முதல் காதல் அன்னக்கிளி - அம்மாவின் ஆசை

 முதல் காதல்

அன்னக்கிளி

அம்மாவின் ஆசை

“கண்டிப்பா மழை வரும் போல....”

“கண்டிப்பா வரும்.... உன் அம்மா என்னப்பத்தி பேசீருக்காங்க... மழைகூட வரலனா எப்புடி...?”

நாணத்தில் லேசாய் சிரித்தாள் அவள்.

“ஹே.... சொல்ல மறந்துட்டேன்.... அம்மா கால் பண்ணாங்க...”

“இப்போ அததான சொன்ன....?” என்று கேள்விக்கேட்டவன் ஏதோ ஞாபகம் வந்ததுபோல தலையசைத்து,

“ம்ம்ம்... என்ன சொன்னங்க...?” என்று கேட்டான்.

தனது தாயையும் அவள் அம்மா என்றுதான் அழைப்பாள் என்று ஞாபகப்படுத்திக்கொண்டான். காதலியாக மாறும் முன்பே அவள் அப்படிதான். நண்பர்களின் அம்மாவையும் அவள் அம்மா என்றே அழைப்பது வழக்கம். முதன்முதலில் இவளை பார்த்தபோதே அம்மாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப் போனால் இவள் மீது காதல் வருவதற்கான முக்கிய காரணம் அம்மா தான்.

“வாடா... எப்புடி இருக்க....? வேலையெல்லாம் எப்புடி போகுது...?”

சென்னையில் தங்கி வேலைசெய்யும் தனது மகன் மாசம் ஒருமுறை வீட்டிற்கு வரும்போதெல்லாம் அம்மா குஷியடைவாள். மாதம் முழுக்க நடந்த கதைகளை கேட்டு தெரிந்துக்கொள்வாள், தன் கதைகளையும் கொட்டித்தீர்ப்பாள். இம்முறை அவனை பற்றி மட்டும் அவள் விசாரிக்கவில்லை.

“அப்பறம் அந்த பொண்ணு எப்படி இருக்கா”

“எந்த பொண்ணு?”

“அதாண்டா... உன் வாட்சாப் டிபில ஒரு நாள் வச்சிருந்த, நா கூட என்ன ஏதுனு மெசேஜ் பண்ணேனே பாக்கலையா??”

“அதுசரி...! எங்க மெசேஜ் எல்லாம் நீங்க எங்க பாக்க போறீங்க.... இதோ இந்த பொண்ணுதான்.”

“அம்மா.... உனக்கு யாரு இத சேவ் பன்றதுக்குலா சொல்லிதந்தா??”

“நாங்களும் கத்துப்போம் தம்பி” நக்கலாய் அவனை ஒரு கொட்டு கொட்டினாள்.

“அந்த பொண்ணு கண்ணுக்கு எவ்ளோ இலட்சணமா இருக்கு...” அம்மா தொடர்ந்தாள்....

“அப்டியா...?”

“என்ன அப்புடியா...? நொப்புடியா...? கூட வேலை செய்ற பொண்ணுதான.... இந்த சைட்டு கியிட்டு அடிக்க மாட்டியா நீ...?” அவன் கொண்டு வந்த அழுக்கு துணிகளை பையில் இருந்து எடுத்துக்கொண்டே கேட்டாள்.

“அது சரி... எப்போவாது பொண்ணுங்க கூட இருந்தா வித்யாசம் தெரியும்... நீதா எப்போ பாத்தாலும் பொண்ணுங்க கூடயே சுத்துறியே உனக்கு எப்படி வித்தியாசம் தெரியும்....?” சொல்லிவிட்டு மகன் முகத்தை பார்த்தாள்.

“ஐயோ ஆத்தா.... போதும்....” இருக்கைகளையும் தலைமேல் கூப்பி....

“இத்தோட நிறுத்திக்கோ.... நீ இப்படியே சொல்லிட்டு இருந்தா உன் புள்ளைக்கு எவனும் பொண்ணு தரமாட்டான்.” 

“எவளையாவது இழுத்துட்டு வந்துடுடா....” டீ போட்டுக்கொண்டே சொன்னாள்.

“எம்மோவ்.....”

“எத்தன நாளைக்குதான் உன் மூஞ்சிய நானும் என் மூஞ்சிய நீயும் பாத்துட்டே இருக்றது....? நானாவது கொஞ்சம் அழகா இருக்கேன் ரொம்ப நேரம் கூட பாக்கலாம்... உனக்கு கவலை இல்ல... ஆனா என் நிலைமை...?” முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு பாவலா செய்தாள் அம்மா...

“நானும் ஒரு நல்ல மூஞ்சிய பாக்க வேண்டாமா...?”

அவனுக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் அவன் கொண்டுவந்த பைகளை சுத்தம் செய்ய தொடங்கினாள்.

“வேணுனா உனக்கு ஒரு மாப்ள பாக்றேன் கட்டிகிரியா??”

“எனக்கு ஒகே தான்.... என் அழகுக்கு ஏத்த மாதிரி இருந்தா கட்டிக்கிறேன்.... பாத்து சொல்லு....” என்று சொல்லி கண்சிமிட்டினாள் அம்மா.

இதற்கு மேல் பேசினாலும் அம்மா ஈடுகொடுப்பாள் என்று அவனுக்கு நன்கு தெரியும். தனிமையை போக்கிக்கொள்ள நகைசுவையை லாவகமாக கையாழுவாள் அம்மா. ஆனால் சமீபமாக அவள் கேலியெல்லாம் அவன் கல்யாணத்தை குறித்தே இருந்தது. இம்முறை கொஞ்சம் அதிகம்போய் இழுத்துகொண்டாவது வா என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது.

வாழ்வில் பெரிதாக சுமை ஏதும் இல்லை. கடன் இல்லை. நிறைவேற்றவேண்டிய கடமை என்று எதுவும் குறிப்பாய் இல்லை, அம்மாவை கவனிப்பது தவிர. உடன்பிறந்தவர்களும் இல்லை. உறவினர்களும் அதிகம் இல்லை. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம், இனியும் ஏன் தள்ளி போடவேண்டும்? அம்மாவின் விருப்பப்படியே பெண்பார்க்க சொல்லலாம் என்று முடிவு செய்தான்.

திங்கட்கிழமை மீண்டும் ஆபீஸ் செல்ல வேண்டும் என்ற களைப்போடே ஞாயிறு இரவு பேருந்து பிரயாணத்துக்கு புறப்பட்டான். புறப்படும் முன்னர் அம்மாவிடம் பெண் பார்க்க சம்மதம் சொல்லிவிட்டு செல்ல நினைத்தான்.

“சரிம்மா நா கெளம்புறேன்... உடம்ப பத்ரமா பாத்துக்கோ... எதுனாலும் கால் பண்ணு... பஸ் புடிச்சா டூ-ஹார்ஸ் டிராவல் தான்” என்று அன்போடு அம்மாவை அணைத்து கூறினான்.

“சரி சரி கெளம்பு காத்துவரட்டும்... சீரியல் டைம் ஆகுதுல” கண்களில் ஏக்கம் இருந்தும் வார்த்தைகளில் அது துளியும் வெளிவராமல் சொல்லி முடித்தாள்.

தாயின் மனம் அறிந்த அவன் “ரொம்ப நாள் இல்ல இந்த டிவி உனக்கு.... போட்டிக்கு ஒருத்திய சட்டுன்னு பாரு.... எனக்கும் வயசாகுதுல”

சொல்லிகொண்டே கெளம்பினான். அம்மா மனம் நிறைந்தவளாய் விடைகொடுத்தாள்.

தொடரும்..!

தொடர்ந்து படிக்க - 3. இதுதான் இயல்பா??


முதல் காதல் -  அன்னக்கிளி

  1. சாவி வேண்டாம்

  2. அம்மாவின் ஆசை

  3. இதுதான் இயல்பா??

  4. தொடரும் அதிசயங்கள்

  5. என்னுடைய தோழி

  6. முதல் காதல்

  7. கிரீம் பண்

  8. மழைச் சாரல்



__________________________________________

இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!

கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments