முதல் காதல் அன்னக்கிளி - என்னுடைய தோழி

முதல் காதல்

அன்னக்கிளி

Previous - தொடரும் அதிசயங்கள்

 என்னுடைய தோழி

தோற்றுப்போன காதல் கதையை தோழியிடம் பகிர்ந்து மட்டும் என்னப்பயன்? ஆனால் இவளிடம் சொல்லியிருக்கலாம். பள்ளிக்கூடம் முதல் இன்றுவரை உடன்தான் இருக்கிறாள். சைட் அடித்த பெண்களை பற்றி கிண்டல் பேசியதும் இவளிடம்தான். ஒருதலை காதல் கதைகளை ஒப்பித்ததும் இவளிடம்தான். முதன்முதலில் வீட்டுக்கு தெரியாமல் தியேட்டரில் தலைவர் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்ததும் இவளிடம்தான். ஒரே வயதானவர்கள் ஆனாலும் அவள் கொஞ்சம் பொறுப்புமிக்கவள் என்று எப்போதும் அம்மா கூறுவது வழக்கம். சென்னையில் படிக்கப்போகிறோம் என்று சொன்னவுடன், “உன்னை நம்பி அவளை அனுப்பவில்லை, அவளை நம்பி தான் உன்னை அனுப்புகிறோம்.  ஒழுங்காக படித்துவா” என்று அவள் அம்மா எனக்கு ஆசிர்வாதம் கொடுத்தனுப்பியது  இன்றும் நினைவுள்ளது.

இத்தனை ஆண்டு நட்பு பலவித சூழ்நிலைகளை கடந்துதான் வந்தது. காதலர்கள் என்ற கிண்டலும் கேலியும் நண்பர்கள் முதல் பெற்றோர்கள் வரை வந்துதான் சென்றது. ஏனோ எங்கள் மனதில் அப்படி ஒன்றும் உதிக்கவில்லை. இருவரும் இணைந்து பல விஷயங்களை பேசுவதுண்டு. சமூகம், சினிமா, பெண்கள், ஆண்கள், குடும்பம், அரசியல், புத்தகம், இன்னும் பல. “நீ ஏன் அவள காதலிக்கல?”, “நீ ஏன் அவன காதலிக்கல?” என்ற கேள்விக்கு பதில் எப்போதும் ஒன்றுதான் “தோனல... அவ்ளோதா....”. இருவரும் இதில் உறுதியாக இருந்தனர். நட்பு என்ற உணர்வை அதிகமாக மதித்தனர். பல முறை சண்டைகள் வந்தபோதும் “யார் முதலில் வந்து பேசுவது” என்ற கேள்வியே இல்லாது, “நான் பேசுகிறேன்... நீ பேசுனா பேசு இல்லனா நா பேசுறத அமைதியா கேளு” என்று முடிவடையும். அழுததுண்டு, ஆறுதல்கள் பரிமாறப்பட்டதுண்டு. உதவி என்றால் ஒருவர் நினைவுதான் மற்றவருக்கு வரும்.

ஒரே கம்பெனியில் வேறு வேறு டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறதால் இவர்கள் காதல் கதை தோழிக்கு தெரியும். நோய் தொற்று சூழ்நிலையில் சென்னையில் உள்ள பல கம்பெனிகள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தது. முதல் நாளே அவளது அத்தனை அத்தியாவசிய பொருட்களையும் விடுதியில் இருந்து தனது பிளாட்டுக்கு கொண்டுவருமாறு தோழி உத்தரவிட்டாள்.

“ஹேய்.... எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு இன்னிக்கு ஈவினிங்கே என் பிளாட்ல அட்டிபோட்றோம்”

“என்ன விளையாடறியா...? நானும் அவனும் ஒரே  அபார்ட்மெண்ட்...? எதிரெதிர் பிளாட்...? வீட்ல என்னனு சொல்றது?”

“அத நீ உன் அம்மா கிட்டயே கேளு.....”

“என்னடி.... ஒளர்ற....?”

“அட ஆமாடி... நீ வாஷ்ரூம் போயிருந்த அப்போ அம்மா கால் பண்ணாங்க, நான்தான் அட்டெண்ட் பண்ணேன். ஹாஸ்டல்ஸ் எல்லாம் மூட்றாங்க, இப்போ டிராவல் பண்றது கஷ்டம், அதான் உங்க வீட்ல அவள தங்க சொல்லலாம்னு நெனச்சேன், நல்லவேள நீயே போன் எடுத்துட்ட.... உனக்கு ஏதும் கஷ்டம் இல்லையேன்னு...? கேட்டாங்க....”

“பாரேன்.... சரி... உனக்கு ஏதும் கஷ்டம் இல்லையே....” கொஞ்சம் நக்கலும் வெட்கமும் கலந்து கேட்டாள் அவள்.

“ச்சே.... ச்சே.... அவ்ளோ பெரிய பிளாட்ல நீ கூட இருந்தா....” என்று ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்தி அவளை உற்றுப் பார்த்து,

“அடியே.... என்கூட தான தங்குவ....” என்று பயந்தவளாய் கேட்டாள்.

“ஏய்..... உன்கூட தான்டி.... அசிங்கமா பேசாத...”

“நீங்க அசிங்கமா பண்ணாம இருந்தா சரி”

“ஹலோ.... விடிந்தால் கல்யாணம்.... நாங்க பண்ற எதுவும் அசிங்கமில்ல...”

“அப்டியா... சரி அந்த செல்ல குடு.... என் நண்பனோட மாமியார்கிட்ட கேப்போம்... சொரியா சொரி இல்லையான்னு” வாயை கோனையாக வைத்துக்கொண்டு கேலி செய்தாள்.

“சரி சரி.... கிண்டல் இருக்கட்டும்... அம்மாதான் இந்த ஐடியா குடுத்தாங்கன்னு அவன்கிட்ட சொல்லாத... சொன்னா உனக்கு தான் பிரச்சன... தனியா தங்கவேண்டி இருக்கும்” என்று காதல் திமிராக சொன்னாள்.

“உத்தரவு மகாராணி” இருவரும் சிரித்தனர்.

அன்றிரவே அவள் தோழியின் பிளாட்டுக்கு குடியேறினாள். வீட்டில் இருந்தபடியே வேளை, நல்ல அரட்டை, சமையல் என்ற பேரில் நல்ல ரகளை, புது புது பண்டங்கள் சமைத்து அவனை வைத்து டெஸ்ட் செய்து நல்ல அனுபவம் பெற்றனர் இருவரும். “நண்பனுடைய காதலி” என்ற உறவோடு சேர்ந்து “என்னுடைய தோழி” என்றாகி விட்டது. பெண்களிடையில் ஒற்றுமை என்பது சிறிது அபூர்வம்தான்.

காதலியும் தோழியும் இப்போது நல்ல நண்பர்கள். இருவரின் குடும்பமும் இருவர்மீதும் பாசம் காட்டுகிறது. வாழ்வில் வேறு என்ன வேண்டும். ஆனால் சில சமயம் இந்த சமையல் குறிப்புகள் சொல்லும் யூட்யூப் மீது மட்டும் லேசாய் கோபம் வரும். அதை சமாளிக்கலாம் பரவாயில்லை, ஆனால் இந்த முதல் காதல் கேள்வியை எப்படி சமாளிப்பது.

“என்னடா ரொம்ப யோசிக்கிற.... மறந்துபோச்சா...?” காற்றோடு கூடி கனமழைக்காக காத்திருந்த மேகங்களை பார்த்துக்கொண்டிருந்தவனை தோழி உசுப்பினாள்.

“ஹையோ.... மறந்துட்டாலும்.....” என்று லேசாய் கிண்டல் குரல் செய்தாள் அவள்.

“பாருடா.... பொசசிவ்நெஸ்ஸா....” இருவரையும் தோளில்தட்டி சிரித்தாள் தோழி.

“என்னடா.... எப்படி ஆரமிக்ரதுனு தெரிலையா...? நான் வேணும்னா ஸ்டார்ட் பண்ணி வைக்கவா?” என்றாள் அவள்.

இருவரின் எதிர்பார்ப்பையும் பார்த்து அவனுக்கு லேசாக சங்கடம் ஏற்பட்டது. முடிந்துபோன கதை, எதற்கு அதைப்பற்றி பேச வேண்டும்....? யாருக்கு என்ன லாபம்...? என்றெல்லாம் யோசித்தவன் கதை சொல்ல தொடங்கினான்.

தொடரும்..!

தொடர்ந்து படிக்க - 6. முதல் காதல்


முதல் காதல் -  அன்னக்கிளி

  1. சாவி வேண்டாம்

  2. அம்மாவின் ஆசை

  3. இதுதான் இயல்பா??

  4. தொடரும் அதிசயங்கள்

  5. என்னுடைய தோழி

  6. முதல் காதல்

  7. கிரீம் பண்

  8. மழைச் சாரல்



__________________________________________

இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!

படித்து மகிழுங்கள்..!

பகிருங்கள்..!

Comments