04. ஆகமக்
குடும்பங்கள்
விதிகள் என்பது
மனிதர்களால் தங்கள் தேவைகளுக்காக வரையறுக்கப்படுவது. தேவைகள் மாறும்பொழுது
விதிகளும் மாறும். அவ்வாறு மாறும்போதெல்லாம், வரலாற்றில்
அவ்விதிகள் பின்பற்றப்பட்ட பல இடங்கள் விவாதங்களுக்கு உள்ளாகும். சரி, தவறு என்ற கறுப்பு வெள்ளை நிறங்களாக மட்டுமே பார்க்கப்படும். இடையில்
இருக்கும் சாம்பல் நிறமே பல பதில்களை தன்னுள் கொண்டிருக்கும். ஆனாலும், அதை உணர மனம் மறுக்கும். பொய்களையே (தனக்கு சுகம்
தரும் உண்மைகளையே) மனம் விரும்பி ஏற்கும். மற்ற எந்த ஒரு விளக்கத்தையும் மறுதலிக்கும்.
காலப்போக்கில் இந்த பொய்யான உண்மைகளே, பரவலாக உண்மை என்று
நம்பப்படும். கலாச்சாரம் என்பது வெறும் சுவட்டிலும்,
நம்பிக்கை என்பது வெறும் வார்த்தையிலும், கட்டுப்பாடுகள்
என்பது வெறும் கடந்தகாலத்திலுமே இருக்கும்.
பண்டிகைகள்
போன்ற நாட்களில் அந்த கலாச்சாரம், நம்பிக்கை மற்றும்
கட்டுப்பாடுகள் எல்லாம் நினைவிற்கு வரும். ஒவ்வொரு ஊருக்கும், அவ்வூரின் மக்களுக்கும் ஏற்றாற்போல் இம்மூன்றும் மாறுபடும். நம்
இராவணபுரியும் அதற்கு விதிவிலக்கல்ல. காலங்கள் மாற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, பரவலாக இருந்த ‘ஒரே நம்பிக்கை’ என்பது மாறி, ‘தனி மனிதரின்
நம்பிக்கை’க்கு அதிக முக்கியத்துவம் கிட்டியது, அந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பங்களுக்கு என்று தனி தனி
கலாச்சாரங்கள் உண்டாயிற்று. பண்டிகை நாட்களில் அந்த கலாச்சாரங்களும்
கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, ஊருக்காக என்று ஒரு பொது
கலாச்சாரம் உருவாகும். அது தனி மனிதர்களிலும் குடும்பங்களிலும் பளிச்சென்று
பிரதிபலிக்கும்.
“சீக்கிரம் ரெடி ஆகுடீ... அண்ணி
எப்பவோ ரெடி ஆய்ட்டாங்க... நீ ஏன் இவ்ளோ லேட் பண்ற...?” பெருமாள் தன் மனைவி அம்சவள்ளியை துரிதப்படுத்தினான்.
“கொஞ்சம் பொறுங்க.. என்ன அவசரம்...
எத்தன வீட்டுக்கு போகனும்... அத்தனை பேர்கிட்டயும் சிரிச்சி பேசணும், திருவிழாவுக்கு கூப்டனும்... அதுக்கு நான் அழகா இருக்க
வேண்டாமா? அவங்க ரெடியான மாதிரி வேகமால்லாம் என்னால ஆக
முடியாது... அவ்ளோ அவசரம்ன்னா தனியா போங்க...” கடுகடு என்று அம்சவள்ளியின் பதில் வந்தது. அவள்
பதில் சொல்லி முடிக்கவும் அஞ்சலை அவர்கள் அறையின் வாசல் கதவை தட்டவும் சரியாக
இருந்தது.
“எத்தனை நேரம் டீ... இன்னும்
கிளம்பலையா...?”
“இதோ வந்துட்டேன் ...க்கா” அதுவரை ஆசுவாசமாக இருந்த
அம்சவள்ளி படபடத்தாள். கடைசியாக கண்ணாடி முன் தன்னை ஒருமுறை பார்த்து புடவையை
சரிசெய்துக்கொண்டு தடதடவென்று வாசலை நோக்கி ஓடினாள். தன்னைப்பார்த்து
கள்ளச்சிரிப்பு சிரித்த தன் கணவனை, பல்கடித்தபடி ‘வாங்க’ என்று சைகை செய்தாள்.
“அம்சமா இருக்க டீ...! போலாமா...? தம்பி எங்க..?”
“இதோ இருக்கேன் மதினி... போலாம்...
நான் தான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்..” சிரித்தபடி பெருமாள் தன் அண்ணியிடம் பொய் ஒன்று சொன்னான்.
“ஓஹோ...!” தனது மைத்துணனை அஞ்சலை மேலும் கீழுமாக நக்கல் பார்வை ஒன்று பார்த்தாள்.
“கிளம்பலாமா...?” தொண்டையை கனைத்தபடி கம்பீரமான குரல்
ஒன்று கேட்கவே, அனைவரும் ஒரு நொடி திகைத்து மீண்டும்
சகஜம் ஆனார்கள்.
“போலா..ங்க” அஞ்சலை தன் கணவன் அமுதனிடம் சொன்னாள்.
“எல்லாம் எடுத்துக்குடாச்சா?” அமுதன் கேட்க,
“எல்லாம் இருக்கு..ங்க” என்று சொல்லி, திருவிழா நோட்டீஸ் மற்றும் குங்குமச் சிமிழியை காட்டினாள்
அஞ்சலை.
“ம்ம்ம்...” என்று சொல்லிவிட்டு அமுதன் முன்னாள் நடக்க, அவர் பின்னாள் பெருமாள் சென்றான்,
அவர்கள் பின்னாள் அஞ்சலையும் அம்சவள்ளியும் சென்றார்கள்.
வீட்டில்
இருந்து ரோட்டில் இறங்கிய நால்வரும் வரிசையாக யார் யார் வீட்டுக்கு செல்வது என்று
அம்சவள்ளி வைத்திருந்த பட்டியளின்படி பாரி நகரில் உள்ள ஒவ்வொருவர்
வீட்டிற்கும் சென்று திருவிழா அழைப்பிதழை கொடுத்தும், பெண்களுக்கு குங்குமம் கொடுத்தும்,
சிவன் கோவில் மாரியம்மன் திருவிழாவிற்கு அழைத்தனர்.
இதே போன்று, இராவணபுரியின் மற்ற நகர்களான பாரதி நகர், பேகன் நகர், மலையமான் நகர், அதியமான் நகர், நள்ளி நகர், ஓரி நகர்
மற்றும் பஜார் ஆகிய பகுதிகளுக்கு திருவிழா
அழைப்பிற்கு செல்லும் பணியை, இராவணபுரியின்
ஆகமக் குடும்பங்கள் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர்.
“முடிஞ்சிதா...?”
வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் பாரி நகரில்
உள்ள அனைத்து வீடுகளுக்கும் திருவிழா அழைப்பிதழ்களை வழங்கிவிட்டு, களைப்பின் காரணமாக, பாரிநகர் பெரிய
அண்ணாச்சி கடையில் சோடா பருகியபடி அமுதன் தன் மனைவியிடம் கேட்டார்.
“எல்லாம் முடிஞ்சுது மாமா...!” அஞ்சலை சோடா பருகிக்கொண்டிருந்த காரணத்தினால்
அம்சவள்ளி பதில் சொன்னாள்.
“ஏப்பா... நம்ம வள்ளியும் அவ மகனும் காலைல தான்
ஊருக்கு வந்தாங்க... அவங்க வீட்ல சொல்லியாச்சா...? அவைங்களும் பாரிநகர்வாசி தானே...?” என்று அண்ணாச்சி ஞாபகப்படுத்த, வேண்டுமென்றே பட்டியலில் விட்டுவைத்த வள்ளியின் வீடு தான் கடைசி
வீடு என்று முடிவு செய்து நால்வரும் புரப்பட்டனர்.
“அவங்க வீட்டுக்கு கண்டிப்பா போகனுமா?” அண்ணாச்சி கடையில் இருந்து
வள்ளியின் வீட்டிற்கு வரும் வழியில், அஞ்சலையின் காதில்
அம்சவள்ளி கிசுகிசுத்தாள்.
“முறை... வழக்கம்... போயிதான் ஆகனும்...” சிரித்த முகத்தோடு
பற்களைகடித்தபடி சலிப்பு வார்தைகள் அஞ்சலையிடம் இருந்து வந்தது.
இரண்டு தம்பதிகளும் வள்ளியின்
வீட்டு வாசலில் நின்றார்கள். கதவை தட்டுவதற்கு சிறிது தயக்கத்துடன் அமுதன்
நின்றான். அதை கவனித்த பெருமாள்,
“நீங்க வேண்டாம்ன்னு நெனச்சா வேண்டாம்...ண்ணா
கிளம்பலாம்...!” என்று சொன்னான்.
“அது எப்படி முறையாகும்... வழக்கத்தை மாத்துர மாதிரி
ஆகாதா...?” அம்சா குரல் கொடுத்தாள். அனைவர் முகத்திலும் கோபம் தெரிந்தது. அதை கவனித்த
அம்சா அவளே மீண்டும் பேசினாள்.
“இல்ல...க்கா அண்ணாச்சி சொல்லித்தான வந்தோம்... நாளைக்கு
வள்ளி அக்கா அவர் கடைக்கு போறப்போ அந்த ஆளு எதும் உளறிட்டாண்ணா என்ன பன்றது? அதான் இவ்ளோ தூரம் வந்துட்டோமே...” என்று பேசிக்கொண்டே போனவளை பெருமாள் கண்காட்டி அமைதி
படுத்திவிட்டு,
“என்ன...ண்ணா?” என்று அமுதனை பார்த்து கேட்டான்.
“கதவ தட்டு... அவ உள்ள கூப்டா போவோம்...” என்று அமுதன் விரக்தியாக
சொன்னான்.
சிரித்த முகத்தோடு பெருமாள் வள்ளியின் வீட்டு
வெளி கதவை தட்ட, சில நொடிகளில் வீட்டின் வாசல் கதவு
திறக்கப்பட்டு, உள்ளிருந்து வள்ளி வெளியே வந்து யார் என்று
பார்த்தாள். நால்வரையும் கண்டு புன்னகை செய்தபடி வெளிக்கதவை நோக்கி விரைந்து
வந்தாள் .
“வாங்க வாங்க... பெரிய மருமக குடும்பமா... எப்படி..ண்ணே
இருக்கீங்க...? பெருமாள் தம்பி.. வாங்க வாங்க...
நல்லா இருக்கீங்களா? நீயும் வா...ம்மா... வீட்ல எல்லாம்
நல்லா இருக்காங்களா...?” என்று வாய் நிறைய வரவேற்றபடி நால்வரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
“என்னங்க...! வரவேற்பு எல்லாம்
பலமா இருக்கு...?” அம்சா தன் கணவன் காதில் மட்டும் விழும்படி பேசினாள்.
“அம்மா தாயே... இதுதான் கடைசி வீடு... இங்க மட்டும் வாய
தொறந்து எதும் பேசாம இருந்தா உனக்கு நான் நூத்தியெட்டு தேங்கா ஒடைக்குறேன் மா...
அமைதியா இரு பிளீஸ்...” கையெடுத்து கும்பிடுவதுபோல பெருமாள் அம்சாவை கிண்டல் செய்தான்.
~‘வவ்வவ்வவ்வே’ என்று ஒழுங்கு செய்துக்கொண்டு அவன்
பின்னாலேயே வள்ளியின் வீட்டில் நுழைந்தாள்.
ஹாலில் அனைவரும் அமர நாற்காலிகள்
போட்டுவிட்டு தண்ணீர் கொடுத்துவிட்டு, வள்ளி, தானும் அவர்களோடு அமர்ந்தாள். அமுதனும் அஞ்சலையும் வீட்டை சுற்றும்
முற்றும் பார்ப்பதை கவனித்த வள்ளி,
“இன்னிக்கு காலைல தான் அஞ்சல வந்தோம்... அதனால தான் வீடு
இந்த கோலத்துல இருக்கு.. இனிமேல்தான் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்...” என்று சிரித்த முகத்தோடு சொல்ல, ‘அஞ்சல’ என்று
பெயர் கேட்டதும் பெருமாள் தவிற மற்ற மூவரின் முகமும் லேசாக ஆச்சரியத்தில் ஆழ்ந்து
மீண்டும் நிதானமானதை வள்ளி கவனிக்கவே செய்தாள்.
“இருக்கட்டும் இருக்கட்டும் வள்ளி… திருவிழா அழைப்புக்குதான்
வந்தோம்... மறக்காம வந்துடுங்க... நீயும் உன் மகனும்தான? மருமக இருக்காளா? பையனுக்கு கல்யாண
வயசுன்னு அண்ணி சொன்னா...” என்று சொல்லி வள்ளியின் முகத்தை அமுதன் கவனித்தான்.
தன் மனைவியை பெயர் சொல்லி அழைக்க வேண்டாம்
என்று சொல்வதுபோல அந்த பேச்சின் தோரணை இருந்தது. அதை வள்ளியும் நன்கு
புரிந்தேகொண்டாள். ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
“இன்னும் கல்யாணம் ஆகல...ண்ணே... ஆயிருந்தா திருவிழா
அழைப்புக்கு நம்ம பாரிநகருக்கு அவனையும் அவன் பொண்டாட்டியையும் அனுப்பிருப்பனே...
உங்களுக்கு எதுக்கு இந்த கஷ்டம் எல்லாம்...! முன்னாடி எல்லாம் நானும் அவரும்தான
அழைப்புக்கு போவோம்...” என்று சொல்லி அனைவரின் முகங்களையும் உற்று நோக்கினாள் வள்ளி. சிரித்த
முகத்தோடே அனைவரும் அமர்ந்திருந்தனர். திருவிழா வரவேற்பு அழைப்பிதழ் வழங்கும்
பணியில் மட்டும் இப்போது கவனம் செலுத்துவோம் என்ற எண்ணம் அனைவர் மனதிலும்
ஓடிக்கொண்டிருந்தது. சிறிய அமைதிக்கு பிறகு,
“இந்தாங்க...க்கா நம்ம நோட்டீஸ்...” என்று சொல்லி அந்த அமைதியை கலைத்து, பெருமாள், சிவன் கோவில் மாரியம்மன்
திருவிழா நோட்டீஸை வள்ளியிடம் நீட்டினான்.
வள்ளி அதை வாங்கிக்கொண்டாள். தன் இருக்கையில்
இருந்து எழுந்து பூஜை அறையில் நுழைந்தாள். சாமி படம் அருகில் அந்த நோட்டீஸை
வைத்துவிட்டு கண்களை மூடி சில நொடிகள் அங்கேயே நின்றாள்.
“அஞ்சல... கொஞ்சம் இங்க வாயேன்...” என்று அழைத்து பூஜை அறையிலிருந்து குங்குமம் எடுத்து
வைத்துக்கொள்ளும்படி சொன்னாள். அம்சவள்ளிக்கும் கொடுக்கும்படி கண்காட்டினாள்.
இருவரும் குங்குமம் எடுத்துக்கொண்டனர்.
நேராக சமையலறை உள்ளே சென்று ஃபிரிஜில்
இருந்து பூ எடுத்துவந்து அஞ்சலைக்கும் அம்சாவிற்கும் கொடுத்தாள். இருவரும் வாங்கி
தலையில் வைத்துக்கொண்டனர்.
“என்ன...க்கா பூ நல்லா ஃபிரெஷா நிறையா இருக்கு... நாங்க
வருவோம்ன்னு தெறிஞ்சிதான் வாங்கி வச்சிங்க போல...?” என்று வெகுளியாக கேட்பதுபோல கேட்டுவிட்டு
பல்காட்டினாள் அம்சா. வள்ளி தவிற மற்ற அனைவர் முகமும் கடுகடுவென்று மாறியது.
“ஆமா சின்ன மருமகளே... பறை சத்தம் கேட்ட ஒடனே பூ வாங்கி வச்சிட்டேன்...
எப்படியும் இன்னிக்கே அழைப்பு நடக்கும்னு தெரியும்... அதான இப்போ நம்ம வழக்கம்… முறை... எல்லாம். முன்ன எல்லாம் ஒரு வாரம் அழைப்பு
நடக்கும்... இப்போ காலம் மாறிபோச்சு... முறையும் மாறிபோச்சு....” அதே வெகுளி சிரிப்போடு அவள்
தொனியிலேயே வள்ளி பதில் சொன்னாள்.
அதற்கு மேலே அங்கு அமர யாருக்கும் விருப்பம்
இல்லை. அமுதன் வேகமாக எழுந்து கைகூப்பி சென்று வருவதாக சொல்லி நகர, அனைவரும் பின்தொடர்ந்தார்கள். வள்ளியும் வாசல் வரை வழியனுப்ப
வந்தாள். அதே நேரத்தில் வள்ளியின் வீட்டு வெளி கதவை ஒரு வாலிபன் திறந்துக்கொண்டிருந்தான்.
அதை பார்த்த அமுதன் வள்ளியை திரும்பி பார்த்து,
“பையனா?” என்று கேட்க. ‘ஆம்’ என்று வள்ளி தலை அசைத்தாள்.
“நல்லது நல்லது... அவங்கல்லாம் உன் ஃபிரண்ட்ஸா
ப்பா?” மீண்டும் அமுதன் கேட்க. ‘ஆம்’ என்று ஆதித்யா தலை அசைக்க,
“நல்லது ம்மா.. அப்போ நாங்க
கிளம்புறோம்...” என்று வள்ளியை வணங்கி அமுதன், அஞ்சலை, அம்சவள்ளி மற்றும் பெருமாள், அங்கு இருந்து
நகர்ந்தார்கள்.
அவர்கள் செல்வதை
வள்ளி சில நொடிகள் பார்த்துவிட்டு வீட்டினுள்ளே சென்றாள்.
“யாரு...ம்மா...?” என்று கேட்டபடி வள்ளியின்
பின்னால் ஆதித்யா வீட்டினுள் நுழைந்தான். அவனை தொடர்ந்து
அவன் நண்பர்களும் புது தொலைக்காட்சியோடு உள்ளே வந்தனர்.
ஆதித்யாவின்
நண்பர்கள் சென்ற பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு ஆதித்யாயும் வள்ளியும் இருவரின்
அறைகளையும் அவர்களுக்கு ஏற்றாற்போல சில மாற்றங்களை செய்ய தொடங்கினர். தனிமையில்
அமர்ந்ததும் வள்ளி மீண்டும் பழைய நினைவுகளை அசைபோட தொடங்கினாள்.
“இந்த ஊர்ல ஏன் எல்லாம் இவ்ளோ
ஃபார்மாலிட்டீஸ் பண்றாங்க?”
புதிதாக
திருமணம் ஆகிவந்த பதினாறு வயது அஞ்சலை, இராவணபுரியின்
சிவன் கோவில் மாரியம்மன் திருவிழாவிற்கு, தன் கணவனின்
குடும்பத்தை அழைக்க வந்தவர்கள், இவர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதையும், மஞ்சள் குங்குமம் கொடுத்து தாலியில் இட்டுக்கொள்ள சொல்வதையும், பெரியவர்கள் என்று சொல்லி அவர்கள் காலில் விழுந்து வணங்கும்படி தன்
கணவரின் வீட்டோர் சொல்லியதையும் பார்த்து பதினான்கு வயது வள்ளியிடம் “இந்த ஊர்ல ஏன் எல்லாம் இவ்ளோ
ஃபார்மாலிட்டீஸ் பண்றாங்க?” என்று கேட்டாள்.
இராவணபுரியில்
பல வருடங்கள் கழித்து நடந்த திருமணம் அமுதனுடையது. அமுதனுக்கு அப்போது இருபது
வயது. பெரும் செல்வந்தராகவே அமுதன் குடும்பம் இருந்தபடியாலும், அரசியல் ஈடுபாடு கொண்ட குடும்பம் என்பதாலும், விமர்சியாகவே அமுதனுக்கும் அஞ்சலைக்கும் திருமணம் நடைபெற்றது.
மணப்பெண்ணின் தோழியாக கல்யாணம் முழுக்க அஞ்சலையுடன் துணைக்கு இருந்தது வள்ளிதான். ‘இராவணபுரியின் வாயாடி என்றால் வள்ளிதான்’ என்று
பெயர் வாங்கியவள். அஞ்சலை, வெளியூர் பெண்ணாக இருப்பதனால்
இராவணபுரியின் பழக்கவழக்கங்களை தெரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று அவர்கள்
நட்பினை அனைவரும் ஆதரிக்கவே செய்தனர்.
“இங்க எல்லாம் அப்படிதான்...க்கா...
உங்க ஊர்ல பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குர பழக்கம்லாம் இல்லையோ..?” என்று நக்கலாக வள்ளி கேள்வி
கேட்டாள். அந்த நக்கலுக்கு காரணம், எது நடந்தாலும் ‘என்ன உங்க ஊர்ல இப்படிலாம் பண்றாங்க...?’ என்று ஏளனமாக அடிக்கடி அஞ்சலை
கேட்பதனால் வந்தது.
“ஏய் வாயாடி... எத்தனவாட்டி
சொல்லிற்கேன், அக்கான்னு கூப்டாத... பெயர் சொல்லியே
கூப்டுன்னு...” என்று சொல்லி வள்ளியின் காதை பிடித்து இழுத்தாள்.
“ஆஆஆ.... வலிக்கிது அஞ்சல... காத
விடு...”
“ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்”
“நானும் எத்தன வாட்டி சொலிற்கேன்
இது ‘எங்க ஊர்’ இல்ல ‘நம்ம ஊரு’ன்னு... நீ மட்டும் மாத்திக்கவே மாட்ற...”
“கொஞ்சம் பொறுடியெம்மா... கல்யாணம்
முடிஞ்சி ஆறுமாசம் தான ஆச்சு... அதுக்குள்ள எப்படி ஊரையே உறவு கொண்டாட முடியும்...? கொஞ்சம் டைம்
எடுக்கும்...” அலட்டலாக அஞ்சலையின் பதில் வந்தது.
“ஆறு மாசத்துல ஊரை உறவு கொண்டாட
முடியாது.. ஆனா இங்க எத்தன மாசத்துல முடிஞ்சிது...?” கிசுகிசுத்த குரலில் அஞ்சலையின் வயிற்றை காட்டி
வள்ளி கேள்வி கேட்டுவிட்டு கள்ளச்சிரிப்பு ஒன்று சிரித்தாள்.
“ஏய்... வயசுக்கு ஏத்த மாதிரியாடி
பேசுற...? என் மாமியார விட மோசம்டி நீ...
கொஞ்சம் அமைதியா இரு... அந்த பையன் பாரு உன்னையே உத்து பாக்குறான்.” பேச்சை திசைதிருப்ப மட்டுமல்லாமல், உண்மையிலேயே கள்ளத்தனமாக, சின்னா
வள்ளியை அவ்வபோது பார்ப்பதை கவனித்த அஞ்சலை அவனை பார்க்கும்படி கண் காட்டினாள்.
“ம்ம்ம்... இன்னிக்கு நேத்து இல்ல
அஞ்சல... இது ரொம்ப நாளா நடக்குது...” திருவிழா அழைப்பிதழ் கொடுக்க வந்த தனது பெற்றோர்கள்
பின்னால் நின்ற சின்னாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அஞ்சலையிடம் திரும்பி, நிதானமாக வள்ளி பதில் சொன்னாள்.
வள்ளி தன்னை
பார்த்த அந்த ஒரு நொடியில் சின்னாவிற்கு ஏதேதோ செய்தது. சின்னாவும் அமுதனும் சிறு
வயதுமுதல் நண்பர்கள். அமுதனின் கல்யாணத்தில் இழுத்துபோட்டுக்கொண்டு வேலைகளை செய்த
நண்பர்களின் பட்டாளத்தில் சின்னாவும் ஒருவன். அந்த கூட்டத்தின் முகங்கள் எதுவும்
அஞ்சலைக்கு நினைவில் இல்லை. கல்யாணம் முடிந்த பிறகு அவர்கள் யாரும் வீட்டு பக்கம்
அதிகம் வருவதில்லை. ஆனால் கல்யாணத்தின்போது மாப்பிள்ளையோடே இருந்த முகம் இதுதான் என்பதை
சட்டென்று நினைவுக்கு கொண்டுவந்து, ‘இது ரொம்ப நாளா நடக்குது’ என்று வள்ளி சொன்னதோடு
ஒப்பிட்டு,
“அடியே... எங்க கல்யாணத்துல
இருந்தா..?” என்று உணர்ச்சிவசப்பட்டு அஞ்சலை கூச்சலிட்டபடி கேட்டாள்.
ஒரு நிமிடம்
அனைவரும் அந்த இரண்டு பெண்மணிகளை திரும்பி பார்க்க, பதறிப்போன வள்ளியும் அஞ்சலையும் என்ன செய்வது என்று தெரியாமல்
திருதிருவென்று விழித்தார்கள். முதலில் தெளிவுக்கு வந்த வள்ளி, அஞ்சலையை இழுத்துக்கொண்டு கொல்லைபுரம் சென்றாள்.
“ஏய்... ஏன் அப்படி கத்துன? இந்த விஷயம்லா வெளிய தெரிஞ்சா கால ஒடச்சி அடுப்பு
எரிச்சிடுவாங்க எங்க வீட்ல...” பயந்த தொனியில் கண்களை உருட்டி உருட்டி அஞ்சலையிடம் வள்ளி
சொல்ல,
“ஐயோ சாரி...டீ... கொஞ்சம்
உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...” என்று மனவருத்தத்துடனும், இந்த ஊரில்
தனக்கிருக்கும் ஒரே தோழியும் இல்லாமல் போய்விடுவாளோ என்ற பயத்திலும் அஞ்சலை
பேசினாள்.
அந்த பயத்தில்
அவள் கொல்லைபுரத்தில் அமர்ந்திருக்க, வள்ளி முற்றத்தின்
வாசல் வழியே ஹாலில் நடப்பதை எட்டிப்பார்த்தாள். சின்னா மற்றும் அவன் பெற்றோர்கள்
வந்த வேலையை முடித்துவிட்டு அமுதனின் தந்தையிடம் விடைபெற்று சென்றார்கள்.
“என்ன...டி பாக்குற...? கிளம்பிட்டாங்களா...? எதுக்கு அவங்க
இங்க வந்தாங்க...? உங்க ஊரோட ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஏன்
இப்படி வச்சிருக்கீங்க...?”
மீண்டும் ‘உங்க ஊரு’ என்று அஞ்சலை சொல்வதை கேட்ட
வள்ளிக்கு பெரும் கோபம் கிளம்பியது.
“இங்க பாரும்மா பெரிய மருமகளே...
இந்த ஊரு அப்படிதான்... எங்க ஊரு அப்படிதான்... எங்க இராவணபுரி உருவாகி மொத்தம்
நூறு வருஷம் கூட ஆகல. ஆனா இங்க இருக்க பழக்க வழக்கம் கலாச்சாரம் எல்லாம், நீ நல்ல நாகரீகமா இருக்க ஊருன்னு படிச்ச மத்த ஊரவிடவும், பலமடங்கு உசந்தது. அவ்ளோ முன்னேற்றம். இங்க இருக்க ஒவ்வொரு குடும்பமும்
ஒவ்வொரு ஒழுக்கத்த ஃபாலோ பண்றாங்க... ஆனா ஊருன்னு வந்துட்டா ஊரோட மொத்த
ஒழுக்கம்ன்னு ஒண்ணு இருக்கு... அததான் நாங்க ஃபாலோ பண்ணுவோம்.
அந்த ஒழுக்கம், வழிமுறை, வாழ்க்கைமுறை, கலாச்சாரம் இதையெல்லாம் நாலு தலைமுறைக்கு முன்ன, பல
பரிசீலனைகளுக்கு அப்பறம் ‘இராவணபுரி ஆகாமக் குடும்பங்கள்’ன்னு சொல்லப்படுற ஒரு ஏழு குடும்பங்கள் தான் முடிவுபண்ணுச்சி.
என்ன சைட்
அடிச்ச அந்த பையன் ஆதித்யனார் குடும்பம். பாரி நகருக்கு
அவரோட குடும்பம் தான் இன்சார்ஜ். திருவிழா நல்லபடியா நடக்க என்னலாம் மக்கள்
செய்யனுமோ அதையெல்லாம் இந்த நகர் சார்பா முன்ன நின்னு அவங்க குடும்பம் தான்
செய்யும்.
இதே மாதிரி இராவணபுரிய
ஏழு பிரிவா பிரிச்சி ஒவ்வொரு ஏரியாக்கும் ஒவ்வொரு ஆகாமக் குடும்பம் பொறுப்பு
ஏத்துக்கணும்னு முடிவு பண்ணாங்க. அதனால தான் எங்க ஊர்ல... இவ்ளோ ஃபார்மாலிட்டீஸ்.
இப்போ நீயும்
அதே ஊர்தான்... அதுவும் சும்மா இல்லடிம்மா... நீ பெரிய மருமக...
அதுவாச்சும் தெரியுதா உனக்கு...?”
மூச்சு வாங்க
பேசிய வள்ளி ஒரு கேள்வியுடன் அந்த சொற்பொழிவை முடித்தாள். அனைத்தையும் கேட்ட
அஞ்சலை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள். கோவப்படுவதில் தான்
ஒன்றும் வள்ளிக்கு சளைத்தவள் இல்லை என்பது அஞ்சலைக்கு தெரியும். ஆனால் அப்போது
வள்ளியின் கோபம் உச்சத்தில் இருப்பதை நன்கு உணர்ந்த அஞ்சலை, கோபத்தை காட்டுவதை விட சாமர்த்தியத்தை காட்டுவதே சிறந்தது
என்று உணர்ந்தாள்.
“உங்க ஊருக்... சாரி சாரி... நம்ம
ஊருக்கு இவ்ளோ பெரிய பின்கதை இருக்கா...? ம்ம்ம்... நீ கூட
இருக்றதுனால இது எல்லாம் கேட்டுக்க முடியுது வள்ளி... நீ இல்லனா ரொம்ப கஷ்டம்டி...” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு
அஞ்சலை பேசினாள்.
வள்ளிக்கு சிறிது மூச்சு அடங்கியது. சிறிய அமைதிக்கு பிறகு மீண்டும் அஞ்சலையே
பேசத்தொடங்கினாள்.
“இப்போ என்ன வள்ளி பண்றது..? உங்க வீட்ல பிரச்சனை ஆகுமா..? நம்ம
இந்தப்பக்கம் வந்த அப்றம் நம்மள பத்தி என்ன பேசுனாங்களோ தெரியலையே...” அதே பாவமான தொனியில் அவள் பேச,
“ஹான்ன்... என்ன பேசிருக்க
போறாங்க... ‘இந்த காலத்து பொட்டப்புள்ளைங்களே
இப்படிதான்’ன்னு உன் மாமனார் சொல்லிருப்பாரு... ‘விடுங்க போகட்டும் புது பொண்ணுல்ல போக போக ஊர் சமாச்சாரம் புரிஞ்சி
நடந்துக்குவா’ன்னு என் மாமனார் சொல்லிருப்பாரு...” என்று எதார்த்தமாய் சொல்லியபடி
அஞ்சலையின் அருகில் வந்து வள்ளி அமர்ந்தாள்.
“அதுவும் சரிதான்...” என்று சொல்லிய அஞ்சலை, வள்ளி சொல்லியதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள இரண்டு வினாடிகள்
எடுத்துக்கொண்டாள். புரிந்துக்கொண்ட மறுநொடி, “ஏய் ஃப்ராடு...” என்று கூச்சலிட…. ‘ஷ்ஷ்ஷ்...’ என்று அவள் வாயை வள்ளி
பொத்தினாள். சுற்றும் முற்றும் இருவரும் பார்த்தனர். அமைதியாக அங்கேயே அமர்ந்தனர்.
“ம்ம்ம்... ‘பெரிய மருமக...’ நல்லா இருக்கே
சொல்லிப்பாக்கவே...” என்று அஞ்சலை மெல்லிய குரலில் சொல்ல, இருவரும் ஒருவர்
முகம் ஒருவர் பார்த்து மெல்லிதாக சிரிக்கத் தொடங்கி ஒருவர் தோளில் ஒருவர்
சாய்ந்தபடி பல நிமிடங்கள் சிரித்தார்கள்.
அந்த ஆண்டு
சிவன் கோவில் மாரியம்மன் திருவிழாவில் நடந்த சம்பவங்கள் மட்டும் நடவாமல்
இருந்திருந்தால், அஞ்சலையுடனான அந்த நட்பு இன்றுவரை
நீண்டிருந்திருக்கும். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சின்னாவும், வள்ளியும், பத்து வயது ஆதித்யாவும் இராவணபுரியைவிட்டு
சென்றிருக்கவே மாட்டார்கள். ‘விதி யாரை விட்டது...?’ என்ற சளிப்போடு அத்தனை நினைவுகளையும் தன் அறையில் அமர்ந்தபடி
எண்ணிப்பார்த்தாள் வள்ளி.
தன் குடும்பத்தின் இன்றைய நிலைமையையும், அமுதன் குடும்பம் வீட்டுக்கு வந்திருந்தபோது இருந்த சூழலையும், நடந்த வார்த்தை பரிமாற்றத்தையும் நினைத்தபடி தனது சூட்-கேஸில்
துணிகளுக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த குறுவாள் ஒன்றை எடுத்து தனது படுக்கைக்கு
கீழே படுக்கையில் இருந்தபடியே எளிதில் எடுக்கும் வாட்டத்தில் சொருகி வைத்தாள்.
மற்ற
பொருட்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு, அரிவாள் ஒன்றை வீடு தலை வாசலுக்கு நேராக மேலே, உள்ளிருந்தே உருவும் வாட்டத்தில் கைக்கு எளிதில் எட்டும் உயரத்தில், ஆணியில் மாட்டிக்கொண்டிருந்தாள்.
“இது என்னம்மா... எதும் பிரச்சனை
வந்தா ஆளை போட்டு தள்ளவா...?” என்று அவள் பின்னால் இருந்தபடி ஆதித்யா நக்கலாக கேட்டான்.
“ஆமா டா... நானும் உங்க அப்பாவும்
ஊரு முழுக்க வம்பு வளத்து வச்சிருக்கோம்... அதுல எவனாச்சும் வீட்டு பக்கம் வந்தா
போட்டு தள்ளத்தான்...”
“ஸூப்பர் மா... விஷ்வா வந்தா மொத
டெட் பாடி அவன் தான்...” என்று சொல்லி சிரித்துவிட்டு சமையலறையில் புகுந்து தனது தண்ணீர் பாட்டிலை நிறப்பிக்கொண்டு
மீண்டும் தன் அறைக்குள் புகுந்தான். வள்ளியும் தனது அறைக்குள் புகுந்து மற்ற
பொருட்களை எடுத்துவைக்க தொடங்கினாள்.
“என்னா திமிரு அந்த பொம்பளைக்கு...!
அக்காவையே பேர் சொல்லி கூப்டுது... அவங்க புள்ளைய அழைப்புக்கு அனுப்புமாம்ல...
யாரோட இடத்துக்கு யார் ஆசப்பட்றது...? நீங்களும்
கேட்டுட்டு அமைதியா அங்க இருந்து வந்துட்டீங்க...? பதிலுக்கு
நாலு கேள்வி என்னா ஏதுன்னு கேட்ருக்கலாம்ல..க்கா...?” வள்ளியின் வீட்டிலிருந்து புறப்பட்டு அந்த தெருவை
தாண்டியதும் அம்சா பொரிந்தாள்.
அவள் கேள்வி
எதற்கும் அங்கு யாரும் பதில் சொல்லவில்லை. “அக்கா...?” என்று அவள் அஞ்சலையின் அருகில் சென்று அழுத்தம் கொடுத்து கேட்கவே, பெருமாள் அவளை அவன் அருகில் இழுத்து,
“நீங்க போங்க மதினி, நான் பாத்துக்குறேன்” என்று சொல்லி அஞ்சலையை காப்பாற்றினான். ஒப்புக்கு
சிரித்துவிட்டு, விருவிருவென்று நடந்து செல்லும் தன்
கணவன் அமுதனை பின்தொடர்ந்து அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து வீட்டை நோக்கி நடந்தாள்
அஞ்சலை.
“வரலாறு தெரியாம கண்டபடி வாய்
விடாத... அமைதியா வீடு வரைக்கும் வர முடியாதா உன்னால...?” கண்களில் கோபம் தெறிக்க, ஆனால் குரலில் அதை
வெளிக்காட்டாமல் பெருமாள் பேசினான்.
இரண்டு
குடும்பங்களுக்கும் ஆகாது என்பது அம்சாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவன்
சொல்வதுபோல இந்த வீட்டில் தனக்கு தெரியாத மர்ம வரலாறு ஒன்று உள்ளது என்பதை உணர்ந்த
அம்சவள்ளி அதை எப்படி கண்டுபிடிப்பது என்ற சிந்தனையில் மூழ்கியபடியே வீடு நோக்கி
நடந்தாள்.
பயணம் தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 05
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
__________________________________________
Comments
Post a Comment