13. காதல் புயல்

ஆஹா கல்யாணம் 

Previous Epi - 12. மழையும் புயலும் 

 13.  காதல் புயல்

♬மேகம் கருக்குது.. தக்கசிக்கு தக்கஜும்.. ♬

நீச்சல் குளத்தில் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி தண்ணீர் தெளித்துக்கொண்டும், புளுடூத் ஸ்பீக்கரில் பாட்டு கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆளுக்கொரு சிப் மினி பீர் பருகிவிட்டு, ஆறு ஆடவர்களும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

கொண்டாட்டம் என்பது குடியிலோ, புகையிலோ இல்லை, நல்ல மனிதர்கள் சூழ, மனம் நிறைய பேசியும், சிரித்தும், ஒற்றுமையாகவும், உண்மையாகவும் வாழ்வதே என்பதை நன்கு உணர்ந்த கூட்டம் அது. பேசினர், சிரித்தனர், ஒருவருக்கொருவர் உண்மையாகவே இருந்தனர். அந்த உண்மை நண்பர்களுக்கு நடுவில் வயதில் இளையவனான விஷ்ணுவின் மனதில் மட்டும் ஏதோ ஒன்று உருத்திக்கொண்டே இருந்தது.

“நீங்க உங்க லவ் ஸ்டோரி சொல்லவே இல்லயே”

     அனைவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருக்க, திடீர் என்று விஷ்ணு, தனது வருங்கால மாமாவிடம் கேட்டான். அனைவரும் அவனை உற்றுப் பார்த்தனர்.

“டேய்.. அவன் லவ் பண்ணது உன் அக்காவ.. வெக்கமே இல்லாம கதை கேக்கற..!”

     விஷ்ணுவை விக்னேஷ் நக்கலடிக்க, அனைவரும் பயங்கரமாக சிரித்தனர். முதலில் சிரிப்பை நிறுத்தியவன் விஜய்.

“டேய்.. சின்ன வயசுல இருந்து எல்லாரும் ஒண்ணாதான இருக்கீங்க... வெக்க படணும்னா.. நீங்க எல்லாரும் தான் வெக்க படனும்.. அது என்ன அவன மட்டும் சொல்ற..”

“என்ன மிஸ்டர் விஜய்.. ‘நீங்க’ன்னு பிரிச்சி பேசரிங்க? ‘நாம’ன்னு சேத்து சொல்லுங்க.. வாங்க எல்லாரும் சேந்து வெக்க படலாம்”

“த்த்து.. மூடு.. மச்சி.. நீ ஸ்டோரி சொல்லுடா.. எனக்குதான் பேக்ரவுண்ட் தெரியாது”

“ம்ம்ம்..” சிரித்த முகத்தோடு விஷ்ணு ஆமோதித்தான்.

“சொல்லும்.. சொல்லித்தொலையும்” வைகைபுயல் பாணியில் விக்னேஷ் சொல்ல, நீச்சல் குளத்தின் ஓரத்தில் வைத்திருந்த மினி பீர் பாட்டில்களை, விக்ரம் கொண்டுவந்து அனைவரிடமும் கொடுத்தான்.

     மீண்டும் ஒரு சிப் பருகிவிட்டு, அனைவரும் வருணின் முகத்தை ஆவலாக பார்த்தனர். அவன் தனது காதல் எங்கு தொடங்கியது, எங்கு வளர்ந்தது, எங்கு உடைக்கப்பட்டது, எங்கு உறுதியாக்கப்பட்டது, இவை எல்லாவற்றையும் தொகுத்து எப்படி இவர்களுக்கு சொல்வது என்று யோசித்தான்.

     காதல்..! என்றுமே புரியாத புதிர்த்தான். ஆற்றலை போலவே, தொடக்கமும் முடிவும் அற்றது, ஆக்கவும் அழிக்கவும் முடியாதது. அது இருந்தது! இருக்கின்றது!! இருக்கபோவது!!! காலத்தின் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. எனினும், மனதினில் காதல் எனும் உணர்வு இருக்கிறது என்று உணர, காலம்தான் வழிகாட்டும். பொறுமையும் அடக்கமும் நிறைந்த மனம், சரியான காலத்தில் காதலை அடையும்.

     வருண் மற்றும் வினோதினி, பொறுமையும் அடக்கமும் நிறைந்த மனங்கள். சிறுவயது முதல், பள்ளிக்கூடம், கல்லூரி, வெற்றி, தோல்வி, கோபம், அழுகை, ஆனந்தம், துக்கம், வெறுமை, என்று வாழ்வில் ஒவ்வொரு படிகளிலும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாய் துணைநின்றார்கள். காலம் கணிந்தபோது, உடன் பழகிய மற்ற ஆடவர்கள்மீது தோன்றாத தனி பாசம் ஒன்று வருண் மீது வினோதினிக்கு தோன்றியது. அதன் அர்த்தம் புரியாமல் தயக்கத்துடன் சில நாட்கள் கழித்தாள் அவள்.

     தயக்கம் பொறுக்கவில்லை. பகிர்ந்துகொள்ள நெருக்கமான பெண்தோழிகள் என்று யாருமில்லாத அவளுக்கு, பவானியே ஆறுதலாக அமைந்தாள். தன் தயக்கத்தை பகிர்ந்துக்கொண்டாள். வினோதினிக்கு, தன் அண்ணன் மீது தனிப்பட்ட அன்பு இருப்பதை தெரிந்துக்கொண்ட நாள்முதல், பவானி அவளை அண்ணியாகவே பாவித்தாள். இந்த அழகிய நண்பர்கள் கூட்டம், சொந்தங்களாக மாறும் என்பதை நினைத்து அவள் மிகவும் உற்சாகமானாள்.

“ஒரு ஹெல்ப் பண்றியா பவா?”

“என்ன?? தூது புறாவா போகனுமா?”

“அதுக்கு உனக்கு வயசும் பத்தாது, அனுபவமும் பத்தாது”

“இதோடா.. மேடம்க்கு அனுபவம் ரொம்ப ஜாஸ்த்தியோ?”

“அதெல்லாம் விடுடி.. பண்ண முடியுமா முடியாதா?”

“பண்றேன்.. பண்றேன்.. அண்ணியாகபோரவங்க.. ஏதாச்சும் கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா.. சொல்லுங்க.. என்ன பண்ணனும்?”

     வினோ யோசித்தாள்.

‘எதற்கு உதவி? வருண் ஒன்றும் அத்தனை தூரத்தவன் இல்லையே... தூரமாக இருந்தாலும், காதலர்கள் இடையில் எதற்கு ஒருவர் தூது?’

முதல் முறையாக தங்களை காதலர்கள் என்று தனக்குள் எண்ணமிட்டாள். அந்த எண்ணம் நொடிபொழுதில் வழுபெற்றது. நிரந்தரமாக மனதில் பதிந்தது.

“இட்ஸ் ஓகே.. நீ ஹெல்ப் பண்ண வேண்டாம். என் வருண்கிட்ட நானே பேசிக்கறேன்”

“ஹான்ன்! உங்க வருணா?” ஆச்சரியத்தில் பவானி சிறிது குரலை உயர்த்திச்சொல்ல, மாடிபடி ஏறி வினோவின் அறை தாண்டி தனது அறைக்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் காதில் அது விழுந்தது.

“என்னது.. உன்னோட வருணா? வருணுக்கு இது தெரியுமா?”

     இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருக்க, சட்டென்று அறையினுள் புகுந்து, வெட்கத்தில் மூழ்கியிருந்த தன் தமக்கையை பதறச்செய்தான். அவசரப்பட்டு கத்திவிட்டோமோ என்று வருத்தப்பட்ட பவானியை மேலும் வருத்தப்பட செய்தது விஷ்ணுவின் கேள்வி.

“டேய்.. லிட்டில் ப்ரைவசி பிளீஸ்..?”

“ஹலோ சிஸ்டர்.. ப்ரைவசினா கதவை சாத்திட்டு பேசணும்.. பா..ன்னு ஓபன்ல விட்டுட்டு.. இப்போ ப்ரைவசி கேட்டா நா என்ன பண்றது? ஸ்டாக் இல்ல.. ஸ்டாக் இல்ல..”

நக்கலடித்தவன், பவானியின் அருகில் அமர்ந்தான். கலவரப்பட்டுக் கொண்டிருந்த பவானி, விஷ்ணுவின் முகத்தில் சந்தோஷம் பரவிக்கிடப்பதை உணர்ந்தாள். மனம் லேசாகியது. பதட்டம் குறைந்த மறுகணம்,

“டேய்.. நீயும் அக்கா லவ்வுக்கு சப்போர்டா” பரவசத்தில் மேலும் கத்தினாள்.

     சட்டென்று தனது கையால் அவள் வாயை பொத்தினான். வெளியில் யாரும் வருகிறார்களா என்று வினோதினி, விஷ்ணு இருவருமே பார்த்தனர். சிரித்த முகத்தோடு, வாய் பொத்தப்பட்டு, அமர்ந்திருந்த பவானிக்கு இருவர் முகத்தையும் பார்த்து மேலும் சிரிப்பு வந்தது. பொறுமையாக விஷ்ணுவின் கையை விலக்கிவிட்டு, ‘சாரி’ என்று வாயை மட்டும் அசைத்தாள்.

“இவள கூட வச்சிக்கிட்டா.. நீ தேறமாட்ட..”

“ஆமா.. ஐயாவ வச்சிக்கோங்க.. நிறையா ஜோடிகள சேத்துவச்சவரு..”

“நீ மூடு”

“நீ மூடு.. ஒழுங்கா பைக் கூட ஓட்ட தெரியாது.. லவ் அட்வைஸ் பண்ண வந்துட்டாரு..”

“இர்ரெலெவெண்ட்”

“ஐ நோ.. ஸ்டில் பீல்ஸ் குட்”

“ஹேய்..! எனஃப்..!! ஓடி போங்க ரெண்டுபேரும்”

     சண்டைபோட்டுக்கொண்டிருந்த இருவரையும் காதை பிடித்து இழுத்து வெளியே தள்ளி தனிமையில் அமர்ந்தாள். தனிமை மனதிற்கு அமைதியளித்தது. முடிவெடுக்க பெரும் உதவி செய்தது. வருணை அலைபேசியில் அழைத்தாள். வருண் தனது அப்பாவின் தணிக்கை நிறுவனத்தில் வேலை கற்றுக்கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது.

“ஹலோ..”

“ம்ம்ம்.. சொல்லுடி”

“பிஸியா?”

“என்ன விஷயம்?”

“பிஸியானு கேட்டா அதுக்கு பதில் சொல்லு.. பதிலுக்கு கேள்வி கேக்காத” கொஞ்சம் கோபம் வந்தது.

“ஓய்.. என்ன ஆச்சி? எனி ப்ராப்ளம்?”

“பிஸியா? ஃப்ரீயா? ஈசியான கேள்வி.. பதில சொல்லுடா” கோபம் அதிகரித்தது.

“ஆமா டி.. கொஞ்சம் பிஸிதான்.. அப்பா கூட இருக்கேன் கம்பெனில.. நம்ம ஆடிட்டிங் கம்பெனி பிளான் பத்தி பேசிட்டு இருக்கேன்.. சொல்லு.. என்ன விஷயம்?”

“இந்த பதில் சொல்றதுக்குள்ள எதுக்கு உனக்கு அத்தனை கேள்வி” கோபத்தோடு எரிச்சலும் கலந்துக்கொண்டது.

“சரி சொல்லு.. என்ன?”

“ஒண்ணும் இல்ல.. ஃப்ரீயான அப்றமா கால் பண்ணு.. பை” வெறுப்போடு  வார்த்தைகள் கலந்தால் அது நிச்சயம் இருவரையும் காயப்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்த வினோ, அழைப்பை துண்டித்தாள்.

     மீண்டும் அவள் அறையில் தனிமை படர்ந்தது. இம்முறை அமைதிக்கு பதிலாக பெரும் புயல் ஒன்று மனதில் வீசியது. அவனை நேரில் வரச்சொல்லி முகம் பார்த்து பேசவே அலைபேசியில் அழைத்தாள். ஆனால் செய்தியை சொல்வதற்குள் ஏன் அத்தனை கோபமும், வெறுப்பும் பற்றியது என்று புரியவில்லை. ‘எல்லாம் அவன் தப்பு’ என்ற முடிவிற்கு வருமுன்பு, தனக்கு என்ன நேர்ந்தது என்று யோசித்தாள். ஆழமாக யோசித்தாள்.

‘இத்தனை நாட்கள் அவன் கேள்விகள் இப்படி இருந்ததில்லை. ஒருவேளை அப்படி இருந்ததை நான் கவனிக்கவில்லையோ? மனதில் காதல் புகுந்ததும் என்னவன் மீது என் எதிர்பார்புகள் அதிகமாகிவிட்டது போலும். அவன் என்னவன் என்று அவனுக்கு தெரியுமா? எப்படி தெரியும்? எனக்கே இப்போதுதானே தெரியும். அப்படி அவனுக்கு தெரியாமலிருக்க, எதற்கு நான் அவனிடம் கோபப்படவேண்டும்? ச்ச்ச.. அனாவஸ்யம் இது. எதற்கு இத்தனை குழப்பம். அவன் கொஞ்சம் புரிந்துக்கொண்டு பேசியிருக்கலாம். கேள்விக்கு நேராக பதில்சொன்னால் என்ன? முட்டாள். கேள்விக்கு பதில் மற்றொரு கேள்வியா? விதண்டாவாதம் எதற்கு? ஆம்.. இல்லை.. இதில் ஒன்று தானே பதில். அதை சொல்வதில் அவனுக்கு என்ன கஷ்டம். இதை புரிந்துக்கொள்ள மேதாவிசால மூளை ஒன்றும் வேண்டியதில்லையே. நிச்சயமாய் அவன் முட்டாள் தான். ஐயோ..! இப்போது எதற்கு நான் அவனை திட்ட வேண்டும். உண்மையில் நான்தான் முட்டாள்’

என்ன யோசிப்பது என்று தெரியாமல், எதை எதையோ யோசித்து, தன் படுக்கையில் புரண்டாள், எழுந்து அமர்ந்தாள், அறையின் மூலையில் இருந்த நாற்காலி மீது அமர்ந்து வெறும் சுவற்றை உற்று நோக்கினாள், எழுந்து ஜன்னல் அருகில் சென்று வானத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டாள்.

“ஓய்”

     புயலில் இருந்து மீண்டு அமைதியை நோக்கி மனம் சென்றுக் கொண்டிருந்தபோது இடியைபோல ‘ஓய்’ என்ற குரல் கேட்டது, திரும்பிப் பார்த்தாள்.

“வருண்..? இங்க என்ன..?” ஆச்சரியமும் குழப்பமும் ஒன்று கலக்க, வார்த்தைகள் வறண்டுபோனது.

“என்ன டி பிரச்சன உனக்கு?” எப்போதும் வருவதுபோல எதார்த்தமாக வினோதினியின் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்து அவளிடம் பேசினான்.

“மொதல்ல இந்த கதவை சாத்தி வைக்கணும்.. ஆளாளுக்கு உள்ள வராங்க”

லேசாக கோபம் கலந்த குரலில், ஜன்னலின் வெளியே பார்த்தபடி பேசினாள். வருணுக்கு அது பெரிய வலியைக் கொடுத்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முதலாக இருவருக்கும் இடையில் இப்படி ஒரு சூழல் உருவானது போல அவனுக்கு தோன்றியது. அது உண்மையும் கூட. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கண்கள் லேசாக கலங்கியது. வார்த்தைகள் வரவில்லை. அறையில் அமைதி நிலவியது. பொறுமையாக திரும்பி வருணை வினோ நோக்கினாள். அவன் முகத்தில் இருக்கும் சங்கடத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பெரும் தவறு செய்துவிட்டோம் என்று தோன்றியது. மனம் கணத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள். சட்டென்று வருண் தலை நிமிர்ந்து குழப்பத்தில் இருக்கும் வினோவின் முகத்தை பார்த்தான். இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது.

“சாரி வினோ”

தயக்கமும், சோகமும், குழப்பமும், கொஞ்சம் கோபமும் கலந்து இருந்தது அந்த வார்த்தை. அறையை விட்டு வெளியே செல்ல வேகமாக எழுந்து வாசல் நோக்கி சென்றான். என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்த வினோ, வருண் ஒவ்வொரு அடி எடுத்துவைக்க, வாழ்க்கையில் அவனுக்கும் அவளுக்குமான இடைவெளி அதிகரிப்பதாய் உணர்ந்தாள். எதையும் யோசிக்காமல் ஓடிச்சென்று அவன் கரம்பற்றி இழுத்து அறையின் உள்ளே நிறுத்தி,

“எக்ஸ்ட்ரீம்லி சாரி டா.. ஐ டிட் நாட் மீன் தட்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விஷ்ணு பவானி ரெண்டுபேரும் உள்ள வந்து.. டிஸ்டர்ப் பண்ணி, அவங்கள வெளிய தள்ளி.. சாரி டா.. நீ வேற ஃபோன்ல.. மன்னிச்சிடு பிளீஸ்.. எக்ஸ்ட்ரீம்லி சாரி”

     பதட்டத்தில் என்ன என்னவோ உளறினாள். கண்கள் கலங்கியது. இதனால் ஒரு இடைவெளி உருவாகி அது அதிகரிக்க கூடாது என்ற பதட்டமும், பயமும் அவள் குரலில் வெளிப்படையாக தெரிந்தது. வருணுக்கு அது தெளிவாக புரிந்தது.

ஒரு பெண்ணின் அறைக்குள் அறிவிப்பில்லாமல் நுழைந்ததற்காக தன்னை அவள் பேசிய வார்த்தைகள், தனது நடத்தையை சந்தேகிப்பது போல இருந்தது. அந்த உணர்வை எந்த ஆணும் பொறுத்துக்கொள்ள மாட்டான். பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவன் மனதை அது பெரிதும் புண்படுத்தியது.

இருப்பினும், தோழியின் பதட்டமும், அவள் கண்ணீரும், பயத்தில் அவள் பிதற்றலும், ‘இது தன்னை பற்றிய விஷயமல்ல, பெரிதாக ஏதோ ஒன்று இருக்கிறது, பகிர்ந்துக்கொள்ளவே நம்மை அழைத்திருக்கிறாள்’ என்று நினைத்து அவளுக்கு ஆறுத்தலளிக்க முடிவுசெய்தான்.

“ஹேய் ஸீரியஸ்லி சாரி டா”

“ரிலாக்ஸ் வினோ.. உக்காரு”

அவள் படுக்கையின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள். அவளுக்கு எதிரில் நாற்காலியை இழுத்துப்போட்டு தானும் அமர்ந்தான். இருவரும் அமைதியானார்கள். ஆனால் இருவர் மனமும் புயலின் வேகத்தைவிட நூறுமடங்கு வேகமாக சூழன்றது.

‘எத்தனை வேகமாக இந்த இடத்தைவிட்டு வெளியே செல்ல முடியுமோ, அதைவிட வேகமாக சென்றுவிட வேண்டும்’ வருணின் மனம் உள்ளேயே அழுதது.

‘இந்த தவறை எவ்வாறு சரி செய்வது, சரி செய்யும் அளவிலான தவறுதானா இது? அவன் மனம் எத்தனை காயப்பட்டதோ? வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறதோ? தெரியவில்லையே?’ அவள் மனம் வேதனையில் குமைந்தது. ‘என்ன ஆனாலும் சரி இந்த நிகழ்வை இப்படியே விட்டுவிட்டால் நிச்சயம் இடைவெளி அதிகரிக்கும். எதுவானாலும் சரி, உடைத்து பேசிவிடலாம்’.

முடிவெடுத்தாள். அவன் கண்களை நோக்கினாள். என்ன சொல்ல போகிறாள் என்ற எதிர்பார்போடு அவன் அவளை நோக்கினான்.

“எனக்கு உன்ன புடிச்சிருக்கு வருண்.. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

     ஏதோ சொல்லவந்தவள், அவன் கண்களை பார்த்து, தன்னையும் அறியாமல், மிகத் தெளிவாக வார்த்தைகளை உதிர்த்தாள். காதில் விழுந்ததை, தெளிவாக உள்வாங்க வருணிற்கு சில நொடிகள் பிடித்தது.

“கல்யாணமா?”

     தன்னையறியாமல் வார்த்தைகள் வந்த போதிலும், அந்த வார்த்தைகளின் உண்மையை அவள் மறைக்க விரும்பவில்லை.

“ஆம்” வெட்கம் ததும்ப ததும்ப தலையசைத்தாள். அதற்குமேல் அவளால் அமர முடியவில்லை. துள்ளி எழுந்தாள். மீண்டும் ஜன்னல் ஓரம் சென்று நின்றுக்கொண்டாள். வெட்கமும், பயமும், தயக்கமும் கலந்த ஒரு நிலையில் வினோதினி தவித்தாள்.  

     நாணத்தில் மூழ்கியிருக்கும் வினோவிற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் வருண் தவித்தான். தன் மனம் என்ன நினைக்கிறது என்று உணர முயன்றான். சற்று முன் நடந்த நிகழ்வுகள் அவனை யோசிக்கவிடாமல் தடுத்தது. எழுந்தான். அந்த அறையைவிட்டு வெளியே செல்ல எத்தனித்தான். அப்படிச் செல்விருந்தவனின் பதிலுக்கு ஏங்கியும், கலங்கிய கண்களோடும், அவனை வினோ பார்த்தாள்.

“ஐ நீட் டு திங்க்” அவன் சொன்னான்.

“ம்ம்ம்..” தலையசைத்தாள். மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பினாள். மனம் லேசானது.

     அந்த அறையைவிட்டு வெளியே வந்த மறுநொடி, மனம் தெளிவு பெற்றது. காதல், எப்பேற்பட்ட மனதையும் கலங்கடிக்கும். இத்தனை நாட்கள் நண்பர்களாக பயணித்த இருவருக்கு இடையில் காதல் என்ற திருப்பம், கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்ளத்தான் நேரிடும். பயணித்த பாதை மாறுவதை ஒருவர் உணர்ந்து மற்றொருவர் உணராதபோது, வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கத்தான் நேரும். பிடிப்பு வலுவாக இருப்பின், இருவருக்கும் புது பாதையில் பயணம் தொடங்கும், பிடிப்பு அருந்துபோக நேரிட்டால் ஒருவர் மட்டும் புது பாதையில் சென்று, தனிமையில் சில கடினங்களை சந்திக்கத்தான் வேண்டும்.

     எண்ணங்கள் ஒளியைவிட வேகமாக பயணித்தது. பயணத்தின்போது புயலில் சிக்கிக்கொண்ட வினோவின் மனதை, அந்த அறையின் வாசலில் இருந்து படிக்கட்டு தொடங்கும் இடம் வருமுன்பு, அவன் புரிந்துக்கொண்டான். அறையை நோக்கி திரும்பினான். புயலுக்கு மத்தியில் அமைதி என்பதுபோல அத்தனை எண்ண அலைகளுக்கு மத்தியில் அமைதியாக ஜன்னல் வழியே வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வினோதினி.

“ஓய்”

     வாசல் நோக்கி திரும்பினாள்.

“இங்க வா” கைகளினால் சைகை செய்து வினோதினியை வாசல் அருகில் அழைத்தான்.

“வருண் பிளீஸ்..” அழுகையும் சிணுங்களுமாக “உள்ள வா” என்றழைத்தாள்.

அவன் உள்ளே வரவில்லை. இவள் வாசல் நோக்கி நடந்தாள். கண்களில் அழுகையும், உதட்டில் சிரிப்புமாக வருணிடம் சென்றாள்.

“உள்ள வா” மீண்டும் அழைத்தாள்.

     அழைத்தவளை கரம் பற்றி அருகில் இழுத்தான். கண்ணீர் வழிந்திருந்த கண்ணங்களை மிருதுவாக துடைத்துவிட்டான். அவள் மனதின் புயல் முற்றிலுமாக வலுவிழந்து, அமைதியில் கரைந்து, காணாமல் போனது.

“வீட்ல பேசலாம்”

     இரண்டே வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு படியிறங்கி கீழே சென்றான். அன்று மாலையே இரண்டு குடும்பத்தாரும் பேசினார்கள்.

“ஆடிட்டிங் ஃபர்ம் ரெஜிஸ்டிரேசன் எல்லாம் முடியட்டும்.. முடிஞ்ச ஒடனே பண்ணிடலாம்” வினோதினியின் அம்மா சொன்னார்கள்.

“அது எப்படியும் சிக்ஸ் மன்த்ஸ் ஆகும்.. கம்பெனில ஒரு சிக்ஸ் மன்த்ஸ் ஆகட்டும்.. சின்னபசங்கதான.. ஸோ எக்ஸாக்டா ஒன் இயர்ல கல்யாணத்த முடிச்சிடலாம்” வருணின் அம்மா கணக்குப் போட்டு சொன்னார்கள்.

     வீட்டு பெண்கள் பேசி முடிவு செய்ய, ஆண்கள் அவர்கள் முடிவிற்கு ஆதரவு கொடுத்தார்கள். ஒரு வருட காத்திருப்பு, நாளை நனவாகப் போகிறது.

விஷ்ணு கேட்ட கேள்விக்கு இந்த புயலடித்த சம்பவங்களை எல்லாம் வருண் சொல்லவில்லை.

“திடீர்னு ஒரு நாள் தோனுச்சி.. ரெண்டுபேரும் பேசுனோம்.. ஃபேமிலிகிட்டயும் பேசி.. எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க.. இப்போ, நாளைக்கு எங்கேஜ்மெண்ட் நாளானைக்கு கல்யாணம்.. அவ்ளோதான் என் கதை” என்று சுருக்கமாக பதில் சொன்னான்.

நீச்சல் குளத்தில், ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த படிக்கட்டின்மீதும், வட்ட வடிவத்தில் எழுப்பபட்டிருந்த சுவரின் மீதும், தங்களுக்கு சொகுசுப்பட்ட இடத்தில் அமர்ந்து, மினி பீரை சொட்டு சொட்டாக பருகியபடி, நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். மழையின் வேகம் முழுவதுமாக குறைந்துவிட்டது. குளுமையான காற்றில், நீச்சல் குளத்தில் சுடுத்தண்ணீர் நிரம்பியிருக்க, அனைவரும் கதகதப்பாக காதல் கதை கேட்டு மகிழ்ந்திருந்தனர். 

“சூப்பர் டா.. விக்ரம் மாதிரி போர் அடிக்காம.. ஷாட்டா சொன்ன பாத்தியா.. அதுக்காக அடுத்துவர பாட்ட நான் உனக்கு டெடிகேட் பண்றேன்”

“நான் அத கேக்கல.. ஃபிரண்டா இருந்துட்டு லவ் பண்ணீங்களே.. அத கேட்டேன்.. எப்டி எல்லாரும் அக்சப்ட் பண்ணாங்க?”

“அட பாவி.. உனக்கும் பவானிக்கும்தான் மொதல்ல தெரியும்ன்னு வினோ சொன்னா.. நீ என்ன இப்படி கேக்கற..?”

“ஹேய்.. கொஞ்சம் இருங்க டா.. அவன் வேற ஏதோ சந்தேகம் கேக்க வரான் போல.. நீ முழுசா கேளுடா.. என்ன உன் சந்தேகம்”

“இல்ல விக்ரம்...! ஃபிரண்ட் டூ லவ்வர் கொஞ்சம் கஷ்டம், ஐ நோ. பட் மத்த ஃபிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் எப்படி சொல்லி ஓகே பண்ணீங்க.. ஆக்வோர்டா இல்லயா? அண்ட் நீங்க எல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணீங்க?”

“பையன் அங்க சுத்தி இங்க சுத்தி எங்கயோ போரான்.. எங்கன்னு தான் புரியல” ஒரு சிப் பீர் அருந்தியபடி விக்னேஷ் சொன்னான்.

“வாய மூடு டா.. விஷ்ணு.. நீ கேக்க வர்ரத டைரக்ட்டா கேளு.. ஏன் சுத்தி வலைக்குற?”

“இல்ல.. உங்களையும் வினோவையும் மாதிரியே..” என்று விஷ்ணு இழுக்க,

“மாதிரியே..?”

விஜய் தவிர மற்ற அனைவரும் ஒன்றிணைந்து கேட்டார்கள். விஜய்க்கு மட்டும் அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

“நானும்..”

“நீயும்..”

“பவானியும்..”

     என்று பவானியின் பெயர் சொல்லி நிறுத்தினான். வருண் என்ன சொல்லப்போகிறான் என்று அவன் முகத்தையே விஷ்ணு மற்றும் விஜய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சில நொடிகள் அங்கு அமைதி நிலவியது. அத்தனை நேரம் சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்த விக்னேஷ், அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தான். அவனை தொடர்ந்து, வருணும், விக்ரமும்,  சிரித்தார்கள். விவேக் சத்தமில்லாமல் லேசாக சிரித்தான். விஜய் முழுமையாக குழப்பத்தில் ஆழ்ந்தான்.

“எனிவொன் கேர் டூ எக்ஸ்ப்ளெய்ன்?”

“இரு மச்சி.. நானே சொல்றேன்”

தான் அமர்ந்திருந்த இடம்விட்டு எழுந்து விஷ்ணுவிடம் சென்று,

“பயப்படாத விஷ்ணு.. எனக்கும் உன் அக்காக்கும் இது அல்ரெடி தெரியும்.. இட்ஸ் ஓகே”

“மிஸ்டர் மாப்பிள்ளை.. நாங்கலாம் என்ன தக்காளி தொக்கா? எங்களுக்கும் தெரியும்டா.. உங்க கல்யாணம் வரைக்கும் வெளிய சொல்ல மட்டாங்கன்னு நினச்சோம்”

“உங்களுக்கு எல்லாம் எப்படி தெரிஞ்சிது?” அப்பாவியாக விஷ்ணு கேட்க, அவன் தோளில் கைபோட்டுக்கொண்டு,

“கண்ணா.. நாங்க எல்லாருமே அனுபவசாலிங்க.. அதுவும் இல்லாம இத்தனவருஷமா கூடவே இருக்கோம்.. இதக்கூடவா கவனிக்க மாட்டோம்” விக்ரம், பதில் சொன்னான்.

“எல்லாத்துக்கும் மேல ரீசண்ட்டா நீங்க பண்ண ஸ்கூட்டர் ஆக்சிடென்ட்ல தான் நாங்க கண்ஃப்பாம் பண்ணோம்.. ஒரு சப்ப மேட்டர் பண்ணிட்டு மறைக்க எவ்ளோ கஷ்ட பட்டீங்கடா” விக்னேஷ் சொல்ல, விஷ்ணு முதற்கொண்டு அனைவரும் சிரித்தனர்.

     விஜய்க்கு இப்போதுதான் புரிந்தது. பவானி ஸ்கூட்டரை கீழே போட்ட ‘ஃப்ரெண்ட்’ விஷ்ணுதான் என்றும். அதை பற்றி கேள்வி கேட்டவுடன் அவள் பதறியதன் காரணம், இன்னும் வீட்டில் இவர்கள் காதல் யாருக்கும் தெரியாமல் இருந்ததும் தான் என்றும் கணக்கு போட்டான்.

“நல்ல பிளான் டா” வருண் நக்கலடித்தான்.

“இது புரியலையே” அனைவரும் விழித்தார்கள்.

“சார் இங்க, நம்மகிட்ட சொல்ல, பிளான் பண்ணிட்டாரு.. என்னோட பாசமலர், அங்க, வினோகிட்ட சொல்ல போயிருக்கா”

“காலைல அவ்ளோ அவசரமா வினோ வீட்டுக்கு போனாளே.. இதுதான் காரணமா?” விஜய் கேட்டான்.

“ஆம்” என்று வருணும், விஷ்ணுவும் ஒன்றுசேர தலையசைத்தார்கள்.   


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments