Previous Epi - 09 – காதல் பயணம்
10. பார்ட்டி பிகின்ஸ்
ஒற்றையடி பாதையினுள்ளே செடிகளுக்கு இடையில் மறைந்து நின்று
தங்கள் காரின் அருகில் போலீசார் என்ன செய்கிறார்கள் என்று அறுவரும் பார்த்துக்கொண்டு
நின்றனர். சைரன் ஒளி நிறுத்தப்பட்டது. இரண்டு அதிகாரிகள் காரை சுற்றிப்பார்த்துவிட்டு
ஏதோ சொன்னார்கள். ‘காரில் யாரும் இல்லை’ என்பதுபோல அந்த சைகை இருந்தது. அதை
பார்த்துவிட்டு போலீஸ் ஜீப்பில் இருந்து உயரதிகாரி ஒருவர் இறங்கி வந்து காரின்
ஜன்னல் கண்ணாடிகள் வழியே உள்ளே உற்றுப்பார்த்தார்.
“எதுக்கு பயந்துட்டு நிக்குறோம்? நம்ம இன்னும் சரக்கே
அடிக்கலயே.. போலீஸ் புடிச்சா என்ன இஷ்யு?”
“இப்போ ஸ்மோக் பண்ணியே.. அது என்ன
தெரியுமா?”
“ஆப்வியஸ்லி ஐ நோ.. நான் தான
வாங்குனது..!”
“ஹான்ன்.. அது என்னனு எங்களுக்கு
தெரியாதுல..! அதான் இங்கயே நிக்குறோம்.. டிரங்க் அண்ட் டிரைவ்னு கேஸ் போட்டுட்டா?” அப்பாவியாக
விக்னேஷ் கேட்டான்.
“தே கான்ட் ஃபைண்ட் இட்” செடிகளுக்கிடையில்
மறைந்து நின்று தனது காரை பார்த்தபடி விஜய் சொன்னான்.
“அட பாவிங்களா.. இத மொதலயே சொல்லக்கூடாதா..”
என்று எகத்தாளமாக சொல்லிக்கொண்டே, விஜயின் வார்த்தையை
அப்படியே நம்பி அந்த ஒற்றையடி பாதையை விட்டு வெளியே சென்றான். அவனை தடுத்து
நிறுத்த விஜயும் விவேக்கும் முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. காவல் அதிகாரிகளை
பார்த்து,
“ஹலோ சார்.. இட்ஸ் அவர் கார்.. எனி
இஷ்யு?” என்று கேட்டான்.
கண்ணாடி வழியே காரினுள் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரி, திரும்பி, இவனை மேலும்
கீழும் பார்த்தார்.
“அதான் கண்டுபிடிக்க மாட்டாங்கல்ல..
அப்றம் என்ன பயம்?” லேசாக குளரியபடி விஷ்ணு கேட்டான். அவன் கண்கள் சிவந்தும்
சோர்வாகவும் இருந்தது.
“உன் மூஞ்சியே போதும்.. இங்க என்ன
நடந்துதுன்னு சொல்றதுக்கு”
“நம்ம மூஞ்சியும் அப்டிதான் இருக்கு மிஸ்டர் விக்ரம்”
“என்னப்பா.. மச்சான சொன்ன ஒடனே கோவம்
வருதோ?”
மூவரும் பேசிக்கொண்டிருக்க,
செடிகளின் வழியே விக்னேஷ் போலீசுடன் என்ன பேசுகிறான் என்று கவனித்தான் விஜய். அவன்
அருகில் வந்து விவேக் நின்றுகொண்டான். போலீஸ் ஏதோ கேட்க, ஒற்றையடி பாதையை நோக்கி
விக்னேஷ் கைகாட்டி ஏதோ சொல்ல, அனைவரும் அந்த ஒற்றையடி பாதையை ஒரு எதிர்பார்ப்போடு
பார்த்தார்கள்.
“நம்மள தான் தேட்ராங்க”
“ம்ம்ம்..”
“என்ன பிளான்..?”
“லெட்ஸ் கோ தேர்”
“பட் தெம்?”
“லைக் ஐ ஸெட், ‘தே கான்ட் ஃபைண்ட் இட்’ தட்ஸ் நாட் அன்
இஷ்யு. பேக் சீட் கீழ இருக்க பீர் கேஸ் தான் இப்போ பெரிய ப்ராப்ளம்”
“ம்ம்ம்..”
“காய்ஸ்.. போலாம்”
ஐவரும் நடந்தார்கள். அந்த ஒற்றையடி பாதையில் இருந்து வெளியே வந்து தங்கள்
காரிடம் சென்றார்கள்.
“பின்னாடியே வருவிங்கன்னு நம்பித்தானடா
நான் முன்னாடி போனேன்..! என்ன டா.. இப்பிடி பண்றிங்களே டா..!!”
'மூடிக்கிட்டு பின்னாடி நில்லு...' வருண் சைகை
செய்தான்.
“இங்க யாரு விஜய்?”
“நான் தான் சார்”
“வண்டி உன்னுதா?”
“எஸ் சார்”
“லைசென்ஸ் அண்ட் ஆர்.சி காமி”
காண்பித்தான்.
“பாத்தா படிச்ச பசங்க மாதிரி
இருக்கீங்க.. ரோடு ஓரமா வண்டிய அம்போன்னா விட்டுட்டு போவீங்க? கொஞ்சமாச்சும் அறிவு
வேண்டாம்?”
“சாரி சார்..!”
“கணேசன் சார்.. எவனாச்சும்
குடிச்சிருக்கானானு செக் பண்ணிப்பாருங்க..”
உயரதிகாரியைவிடவும்
வயதில் பெரியவர், கான்ஸ்டபிள் ஒருவர் அனைவரையும் ஊதச்சொல்லி யாரும் குடிக்கவில்லை
என்று அறிவித்தார்.
“எல்லாருக்கும் ஒரே டைம்ல பொதருக்குள்ள
அப்படி என்னய்யா அவசரம்..?”
“அதான் சொன்னனே சார்.. பிஸ்ஸ்ஸ் அடிக்க
போனோம் சார்.. நம்புங்க.. நம்பிக்கை.. அதானே எல்லாம்..”
வசனம் பேசி முடித்த விக்னேஷ்
அனைவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். யாரும் சிரிக்கவில்லை என்றதும்
‘ஹ்யூமர் புரியாத பாய்ஸ்’ என்று தனக்குத்தானே சொல்லி நொந்துக்கொண்டான்.
“சாரி சார், வீ வில் லீவ் நவ்.. சாரி
ஃபார் தி ட்ரபுள்”
பவ்யமாக விவேக் சொல்ல. டிரைவர் சீட் கதவை திறக்க விஜய் வேகமாக
சென்றான். தூரதில் இருந்தபடியே காரின் லாக்கை ஓபன் செய்ய ‘பீப்.. பீப்..’ என்ற
ஒளியோடு கார் கதவுகளின் லாக்குகள் விடுவிக்கப்பட்டது.
“ஒன் மினிட்”
“........”
“எங்க போறீங்க?”
“இவர்தான் சார் மாப்பிள்ளை..
எங்களுக்கு ட்ரீட் தரேன்னு சொல்லி பாண்டிக்கு கூட்டிட்டு போராரு”
அனைவரின்
முகமும் மீண்டும் கடுகடுவென்று மாறியது.
“கணேசன் சார்..! காரை தரோவா
செக்பண்ணிட்டு அனுப்புங்க” சொல்லிவிட்டு தனது ஜீப்பை நோக்கி நடந்தார் உயரதிகாரி.
அனைவரின் முகத்திலும் பயம்
படர்ந்தது. காரின் டிரைவர் சீட்டும் அதன் அருகேயுள்ள சீட்டும் சோதிக்கப் பட்டது.
“பின் டோர் ஓபன் பண்ணுப்பா”
“தாராலமா சார்” விக்னேஷ் கதவை
திறந்தான்.
விவேக் அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்தான். ‘என்ன?’
என்பதுபோல விக்னேஷ் கேட்க, ‘சரக்கு டா’ என்று சைகை செய்தான். அப்போதுதான் அருண் தாபாவில் வாங்கி வண்டியின்
கடைசி சீட்டின் அடியில் வைத்த பீர் கேசுஸ் அவனுக்கு நினைவிற்கு வந்தது.
“தம்பி.. இந்த சீட்ட தூக்குப்பா லாஸ்ட்
சீட்டும் பாக்கணும்” இறைச்சலான குரலில் கணேசன் சார்
சொன்னார்.
என்ன செய்வது என்று தெரியாமல் அறுவரும்
முழித்தனர். இப்போது சிக்கிக்கொண்டால் என்ன ஆகும்..? காசுவாங்கிவிட்டு
விடுவித்தால் பிரச்சனை இல்லை. போலீஸ் ஸ்டேஷன்வரை அழைத்துச் சென்றால் என்ன செய்வது?
கேஸ் ஏதும் போடவேண்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? வண்டியை விட்டுவிட்டு
நீங்கள் செல்லுங்கள்.. கேஸ் முடியட்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? நாளை
மறுநாள் கல்யாணம்.. இன்று போலீஸில் சிக்கினால் என்னவளின் நிலைமை என்ன?
பெற்றவர்களின் முகத்தில் எப்படி முழிப்பது? இன்னும் பல கேள்விகளுடன் ஒவ்வொருவரும்
பயத்தில் மூழ்கி அனைவருக்கும் படபடப்பு அதிகமாகிக்கொண்டே சென்றது.
“சார் கடைசி சீட்ல என்ன சார் இருக்க
போகுது.. அதுவே கடைசியா இருக்கு பாவம்.. பொழச்சி போகட்டும் விடுங்க சார்...”
தேவையில்லாமல் ஏதேதோ பேசி அனைவரின்
பயத்தையும் விக்னேஷ் அதிகமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் சார் தாமாகவே
சீட்டை விடுவித்தார். அவர் வண்டியில் ஏற முயற்சி செய்தபோது திடீரென்று சைரன் ஒலி
கேட்டது.
“என்ன கணேசன் சார்.. செக்கிங் ஓவரா?
ஏதோ தாபால ஃபயர் ஆக்சிடெண்ட்டாம்.. சீக்கிரம் ஆகட்டும்” உயரதிகாரி
படபடப்பாக பேசினார்.
“எல்லாம் முடிஞ்சிச்சி சார்.. ஆல்
கிளியர்” கஷ்டப்பட்டு காரின் உள்ளே கடைசி சீட்டிற்கு செல்ல
முயற்சித்த கணேசன் சட்டென்று கீழே இறங்கி போலீஸ் ஜீப்பை நோக்கி நடந்தார்.
“சார்.. அந்த கடைசி சீட்டு?..
வேண்டாமா? ஆல் கிளியரா? ரொம்ப நன்றி சார்.. பாக்க நல்லா ஹேண்ஸமா இருக்கீங்க.. உங்க
வாய்ஸ் ரொம்ப சூப்பர்”
போலீஸ் ஜீப் நகர்ந்து சென்றது. அத்தனையும் பேசிவிட்டு வாய்
முழுக்க பல்லாக இளித்துக்கொண்டே தனது நண்பர்களை விக்னேஷ் பார்த்தான். அவனை அடிக்க
விவேக் கை ஓங்க, விஜய் அவனை தடுத்து நிறுத்தி,
“மே பி ஹி இஸ் ஹை”
“இல்ல மச்சி.. அவன் எப்பவுமே அப்டிதான்”
“அதான் நான் எப்பவும் இப்டின்னு தெரிதுல..
அப்றம் ஏண்டா கோவப்பட்றீங்க.. போய் ஆகுற வேலைய பாருங்க..” சொல்லிக்கொண்டே
கடைசி சீட்டில் சென்று அமர்ந்தான். அவனை தொடர்ந்து விஷ்ணு சென்றான். விஜய் டிரைவர்
சீட்டிலும் அவன் அருகில் விவேக்கும், பின் சீட்டில் வருண் மற்றும் விக்ரமும் அமர்ந்தனர்.
அந்த கருப்பு மஹிந்த்ரா ஸ்கார்பியோ
மீண்டும் ECRல் கம்பீரமாக
நகரத்தொடங்கியது. வானம் லேசாக கருக்க, ஈர காற்று வீசத்தொடங்கியது.
“இட்ஸ் அல்மோஸ்ட் 5 pm.. இன்னும் எவ்ளோ தூரம் போகணும்” கடைசி சீட்டில்
இருந்து விஷ்ணு கேட்டான்”
“ஜஸ்ட் 30 மினிட்ஸ்”
“நாக்கு ஒரு மாதிரி கசக்குது..
ஸ்வீட்டா ஏதாச்சும் இருக்கா” கல்யாண மாப்பிள்ளை கேட்க, ஒரு கறுப்பு பேக் ஒன்றை சீட்டினடியில்
இருந்து எடுத்து விஷ்ணு அவனிடம் கொடுத்தான்.
கண்ணாடி வழியே அந்த பேக்கை பார்த்த விஜய்,
“அம்மா குடுத்தாங்களா விஷ்ணு?”
“பின்ன..? இந்த மாதிரி சாப்பாடு..
நொறுக்கு தீனி... எல்லாம் அம்மா தான் குடுப்பாங்க.. மட்டமான கேள்வி கேக்காம..
ரோட்ட பாத்து வண்டிய ஓட்டுடா” விக்னேஷ் பதில் சொன்னான்.
அனைவருக்கும் அந்த பதில் கோபத்தை தர,
விஜய் மட்டும் லேசாக சிரித்தபடி,
“அதுக்காக கேக்கல மச்சி.. அந்த பேக்
நான் அவங்க பர்த்டேக்கு ப்ரெசெண்ட் பண்ணது. ‘ட்ராவலர்ஸ் ஸ்பெஷல்’.. அதான் கேட்டேன்”
“என்ன பிரயோஜனம்.. அதுல தேன் மிட்டாயும்,
பர்பியும் தான் வச்சி அனுப்பிருக்காங்க.. இந்தா புடி.. டேய்.. இத அவனுங்க கிட்ட
குடு” வருணிடம் கொடுத்து விவேக்கிடம் கொடுக்க சொன்னான்.
அனைவரும்
உண்டனர். ஐந்து நிமிடத்தில் பையில் இருந்த பாதி நொறுக்கு தீனிகள் தீர்ந்துவிட்டது.
“விண்டோஸ் எல்லாம் ஓபன் பண்ணுங்கப்பா..
ஒரு மாதிரி கொமையுது” ஸ்நாக்ஸ் பையை சுருட்டி மீண்டும் சீட்டினடியில்
வைத்துவிட்டு விஷ்ணு சொன்னான்.
“தல சுத்ர மாதிரி.. இல்ல வாமிட் வர மாதிரி
இருந்தா சொல்லு விஷ்ணு... வண்டிய ஸ்டாப் பண்றேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏர் இருந்தா
நல்லா இருக்கும்.. தட்ஸ் இட்”
“கொழந்த கேக்கரான்ல.. விண்டோ ஓபன்
பண்ணுங்க டா”
“எப்டி மச்சி பேசிட்டே இருக்க..? உண்ண
எப்டி பிரியா சமாளிக்கிராங்க?”
“அவளும் இவனும் அதிகம் பேசிக்கவே மாட்டாங்களே..
எல்லாம் வெறும் அண்டர்ஸ்டாண்டிங் தான்” நக்கலாய் விஜய் கேட்ட கேள்விக்கு
வருண் இவ்வாறு பதிலளித்ததும், நக்கல் மறைந்து ஆர்வம் அதிகமாகியது விஜய்க்கு.
“இஸ் இட்?” கண்ணாடி
வழியே கடைசி சீட்டிற்கு கேள்வி சென்றது.
“இஸ் இட்” என்று வைகைபுயல்
பாணியில் பதில் வந்தது.
“ஹவ்?” மீண்டும் வைகைபுயல்
பேசினார்.
காரின் ஜன்னல் கதவுகள் இறக்கப்பட்டன.
தென்றல் அங்கிருந்த அனைவரையும் தீண்டியது. சுகமான அந்த காற்றில் ஆடவர்கள் அறுவரும்
தங்கள் கேசம் காற்றில் நடனமாட மற்றொரு காதல் கதையை கேட்க தயாரானார்கள்.
அமைதி, அது ஒரு விசித்தரமான உணர்வு. மற்ற உணர்வுகளுக்கு
தலைமைவகிக்கவல்ல உணர்வு. எத்தனை உணர்வுகளுக்கு மத்தியில் நாம் சிக்கினாலும் இறுதியில்
நம்மை கட்டியணைக்க காத்திருக்கும். அதன் அரவணைபிற்கு ஈடே கிடையாது. அந்த அமைதியை
வாழ்நாளில் முழுமையாக அனுபவிக்க பல காரணிகளின் கருணை வேண்டும். விக்னேஷ் பிரியா
வாழ்க்கையில் அந்த காரணியாக அமைந்தது காதல்.
கல்லூரி நாட்களிலே வெவ்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள்
படித்துவந்த விக்னேஷ் மற்றும் பிரியா ஒரு கல்லூரி கலைவிழாவில் ஒன்றிணைய நேர்ந்தது.
நல்ல நட்பாக தொடங்கிய அந்த உறவு காலப்போக்கில் காதலாக மாறியது. அந்த உறவு, வெறும்
சிற்றின்பம் தரும் பொய் பிம்பமாக இல்லாமல் ஆழ்ந்த அர்த்தம் தரும் பேரின்பமாக
இருந்தது.
தான் யார் என்பது பற்றிய விழிப்பும், தெளிவும் உடைய இரு இளைஞர்களாக
விக்னேஷ் பிரியா இருந்ததனால் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொள்ள முடிந்தது. ஒருவர்
மனதை ஒருவர் அறிந்துக்கொள்ள வார்த்தைகள் அதிகம் தேவைப்படவில்லை.
மனதின் சிந்தனைகளை மூளை உள்வாங்கி அதன் மெய்மைகளையும் சாதக
பாதகங்களையும் ஆராய்ந்து எண்ணங்களாக வெளியிடுகிறது. அந்த எண்ணங்களே வாழ்வின் சகல
இன்ப துன்பங்களுக்கும் அடிப்படை காரணங்களாக அமைகிறது. மனதின் சிந்தனை ஓட்டங்களை சீர்
செய்தால், மூளையின் எண்ண ஓட்டங்கள் சீராகும். வாழ்க்கை சிறப்பாகும்.
வாழ்நாள் முழுக்க தன்னோடு பயணிக்கும் ஒரு இருதயம் அப்படி
சீர்பட்ட இருதயமாக இருந்தால் வாழ்க்கை எத்தனை சுகமாகும் என்ற ஏக்கத்தோடும்
எதிர்பார்ப்போடும் காத்திருந்த இரண்டு உயிர்கள் தான் விக்னேஷ் மற்றும் பிரியா.
காதல், வாழ்வின் ஒரு முக்கிய பங்கு. தாய், தந்தை, சகோதரன்,
சகோதரி, தோழர்கள், இவர்களின் அன்பும் பாசமும் போல காதலுக்கும் ஒரு மனிதனின்
வாழ்வில் மிக முக்கிய பங்கு உண்டு. சரியான காலத்தில் தானாக அமையும். எதிர்பாராத
உறவாக அமையும். அப்படி அமைந்த உறவு வாழ்வில் மிகப்பெரிய அமைதியை நல்கும். விக்னேஷ்
பரியாவிற்கு நல்கிற்று. சந்தித்தனர்... ஸ்நேகித்தனர்... காதலித்தனர்...
சீர்பட்டனர்!
மிகத்தெளிவாக பெற்றோர்களிடம் எடுத்துரைத்து சம்மதம்
பெற்றனர். இரு குடும்பங்களுக்கும் ஆனந்தம். இருவரும் ஒரே வயதென்றாலும் ஒருமையில்
அழைத்ததில்லை. கோபமும் குழப்பமும் அகங்காரமும் தலை தூக்கியதில்லை. மரியாதைக்கு ஒரு
குறையுமில்லை. அவர்கள் காதலும் தலை குனிந்ததில்லை. இவ்வளவு வாய் பேசும் விக்னேஷ்
எப்படி பிரியாவிடம் மட்டும் அத்தனை அமைதி அடைகிறான் என்று இன்று வரை நண்பர்கள், பெற்றவர்கள் என அனைவரும் வியக்கின்றனர்.
இந்த அழகிய காதல் கதையை அவர்களோடு பயணம் செய்து
கேட்டுக்கொண்டிருந்த மேகங்கள் மகிழ்ந்து அவர்கள் மீது மழையாய் பொழிந்தது. தென்றல்
சட்டென்று வழுபெற்று சாலையின் ஓரத்திலுள்ள மரங்களையும் செடிகொடிகளையும் நர்த்தனம்
ஆட செய்தது. திடீரென்று பெரும் மின்னல் ஒன்று அந்த வானத்தை தனது வெள்ளை ரேகைகளால்
வெட்டி இடி முழக்கங்கள் எழுப்பின.
இடியின் சத்தம் கேட்ட அந்த நொடி, ECR சாலையில் மிக கம்பீரமாக
சென்றுக்கொண்டிருந்த கறுப்பு மஹிந்த்ரா ஸ்கார்பியோ சட்டென்று இடதுபுறம் திரும்பி
மண் தரையில் இறங்கி ஒரு ஒற்றையடி பாதையில் நுழைந்து ECR
சாலையில் இருந்து மறைந்தது.
விஜய் தவிர, காதல் கதையில் மூழ்கி இருந்த, மற்ற ஐவரும்
திடுக்கிட்டார்கள். தூக்கத்திலிருந்து கண்விழித்தவர்கள் போல தான் எங்கிருக்கிறோம்
என்று சுதாரித்துக்கொள்ள அவர்களுக்கு சில நொடிகள் பிடித்தது. முதலில் தெளிந்தவன்
விவேக்.
மழை பெய்யத் தொடங்கியது. காரின் ஜன்னல்கள் மூடப்பட்டது.
கூகிள் மேப் காட்டிய சாலை இல்லாத அந்த ஒற்றையடி பாதையில் வாகனம் மெதுவாக அசைந்து
அசைந்து சென்றது.
“எப்படி இந்த மாதிரி ஒரு லொக்கேஷன்ல
ரெசாட் கெடச்சிது?”
“ஃப்ரெண்ட் ஓட ரெஃபரண்ஸ்”
“பாஸ்கர்..?”
“எஸ்”
மண் சாலையின் மீது மெதுவாக வண்டியை
ஓட்டிக்கொண்டே அந்த வழியில் உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்களின் அழகை ரசித்தபடி
விஜயும் விவேக்கும் பேசினார்கள். மற்ற நால்வரும் காரின் மூடபட்ட ஜன்னல்கள் வழியே
அந்த அடர்த்தியான மரங்களுக்கு நடுவே, கொட்டும் மழையில், தாங்கள் பயணிப்பதை
நினைத்து மகிழ்ந்தார்கள்.
“வாவ்.. ECR-ல இப்படி ஒரு லொக்கேஷனா” விஷ்ணுவிற்கு
வியப்பில் கண்கள் விரிந்தன.
“இன்னும் லொக்கேஷனே வரல கண்ணா..
அப்டியே திரும்பி ரைட்ல பாரு”
மிகப்பெரிய இரும்பு கதவு ஒன்று
சினிமாவில் வரும் பேய் பங்களாவின் கதவு
போல இருந்தது. வாகனம் அந்த கதவின் முன்னாள் நிறுத்தபட்டது. விவேக் காரின் ஹாரணை
அழுத்தி காவலாளியை அழைத்தான். கொட்டும் மழையில் கையில் கொடைப்பிடித்தபடி அந்த
பெரிய கதவில் போடப்பட்டிருந்த சிறிய கதவு வழியே முருகேசன் வெளியே வந்தார்.
“யாருப்பா அது? யார் வேணும்? இது
பிரைவேட் ப்ராப்பர்டி.. இங்க எல்லாம் நிறுத்தக்கூடாது.. கிளம்பு கிளம்பு”
“அண்ணே.. பாஸ்கர் சொன்ன ஆளுங்க நாங்க
தான்.. ஆறுபேரு வருவோம்னு சொல்லிர்பாரே”
“அவங்க பைக்ல வருவாங்கன்னு தானே
சொன்னாரு.. இருங்க.. அவர்கிட்ட பேசிட்டு வாரேன்”
“இருங்க.. நானே கால் பண்ணித்தரேன்”
மழையின் வேகமும் காற்றின் வேகமும்
அதிகரித்தது. முருகேசனால் அந்த அறுவது வயதில் கொட்டும் மழையில் நிற்க முடியவில்லை.
விவேக் பேசியதை கேளாமல் தனது அறைக்கு சென்று பாஸ்கரிடம் பேசிவிட்டு அவரின்
நண்பர்கள்தான் என்று உறுதிசெய்யப்பட்டதும் கதவுகளை திறந்து ஸ்கார்பியோவை உள்ளே
அனுமதித்தார். விவேக்கிடம் சாவியை கொடுத்துவிட்டு அவன் அலைபேசி எண்ணை ஒரு நோட்டில்
குறித்துக்கொண்டார்.
“அவர் நம்பரையும் வாங்கி வச்சிகோ மச்சி”
பேய்
கதவு கடந்து தோட்டம் தாண்டி ஐநூறு மீட்டர் கடந்து பங்களாவின் வாசலை அடைந்தனர்.
வாசலின் வெளியே மழை மற்றும் வெயில் படாமல் இருப்பதுபோல தளம் போடப்பட்டிருந்தது.
அதுவும் பேய் பங்களா போலவே காட்சியளித்தது. அனைவரும் வண்டியை விட்டு கீழே இறங்கி
மாத்துத்துணி கொண்டுவந்த பைகளை எடுத்துக்கொண்டனர்.
“மச்சி.. சாரி டா.. உண்ண வினோ வீட்ல
இருந்து டைரெக்டா ஆபீஸ் வர சொல்லிட்டேன்.. உன்னோட டிரஸ் பத்தி யோசிக்கவே இல்ல” வண்டியை விட்டு
இறங்கியதும் தனது துணி பையை எடுத்தபோது, வருண் விஜயிடம் சொன்னான்.
“ரொம்ப சீக்கிரம் யோசிச்சிட்ட டா..”
“ஹி.. ஹி.. சாரி டா”
“நோ இஷ்யுஸ்.. ஐ எம் ஆல்வேஸ் பேக்ட்டு” சொல்லிக்கொண்டே
தனது வண்டியிலிருந்து ஒரு குட்டி பேக்கை எடுத்து வருணிடம் காட்டினான்.
“சூப்பர் மச்சி”
இதற்கிடையில் விவேக் தான்
முருகேசனிடம் வாங்கிய சாவியைக்கொண்டு கதவை திறந்தான். அந்த கதவு ஆறடி இருக்கும்.
முழுக்க முழுக்க தேக்கினால் செய்யப்பட்ட கதவு. ‘கிரீச்ச்ச்’ என்ற சத்தத்தோடு
திறந்தது.
“என்ன டா பூத் பங்களா மாதிரி இருக்கு” கதவை மேலும் கீழும்
பார்த்து விக்ரம் சொன்னான்.
“ஹொ..! லெட் தி பார்ட்டி பிகின்ஸ்..!” பரவசமாக சொல்லிக்கொண்டே
விக்னேஷ் உள்ளே சென்றான். அவனை தொடர்ந்து விக்ரம், விஷ்ணு, வருண் மற்றும் விவேக் சென்றார்கள். கடைசியாக
விஜயும் உள்ளே சென்றான். கதவு அடைக்கப்பட்டு உட்புறம் தாழிடப்பட்டது. வெளியே
காற்றின் வேகம் குறைந்து மழையின் வேகம் இன்னும் அதிகரிக்க, இடியும் மின்னலும் அவ்வப்போது
வந்து சென்றது.
தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 11 – சொல்லாத கதை
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
Episode 01 - காதலும் குழப்பமும்
Episode 02 - கல்யாண வீடு
Episode 03 - ரத்தின வியாபாரி
Episode 04 - நட்பு சரித்திரம்
Episode 05 - மணமகள் வீடு
Episode 07 - என்ன பிளான்..?
Episode 08 - அருண் தாபா
Episode 09 – காதல் பயணம்
Episode 10 – பார்ட்டி பிகின்ஸ்
Episode 11 – சொல்லாத கதை
Episode 12 – மழையும் புயலும்
Episode 13 – காதல் புயல்
Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு
Episode 15 – இதுவும் கடந்து போகும்
__________________________________________


Comments
Post a Comment