முதல் காதல் அன்னக்கிளி - தொடரும் அதிசயங்கள்

 

முதல் காதல்

அன்னக்கிளி

Previous Post - இதுதான் இயல்பா??

தொடரும் அதிசயங்கள்

அவர்கள் வாழ்க்கையில் அந்த ஒரு நாளோடு அதிசயங்கள் நின்றுவிடவில்லை. அவள் காதலுக்கு கண்ணிமைத்த கணம் முதல் அவர்கள் காதல் கல்யாணம் ஆகும்வரை நீடித்தது. உற்றாரும் உறவினரும் கூட இவர்களுக்காக மகிழ்ச்சியடைந்தனர். நிச்சயம் முடிந்து சரியாக ஆறு மாதம் பதினொன்றாம் நாள் கல்யாணம் நிச்சயிக்கப் பட்டது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக கல்யாணம் தள்ளிப் போனதை நினைத்து அனைவருக்கும் வருத்தம். இந்த சூழ்நிலை இல்லையெனில் நாளை முகூர்த்தம். நிச்சயமாக அவர்கள் இருவரைவிடவும் அவன் தாய் வருந்தினாள் என்பதில் ஐயம் இல்லை.

எல்லாம் ஒருபுறம் இருக்க இன்று ஏனோ இந்த பால்கனியில் அமைதியாக அமர்ந்து மிளகாய் பஜ்ஜியுடன் மேகக்கூட்டம் நகர்ந்து செல்வதை பார்த்ததும் மனதிற்கு ஒரு நிம்மதி தருவதாக இருவருக்கும் தோன்றியது.

கதவை திறந்துகொண்டு யாரோ வருவது பால்கனியில் இருந்து தெரிந்தது.

“ஹலோ..... சிவபூசையில் கரடியா நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணலையே....” வந்தவள் கேட்டுக்கொண்டே பால்கனி நோக்கி வந்தாள்....

“ஆமான்னு சொன்னா அப்படியே திரும்பிபோய்டுவியா...?” என்று அவன் நக்கலும் கேலியுமாக கேட்டான்.

“ஹான்... எங்க வீட்டு மொளகா பஜ்ஜிய திருப்பி குடு.... நா போறேன்....”

“எல்லாம் இந்த மொளக பஜ்ஜி ஒன்னு வச்சியே என்ன கௌத்துருங்க...”

சொல்லிக்கொண்டே பால்கனியில் ஒரு சிறிய மேசையை இழுத்துப் போட்டன். அவனும் அவளும் அமர்ந்தபிறகு புதிதாக வந்தவளை நோக்கி...

“வா வந்து உக்காரு” என்றான்.

“நான் நடுவில தான் உக்காருவேன்” குறும்பாக வந்து இருவருக்கிடையில் அமர்ந்துக்கொண்டு ஒரு மிளகாய் பஜ்ஜியை கடிக்க தொடங்கினாள்.

“ஹே... இவன் கிட்ட கேட்டுட்டியாடி....” என்று அவளிடம் கேட்டாள்.

அவள் பதில் சொல்ல வாய்திறக்கும் முன்பே,

“உன் பஸ்ட் லவ் பத்திதான்டா நாங்க பேசிட்டு இருந்தோம்....”

அவன் ஒரு நிமிடம் இருவரையும் பார்த்தான். அவள் சிறிதாக ஒரு கள்ளச்சிரிப்பு சிரித்து, புதிதாய் வந்தவளை பார்த்து,

“என்கிட்ட அவன் ஏற்கனவே மொத்த கதையும் சொல்லிருக்கான்.... உனக்கு வேணும்னா நீயே கதகேளு....”

“அட பாவி..... சின்ன வயசுல இருந்து உன்கூட இருக்க ஃபிரின்ட்.... எனக்கு சொல்லல... நேத்து வந்தவ... அவளுக்கு மொத்த கதயும் தெரியுமா...?” “இதுதான் நீ நட்புக்குத்தர மரியாதையா??” என்று கோபத்தில் வெடித்தாள் தோழி.

“நான் நேத்து வந்தவளா...? உன் ஃப்ரண்ட் சொல்றா நீயும் அமைதியா இருக்க....” இவள் ஒருபக்கம் கோவத்தில் கேள்விகேட்க மேஜையின் ஓரம் அமர்ந்திருந்த அவன் என்ன பதில் கூறுவது என்றறியாமல் இருவரின் முகத்தையும் பார்த்து திருதிருவென முழித்தான்.

அவன் முகம் பார்த்து சட்டென்று இருவரும் வாய்விட்டு கலகலவென சிரித்தனர்.

பேராபத்திலிருந்து தப்பித்தவானாய் பெருமூச்சுவிட்டான். பின் அவனும் சிரித்தான்.

“அம்மா கால் பண்ணாங்கனு சொன்ன.... என்ன சொன்னாங்க” அவன் அவளை பார்த்து கேட்டான்.

“ஏதும் புதுசா இல்ல.... எப்பவும்போல சும்மா விசாரிச்சாங்க.... அப்டியே மொளகா பஜ்ஜி போட சொல்லித்தந்தாங்க... வேற ஒன்னும் இல்ல....”

அவன் புன்னகைத்தான். எத்தனை ஆண்மகனுக்கு இந்த குடுப்பனை கிட்டும்? எந்த ஒரு தாயும் சிறு சண்டையேனும் இல்லாமல், முகம் சுழிக்காமல், மனம் உவந்து தனது பாசத்தை பங்கிட்டுக்கொள்ள மாட்டாள். தானாகவே பார்த்து, இவள் தான் தன் மகனுக்கு மனைவி என்று அவளே முடிவு செய்து திருமணம் நடத்திவைத்தாலும், பாசத்திற்கு என்று ஒரு சண்டை நிச்சயமாய் நடந்தே தீரும். ஒரு பனிப்போரேனும் நிகழ்ந்தே தீரும். அந்த சூழ்நிலையில் யார்பக்கம் நிற்பது என்பது ஒவ்வொரு ஆணும் சந்திக்கும் ஒரு கடினம். ஆனால் தன் வாழ்க்கையில் இங்கு அது கடந்துவிட்டதுபோலும்.

தன் காதலியும் தாயும் தினம் தினம் பேசிக்கொள்வது ஒருவித ஆனந்தம். தனக்கு உடல்நிலை சரியில்லாது போனால் அம்மா அவளுக்கு அறிவுரை வழங்குகிறாள். நன்கு கவனித்துக்கொள்ளும்படி சொல்கிறாள். அவளைப்பற்றியும் நம்மிடம் மிக பாசமாகவே பேசுகிறாள். இன்று சமையல் குறிப்புகளும் பரிமாறுகிறாள். நிச்சயமாய் நான் அதிர்ஷ்டக்காரன்தான்.

“பேச்ச மாத்தாத” அழகிய சிந்தனையில் குறுக்கிட்டாள் தோழி.

“ஒழுங்கா உன் ஃபஸ்ட் லவ் ஸ்டோரிய இப்போ எனக்கு சொல்லு” என்றுச்சொல்லி பஜ்ஜியை கச்சக்.... என்று கடித்தாள்.

“ஆமா ஆமா... நானும் அந்த கத கேட்டு ரொம்ப நாள் ஆச்சி.... இன்னொரு வாட்டி சொல்லு கேப்போம்....” அவள் சொன்னாள்.

“அது கதையல்ல.... காவியம்....” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு மீண்டும் மேகத்தின் பக்கம் பார்க்கத் தொடங்கினான்.

ஒவ்வொரு ஆணுக்கும் தனது முதல் காதல் மிக முக்கியமானது. வெகு சிலருக்கே அது வாழ்நாள் முழுக்க தொடரும் பந்தமாக மாறுகிறது. மற்றவர்களுக்கு அது ஒரு சுகமான காயத்தின் தழும்பு போன்றது. ஒரு சிறு வித்தியாசம், காயம் ஆறியப்பிறகு தழும்பை பார்க்கும்போதெல்லாம் காயத்தின் காரணம் தெளிவாக நினைவிற்கு வருவதில்லை. ஆனால் காதல்...!

அவளுடன் பயணித்த ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் நொடியும்...! அவள் வாசனையும் அவளின் பேச்சும் அவளின் சிரிப்பும்...! அந்த பார்வை அந்த ஸ்பரிசம் அந்த ஸ்நேகம்...! எல்லாம் ஒரு வித தூய்மையானது. முதல் காதல், இச்சமூகத்தை மனதில் கொண்டு வராது, வாழ்வின் இன்ப துன்பங்களை மனதில் கொண்டு வராது. பணம் அந்தஸ்து போன்றவற்றை மனதில் கொண்டு வராது, காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துக்கொண்டு வராது. “காதல் ஒரு குருடு” என்பது முழுவதுமாக முதல் காதலுக்கே பொருந்தும். உலகினிலேயே மிகப்பெரிய அதிஷ்டசாலி முதல் காதலியை கைபிடித்தவன்.

தனது தோழி கேட்டக் கேள்விக்கு அவன் மனம் லேசாய் கனத்தது.  “சின்ன வயசுல இருந்து உன்கூட இருக்க ஃப்ரிண்ட்.... எனக்கு சொல்லல... நேத்து வந்தவ... அவளுக்கு மொத்த கதயும் தெரியுமா...?”. 


தொடரும்..!

தொடர்ந்து படிக்க - 5. என்னுடைய தோழி


முதல் காதல் -  அன்னக்கிளி

  1. சாவி வேண்டாம்

  2. அம்மாவின் ஆசை

  3. இதுதான் இயல்பா??

  4. தொடரும் அதிசயங்கள்

  5. என்னுடைய தோழி

  6. முதல் காதல்

  7. கிரீம் பண்

  8. மழைச் சாரல்



__________________________________________

இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!

படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments