03.
என்னை தெரியுதா..?
காலை பொழுது
கணேசன் தாத்தா மற்றும் சித்ரா பாட்டியுடன் நன்றாகவே தொடங்கியது யாழினிக்கு.
போகப்போக தினம்தோறும் வரும் கூட்டம் வந்து சென்றவாறு இருந்தது. ஒரு வருடம்
முன்னாள் வரைக்கும் மதுமிதா டீ ஸ்டாலை அன்பு கவனித்துக்கொண்டிருக்க, யாழினி அவ்வபோது வந்து உதவி செய்வது வழக்கம். அப்போது ஐஸ்
கிரீம் விற்பனை கிடையாது. டீ போடும் மேடைபோக, மீதம் இருந்த
இடத்தில் சில பிளாஸ்டிக் சேர்கள் இருக்கும். சிகரெட் பிரியர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட
இடமாக அது இருந்தது. சில நாள் இரவுகளில் மதுபிரியர்களுக்கும் அந்த இடம் வசதியாக
இருக்கும். அழகியின் மர்மமான மறைவின் பிறகு கடை திறப்பதையே கைவிட்டுவிட்ட அன்பு, பெரும்பாலும் குடிப்பதிலேயே பணத்தை செலவிட்டு வீட்டு பொருட்களை விற்கும்
நிலைக்கு வந்த நிலையில் யாழினி தானே வந்து கடையை திறந்தாள். ஒரே ஊரில் பிறந்து
வளர்ந்த காரணத்தினால் அவளுக்கு பலதரப்பட்ட இடங்களில் இருந்து உதவி வந்தது.
“அண்ணா... பாலுக்கு காசு சாய்ங்காலம்
தரட்டுமா? இப்போ தான் கடை தெறக்றேன்... தப்பா
எடுத்துக்காதீங்க...”
“நல்லா சொன்ன போ…ம்மா… நான் வார கடைசில வந்து
வாங்கிக்கிறேன்... நீ ஆகுரத பாரு..” என்று பால்காரர் சொல்லி சிரித்தபடி நகர்ந்து சென்றார்.
மற்ற
பொருட்களும் ஒவ்வொன்றாக கடனுக்கு கிடைத்தது. ஒரு நாள் கூட
தவறாது பணம் தரும் நாளில் சரியாக பணம் கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களோடு வியாபாரம்
செய்ய எந்த வியாபாரிக்கும் கசக்காது. அதுவும் புத்தி கூர்மையுடைய, வியாபாரம் கற்கும் ஆர்வமும் துணிவும் மிகுந்த வெறும் இருபத்தி மூன்று
வயதான யுவதியுடன் தங்குதடையின்றி வியாபாரம் செய்ய இராவணபுரி வியாபாரிகளுக்கு எளிதாகவே
இருந்தது. ஆரம்பத்தில் பரிதாபப்பட்டு உதவியாக செய்தார்கள் ஆனாலும், வெறும் மூன்று மாதத்தில் யாழினியின் தொழில் செய்யும் முறை அவர்களுக்கு
பிடித்துப்போயிற்று. தினம் தினம் தவறாமல் ஆறரை மணிக்கு கடை திறக்கப்பட்டது.
சிகரெட் விற்பனைக்குமல்ல, அங்கு பிடித்து ஊதவும் அனுமதி
இல்லை என்று அறிவிக்கப்பட்டது. வெறும் டீ, காஃபி, ராகி, சுக்கு பால் மட்டுமின்றி, ஃப்லேவர்ட் டீகளும் சேர்த்து விற்க ஆரம்பித்தாள். மீதம் இருக்கும் இடத்தை
என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நண்பன் ஒருவன்
யோசனையின்படி, ஐஸ் கிரீம் நிறுவனம் ஒன்றை அணுகி அவர்கள்
இடத்தை பற்றி சொல்லி, புகைப்படங்கள் காட்டி அவர்களுக்கு
எல்லாம் சம்மதம் என்றபின் ஒப்பந்தம் பேசி முடித்தனர். அவர்களே ஃப்ரீஸர் மற்றும்
ஆரம்பத்தில் சிறிதளவு சரக்குகளும் கொடுத்தனர். விளம்பரத்துக்கு சராசரி பதாகைகளும், மின்விளக்கு பொருத்தப்பட்ட பதாகைகளும் கொடுத்தனர்.
“டேபிள் சேர்லாம் போட்டா இன்னும்
வசதியா இருக்கும்ல...?” பாத்திரக்கடைக்காரர் ஒருவர் யோசனை சொல்லி, அவர் கடைகளில் சில மரச்சாமான்களும் இருப்பதாகவும், அதை பாதி விலைக்கு தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.
“மொதல்ல மூணு டேபிள் போட்டு
பாப்போம் யாழினி... என்ன சொல்ற...?” நண்பன் விமல் கேட்டான்.
“ஒண்ணு போட்டு பாக்கலாம்... அப்பறம்
வேணும்னா பணம் சேத்துவச்சி வாங்கிக்கலாம்..” தயக்கத்துடன் யாழினி சொன்னாள்.
“நீ நெனைக்குற நேரத்துல எல்லாம்
அவரு பாதி விலைக்கு தர மாட்டாறு மேடம்... கெடைக்குறப்போ வாங்கி போடு” விமல் திட்டவட்டமாக சொல்ல, யாழினிக்கும் அதுவே சரி என்று பட்டது.
எல்லாம்
செய்தபிறகும், கடைக்குள் அமர்ந்து உண்ண யாரும்
விரும்பவில்லை. காரணம், இடத்தில் மாற்றம் வந்த போதிலும் அது
மக்களின் மனதில் புகை ஊதும் இடமாகவே பதிந்திருந்தது. அதை மாற்ற என்ன செய்வது என்று
யோசித்து, கடைக்கும் சாலைக்கும் நடுவில் இருக்கும்
இடைவெளியில் பிளாஸ்டிக் கூரைகள் போட்டு, புதிதாக வாங்கிய
மேசைகளை அங்கு அமைத்தார்கள். மக்களின் மனம் சிறிது மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம்
பலம் பெற்றது, கடை வெள்ளை அடிக்கப்பட்டது, குடும்பம் குடும்பமாக மக்கள் வரத்தொடங்கினார்கள், புது
மேசைகளும் அழகு சேர்களும் போடப்பட்டது, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
மதுமிதா டீ ஸ்டாலின் முகம் புதிதாக மக்களுக்கு அறிமுகமானது.
அருகில்
இருக்கும் அரசாங்க கட்டிடங்களில் இருந்து உணவு இடைவேளைக்கும், அவ்வபோது கிடைக்கும் இடைவேளைகளிலும் பல அரசு அதிகாரிகள் மதுமிதா
டீ ஸ்டாலுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. காலை எட்டு மணி முதல் மாலை எழு மணிவரை
கடையில் ஆட்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்.
‘இங்கு புகை
பிடிக்க அனுமதி இல்லை’ என்ற பலகை இல்லாமலேயே அங்கு புகை
பிடிப்பவர்கள் வருவதை நிறுத்திவிட்டனர். அதற்கு முதல் காரணம், யாழினி விற்பனையை கைவிட்டதுதான்.
“பரவாலையே ம்மா... நீ எடுத்து நடத்த
ஆரம்மிச்சதும் இங்க எப்பவும் இருக்கும் கிளவுட் காணாம போய்டுச்சே... இது எவ்ளோ
பெரிய சாதனை தெரியுமா...” அரசு அதிகாரியில் பெண் ஒருவர் யாழினியை பாராட்டினாள்.
“மேடம்... கிரவுடு...” என்று அருகில் அமர்ந்து லெமன் டீ
பருகிக்கொண்டிருந்த இன்னொரு பெண், பாராட்டிய பெண்
சொல்லியதை திருத்த முயற்சித்தாள்.
“இல்ல மேடம்... நான் கரெக்ட்டாதான்
சொன்னேன்... இவங்க ஊதுர ஊதுல... இங்க ஒரு கிளவுட் ஃபார்ம் ஆன மாதிரிதான இருக்கும்” என்று சொல்ல, இருவரும் சிரித்தபடி லெமன் டீ குடித்தனர். யாழனிக்கு அந்த
பாராட்டு பெரிதாக படவில்லை, காரணம் அந்த கிளவுட்(கிரவுட்)
இங்கு வரக்கூடாது என்பது அவள் நோக்கம் அல்ல. மனசுக்கு சரி என்று பட்டது செய்தாலே
ஒழிய மற்றபடி அதில் பெருமைகொள்ள ஒன்றுமில்லை என்று நினைத்தபடி அடுப்பு மேடைக்கு
சென்றாள்.
“மேடம் மணி இலவன் ஆச்சி... பிரேக்
டைம் ஓவர்... வாங்க போலாம்...” என்று பரபரத்தபடி இரண்டு அரசு ஊழியர்களும் வேகமாக பணம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்.
பணத்தை வாங்கி
கல்லாவில் போட்டுவிட்டு நிமிர்ந்த யாழினி இரண்டு வண்டியில் நான்கு வாலிபர்கள்
வருவதை கவனித்தாள். விஷ்வா சொன்னபடி, ஆதித்யா, வண்டியை மதுமிதா டீ ஸ்டாலின் வாசலில் நிறுத்தினான்.
“இதுதான் மச்சி ஸ்பாட்... இங்க தான்
இனிமே நீ டெய்லி டைம் ஸ்பெண்ட் பண்ற... வொர்க் ஃப்ரம் ஹோம் இல்ல வொர்க் ஃப்ரம்
ஷாப்தான் உனக்கு” வண்டி ஓடியபோது இரைச்சல் காரணமாக சத்தம் போட்டு பேசிய ஞாபகத்தில், வண்டி நிறுத்தப்பட்டும் அந்த சத்தத்தை குறைக்காமலே விஷ்வா
கத்தினான்.
“டேய் பொறுமையா பேசுடா... எல்லாம்
நம்மளதான் பாக்குறாங்க...” கரண் அவனை அடக்கினான்.
“அட இது நம்ம ஆதியோட ஊருடா... நம்மள
எவனும் எதுவும் கேக்க முடியாது...” மிக பொறுமையாக மற்ற மூவர் காதில் மட்டும் விழும்படி விஷ்வா சொல்லிவிடு, “என்ன மச்சி சொல்ற..?” என்று ஆதியை பார்த்து கேட்டான்.
“இல்ல...”
“இல்லையா...”
“இல்லடா டுபான்... ஒழுங்கா
மூடிக்கிட்டு வா... கண்டத பேசி அடி வாங்குற நெலமை வந்தா… ஊர் ஆளுங்களோட சேந்து நானும் ரெண்டு அடி தான் போடுவேன்..” பல்லை கடித்தபடி சிரித்த
முகத்தோடு ஆதித்யா சொல்ல,
“ஓகே தென்... ஐம் இன் சைலன்ட்
மோட்...” சட்டென்று முகபாவத்தை மாற்றி விஷ்வா சொன்னதும் மற்ற மூவருக்கும் சிரிப்பு
வந்தது. சிரித்தபடியே கடைக்குள் சென்றனர்.
அந்த வாலிபர்கள்
வெளியூர் என்பது யாழினி உட்பட கடையில் இருந்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.
வந்தவர்கள் கடைசியில் காலியாக இருந்த மேசையில் அமர்ந்து ஐஸ் கிரீம் பட்டியலிருந்த
அட்டையை படித்துவிட்டு சாப்பிட என்ன வேண்டும் என்று சொல்லாமல் தங்கள் பேச்சை
தொடர்ந்தனர்.
“என்ன மச்சி... ‘என்ன வேணு’ம்னு யாருமே கேக்க மாட்றாங்க...
செல்ஃப் சர்வீஸ் போல..?” வந்து அமர்ந்து சில நிமிடங்கள் ஆகியும் யாரும் அவர்களை அணுகி எதுவும்
கேட்காமல் இருந்ததால், கார்த்திக்
கேட்டான்.
“இருடா நான் அவங்க கிட்ட கேட்டு
பாக்றேன்...” டீ பாய்லர் அருகில் இருந்த யாழினியை பார்த்து கிரண் சென்றான்.
“எக்ஸ்க்யூஸ் மீ...” என்று அவன் அழைக்க, அவள் திரும்பி ‘என்ன..?’ என்பதுபோல பார்த்தாள். “ஆர்டர்..?” என்று அவன் இழுத்தான்.
“ம்ம்ம்... சொல்லுங்க...”
“மச்சி இங்க தான் சொல்லனுமாம்...
யார் யாருக்கு என்ன வேணும்...?” பாய்லர் அருகில் இருந்து உள்ளே இரண்டு மேசைகள் தாண்டி
இருந்த தன் நண்பர்களை பார்த்து கிரண் கூச்சலிட்டான். அதுவரை கடையில் இருந்த
இரைச்சல் சட்டென்று அடங்கியது. அனைவரும் கிரணை பார்க்க அவன் திருதிருவென்று
முழித்தான்.
“மச்சி அவன இவங்க எல்லாம் சேந்து
அடிச்சா... நாமளும் ஊர் ஜனங்களோட சேந்துக்கலாம்லா...?” விஷ்வா கிசுகிசுத்தான்.
“கண்டிப்பா” சொல்லியபடி ஆதித்யா லேசாக சிரிக்க, விஷ்வா மற்றும் கார்த்திக் வாயை பொத்திக்கொண்டு அவனோடு
சேர்ந்து சிரித்தனர்.
“எனக்கு ஒரு டீ... அப்டியே இந்த
பிஸ்கட் எடுத்துக்குறேன்...” என்று அமைதியாக சொல்லியபடி, கண்ணாடி ஜாடியில்
இருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து வாயில் வைத்தபடி எத்தார்தமாக நடந்து செல்ல கிரண்
முயற்சி செய்தான்.
“அவங்களுக்கு...?” பொறுமையாக தங்கள் நண்பர்கள்
இருக்கும் மேசையை நோக்கி செல்லத் தொடங்கியவனிடம் யாழினி கேட்க,
“அவனுங்க எப்டி போனா எனக்கென்ன...” என்று முணுமுணுத்தவன் வேகமாக
நடந்து தன் நண்பர்களோடு இணைந்துக்கொண்டான். மூவரும் அவனை பார்த்து சிரித்தனர்.
“என்னடா ஆர்டர் பண்ண?” ஆதித்யா கேட்டான்.
“ஒரு டீ...” பிஸ்கட்டை கடித்தபடி கிரண் சொல்ல,
“அப்போ எங்களுக்கு...?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு
விஷ்வா வினவினான். அதற்குள் அவன் கேட்ட டீ வந்துவிட்டது. மேசையில் வைத்துவிட்டு,
“வேற என்ன வேணும்..?” என்று யாழினி கேட்டாள். ஆளுக்கொரு
ஐஸ் கிரீம் கேட்டனர். அதுவும் ஒரு நிமிடத்தில் மேசைக்கு வந்தது.
“வேற ஏதாச்சும் வேணும்னா கூப்டுங்க” என்று சொல்லிவிட்டு பாய்லர்
நோக்கி நகரத்தொடங்கியவளை,
“என்னான்னு கூப்டனும்...?” என்று கேட்டபடி ஏதோ பெரிய சாதனை செய்தவன்போல முகத்தை வைத்துக்கொண்டு
யாழினியின் கண்களை உற்றுப் பார்த்தான் கார்த்திக்.
“டேய்...!” என்று ஆதித்யா இரைந்தான்.
தங்களுக்கு
முன்னாள் இருந்த மேசையில் இருக்கும் ஒருவர் இதை கவனிப்பதை உணர்ந்த விஷ்வா, “முடிஞ்சி...!” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான். அந்த மனிதர் யாழினியை ஒரு பார்வை
பார்க்க, அவள் ‘ஒன்றும்
இல்லை’ என்று தலை அசைத்தாள். அவர் எதார்த்தமானார். பிறகு, கேள்வி கேட்டுவிட்டு பிரகாசமாக முகத்தை வைத்திருக்கும் கார்த்திக்கை நோக்கி
நடந்து வந்தாள்.
“என்ன?” என்று கோபமாக முறைத்தபடி புருவம்
உயர்த்தி கேட்டாள்.
“வேற ஏதாச்சும் வேணும்னா
கூப்டுங்கன்னு சொன்னியே... அதான் என்னன்னு கூப்டட்டும்...?” மீண்டும் அதே முகபாவத்துடன்
கார்த்திக்கின் கேள்வி வந்தது. இம்முறை ‘சொன்னியே’ என்று அவன் மரியாதை குறைத்து சொல்லியது உண்மையிலேயே அனைவருக்கும் திகிலைக்
கொடுத்தது. விஷ்வாவிற்கு பதட்டத்தில் வேர்க்க தொடங்கிவிட்டது.
“மேடம்..ன்னு கூப்டு நாயே… வாங்குனது ஒரு கப் ஐஸூ இதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி...!” ஆதித்யா அவனை முறைத்தபடி
சொல்லிவிட்டு, “ஏங்க... நீங்க போங்க... ஏதாச்சும் வேணும்னா நாங்களே
வந்து வாங்கிக்குறோம்..” என்று யாழினியை சமாதானப்படுத்தினான்.
ஆதித்யாவின்
கோபம்தான், கார்த்திக்குக்கு அங்கு இருந்த
சூழலில் வெப்பத்தை உணர்த்தியது. அவன் அமைதியானான். ஆனால் யாழினியின் கோபம்
குறையவில்லை. கார்த்திக்கை முறைத்தபடி அவன் கண்களை பார்த்து,
“வேற ஏதாச்சும் வேணும்னா, எக்ஸ்க்யூஸ் மீ...ன்னு கூப்டுங்க... கூப்ட தெரியலன்னா, உங்க ஃபிரண்ட்ஸ்கிட்ட கேட்டு கத்துக்கோங்க” என்று மிக நிதானமாகவும், தெளிவாகவும், அந்த நான்குபேர் தாண்டி
வேறு யார் காதிலும் விழாதவாறு சொல்லி நாகர்ந்துச்சென்றாள்.
அனைவரும்
பெருமூச்சி விட்டனர். விஷ்வா மட்டும், கார்த்திக்கை
பார்த்து முறைத்தபடியே, அவனை கடித்து ருசிப்பது போல, அவன் வாங்கிய ஐஸ் கிரீமை முழுங்கினான்.
“டேய்... ஓவரா பண்ணாத... நீ இப்டி பண்ணதே
இல்லயா...?” கொஞ்சம் பாவமாக முகத்தை வைத்தபடி கார்த்திக் கேட்டான்.
“இடம் பொருள் சேவல்..ன்னு ஒண்ணு
இருக்குல்ல... சிட்டின்னா உண்ண மாதிரி ஒரு நாளைக்கு நூறு முட்டாபசங்க அவகிட்ட
அப்டி பேசுவானுங்க... அது அவளுக்கும் பெருசா தெரியாது... சுத்தி
இருக்கவனுங்களும் கண்டுக்க மாட்டானுங்க...” கோபதிலும் பயத்திலும் கார்த்திக்கை
விஷ்வா திட்டினான்.
“டேய்... அது என்ன சிட்டி டவுன்
வில்லேஜ்... எங்கனாலும் அவன் பண்ணது தப்புதான்... சுத்தி இருக்கவன் கேட்டா என்ன...
கேக்லன்னா என்ன.. உனக்கு அறிவு வேண்டாம்...?” ஆதித்யா அறிவுரை வழங்கினான்.
“அதும் இப்போதான இவன் போயி அங்க நின்னு
நம்மகிட்ட பேசுனத்துக்கு ஏதோ ஜோம்பிய பாக்குற மாதிரி அட் எ டைம்ல கடையே திரும்பி இவனா
லூக்கு விட்டுச்சி... அப்போவாச்சும் உனக்கு அறி....” என்று ஏதோ சொல்ல வந்தவன் சட்டென்று கிரணை பார்த்தபடி
பேச்சை நிறுத்தினான்.
“டேய்... நீ தான் டீ ஆர்டர்
பண்ணல்ல... அப்றம் எதுக்கு ஐஸ் கிரீம் வேற வாங்குன?” அனைவரும் பேசிக்கொண்டே ஐஸ் கிரீம்
சாப்பிட்டுக்கொண்டிருக்க, கிரண் தான்
வாங்கிய ஐஸ் கிரீமை பிரிக்காமல் டீ குடித்துக்கொண்டிருப்பதை கவனித்த விஷ்வா கேட்டான்.
“ஏதோ பதட்டத்துல பண்ணிட்டேன்டா... சாப்ட்டு
கிளம்பலாம்... சீக்ரம்...” என்று பதறியபடியே சொன்னவன் சட்டென்று டீயை விழுங்கிவிட்டு ஐஸ் கிரீம் மீது கை
வைத்தான். அனைவரும் சிரித்தபடி ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டு (கொஞ்சம் வேகமாகவே)
கடையிலிருந்து வெளியே சென்றனர்.
“ஏவல்...”
“ஹான்ன்...?”
“இடம்... பொருள்... ஏவல்... நீ
சேவல்ன்னு சொன்ன”
“ஆமா... ரொம்ப முக்கியம்... அந்த
முன்னாடி டேபிள் அங்கிள கூப்டவா...?”
கடையை விட்டு
வெளியே வண்டிகளிடம் வந்த பின்பு கார்த்திக் விஷ்வாவின் பிழையை சரி செய்ய, விஷ்வா அவனை கிண்டல் செய்தான்.
“சாரி...ங்க... ஊருக்கு புதுசு...
எங்க எப்டி பேசணும்னு தெரியாம பேசிட்டான் என் ஃப்ரெண்டு... எக்ஸ்ட்ரீம்லி சாரி
ஃபார் ஹிஸ் பிஹேவியர்” கடையில் இருந்து வெளியே வரும்போது பணம் கொடுக்கும் நேரத்தில் ஆதித்யா, யாழினியிடம் பேசினான்.
“இட்ஸ் ஓகே...” என்று சொல்லியபடி, மீதி சில்லறையோடு ஒரு வெண்ணிலா கப் ஐஸும் யாழினி ஆதித்யாவிடம்
கொடுத்தாள்.
“இது எதுக்குங்க...?” என்று ஆச்சரியம் தொனிக்கும்
குரலில் ஆதித்யா கேட்க, அவன் கண்ணோடு
கண்கள் கலக்காமலே,
“உங்களுக்கு இல்ல, உங்க அம்மா வள்ளிக்கு... மறக்காம யாழினி குடுத்ததுன்னு சொல்லி
குடுங்க...” என்று சொல்லிவிட்டு, கடைக்குள்
சென்றாள்.
ஏதோ கேட்க
வந்தவன், ‘நம் குடும்பத்தை
இந்த ஊரில் பலருக்கு தெரியும், அதில் இவளும் ஒருத்தி’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு, வண்டியின்
அருகில் காத்துக்கொண்டிருந்த தனது நண்பர்களை நோக்கி நடந்தான். மேசைகளை சுத்தம்
செய்தபடி, வெளியே செல்லும் ஆதித்யாவை யாழினி பார்த்தாள்.
அவன் வண்டியேறி, தனது நண்பர்களோடு புறப்பட்டு அங்கிருந்து
மறைந்தான்.
“இப்போ எங்கடா...?” கார்த்திக் கேட்டான்.
“யாதவா எலக்டிரானிக்ஸ்” ஆதித்யா சொன்னான்.
“அது எங்க?” மீண்டும் கார்த்திக் கேள்வி கேட்க,
“கேள்வியா கேக்காதடா கேடி
பஃக்கர்... ஜஸ்ட் ஃபாலோ மீ...”
.........
“ஃபாலோ அஸ்...”
பஜாரில்
இருக்கும் யாதவா எலக்டிரானிக்ஸ் சென்று புதிய வீட்டிற்கு புதிய டிவி வாங்கி
சரியாக உணவு நேரத்திற்கு வீட்டிற்கு வந்தார்கள். வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு
இருவர் டிவியை சுமந்தபடி நிற்க, வீட்டின் வெளிக்கதவை
திறக்க ஆதித்யா முற்பட்டபோது, வீட்டின் உள்ளே இருந்து இரண்டு
பெரிய உருவம் கொண்ட ஆண்களும், அவர்களை தொடர்ந்து அவர்களின்
மனைவிகளும்(அதே போன்ற பெரிய உருவங்கள்) வெளியே வந்தார்கள். அவர்கள் யார் என்று
தெரியாமல் ஆதித்யா முழிக்க, அவர்கள் பின்னால் சிரித்த
முகத்தோடு வள்ளி வெளியே வந்தாள்.
“பையனா?” அந்த உருவங்களில் ஒரு ஆண் குரல் கரகரத்தது.
‘ஆம்’ என்று வள்ளி தலை
அசைத்தாள்.
“நல்லது நல்லது... அவங்கல்லா உன்
ஃபிரண்ட்ஸா ப்பா?” மீண்டும் கரகரத்தது. ‘ஆம்’ என்று ஆதித்யா தலை அசைக்க,
“நல்லது ம்மா.. அப்போ நாங்க கிளம்புறோம்...” என்று வள்ளியை வணங்கி அந்த
நால்வரும் அங்கு இருந்து நகர்ந்தார்கள்.
“யாரு...ம்மா...?” என்று கேட்டபடி வள்ளியின்
பின்னால் ஆதித்யா வீட்டினுள் நுழைந்தான். அவனை தொடர்ந்து
அவன் நண்பர்களும் புது தொலைக்காட்சியும் உள்ளே வந்தது.
“சிவன் கோவில் மாரியம்மன் திருவிழா
நடக்கப்போகுது, அதான் திருவிழாக்கு கூப்ட வந்தாங்க
ப்பா... அது இந்த ஊர் வழக்கம்...”
“அததான் ஒரு ஆளு ரோட்ல ட்ரம்ஸ்
அடிச்சி சொன்னாரு... உங்களுக்கு மட்டும் வீட்டுக்கு வந்து சொல்றாங்களா...?” வெகுளியாக கார்த்திக் கேட்டான்.
“அதுவும் வழக்கம்… இதுவும் வழக்கம்... எல்லார் வீட்டுக்கும் போவாங்க...” வள்ளி சொன்னாள்.
“அது இருக்கட்டும் ஆண்டி… வந்தவங்களுக்கு விருந்தோம்பல்ன்னு சொல்லி, பிரியாணி ஏதும் போடலயே...?” என்று பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்தபடி விஷ்வா வினவினான்.
“அச்சச்சோ... செஞ்சது எல்லாம்
இப்போதான்டா சாப்டு போனாங்க...” என்று வள்ளி பாவமாக சொல்ல,
“ஆண்டி.....” என்று அதிர்ந்தவனாக விஷ்வா கேட்டு அழுவது போல பாவனை
செய்தான். மற்ற மூவரும் வாங்கி வந்த தொலைக்காட்சியை பொருத்தும் வேலையில்
இறங்கினார்கள்.
“அவங்க சைஸ பாத்தல்ல... பாவம், பத்தலனாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாப்டாங்க...” என்று வள்ளி சொல்லிவிட்டு, விஷ்வாவின் முகம் மாறுவதை பார்த்து லேசாக சிரித்தாள். அவன் வள்ளி தன் முகத்தை பார்க்கும் முறையிலிருந்து அவள் தன்னை கிண்டல்
செய்கிறாள் என்பதை உணர்த்தவன் போல சிரித்தான்.
“எல்லாம் உள்ள பத்ரமா இருக்கு, போ... போயி ஃபிரெஷ் ஆய்ட்டு வா...” என்று வள்ளி சொல்லிக்கொண்டிருந்த
நேரத்தில்,
“டிவி ஃபிட் பண்ணியாச்சி ம்மா...
கேபிள் போட்டேன்... ஆல் செட்” என்று ஆதித்யா சொல்ல,
“ஓகே... வாங்க சாப்டலாம்” என்று உற்சாகமாக அனைவரையும் வள்ளி
அழைதாள்.
பிரியாணி, தயிர் பச்சடி, கோழி வறுவல் அனைத்தும்
கொண்டுவரப்பட்டு, பரிமாறப்பட்டு அனைவரும் ரசித்து உண்பதை
பார்த்துவிட்டு தானும் உண்டாள் வள்ளி. பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசியும்
சிரித்தும் பொழுதை கழித்தனர். மாலை ஐந்து மணியளவில் ஆதித்யாவின் நண்பர்கள் விடைப்பெற்றுக்கொள்ள
வீட்டு வாசலில் வந்து வழி அனுப்பினார்கள் வள்ளியும் அவள் மகன் ஆதித்யாவும்.
“பாத்து பத்ரமா போங்க பசங்களா...
முடிஞ்சா அப்பப்போ வாங்க... வீட்டுக்கு போயிட்டு ஆதிக்கு கால் இல்லன வாட்ஸாப்
பண்ணிடுங்க” வள்ளி சொல்ல, சரி என்று
சொன்னார்கள்.
“ரொம்ப தாங்க்ஸ் ஆண்டி புது வீட்டு
ட்ரீட்க்கு” விஷ்வா வள்ளியிடம் சொன்னான்.
“ஆமால... புது வீட்டுக்கு ட்ரீட்
வச்சிருக்கோமே... ஒரு கிஃப்ட் குடுத்தியாடா நீ...?” என்று வள்ளி அவனை மீண்டும் வம்பிழுக்க,
“ஆண்டி... என்ன இப்டி
கேட்டுட்டீங்க... உள்ள இருக்கே அந்த டிவி...”
“அது என் பையன் வாங்குனது...”
“டிவி அவன் தான் வாங்குனான்...
ஆனா...”
“என்ன டா ரிமோட் நீ வாங்கி
தந்தியா...?”
“ஐயோ ஆண்டி... டிவி வாங்குனா ரிமோட்
ஃப்ரீ...”
“சரி...”
“ஆனா அந்த ரிமோட்க்கு பேட்டரி...
நான் தான் வாங்கி கொடுத்தேன்...”
வண்டிகள்
புரப்பட்டது. சிரித்த முகத்தோடு, நண்பர்களை
வழியனுப்பி வைத்துவிட்டு ஆதியும் வள்ளியும் சிறிது நேரம் பேசிவிட்டு, இருவரின் அறைகளையும் அவர்களுக்கு ஏற்றாற்போல சில மாற்றங்களை செய்துவிட்டு
அன்று இரவை நோக்கி பயணப்பட்டனர். மதியம் செய்த பிரியாணியே இரவு உணவாகவும்
இருந்தது. உணவு முடிந்ததும் இருவரும் அவர்கள் அறைகளுக்கு சென்றனர். அன்று அதிகாலையிலேயே
எழுந்து, பயணித்து, வீட்டு சாமான்களை
இறக்கி, அடுக்கி, ஒரு பொட்டு தூக்கம்
இல்லாமல் அத்தனை நேரம் இருந்த காரணத்தினால் படுத்த மூன்று நிமிடத்தில் ஆதித்யா
ஆழ்ந்த உறக்கதிற்கு சென்றான்.
நன்கு
உறங்கிக்கொண்டிருந்த வள்ளி, திடீர் என்று
உடம்பில் ஏதோ வித்யாசமான அதிர்வலை ஒன்றை உணர்ந்தாள். சட்டென்று கண் விழித்தாள்.
தன் கட்டிலுக்கு பின்னால் இருக்கும் ஜன்னல் பக்கம் ஏதோ அசைவு இருப்பதாக உணர்ந்து, எட்டிப் பார்த்தாள். கட்டிலின் கீழ் பகுதியில் எதையோ தடவி பார்த்தாள்.
இருட்டில், அவள் அறையில் இருந்து எழுந்து வாசல் பக்கம் வந்து
கதவின் தாழ்பாளை திறந்து வெளியே காலெடுத்து வைத்தாள். தெருவின் இரண்டு பக்கமும் கும்மிருட்டாக
இருந்தது. வீட்டின் இரண்டு பக்கமும் தன் கண்களை ஓட்டிவிட்டு
தனக்கு திடீர் என்று தோன்றிய அதிர்வு என்னவென்று புரியாமல் வாசலிலேயே நின்றாள்.
சட்டென்று எங்கிருந்தோ ஒரு உருவம் அவள் முன் மிக அருகில் தோன்றி “என்னை தெரியுதா வள்ளி...?” என்று கம்பீரமாகவும் கொடூரமாகவும்
கேட்டது.
வள்ளி சிறிது
கூட அச்சப்படவில்லை, ஒரு நொடி கூட கண்
சிமிட்டவில்லை. மாறாக தனது கூறிய கண்களை அந்த உருவத்தின் மீது பரவவிட்டாள். வாட்டசாட்டமான
ஆறடி கொண்ட உருவமும், தோல் துண்டை வைத்து முகத்தை மறைத்தபடி
சுற்றிக்கொண்டும், கண்களில் பயங்கர கொலை வெறியுடனும்
இருப்பதை அவள் கவனித்தாள். அவள் கண்கள் தன்னை ஆராய்வதை கவனித்த அந்த உருவம்
மெல்லிதாக சிரித்தபடி தன் முதுகில் இருந்து ஒரு கத்தியை உருவியது. அந்த கத்தி
மேல்நோக்கி செல்வதை வள்ளி தன் கூறிய கண்களை கொண்டு கவனித்தாள். தன் கண்களை அந்த
கொலைவெறி நிரம்பிய கண்களோடு நேருக்கு நேர் கலக்கவிட்டு, அவள்
உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பை பரவவிட்டு, கண்ணிமைக்கும்
நேரத்தில் தன் இடுப்பில் இருந்த குறுவாளை உருவி அந்த முகத்தை நோக்கி வீசினாள்.
அந்த ஆறடி மனிதரின்
முகத்தை குறுவாள் பதம் பார்த்தது. கண்ணத்தையும் புருவத்தையும் பலமாக வெட்டியதும்
அந்த உருவம் நிலை தடுமாறியது. சட்டென்று வள்ளி
தன் காலைக்கொண்டு அந்த உருவத்தின் நெஞ்சில் எட்டி உதைத்தாள். அவன் கத்தி வள்ளியின்
காலருகில் விழுந்தது. கீழே விழுந்த உருவம் முகத்தில் வழிந்த ரத்தத்தை துண்டினால்
துடைத்தபடி வேகமாக எழுந்து மேற்கு பக்கம் இருந்த ஒரு குறுக்கு சந்தின் வழியே ஓடி
மறைந்தது.
அந்த மனிதன்
இருட்டில் மறையும்வரை கண்கொட்டாமல் பார்த்தபடி வாசலில் நின்ற வள்ளி, அவள் குறுவாளில் இருந்த ரத்தத்தை தன் புடவை முந்தானையில்
துடைத்துவிட்டு, அந்த உருவம் கீழே போட்டு சென்ற கத்தியை
கையில் எடுத்துக்கொண்டு வீட்டினுள்ளே சென்று கதவை தாழிட்டாள். நிதானமாக நடந்து தன்
அறையில் நுழைந்து தன் கட்டிலின் அடியில் குறுவாளையும் அந்த கத்தியையும் சொருகி
வைத்துவிட்டு ஆதித்யாவின் அறை நோக்கி நடந்தாள். மிக அமைதியாக
உறங்கிக்கொண்டிருந்தவனை கரிசனத்தோடு பார்த்தபடி அவன் அருகில் அமர்ந்தாள். அவன்
தலையை கோதிவிட்டபடி. “நீ பாதுகாப்பா இருப்ப... அதே நேரத்துல உன் அப்பா ஆசையும் நிறைவேறும்” என்று ஏதோ சத்தியம் போல
முணுமுணுத்து அவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள். அவன் படுக்கை விட்டு எழுந்து அறை
வாசலுக்கு வந்தாள். ஏதோ உலறியபடி ஆதித்யா புரண்டு படுத்தான். அவனை பார்த்து
புன்முறுவல் செய்தபடி அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்கு சென்று கண்மூடி படுத்து, அந்த இரவை அமைதியாக கடக்க முயற்சித்தாள் வள்ளி.
பயணம் தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 04 - விரைவில்
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
__________________________________________
Comments
Post a Comment