால்யூம் குறைக்கப்பட்டது. அருண் தாபா பார்க்கிங்கில் வண்டி நிறுத்தப்பட்டது.

“அவுட்ஸைட்லயே நிறுத்திருக்கலாம்ல? ஏன் இவ்ளோ உள்ள வந்த?” தாபாவின் பின்வாசல்வரை வண்டியை கொண்டுவந்து நிறுத்திய விவேக்கிடம் விக்ரம் கேட்டான்.

“ஒரு சுமால் வொர்க் இருக்கு உள்ள.. வருண் அவனோட பர்ச்சேஸ முடிக்கட்டும்.. ”

“நம்ம பர்ச்சேஸ நம்ம பண்ணுவோம்” விஜய் விவேக்கின் பதிலை முழுமைப்படுத்தினான்.

“உனக்கும் இந்த பிளேஸ் பத்தி தெரியுமா?”

“நாட் எக்ஸாக்ட்லி.. பட் கேள்வி பட்ருக்கேன்.. ECR-ல இங்க சரக்கு கெடைக்கும்னு சொல்வாங்க”

காரில் இருந்து ஒருவர் பின்  ஒருவராக இறங்கினார்கள். மதிய உணவுவேளை என்பதால் தாபா கூட்டமாகவே இருந்தது. அதுவும் இவர்கள் வாங்க வந்த ஸ்பெஷல் ஐட்டங்கள் விற்கும் கவுண்டரின் கூட்டம் பார்ப்பதற்கே மூச்சடைத்தது.  

“ஓகே கைய்ஸ்.. இந்தாங்க என்னோட கார்ட்டு.. பின் நம்பர் விஷ்ணு சொல்வான்.. ஐ வில் மீட் பாண்டு அண்ட் ஃபினிஷ் மை பர்ச்சேஸ்.. முடிச்சிட்டு சேம் பிளேஸ்ல மீட் பண்ணுவோம்”.

சொல்லிவிட்டு தனது குட்டி பேக் ஒன்றை முதுகில் மாட்டிக்கொண்டு பாண்டுவை தேடி வருண் நடந்தான். கூட்ட நெரிசல்களை கடந்து தாபாவின் திறந்தவெளியில் டேபிள்கள் போடப்பட்டிருந்த இடத்தை அடைந்தப்பின் பாண்டுவிற்கு ஃபோன் செய்தான்.

“ஹலோ அங்கிள்.. வருண் ஹியர்.. தாபால தான் இருக்கேன்.. வேர் ஆர் யூ?”

“ஹலோ தம்பி.. ஃப்ரண்ட்ல பிளாஸ்டிக் டேபிள்ஸ் போட்டிருக்க பிளேஸ்ல தான்பா இருக்கேன்.. சீக்கிரம் வா.. ஐ எம் கெட்டிங் அனதர் கால்.. கட் பன்றேன்.. கம் சூன்” சொல்லிவிட்டு செக்கெண்ட் லைனை அட்டென்ட் செய்து பேசினார்.

“ஹலோ மிஸ்டர் பாண்டு, இந்த பிளேஸ் இவ்ளோ கிரவுடட்டா இருக்கும்னு நான் எதிர்பாக்கல.. ஐ எம் சாரி.. பொருள் சேஃப் தான..?” ஏ.கே., பேசினார்.

“நோ இஷ்யுஸ் மிஸ்டர் ஏ.கே., ஆல் சேஃப்.. டோன்ட் வொர்ரி..” தனது பாக்கெட்டில் இருக்கும் டைமண்ட்களை தொட்டு பார்த்துவிட்டு பதில் சொன்னார்.

“நீங்க எங்க இருக்கீங்க..? ஐ எம் இன் ஃப்ரெண்ட் ஸைட் நியர் பிளாஸ்டிக் டேபிள்ஸ்”

“நான் இப்போ தான் காரை அவுட்ஸைட்ல பார்க் பண்றேன் மிஸ்டர் பாண்டு.. இட்ஸ் ஓவர் கிரவுடட் டுடே.. ஐ டோன்ட் நோ ஒய்..!  வில் பி தேர் இன் எ மினிட்.. ஸ்டே சேஃப்..!” ஃபோன் துண்டிக்கப்பட்டது.

     ‘இட்ஸ் ஓவர் கிரவுடட் டுடே.. ஐ டோன்ட் நோ ஒய்..’ என்று ஏ.கே., சொன்னதை கேட்டதும் பாண்டுவிற்கு பயம் அதிகரித்தது. 'தமிழ்நாட்டில் வேறு எங்கு வைத்து கைமாற்றி இருந்தாலும் இத்தனை பயம் வந்திருக்காதோ..?' என்று தோன்றியது. சுற்றி இருக்கும் அனைவருமே கயவர்களாக தெரிந்தார்கள்.

“ஹலோ மிஸ்டர் பாண்டு” பின்னாலிருந்து யாரோ அழைத்தனர்.

“வாங்க தம்பி..” அந்த கூட்டத்தில் பாண்டுவை கண்டுபிடிப்பதற்கு வருணிற்கு ஐந்து நிமிடங்கள் பிடித்தது. பாண்டுரங்கன் படபடப்பாக இருப்பதை கவனித்த வருண், “சாரி அங்கிள்! ஐ டிட் நாட் மெண்ட் டு ஸ்கேர் யு” தான் பின்னாலிருந்து  அழைத்ததனால் தான் பயந்துவிட்டார் என்று நினைத்து பணிவாக சொன்னான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. உக்காரு” எதிரில் இருந்த நாற்காலியை சுட்டிக்காட்டி சொன்னார்.

“அங்கிள் கேஷ் இங்க வச்சி குடுக்றது சேஃபா?” கூட்டத்தை சுற்றும் முற்றும் பார்த்துக்கேட்டான்.

“அதே தான் நானும் யோசிக்றேன்”

“லோ அமெளண்ட்னா கூட பரவால.. இது பெரிய அமெளண்ட்.. ஃபுல் கேஷ்.. குட்டி பேக்ல தான் இருக்கு அப்படியே கொண்டுபோறீங்களா?” தனது குட்டி பேக்கை சுட்டிக்காட்டி கேட்டான்.

‘அந்த பேக்கும், அதில் இருக்கும் பணமும் இந்த சூழ்நிலைக்கு வருணிடம் இருந்தால் தான் சேஃப்.. நம்ம கிட்ட இருந்தா எவன் வந்து என்ன பண்ணுவானுங்கன்னே சொல்ல முடியாது.. ஏற்கனவே பொருள் கைமாற போகுதுன்னு நம்ம வட்டாரம் முழுக்க தெரியும்.. இதுல நம்ம பேக் ஒண்ணு கொண்டுபோனா கண்டிப்பா களவாடப்படும்.. சந்தேகமே இல்ல.. அதுமட்டும் இல்லாம.. ஏ.கே., வரும்போது வருண் இங்க இருந்தா ப்ராப்ளம் தான்.. அவர் தப்பா புரிஞ்சிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு’ தனக்குத் தானே பேசிக்கொண்டார்.

“வருண்.. கெட் தி ரிங் ஃப்ரம் மீ நவ்.. அமெளண்ட் நான் நாளைக்கு ரிசப்ஷன்ல மீட் பண்ணறப்போ வாங்கிக்றேன்.. இல்லனா நெக்ஸ்ட் டே கூட வாங்கிக்றேன்.. இப்போ சேஃபா ரிங் அண்ட் கேஷ் ரெண்டயுமே நீ கொண்டு போ..” பொருளும் பணமும் நம்மிடம் இருப்பது இந்த சூழ்நிலையில் ஆபத்து என்பதால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்.

“இல்ல அங்கிள்..” வருண் தயக்கத்தோடு ஏதோ சொல்ல வந்தான்.  அதற்குள் ஏ.கே., தன்னை தேடிக்கொண்டு வருவதை கவனித்த பாண்டு சட்டென்று எழுந்தார். வருணும் எழுந்தான். அந்த சமயத்தில் எங்கிருந்தோ போலீஸ் ஸைரென் ஒலி கேட்டது.

“தம்பி இதை எடுத்துட்டு கிளம்பு..” தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து வருண் கையில் கொடுத்தார். அவன் தனது குட்டி பேக்கின் முதல் ஜிப்பை திறந்து உள்ளே போட்டான்.

“ஃபீ கேர்ஃபுல்.. வழில யாரையும் இடிக்காம போ.. பேக் ஃப்ரண்ட்லயே இருக்கட்டும்.. ஒடம்போட ஒட்டியே வச்சிக்கோ.. க்கோ ஃபாஸ்ட்” அவசர அவசரமாக அறிவுரை சொல்லி வருணை அனுப்பிவிட்டு ஏ.கே-வை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஜீன்ஸ் பேண்டும், முழுக்கையை அரை கை வரை மடித்துவிட்டு டைட் ஃபிட் ஷர்டும், பிரவுன் ஷூவும், கறுப்பு கூலர்ஸும் அணிந்து மிக கம்பீரமாக கிராப் தலையுடன், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் மிலிட்டரி ஆபீசர் அன்-யூநிஃபார்மில் வருவது போல வந்தார் ஏ.கே., தன்னுடன் நான்கு பாடிகார்ட்களையும் அழைத்து வந்தார். பாண்டு தன்னை நோக்கி வருவதை பார்த்ததும் ‘வணக்கம்’ என்று கை கூப்பினார். பதிலுக்கு பாண்டுவும் வணக்கம் சொன்னார். தாபாவின் வெளிப்பகுதியின் மத்தியில் இருவரும் சந்தித்தனர்.

“இஸ் இட் சேஃப் ஹியர்?” சுற்றும் முற்றும் பார்த்து பாண்டு கேட்டார்.

“ஃபார் மீ.. எஸ்.. ஃபார் யு.. ஐ டோன்ட் திங்க் ஸோ..” தன் கண்ணாடியை கழற்றி கண்ணடித்து கிண்டலாக பதில் சொன்னார்.

அந்த கிண்டலின் அர்த்தம் பாண்டுவிற்கு புரியவில்லை. இந்த கூட்டம் அனைத்தையும் கூட்டியதே ஏ.கே., தானோ என்றும் சந்தேகித்தார். ஆனால் கூட்டத்தில் அதிகம் இருப்பது வாலிப பிராயத்தினர். இருபது முதல் இருபத்தி ஐந்து வயது வரை உள்ள கூட்டம் என்பதால் அவர்கள் ஏ.கே-வின் கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை. இன்னும் ஏதேதோ எண்ணங்கள் அவர் மனதில் ஓடியது.

“பேசாம இப்படி பண்லாமா?” அந்த மன ஓட்டங்களை புரிந்துக்கொண்ட ஏ.கே., ஒரு யோசனை சொன்னார்.

“உங்க கார் இருக்க பிளேஸ்க்கு போகலாம்.. வீ வில் ஹாவ் அவர் ட்ரான்ஸ்சாக்க்ஷன் தேர்..” என்று சொன்னார். பாண்டு யோசித்தார்.


“ஹலோ வருண்.. எங்க இருக்க? பார்க்கிங்ல ஓவர் கிரவுட் ஆகுது.. நாங்க ரோட்டுக்கு மூவ் ஆகுரோம்.. இல்லனா வண்டி உள்ள மாட்டிக்கும்.. ரோட்கிட்ட வந்துடு..” விக்னேஷ் வருணிற்கு ஃபோன் செய்து சொன்னான்.

“டேய் நான் பாதி கடல் தாண்டிட்டேன்.. ஆன் தி வே-ல மீட் பண்ணு.. ரோட்டு வரைக்கும்லா என்னால நடக்க முடியாது” கையில் பணமும் மோதிரமும் இருக்கும் பதட்டத்தில் பேசினான்.

“அப்றம் எதுக்குடா கல்யாணம் பண்ற..? சாமியாரா போ..!”

“இவ்ளோ கூட்டத்துல அதுக்குள்ள எப்டிடா சரக்கு வாங்குனிங்க..?” பதட்டத்துடன் பார்க்கிங் நோக்கி நடந்துக்கொண்டே ஃபோனில் பேசினான்.

“ம்ம்க்கும்.. நம்ம வாங்குன நாலு பீருக்கு கூட்டம் ஒண்ணு தான் கொற.. நாலு பஸ் நிறைய காலேஜ் பசங்க வந்தானுங்கடா.. ஒருத்தன் கூட பீர் செக்க்ஷன் போகல.. கடக்காரன் நம்மள கேவலமா பாத்ததுதான் மிச்சம்” பார்க்கிங்கில் இருந்து வண்டியை எடுத்து ரோட்டை நோக்கி மெதுவாக விஜய் ஓட்டிக்கொண்டிருந்தான். பின் சீட்டில் அமர்ந்து ஜன்னல் வழியாக வருணை தேடியபடி விக்னேஷ் புலம்பினான். 

“பீருக்கு தனி செக்க்ஷனா?” என்று கேட்டவன், “டேய் நான் காரை பாத்துட்டேன்..” வேகமாய் காரின் அருகில் சென்றான். முன் இருக்கை காலியாக இருப்பதை பார்த்துவிட்டு கதவை திறந்தான்.

“மச்சி விவேக் ரோட்கிட்ட இருக்கான்டா.. நீ பேக் சீட் போய்டு” கூட்டத்தில் மிக கவனமாக காரை ஓட்டிக்கொண்டிருந்த விஜய் வருணிடம் சொல்லி, பத்து விநாடிகளுக்கும் குறைந்த நேரம் காரை நிறுத்தினான்.

வருண் காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்தான். அந்த இருக்கைக்கு பின்னால் இருக்கும் கடைசி இருக்கையில் இருந்த விக்ரம் வருணின் குட்டி பேக்கை அவனிடமிருந்து வாங்கி விஷ்ணுவின் காலுக்கு அடியில் இருந்த மற்ற பைகளுடன் போட்டான்.

“மச்சி அதுல ரிங் அண்ட் கேஷ் இருக்கு பத்தரம்”

“எல்லாம் வண்டிலத்தான் இருக்கும்.. விழுந்தா எடுத்துக்கலாம்.. விவேக் எங்க இருக்கான்னு பாரு” மெத்தனமாக பதில் சொன்னான் விக்ரம்.

“கேஷ் குடுக்கலயா?” ஜன்னல் வழியே விவேக்கை தேடிக்கொண்டிருந்த விக்னேஷ் உள்ளே திரும்பி வருணை பார்த்துக் கேட்டான். ‘என்ன’ என்பதுபோல வருண் புருவம் உயிர்த்தினான்.

“இல்லடா.. ‘ரிங் அண்ட் கேஷ் இருக்கு பத்தரம்’னு சொன்னியே.. கேஷ் குடுக்காம பெருசு பொருள தராதே... போட்டு தள்ளிட்டு ரிங், கேஷ் ரெண்டையும் தூக்கீட்டு வண்ட்டியா.. முகத்துல வேற இவ்ளோ பதட்டம்.. ஏன்?” பாண்டு கொடுத்த எச்சரிக்கைகளை மனதில் நினைத்துக்கொண்டே பதட்டத்துடன் வந்த வருணின் நிலைமை புரியாமல் வம்பிழுத்தான் விக்னேஷ்.

“ஆமா டா.. இப்டியே பேசிட்டு இரு.. அடுத்து உன்னத்தான் போடப்போறேன்”

“ரோடு வரைக்கும் நடந்து வரவே துப்பில்ல.. இதுல என்ன போட்றாராம்.. போடா டேய்”

இருவரும் மாற்றி மாற்றி கேலி செய்துக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸ் சைரன் சத்தம் கேட்டது.

‘யார்துப்பா இந்த ரோல்ஸ் ராய்ஸ்? வண்டி நம்பர் 7979.. ரோட்ல நிக்குது பாரு.. மூவ் பண்ணு மூவ் பண்ணு’ ஹைவே பாட்ரோல் அதிகாரி ஒருவர் ஸ்பீக்கரில் அணெளண்ஸ் செய்தார்.

“சார்.. அவங்க அணெளண்ஸ் பண்றது நீங்க வந்த கார்” ஏ.கே-வின் பாடிகார்ட் ஒருவர் ஏ.கே-விடம் சொன்னார்.

“ஷிட்..! சாரி மிஸ்டர் பாண்டு.. சேஞ்ச் ஆஃப் பிளான்ஸ்..! நம்ம ட்ரான்ஸ்சாக்க்ஷன் இங்கயே முடிச்சிக்கலாம்.. உங்க சேஃப்டிக்கு ஐ வில் சென்ட் ஒன் ஆஃப் மை கார்ட் வித் யு.. கார்ல ஏறிட்டு கேஷ் செக் பண்ணிட்டு அவர திருப்பி அனுப்புனா போதும்” என்று சொல்லி ஒரு சூட்கேசை நீட்டினார் ஏ.கே.

“ஆர் யு ஷூர்?” பாண்டு கேட்டார்.

“அந்த கார்ல ஒரு குட்டி சென்ட்டிமெண்ட்.. நான் மட்டும் தான் டிரைவ் பண்ணனும்.. இவங்க எல்லாம்கூட செப்ரேட் ஜீப்ல தான் வந்தாங்க.. இப்போ நான் வெளிய போய்ட்டு எகென் உள்ள வரதும் கஷ்டம். அபௌவ் ஆல்.. ஐ டிரஸ்ட் யூ மிஸ்டர் பாண்டு” சொல்லிவிட்டு “டிரஸ்ட் பண்லாம்ல?” பாண்டுவின் கண்களை பார்த்துக்கேட்டார்.

“ஷூர்..!” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் பாண்டு.

     அந்த பதிலை கேட்டதும் சிரித்த முகத்துடன் சூட்கேசை நீட்டினார் ஏ.கே. 

    தனது பாக்கெட்டில் இருந்த பெட்டியை எடுத்து ஏ.கே., கையினில் வைத்து கை குலுக்கினார். பணப்பெட்டியையும் பெற்றுக்கொண்டார். ஏ.கே., கூறியது போலவே அவரது பாடிகார்ட் ஒருவரையும் பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தார்.

“நைஸ் டூயிங்க் பிஸ்னஸ் வித் யு மிஸ்டர் பாண்டு”

“பிளஷர் இஸ் ஆல் மைன் மிஸ்டர் ஏ.கே.”

     அந்த இடத்தை விட்டு வேகமாக இருவரும் நகர்ந்தனர். தான் தனது ரோல்ஸ் ராய்ஸ் வண்டியை பார்க் செய்யும்போது காலியாக இருந்த இடம் இப்போது தாபாவின் உள்ளே இருந்து வெளியே வந்து ரோட்டை அடையும் வண்டிகளுக்கு இடையூராக மாறியது எப்படி என்ற ஆச்சரியத்துடன் காரின் அருகில் சென்றார். ஹைவே பாட்ரோல் அதிகாரியிடம் சிரித்த முகத்தோடு “சாரி சார்.. நம்ம வண்டி தான்.. இப்போ எடுத்துடறேன்” பணிவாக சொன்னார்.

 

“ஹே விஜய்.. டோர் ஓபன் பண்ணு..” மெல்ல மெல்ல அசைந்து உள் பார்க்கிங்கில் இருந்து ரோடு வரை வந்த ஸ்கார்பியோ வண்டியை நோக்கி விவேக் ஓடி வந்தான்.

“எங்க டா போய் தொளஞ்ச?” விவேக் வண்டியில் ஏறியபிறகு ரோட்டின் வலபுறம் திரும்பி யு டர்ன் நோக்கி வண்டியை செலுத்தியபடி விஜய் கேட்டான்.

“ஸ்மால் பர்ச்சேஸ்” என்று சொல்லியவன், திடீரென்று “வாவாவாவ்வ்வ்வ்..” வாயை பிளந்தான். “அங்க பாருங்க டா” தங்கள் காருக்கு முன்னாள் சென்றுக் கொண்டிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை காண்பித்தான்.

     விஜய் ஒருவனை தவிற மற்ற அனைவரும் அந்த வண்டியை கண்கொட்டாமல் பார்த்தனர். அருகாமையில் வந்த யு வலைவில் ஸ்கார்பியோவை திருப்பி பாண்டிச்சேரி நோக்கி வண்டியை ஓட்டினான்.

“ரொம்ப தாங்க்ஸ் ப்பா” தன்னுடன் பாதுகாப்பிற்காக வந்த ஏ.கே-வின் பாடிகார்டுக்கு நன்றி சொல்லி தனது காரின் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தார் பாண்டு. பணப்பெட்டியை திறந்துப்பார்த்து காசை எண்ணினார். “எல்லாம் கரெக்டா இருக்கு ப்பா.. பிளீஸ் இன்ஃபார்ம் ஏ.கே., அண்ட் தாங்க்ஸ் டு யூ டூ” சொல்லிக்கொண்டே காரின் பின் பக்கம் இருந்து இறங்கி டிரைவர் சீட்டிற்கு அருகில் வந்தார். கார் கதவினை பாடிகார்ட் திறந்துவிட்டு பாண்டு உள்ளே ஏறியதும் கதவை சாத்தினார். பாண்டு காரை ஆன் செய்தார்.

“ஒன் மினிட் மிஸ்டர் பாண்டு” பாடிகார்ட் குரல் கேட்டது.

“எஸ்..?” என்று கேட்ட பாண்டுவின் முகத்தில் பாடிகார்ட் ஓங்கி ஒரு  குத்து விட்டார். பாண்டு மயக்கமானார். காரை ஆஃப் செய்து சாவியை வெளியே எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு காரின் மீது சாய்ந்து கைகட்டி நின்றுக்கொண்டார் ஏ.கே-வின் பாடிகார்ட்.


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 09 – காதல் பயணம்


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments