04. நட்பு சரித்திரம்

 ஆஹா கல்யாணம் 

Previous Epi -  

04. நட்பு சரித்திரம்

“நீங்க டிராப் பண்ணட்டுமானு கேட்டதும் பைக்ல வந்தீங்கன்னு நெனச்சேன்.. நைஸ் கார்..! நல்லா மெஜெஸ்ட்டிக்கா இருக்கு” வீட்டில் இருத்து கிளம்பி காரில் ஏறும்போது பவானி விஜயிடம் சொன்னாள்.

“ம்ம்ம்.. உனக்கு பைக் கம்ஃப்பர்டபிள்னா சொல்லு.. உன்னோட பைக் எடுத்துக்கலாம்” தனது மஹிந்த்ரா ஸ்கார்பியோவை மிக கவனமாக வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து சாலையை அடைந்த விஜய் பவானியைப் பார்த்து பதில் சொன்னான்.

“அண்ணா..! என் பைக் நல்லா இருந்தா நானே எடுத்துட்டு போவேனே. லாஸ்ட் வீக்  தான் ரிப்பேர் ஆச்சி.. கல்யாண பிஸில யாரும் ஷாப்புக்கு கொண்டுப்போக மாட்ராங்க” பாவமாக பதில் சொன்னாள்.

“ஹ..  ரிப்பேர் ஆச்சா.. இல்ல கீழ போட்டியா?” குறுகிய தெருக்களை கடந்து பிரதான சாலையை அடையும் பாதையில் மிக கவனமாக ரோட்டின் அகலங்களை கணித்து ஓட்டிக்கொண்டிருந்த விஜய் தனது  பார்வையை ரோட்டிலிருந்து நீக்காமலேயே பவானியை கேள்விக் கேட்டான்.

அதுவரை காரின் உட்புற அழகையும் ரோட்டில் அந்த கார் கம்பீரமாக செல்வதையும் ரசித்துக்கொண்டிருந்த பவானி விஜயை ஆச்சரியமாக பார்த்தாள். வண்டி கீழே விழுந்தது உண்மைதான். தனது வண்டியின் இடப்புறத்தில் சில சிராய்ப்புகளும் உண்டு. அது யார் கண்ணிலும் படாதவாறு வண்டியின் இடப்புறம், சுவற்றின் பக்கம் நிற்பதுபோல வைத்துவிட்டாள். கல்யாண வேலைகள் முடிவதற்குள் அதை சரி செய்து விட வேண்டும் இல்லையெனில் வீட்டில் கேட்க்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று எண்ணியிருந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் முடிந்துவிடும். ஆனால் வண்டி இன்னும் பழுது பார்க்கப்படவில்லை. நல்லவேளையாக யாரும் அதை கவனிக்கவில்லை என்று நினைத்தாள் பவானி. விஜய் கவனித்துவிட்டான் போலும்.

“என்ன பவானி.. பதிலே காணும்..?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த பவானியை மீண்டும் கேள்வி கேட்டான் விஜய். இம்முறை அவள் முகத்தைப்பார்த்து கேட்டான்.

     பவானி ஏதோ பதில் சொல்ல தொடங்கினாள், அதற்குள் வண்டியின் பின்னால் யாரோ ஹாரன் அடித்துக்கொண்டே வருவதை கண்ணாடி வழியே பார்த்தான் விஜய்.

“மச்சி நான் தான் டா...” காரின் ஓட்டுனர் இருக்கைக்கு நேராக தனது டூ வீலரை கொண்டு வந்த வருண், விஜயை பார்த்து சிரித்தான். விஜய் காரின் இடப்புறம் உள்ள இண்டிக்கேட்டரை ஆன் செய்து வாகனத்தின் வேகத்தைக் குறைத்தான்.

“ஸ்டாப் பண்ணாத டா.. அவள வினோ வீட்ல விட்டுட்டு ஆபீஸ்க்கு வந்துடு.. வாட்ஸ்ஆப்ல லொகேஷன் ஷேர் பண்ணிருக்கேன் பாத்து வா.. பை..” என்று சொல்லிவிட்டு பிரதான சாலையின் வலப்புறம் திரும்பி சிக்னல் கடந்து சென்றுவிட்டான்.

“நம்ம எந்த பக்கம் போகணும்..?” பக்கத்தில் அமர்ந்திருந்த பவானியை பார்த்து விஜய் கேட்டான்.

“வண்டி விழுந்தது உண்மை ..ண்ண, ஆனா நான் போடல.. என்னோட ஃப்ரெண்ட் தான்...” பதட்டத்துடன் சொன்னாள் பவானி.

“ஹேய்.. கூல்.. வினோ வீட்டுக்கு எந்த பக்கம் போகணும்னு கேட்டேன்.. வண்டி கதைய இல்ல” என்று ஆறுதல் குரலில் பேசினான் விஜய்.

“ஓ.. ஐ எம் சாரி..! லெஃப்ட்” முகத்தில் சோர்வு நிரம்பியவளாய் வழி சொன்னாள்.

     அதன்பின் அந்த பயணத்தில் வழி சொல்ல மட்டுமே அவள் வாயை திறந்தாள். வருணின் நெருங்கிய நண்பர்களில் விஜயை தவிர மற்ற அனைவருமே அவளுக்கும் நெருக்கம். வருண், விக்ரம், விக்னேஷ், விவேக், வினோதினி இவர்களின் பெற்றோர் அனைவரும் ஒரே குடியிருப்பில் வசித்தவர்கள். கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்த ஐந்து ஜோடிகள் ஒரே வீடு, ஒரே வாசல், ஒரே திண்ணை, ஒரே முற்றம் தனித்தனி குடுத்தனம், தனித்தனி கேஸ் கனெக்க்ஷன்கள், காம்மன் பாத்ரூம் மற்றும் காம்மன் டாய்லெட் என்று வாழ்க்கையை தொடங்கினர். வரவு செலவு கணக்கும், சமையலும் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் கூட்டுக்குடும்பம் போலவே தனிக்குடித்தனமும் ஷேரிங் அண்ட் கேரிங் தான்.

வாரம் ஒருமுறை ஒன்றாக கோவிலுக்கு செல்வதில் தொடங்கி, பண்டிகை நாட்களில் அனைவரும் ஒன்றிணைந்து வாசலில் வண்ணக்கோலங்கள் போடுவது, பலகாரங்கள் பரிமாறிக்கொள்வது, என்று பெண்களின் நட்பு வலுவாக தொடங்கியது. ஐந்து பெண்மணிகளும் அவரவர்கள் கணவர்களின்  உழைப்பிற்கு பக்கபலமாக இருந்து அவரவர்கள் குடும்பத்தினை நன்கு கவனித்துக் கொண்டனர். வரவுக்கு ஏற்ற செலவும் சேமிப்பும் மிக திட்டமாக செய்தனர்.

அன்று ஒன்றாக அந்த குடியிருப்பில் குடியேறியவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு என்றும் நீடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். வாழ்க்கை அவர்களை வெவ்வேறு பாதைகளில் நடத்திச்சென்ற போதிலும், தங்கள் குழந்தைகளை ஒரே பள்ளிக்கூடத்தில் சேர்த்தும், வருடம் ஒருமுறை டூர் செல்வதன் பேரிலும் தங்கள் நட்பினை நீட்டித்துக் கொண்டார்கள். அவர்களின் ஆசைபடியே அவர்களின் குழந்தைகளாகிய வருண், விக்ரம், விக்னேஷ், விவேக், வினோதினி ஐவரும் மற்றும் வருணின் தங்கை பவானி வினோவின் தம்பி விஷ்ணு ஆகிய ஏழு பேரும் நல்ல நண்பர்களாக வளர்ந்தனர். பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரையிலும் ஒற்றுமை மட்டும் அல்லாது ஒரு லட்சியத்தையும் அவர்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த ஐந்து நண்பர்களும் கல்லூரி நாட்களில் தங்கள் கனவு இதுவென்று ஒன்றாக முடிவு செய்தார்கள். பி.காம் முடித்து எம்.காம் படிக்கவேண்டும். இதனிடையில் CA படித்து தேர்ச்சி பெறவேண்டும். அதன் பிறகு குறைந்தது 3 ஆண்டுகள் வெவ்வேறு தணிக்கை நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்று அனைவரும் ஒன்றிணைந்து சொந்தமாக ஒரு  தணிக்கை நிறுவனம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். திட்டத்தை செயல்படுத்தும் ஆற்றலும், அறிவும், ஒழுக்கமும் நிறைந்த கூட்டம் அது.

வருணின் தந்தை ஒரு தணிக்கையாளர். ஐந்து பெற்றோர்களில் வருணின் தந்தை தான் அனைவரின் ஃபேவ்ரெட். அவரின் தாக்கமே இவர்களின் இந்த கனவிற்கு விதை போட்டது. இவர்கள் கல்லூரி படிக்கும் நாட்களிலேயே வருணின் தந்தை தனி நிறுவனம் தொடங்கிவிட்டார். பி.காம் நாட்களில் இருந்தே ஐவரும் காலேஜ் முடிந்தவுடன் நிறுவனதிற்கு வந்து வேலை கற்றுக்கொண்டனர். CA முடிக்க அந்த அனுபவம் மிகவும் உதவியது.

அந்த நிறுவனத்திலேயே இப்போது இந்த ஐவரும் பார்ட்னர்ஸ். வருண் தந்தையின் வழிக்காட்டுதலிலும் தங்களுக்கு தெரிந்த இணைய வழிமுறைகளிலும் நிறுவனத்தை நன்கு நடத்திவந்தனர். இவர்களுக்கும் விஜய்க்குமான உறவு பள்ளிக்கூடம் வரையில்தான். ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள் ஆனால் வெவ்வேறு டிப்பார்ட்மெண்ட். விஜயின் நட்பு வட்டாரம் மிக பெரியது. ஆனாலும் பள்ளிக்கூட நண்பர்கள் என்பதால் என்றென்றும் ஒரு தனி பாசம் தான்.

விஜயின் தாய் தந்தை இருவருமே பிசினஸ் பீப்பிள் என்பதால் அவர்கள் அதிகநேரம் விஜயுடன் செலவழிக்கவில்லை. சிறு வயதுமுதல் பெரும்பாலும் இவர்கள் ஐவரோடே நேரம் செலவழித்தான். பல நாட்கள் இரவு சாப்பாடு இவர்கள் வீட்டிலே முடிந்த பிறகு விஜயின் அம்மா காரில் வந்து அழைத்து சென்றதுண்டு. வருணின் தந்தை விஜயின் தந்தைக்கு நல்ல நண்பர். மற்றும் அவர்கள் பிஸ்னசுக்கு ஆடிட்டிங்கும் பார்ப்பார். இன்றுவரை அந்த நட்பு நீடித்துக்கொண்டிருக்கிறது.

விஜய் மிகவும் ஸ்ரைட் ஃபார்வெர்ட், கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்தவன், பொய் என்றால் மட்டும் சுத்தமாக பொறுத்துக்கொள்ள மாட்டான். அவனிடம் பொய் சொல்லி தப்பிக்கவும் இயலாது. தன்னை நம்புபவர்களிடம் பொய் சொல்லாமல் வாழ்பவர்களுக்கு இருக்கும் ஒரு அபூர்வ சக்தி அது. அவர்களிடம் பொய் சொன்னால் நொடிபொழுதில் கண்டுபிடித்து விடுவார்கள். விஜயின் இந்த குணாதிசயத்தை நன்கு அறிந்த பவானி அவன் தன் வண்டியைப்பற்றி கேட்டதும் லேசாக பதறினாள்.

“அந்த வீடு தான?” பவானி சொன்ன வழியில் சென்று தன் காரை ஒரு தெருவிற்குள் திருப்பிய விஜய், வாழை மரங்கள் கட்டியிருந்த ஒரு வீட்டைக் காட்டிக் கேட்டான்.

“இல்ல..ண்ணா நெக்ஸ்ட் ஸ்ட்ரீட்ல லெஃப்ட்ல தேர்ட் ஹவுஸ்.. வெளிய பந்தக்கால் நட்டுருப்பாங்க” விளக்கமாக சொன்னாள்.

“ஓகே..!”

     வீட்டின் வாசலில் தனது ஸ்கார்பியோவை நிறுத்தினான். பவானி வேகமாக இறங்கினாள். காரின் கதவை சாத்திவிட்டு வேகமாய் வீட்டினுள் செல்ல முற்பட்டவள், சற்று நிதானித்து,

“அண்ணா.. நீங்க உள்ள வரீங்களா..?”

“இல்லமா.. நீ ஏதோ அவசரமா போற போல... போய்ட்டுவா” பாவம் போல சொன்னான்.

“ஓய் பவா..! யார் அது கார்ல” பால்கனியில் இருந்து பவானியின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வினோ குரல் கொடுத்தாள்.

“ஹலோ கல்யாண பொண்ணே..! என்ன தெரியுதா..?” டிரைவர் சீட்டின் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி ‘ஹாய்’ சொன்னான் விஜய்.

“விஜய்..! வா வா.. மேல வா..” ஆச்சரியமும் சந்தோஷமும் நிறைந்த குரலில் அழைத்தாள். “அம்மா.. உங்க ஃபேவரெட் விஜய் வந்துருக்கான் பாருங்க” என்று அம்மாவையும் அழைத்தாள்.   

     பவானியின் முகம் லேசாக வாடியது. தான் வந்த வேலை இதனால் தாமதிக்குமோ என்ற சோகக்கேள்வி அவள் முகத்தில் படர்ந்ததை விஜயும் கவனித்தான்.

     வீட்டினுள் நுழைந்ததும் விஜய் வினோவின் அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்றான். குனிந்து நிமிர்ந்து பார்த்த மறு நொடி வினோவும் அங்கு இல்லை, பவானியும் அங்கு இல்லை. தனக்குள் லேசாக சிரித்துவிட்டு அம்மாவிடம் கல்யாண வீடு நிலவரம் பற்றி பேசத்தொங்கினான்.


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 05 - மணமகள் வீடு


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி


Episode 01 - காதலும் குழப்பமும்

Episode 02 - கல்யாண வீடு

Episode 03 - ரத்தின வியாபாரி

Episode 04 - நட்பு சரித்திரம்

Episode 05 - மணமகள் வீடு

Episode 07 - என்ன பிளான்..?  

Episode 08 - அருண் தாபா 

Episode 09 – காதல் பயணம்

Episode 10 – பார்ட்டி பிகின்ஸ் 

Episode 11 – சொல்லாத கதை

Episode 12 – மழையும் புயலும்

Episode 13 – காதல் புயல் 

Episode 14 – மறைக்கப்பட்ட வரலாறு

Episode 15 – இதுவும் கடந்து போகும்


__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments