02. மதுமிதா டீ ஸ்டால்

Previous Post 

02. மதுமிதா டீ ஸ்டால்

     அதிகாலை ஆறரை மணிக்கு வாக்கிங் செல்ல கணேசன் தாத்தா தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை’ என்ற பாடலை முணுமுணுத்தபடி கைகளை நன்கு வீசி நடக்கத் தொடங்கினார். தன் வீடிருக்கும் பாரதியார் முதல் தெருவில் இருந்து பஜார் வரை ஒன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று அங்கு இருபத்திஐந்து வருடங்களாக தேநீர் கடை வைத்திருக்கும் தனது பாலிய நண்பன் மதியின் ‘மதி தேநீர் கடை’யில் செய்திதாள் வாங்கிக்கொண்டும்‌ நண்பனுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டும் மனதிரற்கு பிடித்த பாடல்களை முணுமுணுத்தபடி மீண்டும் ஒன்றரை கிலோமீட்டர் வருவார்.

     பாரதியார் முதல் தெருவிற்கு எதிரில் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது ‘மதுமிதா டீ ஸ்டால்’. செய்திதாள் வாங்கிய கணேசன் தாத்தா மதுமிதா டீ ஸ்டாலில் அமர்ந்து செய்திதாள் படிப்பது வழக்கம். இராவணபுரியில் பல தேநீர் கடைகள் உண்டு. ஆனால் மதுமிதா டீ ஸ்டாலில் மட்டுமே தேநீர் மற்றும் பணிக்கூழ் இரண்டும் கிடைக்கும். அதுமட்டுமின்றி குடும்பங்களும் நண்பர்களும் அந்த பணிக்கூழை ரசித்து உண்ணவும், உண்ணும் நேரத்தை நன்றாக செலவிட அழகிய ஆசனங்களும் மேசைகளும் போடப்பட்டிருக்கும். மற்றும் கடையின் சுவற்றில் பல ஹெல்த் டிப்ஸ்களும், டயட் பிளான்களும் ஒட்டப்பட்டிருக்கும். மாதத்திற்கு ஒருமுறை அது மாற்றப்படவும் செய்யும். பஜாரில் இருக்கும் மதி டீ கடையில் கணேசன் தாத்தா அமர்ந்து  செய்திதாள் படிக்க அத்தனை சௌகர்யங்களும் இருந்தாலும் கூட, பஜாரில் இருந்து கொஞ்சம் விலகி வந்து அமைதியான சூழலில் காலைவேளையில் சிகெரேட் வாசம் இல்லாமல் அமைதியாக படிப்பதையே அவர் விரும்பினார்.

     வழக்கம் போல அன்றும் செய்திதாள் வாங்கிவிட்டு தனது மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு காலை ஏழரை மணிக்கு மதுமிதா டீ ஸ்டால் வாசலில் வந்து நின்றார். தினமும் காலை ஆறரை மணிக்கெல்லாம் தனது கடையை திறக்கும் யாழினி அன்று கணேசன் தாத்தா வரும்வரை கடையை திறக்கவில்லை. கடையின் வாசலை பார்த்துக்கொண்டே தனது செல்போனை எடுத்து யாழினிக்கு அவர் ஃபோன் செய்தார். அதே நேரத்தில் அவர் பின்னால் ஒரு வண்டி வந்து நிரற்கும் சத்தம் கேட்டது.

“குட் மார்னிங் தாத்தா”

“என்னடி பட்டு... ஏன் லேட்டு?” அவசர அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த யாழினியிடம் கரிசனமாக கேட்டார்.

“லேட் ஆய்டுச்சி தாத்தா”

“என்ன நக்கலா...?”

     பொய்க்கோபத்துடன் நாக்கை கடித்தபடி கணேசன் தாத்தா கை ஓங்க, அதில் தப்பிப்பது போல பாசாங்கு செய்து வேக வேகமாக கடையை திறந்தாள். ஷட்டரின் எடை அதிகம் ஆனாலும், தனி ஆளாக யாழினி அதை திறந்தாள். தினம் செய்யும் வேலை என்பதால் அந்த பலு உடலுக்குப் பழகி போயிற்று. ஷட்டர் திறந்த மறு நொடி, உள்ளே இருந்து ஒரு பிளாஸ்டிக் சேரை எடுத்து கணேசன் தாத்தாவிடம் கொடுத்து அமரச்சொன்னாள். அவர் அமர்ந்து செய்திதாளை புரட்ட ஆரம்பித்தார். யாழினி மற்ற மேசைகளையும் ஆசனங்களையும் அதன் அதன் இடத்தில் நகர்த்தி, கடையை பெருக்கத் தொடங்கினாள். ‘மதுமிதா டீ ஸ்டால்’ இருக்கும் அந்த கட்டிடம் யாழினியின் பாட்டி அவளுக்காக கொடுத்த இடம். ஒரு ஐஸ் கிரீம் பார்லர் அளவுக்கு பெரிய கடை அது. நான்கு பேர் அமர்ந்து ஐஸ் கிரீம் உண்ணக்கூடிய அளவிற்கான அழகு மேசைகள் மட்டும், கடைக்குள்ளேயே ஐந்து போடப்பட்டிருக்கும். அது போக ஃப்ரீஸர் மற்றும் ஃபிரிஜ் வைக்கப்பட்டிருக்கும். டீ மற்றும் காஃபி போடும் மேடை தனியாக போடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால் கடையின் முன் பக்கம் இருக்கும் காலி இடமும் ரோடும் மிக தெளிவாக தெரியும். அந்த காலி இடத்தில் இரண்டு மேசைகளும் அதற்கான நாற்காலிகளும் போக எல்லா டீ கடைகளிலும் இருக்கும் பெஞ்ச் ஒன்றும் போடப்பட்டிருக்கும். கடையின் உள்ளே பெருக்கி குப்பைகளை வெளியே தள்ளிவிட்டு வெளியே இருக்கும் காலி இடத்தை அவள் பெருக்க வந்தாள். கணேசன் தாத்தா எழுந்து வழிவிட்டு அவள் பெருக்கி முடித்தப்பின் இரண்டு மேசைகளை எடுத்து வெளியே போட யாழினிக்கு உதவியும் செய்தார்.

“ஏண்டி பட்டு லேட்டு...? வீட்ல ஒண்ணும் பிரச்சனை இல்லையே? அன்பு மறுபடியும் குடிச்சிட்டு வந்து நைட் பிரச்சனை பண்ணானா?”

     டேபிளை பிடித்து வெளியே கொண்டு வரும்போது கணேசன் தாத்தா யாழினியின் தந்தையைப் பற்றி விசாரித்தார். அந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் சலிப்பு சிரிப்பு ஒன்று அவள் உதட்டில் தவழ்ந்தது. அதை கவனித்த கணேசன் தாத்தா வேறு எதுவும் கேட்காமல் மனதிற்குள்ளேயே அவளுக்காக பிரார்த்தனை செய்துக்கொண்டு எடுத்து போட்ட ஆசனங்களில் ஒன்றை தூசு தட்டி, அடுப்பு மேடையில் இருக்கும் யாழனியை நோக்கி அமர்ந்தபடி பேப்பர் படிக்கத் தொடங்கினார்.

“என்ன தாத்தா இன்னிக்கு செய்தி?” அடுப்பில் பால் கொதிக்க வைத்துவிட்டு சாமி படத்திற்கு விளக்கு ஏற்றிவிட்டு ஊதுபத்தி ஏற்றி அதன் ஸ்டாண்டில் வைத்துவிட்டு அடுப்புமேடையில் நின்றபடியே கணேசனிடம் பேச்சு கொடுத்தாள்.

“ஏதும் புதுசு இல்லடி பட்டு... நம்ம ஊர் செய்தி வேணுனா என்கிட்ட இருக்கு சொல்லட்டுமா”

“என்ன தாத்தா காஸ்ஸிப்பா?”

“ச்சீ ச்சீ... இந்த வயசுல காஸ்ஸிப் பேசி யாருக்கு என்ன லாபம்...?”

“ம்ம்ம்க்கும்... உங்க வயசு ஆளுங்க தான் காஸ்ஸிப் பண்றதையே பொழப்பா வச்சிருக்காங்க... நீங்க என்ன அத “ச்சீ ச்சீ”ன்னு சொல்றீங்க...” நக்கலாய் கேட்டு சிரிக்கவும் செய்தாள்.

“அதுலாம் நாங்க இல்ல... வயசான பொம்பளைங்க தான்....” என்று அவர் ஏதோ சொல்லவர,

“தாத்தா...” என்று மெல்லீசான குரலில் யாழினி அழைக்க, அவர் பேச்சை நிறுத்தி அவள் முகத்தை பார்த்தார். ‘பின்னால் ஆபத்து’ என்று சொல்வதுபோல கண்களை உருட்டி உருட்டி யாழினி காண்பித்தாள். பொறுமையாக அவர் பின்னால் திரும்பி பார்த்தாள். ஒரு கையை சேரிலும் இன்னொரு கையை இடுப்பிலும் வைத்தபடி வாக்கிங் சென்றதன்‌ காரணமாக முகம் முழுக்க வேர்த்தபடியும் சித்ரா பாட்டி நின்றுக்கொண்டு இருந்தார்.

“வயசான பொம்பளைங்க... என்னா... என்ன சொல்ல வர நீ..?” கணேசன் தாத்தாவை முறைத்தபடி கம்பீரமாக சித்ரா பாட்டி கேட்டாள்.

“ஹாங்ங்ங்... நீ எதுவரைக்கும் கேட்ட...?” திருதிருவென்று முழித்தபடி, எதிரில் இருந்த சேரை இழுத்து அவர் எதிரில் அமர்ந்த சித்ரா பாட்டியைப் பார்த்து கேட்டார்.       

“ரொம்ப முழிக்காதடா... வயசான பொம்பளைங்கன்னு சொன்ன அப்போ தான் வந்தேன்... நீ இப்போ சமாளி”

“நிஜம்மா...?” என்று அவர் ‘ம்’ஐ அழுத்தி கேட்க, சித்ரா பாட்டி முறைத்தாள்.

“என்னவோ சொல்லிட்டுப்போ... டேய் பட்டு... எனக்கு ஒரு காப்பி... இவனுக்கு ஒரு லெமன் டீ... வீட்டுக்கு பார்ஸெல் ஒரு நாலு டீ” என்று சொல்லி, சுடிதாரின் ஷாலை எடுத்து முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தாள்.

“அப்றம் ஊர்ல என்ன செய்தி...?” கணேசன் தாத்தா சித்ரா பாட்டியை கேட்டுவிட்டு, திரும்பி யாழினியை பார்த்து கண்ணடித்தார். யாழினி கள்ளச்சிரிப்பு சிரித்தபடி சித்ரா பாட்டியின் பதிலுக்காக காத்திருந்தாள்.

“ஓ... இப்போ ஒண்ணு தான் ஹாட் டாப்பிக்... ஆனா நெறையா செய்தி வர போகுது கணேசா...” மிகுந்த புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சித்ராவின் பதில் வந்தது.

“அப்படியா... என்ன அது...?” என்று வியப்பில் மூழ்கியவர் போல கணேசன் தாத்தா கேட்டார். கடையினுள்ளே இருந்து யாழினி சிரித்தபடி லெமன் டீ மற்றும் காபியைக் கொண்டு வந்து அந்த டேபிளில் வைத்தாள்.

“உக்காரு டா...” யாழினியின் கையை பிடித்து சித்ரா பாட்டி சொன்னாள். அருகிலிருந்த சேர் ஒன்றை இழுத்து போட்டு அவள் அமர்ந்தாள்.

“சொல்லுங்க பாட்டி.. என்ன டாப்பிக்?”

“நம்ம சிவன் கோவில் மாரியம்மன் திருவிழா தான்” என்று சித்ரா சொன்னாள்.

     அங்கு இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள் வந்து சென்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு திருவிழா முடிந்த நான்காம் நாள் சித்ரா பாட்டியின் குடும்பம் பெங்களூரின் ஒயிட் ஃபீல்ட் என்ற இடத்திலிருந்து இராவணபுரிக்கு குடிபெயர்ந்தார்கள். பெங்களூரில் இருக்கும் சொந்தவீட்டை வாடகைக்கு விட்டு விட்டு லாரியில் பொருட்களை எல்லாம் ஏற்றிவிட்டு ஆனந்த் தனது குடும்பத்துடன் இராவணபுரி நோக்கி தங்கள் காரில் முன்னாள் சென்றுக்கொண்டிருந்தான், லாரி பின்தொடர்ந்தது. அவர்கள் வண்டி இராவணபுரியை அடைய இருபது கிலோமீட்டருக்கு முன்னாள் பயங்கரமாக மழை பெய்யத்தொடங்கியது.

“பெங்களூர் நல்லா தான டா இருந்துச்சி... எதுக்கு இப்டி ஒரு கிராமத்துக்கு வரணும்?” காரின் பின்சீட்டில் தனது மருமகள் பிரியாவின் அருகில் அமர்ந்திருந்த சித்ரா, தனது மகன் ஆனந்திடம் புலம்புவதுபோல கேட்டாள்.  

“ம்மா...! இது உங்க ஐடியா தான...! இப்போ என்ன இப்படி கேக்றீங்க..?” அதிர்ச்சியாக ஆனந்த் கேட்டான்.

“ஓ... ஆமா...ல்ல” கண் அயர்ந்தபடி பிரியாவின் தோளில் சாய்ந்துக்கொண்டு பேசினாள் சித்ரா பாட்டி.

“அத்தை ஏதோ டயர்ட்டா இருக்காங்க... நீங்க பதராம வண்டிய பாத்து ஓட்டுங்க... மழைவேற பெருசாகுது... இன்னும் எவ்ளோ தூரம்?”

“டயர்ட் ஆகாம என்னடி பண்ணும்... பெங்களூர்ல இருந்து அறநூறு கிலோமீட்டர் கார்ல டிராவல் பண்ற வயசா எனக்கு... ஒழுங்க டிரைன் டிக்கெட் போட்டு வந்துருக்கலாம்...”

“இதுவும் உங்க ஐடியா தான் அத்தை...” பிரியா கொஞ்சலும் கேளியுமாக சொன்னாள்”

“அட போங்கடி... அறுவது வயசுல நான் சொல்றதை எல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்கலாமா... இப்போ உக்காரவும் முடியல... நீட்டவும் முடியல... நெளிக்கவும் முடியல... ஓ ஜீசஸ்...! சேவ் மீ பிளீஸ்...!”

“டோன்ட் வொர்ரி பாட்டி... ஜஸ்ட் டுவெண்டி மினிட்ஸ்தான்... புது வீட்டுக்கு போயிடலாம்...” ஆனந்தின் பக்கத்து சீட்டில் இருந்து அலெக்ஸ் சொல்ல,

“நீ சொன்னா சரிதான் பேராண்டி... கூகிள் அக்கா சொன்னாளா..?”

“ஹி...ஹி... ஆமா பாட்டி” சிரித்தபடி அலெக்ஸ் பதில் சொன்னான்.

“மேக்னா தூங்கிட்டுத்தான் இருக்காளா இன்னும்...?”

     பிரியாவின் மடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த தனது பேத்தியை பார்த்து அவள் தலையில் கைவைத்து தடவிக்கொடுத்தபடி சித்ரா பாட்டி கேட்டாள். பிரியா லேசாய் சிரித்துவிட்டு, அலெக்ஸ் கையில் இருந்த ஃபோனை வாங்கி ஊரினுள்ளே செல்ல வழி சொன்னாள். அடுத்த நாற்பத்தைந்து நிமிடத்தில் இராவணபுரியில் பாரதியார் முதல் தெருவில் இருக்கும் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. மதியம் மூன்று மணி இருக்கும், கொட்டும் மழையில் பொருட்களை இறக்க முடியாத காரணத்தினால் லாரியை வீட்டின் ஓரமாக அப்படியே நிறுத்த சொல்லிவிட்டு வீட்டு வாசலில் அனைவரும் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

     அந்த நேரத்தில், எதிர்வீட்டில் இருந்த அகல்யா, ஒரு கையில் குடைபிடித்தபடி மற்றொரு கையில் பிளாஸ்க் ஒன்றையும் சில பேப்பர் கப்களையும் கொண்டுவந்தாள்.     

“வாங்க வாங்க... மழை கொஞ்ச நேரத்துல நின்றும்... கவல படாதீங்க... இந்தாங்க டீ குடிங்க...” சிரித்த முகத்துடன் அனைவருக்கும் டீ ஊற்றி கொடுத்தாள்.

“டிரைவரும் அவர் கூட ஒரு நாலு ஹெல்பெர்ஸ் இருக்காங்க... அவங்களுக்கு டீ கெடைக்குமா...?” ஆனந்த் அகல்யாவை கேட்க,

“என்னங்க…” என்று பிரியா பல்லை கடித்தபடி கிசுகிசுத்து ஆனத்தின் கையை லேசாக பிடித்து உலுக்கினாள்.

“இல்ல... பக்கத்துல டீ கடை எங்கன்னு சொன்னீங்கன்னா அவங்கள அங்க போக சொல்லிடலாம்...” என்று பிரியா சமாளித்தாள்.

“நோ இஷ்யூ, அவங்களுக்கு தனி பிளாஸ்க் குடுத்தாச்சி...” என்று சொல்லியபடி லாரியின் பின்னால் இருந்து அருண் வந்தான்.

“ஹாய்... ஐ எம் அருண், இட்ஸ் மை வொய்ஃப் அகல்யா... ரெண்டு கொழந்தைங்க.. உள்ள இருக்காங்க அண்ட் என் அப்பா. எங்க வீட்ல மொத்தம் அஞ்சுபேறு, உங்க ஆப்போஸிட் வீட்ல தான் நாங்க இருக்கோம்” ஆனந்தை பார்த்து அருண் சொல்ல, ஆனந்த் கை குலுக்கினான்.

“ஓ நைஸ்..! மைசெல்ஃப் ஆனந்த், இது என்னோட வொய்ஃப் பிரியா...” என்று ஆனந்த் சொல்ல, பிரியாவும் அகல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு தலையசைத்தார்கள்.

“அண்ட் இட்ஸ் மை கிட்ஸ்... பெரியவன் அலெக்ஸ்... பொண்ணு மேக்னா...” என்று சொல்லி தங்கள் குழந்தைகளை அறிமுகமம் செய்தான்.

“எப்பா அருணு... நான் தான் சித்ரா... இவன பெத்தவ...” என்று சொல்லி தன்னை தானே ஆறிமுகம் செய்துக்கொண்டாள் சித்ரா. “என்ன மறந்துட்டியேடா..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆனந்தை கேட்டாள். அனைவரும் லேசாக சிரித்தபடி ஆனந்தை பார்க்க, “அம்மா கொஞ்சம் அப்படிதான்” என்று அவன் முணுமுணுத்தான்.

“வணக்கம் ம்மா...” அருணும் அகல்யாவும் இணைந்து சித்ராவை வணங்கினார்கள்.

“பிரைஸ் தீ லார்ட்” என்று சொல்லி சித்ரா சிரித்த முகத்துடன் ஆசீர்வதித்தாள்.

“பசிக்குதா... சாப்ட வரிங்களா...?” அகல்யா அழைப்பு விடுத்தாள்,

“இல்லங்க... வர்ற வழில தான் ஹோட்டல்ல சாப்டோம்..” முதல் நாளே எதற்காக சிரமம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, பிரியா அந்த அழைப்பை மறுத்தாள்.. அவள் காலில் சாய்ந்தபடி, மேக்னா, தூக்கக்கலக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

“தூக்கம் வருதாடா செல்லம்... ஆண்டி வீட்ல வந்து படுத்துக்குறீங்களா?” என்று அகல்யா கேட்டாள்.

     அருணும் அதையே கேட்க, எப்படியும் மழை நின்ற பிறகு பொருட்கள் எல்லாம் இறக்கி அடுக்க குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும், அதுவரை குழந்தைகள் எதிர் வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லி அலெக்ஸ் மற்றும் மேக்னாவை அருண் வீட்டிற்கு அனுப்பினர். அது மட்டுமின்றி தங்கள் குழந்தைகளும் இவர்களை பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள் என்று அருண் சொல்ல, சித்ரா சரி என்று சொல்ல அவர்களை அனுப்பி வைத்தார்கள். அருணும் ஆனந்தும் வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்க,

“ஹாய் ஆனந்த்... ஐம் கணேசன்... ஹிஸ் ஃபாதர்...”

     குழந்தைகள் சென்ற கொஞ்ச நேரத்தில் வெளியில் சென்றிருந்த கணேசன் தாத்தா ஆனந்தின் வீட்டிற்கு வந்து, வாசலில் மழை நிற்பதற்காக காத்திருந்தவர்களிடம், தன்னை தானே அறிமுகம் செய்துகொண்டார்.

“ஹலோ சார்... வணக்கம்... வாங்க வந்து உக்காருங்க” என்று சொல்லி ஆனந்த் எழுந்து நின்றான்.

“நோ ஃபார்மாலிட்டீஸ் நீடட் கண்ணா... உக்காரு...” என்று ஆனந்திடம் சொல்லிவிடு, “ப்பா... சித்ரா என்ன பண்றா...?” என்று அருணிடம் விசாரித்தார். அந்த நேரம் பார்த்து சித்ரா பாட்டி வீட்டினுள் இருந்து வாசல் அருகில் வர, யாரோ ஒரு டீ-ஷர்ட்டும் டிராக்ஸூம் போட்ட வயசாலி தம்மை பேர் சொல்லி விசாரிப்பதாக நினைத்து,

“யோவ் பெருசு... யார் நீ...? என்ன பேர் சொல்லி விசாரிக்குற..?” என்று வாசல் வெளியே வந்து கணேசன் தாத்தாவை முறைத்தபடி கேட்டாள்.

“இந்தா கெழவி... சித்ரான்னா நீ ஒருத்தி தானா... என் பேத்தி பேரும் அது தான்”

“ம்மா...”

“ப்பா..”

     ஆனந்தும் அருணும் ஏககாலத்தில் கூச்சலிட, கணேசன் சித்ரா இருவரும் அவர்களை பார்த்தார்கள்.

“சாரி” இதுவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒரே சமயத்தில் இருவரும் சொல்ல, அவர்களுக்கே சிரிப்பு வந்தது. சித்ரா பாட்டி வேகமாக உள்ளே சென்றார். கணேசன் தாத்தா,

“இன்னும் ரெண்டு நிமிஷத்துல மழை நிக்கும்... அப்றம் பொருளெல்லாம் உள்ள வைக்க ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்று கை கடிகாரத்தை பார்த்தபடி சொன்னார்.

“பெருசுக்கு ஜோசியம் தெரியுமோ..” பின்னாலிருந்து சித்ரா பாட்டி கேட்டாள். அந்த குரலில் கோபம் இல்லை வெறும் கிண்டல் மட்டுமே இருந்தது. பின்னால் திரும்பாமலே லேசாக சிரித்தபடி,

“இல்ல கெழவி இந்த ஊரை தெரியும்”

     வானத்தை பார்த்து கணேசன் தாத்தா சொன்னார். அவர் சொன்னபடி இரண்டு நிமிடத்தில் மழை நின்றது. லாரி டிரைவருடன் பொருட்களை இறக்கவும் ஆட்கள் வந்திருந்த காரணத்தினால் வேலை வெகு சீக்கிரமாகவே முடிந்தது. அருணும் கணேசன் தாத்தாவும் தங்கள் எதிர் வீட்டிற்கு குடிவந்தவர்களை நன்கு உபசரித்துவிட்டு கிளம்பினார்கள்.

“ஏய் பெருசு... வாக்கிங் போக பார்க் இருக்கா இந்த ஊர்ல...” என்று சித்ரா கணேசனிடம் கேட்க,

“நாளைக்கு காலைல ஆறரை மணிக்குல்ல ரெடியா இரு கெழவி... வழி சொல்றேன்” என்று சிரித்த முகக்துடன் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு வந்தார்.

     நான்கு வருடங்கள் சென்றுவிட்டது. அந்த நாள் முதல் இன்றுவரை சித்ரா பாட்டியும் கணேசன் தாத்தாவும் நல்ல நண்பர்கள். அந்த முதிற்சியில் உருவான அவர்கள் நட்பு ஒருவரை ஒருவர் தனிமையிலிருந்து காப்பாற்றியது மட்டுமின்றி, அந்த வயதிலும் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இருவரையும் உணரவைத்தது.

     இந்த நினைவுகளை எல்லாம் அசைபோட்டுக்கொண்டிருந்த சித்ரா பாட்டி, மதுமிதா டீ கடையில் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த கணேசனின் முகத்தை பார்த்தாள்.

“என்னடா... வைதேகி ஃபிளாஷ்பேக்கா?” என்று கனவுலகில் மிதந்துக்கொண்டிருந்த கணேசன் தாத்தாவை கிண்டல் செய்தாள். கணேசன் தாத்தா முகம் வெட்கத்தில் சிவக்க,

“என்ன தாத்தா... வெட்கம் எல்லாம் வருது உங்களுக்கு?” என்று யாழினி கேட்க,

“வராதா பின்ன... திருவிழால உஷார் பண்ண லவ்வுல... அதான் திருவிழான்னு சொன்ன உடனே வைதேகி ஞாபகம் வந்துருக்கும்”

“மறந்தால் அல்லவா நினைப்பதற்கு...”

“கவிதை வேறையா தாத்தா...”

“இதுஎல்லாம் ஒரு கவிதையா பட்டு... அவன் பழைய டைரி எடுத்து பாரு... எவ்ளோ அழகா எழுதிருக்கான்னு... அந்த கவிதைக்கு தான் வைதேகி விழுந்திருப்பா... இல்லன்னா இந்த மூஞ்சிய யார் பாக்கப்போரா…?” சித்ரா பாட்டி கணேசன் தாத்தாவை கிண்டல் செய்தபடி யாழினியிடம் கேட்டாள், “உனக்கு என்னடா பட்டு ஞாபகம் வரும்..?”

     யாழினியின் முகம் மாறியது. கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்தது. தான் செய்த தவறை தாமதமாகவே சித்ரா பாட்டி உணர்ந்து மன வறுத்தமும்பட்டாள். கணேசன் தாத்தா சித்ரா பாட்டியை பார்த்து ‘கொஞ்சம் பாத்து பேசிருக்க கூடாதா..?’ என்று சத்தம் இல்லாமல் கேட்டார்.

“போதும் போதும் கதை பேசுனது... பார்ஸெல்ல வாங்கிட்டு கிளம்பு...” “பட்டு நீ போயி வேலைய பாருடி...?”

     கணேசன் தாத்தா யாழனியை தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பினார். அவள் எழுந்து உள்ளே சென்று பார்சல் செய்த டீயை சித்ரா பாட்டியிடம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த காசை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு தன் தினசரி வேலைகளை பார்க்கத் தொடங்கினாள். மதுமிதா டீ ஸ்டால் நோக்கி தினம் தினம் வரும் கூட்டம் வரத்தொடங்கியது. சித்ரா பாட்டியும் கணேசன் தாத்தாவும் தங்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

“கொஞ்சம் பாத்து பேசிருக்கலாம்ல சித்ரா..?” வருத்ததுடன் கணேசன் தாத்தா  பேசினார்.

“சாரி டா... எனக்கு சுத்தமா அவ அம்மா பத்தின ஞாபகமே இல்ல...” வருத்ததுடனே சித்ரா பாட்டியின் பதிலும் வந்தது.

“போலீஸ் எதுமே கண்டுபுடிக்களையா?”

“அதுதான் அழகி விஷயத்துல பெரிய சந்தேகம்... அன்பு ஜாஸ்தி குடிக்குரான்னு அவன் கூட வாழ விரும்பாம எங்கயோ போயிட்டான்னு கேஸ் குளோஸ் பண்ணிட்டதா சொல்றாங்க... அவளை கண்டுபுடிக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கல...”

“அப்டி கேஸ் குளோஸ் பண்ண முடியுமா?”

“கேஸ் நடத்த காசு இல்லன்னா... எப்டி வேணுனாலும் குளோஸ் பண்வாங்க... அதுபோக...” என்று கணேசன் ஏதோ சொல்லவந்து தயங்கினார்.

“ம்ம்ம்... அந்த வர்ஷம் கொஞ்சம் அன்போட ஆட்டம் ஜாஸ்திதான்... அழகிய ரெண்டு மூனுவாட்டி கைநீட்டி அடிக்கலாம் செஞ்சான்... எனக்கும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு”

“எல்லாம் இருக்கு அப்றம் ஏன் அவகிட்ட அப்படி கேட்ட அறிவாளி...?”

“தெரியாம கேட்டுட்டேன்டா... அப்போ சட்டுன்னு தோணுச்சி கேட்டுட்டேன்... அப்றமா அவகிட்ட பேசிக்கிறேன் நீ சும்மா சும்மா சொல்லிக்காட்ட வேண்டாம்”

“ம்ம்ம்... வயசானாலே அப்படிதான்... கண்டதை பேசவேண்டியது...” என்று சொல்லி கணேசன் சளித்துக்கொள்வதுபோல பாவனை செய்தார்.

“யோவ் பெருசு... வாய மூடிட்டு வேலைய பாரு... வந்துட்டாறு வயசாயிடுச்சின்னு கமெண்ட் பண்றதுக்கு...” கோபமாக பேசுபவள் போல பழைய நினைப்போடு சித்ரா பாட்டி பேச,

“சரி சரி கெழவி... டென்ஷன் ஆகாத... நம்ம வயசுக்கு அதெல்லாம் ஆகாது” அதே பழைய நினைவுகளை அசைபோட்டபடி கணேசன் தாத்தாவும் பேச, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி அவர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று தினசரி வேலையை பார்க்கத் தொடங்கினர்.


பயணம் தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 03 – என்னை தெரியுதா..?


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி



__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments