01. கட்டியங்காரன்

Previous Post 

01. கட்டியங்காரன்

“இன்னும் எவ்ளோ தூரம் ம்மா?”

டெம்போ ஓட்டுனர் வள்ளியிடம் கேட்டார்.

“ஒரு பதிமூனு கிலோமீட்டர் இருக்கும்ப்பா. ஏன்..? என்ன ஆச்சி..?”

     வள்ளி பதில் கேள்வி கேட்டாள். அவள் குரலில் கரிசனம் இருந்தது. அதிகாலையில் தங்களது சென்னை வீட்டில் இருந்து சில பொருட்களை எல்லாம் வண்டியில் ஏற்றிவிட்டு ஐந்து மணிக்கு வண்டி புறப்பட்டது. ஒருமணி நேரமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கு பசி எடுத்தது.

“ஒண்ணும் இல்ல ம்மா”

“அந்த ப்ரிட்ஜ் தாண்டி ஒரு கடை இருக்கும் அங்க நிறுத்துப்பா... டிபன் சாப்ட்டு போலாம்”

     ஓட்டுனரின் பசி புரிந்த அம்மா டிபன் கடைக்கு வழி சொன்னாள். ஓட்டுனர் முகம் மலர்ந்தது. வாகனம் கடையின் வாசலில் நிறுத்தப்பட்டது. டெம்போவின் பின்னாலேயே வந்து கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களும் கடையின் வாசலில் நிறுத்தப்பட்டது.

“எனக்கு கூட பசிக்கிது ம்மா… பட் மேப்ல இன்னும் கொஞ்ச தூரம் தான் காட்டுச்சி... சரி போயிடலாம்ன்னு நெனச்சேன்...”

     முதலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வந்த ஆதித்யா, தன் அம்மாவிடம் சொன்னான். வள்ளி, தன் மகனைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு சிற்றுண்டி கடைக்குள் நுழைந்தாள். மற்ற இரண்டு இருசக்கர வாகனத்தில் இருந்து மூன்று பேர் இறங்கி வந்தார்கள்.

“என்ன மச்சி வந்துட்டோமா”

“இல்லடா... போன உடனே பொருள் எல்லாம் எறக்கனும்ல... அதான் உங்களுக்கு ஃப்யூயல் போட இங்க நிப்பாட்டிருக்கு” ஆதித்யா, சிரித்தபடி சொல்லிக்கொண்டே தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு அம்மாவோடும் டெம்போ ஓட்டுனரோடும் சிற்றுண்டி கடைக்குள் நுழைந்தான்.

“நான் கூட எங்க எல்லாம் செட்டில் பண்ண அப்றம் தான் சோறுன்னு சொல்லப்போறியோன்னு நெனச்சி பயந்துட்டே இருந்தேன்” மற்றொரு நண்பன் கேலியாய் சொல்ல.

“அட பாவி... அவ்ளோ, மோசம் இல்லடா நானு” ஆதித்யா பரிதாபமாக சொன்னான்.

     உணவுக்கு அமர்ந்தபடி தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். விடியற்காலை என்பதால் ஆர்டர் ஒவ்வொன்றும் நிதானமாகவே வந்தது. முதலில் ஓட்டுனர் சாப்பிட்டுவிட்டு எழுந்து கைகழுவி டெம்போவுக்கு சென்றார். வள்ளியும் விரைவாக உண்டு முடித்துவிட்டு கடையின் வாசலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அழகு சூரியன் உதயமாவதை பார்த்தபடி அமர்ந்தாள். பல எண்ணங்கள் அவள் மனதில் ஓடியது. பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளும் அதனால் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு தொடராக அவள் மனதில் ஓடியது.

     பல வருடங்கள் கடந்து தன் கணவரின் சொந்த ஊரான இராவணபுரிக்கு வள்ளி தன் மகன் ஆதித்யாவுடன் வருகிறாள். ஆதித்யாவுக்கு பத்து வயது இருக்கும், சின்னாவின் குடும்பம் மதராஸ் குடியேறியபோது. பெரும்பாலான தனது இளமை காலத்தை இராவணபுரியிலேயே கழித்த சின்னாவிற்கு மதராஸ் வாழ்க்கையும் முகம் தெரியாத மனிதர்களிடம் வேலை பார்ப்பதும் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்றாலும், காலமும் அதன் மாற்றமும் அந்த புது வாழ்க்கைக்கு அவனை பழக்கியது. நிறைய முகங்களை தெரிந்துக்கொண்டான். தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்தான். அந்த உதவிகள் பின்னால் அவனுக்கு உதவியது. வள்ளி சின்னாவிற்கு பக்க பலமாக இருந்தாள். வாழ்வின் ஒவ்வொரு அடிகளிலும் அவனோடு துணையிருந்தாள். வள்ளியின் தைரியமான சுபாவம்தான் சின்னாவின் மிகப்பெரிய பலமாக இருந்தது.

“சொந்த ஊர விட்டுட்டுப் போறோம்ன்னு மனசு வலிக்குதா?”

“என் உலகமே நீங்களும் இவனும்தான்... எங்க இருந்தாலும் உங்க கூட இருந்தா போதும்”

“சினிமா வசனம் மாதிரில இருக்கு”

“நிஜ வாழ்க்கைல இல்லாததையா சினிமால எடுக்குறாங்க? கண்டத யோசிக்காம அடுத்து என்னான்னு பாருங்க” ஆளுக்கொரு மூட்டையையும் சிறிது பணமும் வைத்துக்கொண்டு இராவணபுரியில் இருந்து மதராசுக்கு இரயில் ஏறும்பொழுது வள்ளி சொன்னாள்.

     பிறந்தது, வளர்ந்தது, இந்நாள் வரை வாழ்ந்தது எல்லாம் இராவணபுரிதான். அதன் எல்லையை தாண்டி உலகம் இருக்கிறது என்பது கூட தெரியாத பேதையாக இருந்தவள் வள்ளி. அவள் இப்படி பேசுவாள் என்று சிறிதும் எதிர்பாராத சின்னாவிற்கு, மதராஸ் சென்றதும் அவள் குடும்பம் நடத்தும் விதமும், அவளை போலவே தன் மகனையும் அவள் தைரியசாலியாக வளர்ப்பதையும் பார்த்து பலமுறை வியந்திருக்கிறான். பலசமையங்களில் வியந்து பாராட்டியுமுள்ளான்.

“ஆளே மாறிட்டியே...!” படுக்கையில் படுத்தபடி சின்னா சொல்ல,

“சூழல் மாறுதுல” அருகில் படுத்திருந்த வள்ளி பதில் சொன்னாள்.

“ஆச்சரியம்தான்”

“எது...?” எல்லாம் தெரிந்தும் ஏதும் தெரியாதவள் போல கேட்டாள்.

“எல்லாமேதான்... உன் பேச்சி, நடத்தை, ஆதிய வளக்குற விதம்...!”

“நல்ல புள்ளையாதான வளக்குறோம்?” தவிப்பும் எதிர்பார்ப்புமாக கேள்வி வந்தது.

“நான் ஒண்ணும் பெருசா பண்ற மாதிரி தெரியல... எல்லாம் நீ தான் பண்ற”

“சரியா பண்றனா?”

     பெரும்பாலான நேரங்களில் வீட்டை கவனிப்பதற்கும் வீட்டு வேலைகளுக்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெண்களுக்கு எந்த விதமான பாராட்டுகளும் புகழும் கிடைப்பதில்லை. பெண்கள் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. காரணம், தன் குடும்பம், தன் கடமை என்று மனதில் ஏற்றுக்கொண்டு செய்வதே ஆகும். ஆனால் அவ்வப்போது கணவனால் பாராட்டப்படும்போது அந்த இன்பத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. அந்த இன்பம் வள்ளிக்கு எப்போதும் கிடைத்தது. சின்னா அதிலும் எந்த குறையும் வைத்ததில்லை.

“சொந்த தொழில் பண்ணலாம்ன்னு இருக்கேன்” அவளை கட்டியணைத்தபடி சொன்னான்.

“சரி” கொஞ்சலாய் பதில் வந்தது.

“கொஞ்சநாளைக்கு பெரிய செலவு எதும் பண்ணமுடியாது” தயக்கத்துடன் சொன்னான்.

“சரி” தெளிவாய் அவள் பதில் வந்தது.

“சரி சரின்னு சொல்லாம... என்ன ஏதுன்னு கேளு” லேசாய் சீறினான்.

“சரி சொல்லுங்க என்ன பண்ணப்போறீங்க” சிரித்தபடி கேள்வி வந்தது.

“இனி எது பண்ணாலும்... நா மட்டும் பண்ணப்போறது இல்ல... நம்ம பண்பண்ணப்ப்போறோம்”

வள்ளி முகம் மலர்ந்தது. அதை கவனித்த சின்னா,

“என்ன மொகத்துல அவ்ளோ குஷி?” என்று கேட்க, அவள் முகத்தில் சந்தோஷத்தோடு, வெட்கமும் குடிக்கொண்டது.

“சரி சொல்லுங்க... என்ன செய்ய போறோம்..?” நாணதுடன் கேட்டாள்.

“அந்த ‘சரி’ய விட மாட்டல்ல?... சரி கேளு... துணிக்கடை ஸ்டார்ட் பண்ணலாம்” விட்டத்தை பார்த்தபடி அவன் கனவை சொன்னான்.

“நல்ல ஐடியா... இந்த காலத்துக்கு ஏத்த பிசினஸ்... ஹோல் சேல் மாதிரி பண்ணபோறோமா? இல்ல ரீட்டைலா? ரெண்டுமே லாபம் தர பிசினஸ் தான்... சரியான ஆளுங்கள தெரிஞ்சா போதும்... நம்மகிட்ட யார் இருக்கா?” வள்ளி பரபரத்தாள். வெகுநாட்களாக இதற்கு காத்திருத்தவள் போல பல கேள்விகள் கேட்டாள். 

“ஏய்... கொஞ்சம் பொறு. என்னவிட ரொம்ப அதிகமா துள்றியே... ரொம்ப நாள் ஆசை போல? ஹோல் சேல் ரீட்டைல்லா தெரியுது உனக்கு”

“வீட்லயே இருந்தா ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சிங்களா...? அக்கம் பக்கம் நாலுபேர்கிட்ட பேசி பழகுரோம்ல... கொஞ்சம் கொஞ்சம் தெரியும்... சரி என்ன பண்ணப்போறோம்... சொல்லுங்க... எவ்ளோ முதலீடு...?” மேலும் கேள்விகளே அவளிடமிருந்து வந்தது.

“ம்ம்ம்... முதலீடு இருக்கட்டும்... ஆறுமுகம் இருக்கான்ல... அவனும் பார்ட்னர்...” என்று சின்னா சொல்லி முடிக்கும் முன்பே,

“நல்லதுங்க... ஆறுமுகம் அண்ணன் நல்லவரு. அது போக இந்த மார்க்கெட் நல்லா தெரிஞ்சவருன்னு அடிக்கடி சொல்வீங்களே... அவர் கூட இருந்தா நல்லது தான...!”

“நல்லது தான்.. முன்ன சொன்ன மாதிரி அவனுக்கு எல்லாம் தெரியும்... எனக்கு பெருசா இதுல பழக்கம் இல்லை. ஏதாவது ஒரு இடத்துல அவன் ஏமாத்திட்டா என்ன பண்றது..? அதான் யோசனையா இருக்கு”

“அட... ஏமாத்துனா அத ஒரு பாடமா எடுத்துக்கிட்டு அடுத்து ஆகுறத பாப்போம்... தயங்கி தயங்கி எது‌மே செய்யாம இருக்ரதுக்கு ஏதாவது செஞ்சித் தான் பாப்போமே”

     அன்று வள்ளி கொடுத்த உற்சாகமும் தைரியமும் தான் அவர்கள் வாழ்க்கையை உயர்வுக்கு கொண்டுச் சென்றது. தொழில் குடும்பம் இரண்டையும் நன்கு கவனித்தாள். சொந்த தொழில் ஒன்று இருந்தபோதும், மகனை நன்கு படிக்க வைத்து அதனோடு தொழில் பற்றியும் கற்றுக்கொடுத்து நல்ல உத்யோகத்தில் நல்ல சம்பாத்யத்தில் அமரச்செய்து அழகு பார்த்தாள். ஆரம்பகாலத்தில் இருந்தது போலவே, தன்னால் இயன்றவரை பிறர்க்கு உதவிகளும் செய்தாள். இராவணபுரி விட்டு வந்து பதினான்கு வருடங்கள் ஓடி விட்டது. மீண்டும் அங்கே செல்வதை நினைத்துப் பார்க்க பார்க்க இன்னும் பல நினைவுகள் மின்னல் வேகத்தில் அவள் மனதில் ஓடியது.

“போலாமா தாயி... கனவு கண்டது போதும்”

     அவள் நினைவின் பயணத்தை ஆதித்யா தடை செய்து மீண்டும் அந்த சிற்றுண்டி கடையின் வாசலுக்கு கொண்டுவந்தான். அனைவரும் உண்டு முடித்துவிட்டதை கவனித்த வள்ளி,

“எல்லாம் நல்லா சாப்டிங்கல்ல... வேற ஏதாச்சும் வேணுமா?” வள்ளி கேட்க, ஆதித்யாவும் அவன் நண்பர்களும் போதும் என்று சொன்னார்கள்.

“சரி கிளம்பலாம்... பாத்து பொறுமையா வாங்க பசங்களா...” சொல்லிவிட்டு டெம்போவை நோக்கி நடந்தாள். வண்டி புரப்பட்டது. மீதம் இருந்த அந்த பதிமூன்று கிலோமீட்டர் பயணத்தை தொடர்ந்தார்கள் இராவணபுரியை நோக்கி.

     ஊரின் எல்லையில் டெம்போ மீண்டும் நிறுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இராவணபுரி உள்ளே நுழைய பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே சூர்ப்பநதி பிரம்மாண்டமாகவும் கம்பீரமாகவும் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், வருடத்தில் அந்த மாதம் தண்ணீரின் ஓட்டம் குறைவாகவே இருந்தது. பாலத்திற்கு முன்பே நெடிஞ்சாலையில் எல்லை கோவில் ஒன்று இருந்தது. அதன் அருகில் வண்டிகள் நிறுத்தப்பட்டது.

“இங்க யாரு ம்மா?”

     வெறும் நான்கு கிலோமீட்டர் கடந்தால் தங்கள் சொந்த ஊரில் தங்களுக்காக அப்பா வாங்கியிருக்கும் சொந்த வீடு வந்துவிடும். பத்து வயதில் பார்த்த ஊர், இன்று எப்படி இருக்கும்? புகைப்படத்தில் பார்த்த வீடு நேரில் எப்படி இருக்கும்? புது மனிதர்கள், புது புது உறவுகள் என்ற பல கற்பனைகளோடு இராவணபுரி நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஊரின் எல்லையில், அம்மா மீண்டும் வண்டியை நிறுத்தியபோது சிறிது ஆச்சரியத்தோடே கேட்டான் ஆதித்யா.

“இவங்க தான்” என்று கூறி எல்லையில் இருந்த கோவிலை காண்பித்தாள் வள்ளி.

“மொத மொதல ஊருக்குள்ள நீ போக போறல்ல... வா... இவள பாத்துட்டு போனா அவ்ளோ நல்லது”

     அது மிக பழைய கோவில். நெடுஞ்சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு சின்ன கோவில் அது. வெறும் குட்டி கோபுரம் மட்டும் அமைக்கப்பட்டு அதனுள்ளே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கற்பக்ரகம் மட்டும் கொண்ட கோவில். கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய அரச மரமும் அதன் படர்ந்த கிளைகளும் அது தரும் நிழலும் காற்றும் அந்த இடத்தை மிக அமைதியாகவும் அழகாகவும் காட்டியது. அம்மா சொன்னபடி ஆதித்யாவும் அவன் நண்பர்கள் மூவரும் கோவில் அருகிலே சென்றனர். அன்று அந்த காலையில் பூஜை செய்ய அங்கு யாரும் இல்லை என்பதனால் அம்மாவே தீபம் ஏற்றினாள்.

“சாமி கும்புட்டுக்கோங்க” என்று வள்ளி சொல்ல, அப்போது தான் அனைவரும் கோவிலுக்குள்ளே இருந்த சிலையைப் பார்த்தனர். அந்த அம்மன் சிலை பார்க்கவே மிக விகாரமாக இருந்தது.

“என்ன மச்சி ஊருக்குள்ள வரவங்கள பயம்புறுத்தவா இந்த கோவில்”

“இருக்கலாம்... உன்ன மாதிரி டேஞ்செரெஸ் ஃபெல்லோஸ்லாம் வராம இருக்கணும்ல.. அதுக்காக இருக்கலாம்”

     ஆதித்யாயும் அவன் நண்பன் ஒருவனும் கிசுகிசுத்தார்கள். அம்மா அவர்களை பார்த்து லேசாய் சிரித்தாள். அவர்கள் அமைதியானார்கள். கற்பூரக் கம்பத்தில் கற்பூரம் ஏற்றிவிட்டு கோவிலின் எதிரில் இருந்த அரசமரத்தின் அருகில் அனைவரும் அமர்ந்தார்கள்.

“இது எவ்ளோ பழைய கோவில் ஆண்டி?” கிசுகிசுத்த நண்பன் கேள்வி கேட்டான்.

“சரியா தெரியலப்பா... ஆனா ரொம்ப பழசு... கொரஞ்சது ஆயிரத்தி ஐநூறு வருஷம் இருக்கும்...” வள்ளி இதை சொல்ல கேட்டு அனைவரும் வியந்தார்கள்.

“அம்மா… தஞ்சை பெரிய கோவிலவிட இது பழசா... என்ன சொல்றீங்க...?” ஆதித்யா வியப்பாய் கேட்டான். வள்ளி லேசாக சிரித்தாள்.

“தஞ்சை கோவில் பெரிசு... பெரிய கோவில்... அதுக்கு நெரையா சிறப்புகள் இருக்கு தான்... இல்லன்னு சொல்லல... ஆனா அது பழைய கோவில் கெடையாது... நம்ம இராவணபுரிக்கு பக்கத்து கிராமத்துல ஒரு சிவன் கோவில் இருக்கு அது மூவாயிரம் வருஷம் பழசு... இன்னும் எத்தனையோ பழைய கோவில்கள் உண்டு... இன்னிக்கு நம்ம பாக்குற சிவன் கோவில்கள்ள 99.9% கோவில்கள் ஆயிரம் வருஷதுக்கும் பழசு தான்... ஏன்.. 100%ம்ன்னு கூட சொல்லலாம்...”

“என்ன ஆண்டி சொல்றீங்க... ஏன் அப்படி..?” ஆதித்யாவின் மற்றொரு நண்பன் கேட்டான்.

“அது பெரிய வரலாறு கண்ணா… ஷார்ட்டா சொல்லனும்ன்னா... கடைசியா சோழர்கள் காலத்துல கட்டப்பட்டது தான்... அதுக்கு அப்றம் முகலாயர்கள் வந்தாங்க... அப்றம் போர்த்துகீஸ்… அதுக்கு அப்றம் நடந்தது எல்லாம் நீ ஹிஸ்ட்ரி கிளாஸ்ல படிச்சிருப்ப...”

“சரி... இந்த சிலை ஏன் இவ்ளோ....” அந்த கிசுகிசுத்த நண்பன் கேட்கவந்த கேள்வியை முடிக்காமலேயே நிறுத்தினான். ஆனால் கேள்வியை புரிந்துக்கொண்ட வள்ளி,

“கோரமா இருக்கு? அதான..?” என்று அவன் கேள்வியை நிறைவு செய்து வைதாள்.

“ஆமாங்க ஆண்டி...” என்று லேசாய் வெட்கப்பட்டப்படி சொல்லி ஆதித்யாவை ஓரக்கண்ணால் பார்த்தான். வாயை ‌திறக்காமல் லேசாக நக்கல் சிரிப்பு ஒன்று ஆதித்யாவின் இதழில் தவழ்ந்தது.

“நிசும்பசூதனி தெரியுமா?” வள்ளி கேட்டாள்.

“தஞ்சையோட எல்லை அம்மன்... அவங்க கூட இப்படி கோரமா தான் இருப்பாங்கன்னு படிச்சிருக்கேன்” இத்தனை நேரம் அமைதியாக இருந்த நண்பன் ஒருவன் சொன்னான். அனைவரும் அவனை திரும்பி பார்த்தார்கள். அவன் அவ்வப்போது தஞ்சை பெரிய கோவில் பற்றியும் சோழர்கள் கலாச்சாரம் பற்றியும் பேசும் பழக்கம் உள்ளவன். எழுத்து சித்தர் ஐயா பாலகுமாரன் அவர்கள் இயற்றிய உடையார் என்னும் நாவலில் படித்த சில காட்சிகளை நினைவில் கொண்டு ‘நிசும்பசூதனி, தஞ்சையின் எல்லை அம்மன்’ என்பதை சொன்னான். வள்ளி அவனை பார்த்து புன்முறுவல் செய்தாள்.

“கரெக்ட்.... இதுமாதிரி எல்லை சாமி எல்லாமே இப்படி தான் இருப்பாங்க”

“இவங்க பேர் என்ன” அவன் கேட்டான்.

“எல்லை அம்மன்” வள்ளியின் பதில் திட்டமாக வந்தது.

     என்ன கரணத்தினாலோ அதற்குமேல் அங்கு எந்த உரையாடலும் நடக்கவில்லை. அனைவரும் அமைதியானார்கள். அரசமரத்தின் கிளைகளிலிருந்து புறப்பட்ட பட்சிகளின் அழகு பாடலும், காற்றும், தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சூர்ப்ப நதியின் சலசலப்பும் மனதை சாந்தப்படுத்தியது. அந்த அமைதியில் சில நிமிடங்கள் கழிய, “கிளம்புவோமா?” என்று கேட்டபடி ஆதித்யா எழுந்தான். அவனை தொடர்ந்து அனைவரும் ஒருவர்பின் ஒருவராக எழுந்தார்கள். வாகனங்கள் அனைத்தும் புறப்பட்டு இராவணபுரியின் எல்லையை கடந்து ஊரின் உள்ளே சென்றது.

“என்னம்மா... கிராமம்ன்னு சொன்னீங்க, பஜார பாத்தா அப்டி ஒண்ணும் தெரிலயே...” வீட்டு வாசலில் வந்து இறங்கியவுடன் வள்ளியிடம் ஆதித்யா கேட்டான்.

     ஒரு காலத்தில் கிராமமாக இருந்த ஊர்தான். இன்றும் அந்த கிராமத்தின் சாயல் ஆங்காங்கே உள்ளதுதான். ஆனால், ஆங்காங்கே மட்டும்தான் உள்ளது. பதினான்கு வருடங்களுக்கு முன்பு தான் பார்த்த இராவணபுரி, தான் பிறந்து வளர்ந்த இராவணபுரி பல வகையில் மாறிவிட்டது. வீடுகளின் ஓடுகள் தளமாகவும், தளங்கள் மாடிகளாகவும் மாறிவிட்டது, ஒரே ஒரு துணிக்கடை இருந்த ஊரில் இன்று பலதரப்பட்ட ஜவுளி கடைகள் இருக்கிறது, கடைவீதி என்று அழைக்கப்படும் பஜாரில் அன்று ஒரு பெரிய மளிகை கடை, ஒரு துணிக்கடை, ஒரு பள்ளிக்கூடம், காவல் நிலையம், ஒரு சர்ச், பேருந்து நிலையம், ஒரு சினிமா கொட்டகை, இரண்டு டீ கடைகள் மற்றும் இரண்டு சிற்றுண்டி கடைகளும் இவைகளை கடந்து சென்றால் ஒரு பழைய இறும்பு கிடங்கும்‌, மற்றும் ஒரு ரயில் நிலையம் மட்டுமே இருந்தன. ஆள் நடமாட்டம் கூட அதிகம் இருக்காது.

     இன்று அதிகாலை ஊரினுள்ளே வரும்போது வள்ளி பார்த்த இராவணபுரி வேறு. அகலமான ரோடுகளும், ரோட்டின் இருபக்கங்களிலும் மாடிவீடுகளும் அதன் கீழே மூடப்பட்டிருந்த பல கடைகளும், பல விதமான டீ கடைகளும், உணவகங்களும், அந்த காலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததும், அரசு கட்டடங்களும் என்று பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டாள்.

     சொந்த ஊர் என்ற வாசம் தந்த ஒரே விஷயம் சின்னா வாங்கியிருந்த வீடு அமைந்திருக்கும் இடம் தான். பதினான்கு வருடங்களுக்கு முன்பு இராவணபுரி விட்டு சென்றபோது அவர்கள் சந்தித்த பல சோதனைகளில், இருந்த சொந்த வீட்டையும் நிலங்களையும் அப்படியே விட்டுச்சென்றதும் ஒன்று. பல எண்ணங்கள் வள்ளியின் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஆதித்யாவின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் லேசாக சிரித்துவிட்டு சின்னா சமீபத்தில் வாங்கியதாக, ஆதித்யா நினைத்துக் கொண்டிருக்கும், தங்களது சொந்த வீட்டிற்குள் நுழைந்தாள். பின்னாலேயே அனைவரும் உள்ளே சென்றனர்.

     கேஸ் கனெக்க்ஷன், E.B கனெக்க்ஷன், கேபில் கனெக்க்ஷன் போன்ற அத்யாவஸ்ய தேவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பலவும் முன்னாலேயே அந்த வீட்டில் இருந்தது. சென்னையில் இருந்த சொந்த வீட்டில் இருந்து சில முக்கிய பொருட்கள் மட்டுமே இராவணபுரிக்கு அந்த சிறிய டெம்போவில் கொண்டுவரப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்ற வள்ளி நேராக பூசை அறை சென்று சின்னாவின் படத்திற்கு விளக்கு ஏற்றி அமைதியாக அதன் அருகில் அமர்ந்தாள். ஆதித்யா தன் அம்மாவின் அருகில் சில நிமிடங்கள் ஆறுதலாக அமர்ந்துக்கொண்டான். பின்னர் தன் நண்பர்களைப் பார்த்து அவன் கண்காட்ட, அவர்கள் வெளியே டெம்போவிலிருந்து மரபீரோ ஒன்றை இறக்கச் சென்றார்கள். ஆதித்யாவும்  அவர்களோடு இணைந்துக்கொண்டான். பீரோவை தொடர்ந்து கட்டில், மெத்தை மற்றும் கொண்டுவந்த பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டு வீட்டினுள் எடுத்துச்செல்லப்பட்டு அதன் அதன் இடத்தில் அடுக்கப்பட்டது. இதனிடையில் வள்ளி கடைக்குச் சென்று சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமைக்கத் தொடங்கினாள்.

     எல்லா பொருட்களும் இறக்கப்பட்டு டெம்போவை அனுப்பிவிட்டு ஆதித்யா வீட்டின் உள்ளே வந்தான். வள்ளி சமயலறை உள்ளே போவதை பார்த்த ஆதித்யா,

“அத அப்டியே கீழ வைங்க” வேகமாக சமயலறையினுள் புகுந்து காய்கறிகளை கழுவத் தொடங்கிய வள்ளியை வெளியே அழைத்து(இழுத்து) வந்தான்.

“இருடா டீ ஆச்சும் போட்ரேன்...”

“இருகட்டும் ஆண்டி... பக்கத்துல எங்கயாச்சும்‌ வாங்கிட்டு வரோம்”

“நான் நல்லா தான் டா டீ போடுவேன்” ஆதித்யாவின் நண்பன்‌ விஷ்வாவை பார்த்து முறைத்தபடி வள்ளி சொன்னாள். அதில் கிண்டல் கலந்து இருந்ததை ஆதித்யா கவனித்தான்.

“ஐயோ ஆண்டி... நான் அப்டி மீன் பண்ணல...” அந்த கிண்டல் புரியாமல் அவன் பதறினான் “மச்சி ஹெல்ப் மீ ஹியர்...” என்று ஆதித்யாவிடம் கிசுகிசுத்தான்.

“அதான... எங்க அம்மா போட்ற டீக்கு என்னடா கொற?” கோபமானவன் போல ஆதித்யாவும் நடித்தான். விஷ்வா முகம் மாறியதைக் கண்டு அடக்க முடியாமல் முதலில் சிரித்தவள் வள்ளி, அவளை தொடர்ந்து ஆதித்யாவும் சிரித்தான். விஷ்வா முகம் மீண்டும் பழைய நிலைக்கு மாறியது.

“ம்மா.. என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வரோம்...”

“மணி பத்தேமுக்கால் தான டா ஆகுது நானே சமச்சிட்றேன்”

“ஒரு நாள் ரெஸ்ட் எடுங்க ஆண்டி”

“என்ன விஷ்வா திடீர் அக்கற...?”

“திடீர்னுலா இல்ல ஆண்டி... நான்... எப்... ப... ” என்று விஷ்வா ஏதோ சொல்லவர,

“அக்கறை எல்லாம் பிரியாணி மேல ம்மா...” ஆதித்யா சொன்னான்.

“அத்தான பாத்தேன்...” என்று சொல்லி விஷ்வாவை ஒரு முறை முறைத்துவிட்டு, “ஒழுங்கா நான் சமைக்ரத சாப்டுங்க...” ஆதித்யா, விஷ்வா மற்றும் இரண்டு நண்பர்களையும் ‌பார்த்து மிரட்டும் பாவனையில் வள்ளி சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

“கவல படாதீங்க டா... கடைக்கு போன அப்போவே சிக்கன் வாங்கிட்டு வந்துட்டேன்.. பிரியாணி தான் செய்யப்போறேன்...” என்று சமையலறையிலிருந்து அறிவித்தாள். அனைவர் முகமும் மலர்ந்தது.

“சரிம்மா அப்போ நாங்க சும்மா வெளிய போய்ட்டு வரட்டுமா..? சுத்திப்பாத்துட்டு வரோம்..” என்று ஆதித்யா சொல்ல, வள்ளி சரி என்றாள். நால்வரும் சேர்ந்து வெளியே புறப்பட்டனர்.

“அப்பா பேர் சொல்லி உன் கிட்ட யார் வந்து பேசுனாலும் அவங்க கிட்ட தயக்கம் இல்லாம பேசு” ஆதித்யாவின் காதில் வள்ளி சொல்லி அனுப்பினாள்.

ஆதித்யா மற்றும் விஷ்வா ஒரு வண்டியிலும், கிரண் மற்றும் கார்த்தி ஒரு வண்டியிலும் ஏறிக்கொண்டனர்.

“எங்க போறோம் மச்சி...?” கிரண் கேட்டான்.

“நோ கொஸ்டின்ஸ்... ஜஸ்ட் ஃபாலோ மீ..” என்று விஷ்வா சொல்ல, ஆதித்யா அவனை பார்த்து,

“வண்டி ஓட்றது நானு...”

“ஆமா..ல... அப்போ ஃபாலோ அஸ் டா...” என்று கிரணிடமும், “யூ கோ டா” என்று ஆதித்யாவிடமும் சொன்னான்.

வண்டிகள் புறப்பட்டு சின்னாவின் வீடு இருக்கும் தெரு முனையை கடந்து இடதுபுறம் திரும்பி நேராக சென்று வலதுபுறம் திரும்பியது. அங்கே உள்ள பிள்ளையார் கோவிலின் எதிரில் சாலையை அடைத்துக்கொண்டு மக்கள் கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தார்கள்.  அதன் நடுவில் இருந்து யாரோ ஒருவர் கத்தும் சத்தம் கேட்டது.

“இரு மச்சான் வேடிக்க பாத்துட்டு போலாம்... கிராமத்துலல்லாம் அப்டிதான்... நம்ம ஊர் மாதிரி எனக்கு என்னன்னு போகமாட்டாங்களாம்...” ஆவலாக விஷ்வா சொன்னான்.

“அப்டின்ற...?” ஆதித்யா கேட்டான்.

“அப்டித்தான்...ன்றேன்….”

வண்டிகள் நிறுத்தப்பட்டது. வண்டியில் அமர்ந்தபடியே அங்கு நடந்தவற்றை நால்வரும் கவனிக்கத் தொடங்கினார்கள்.

டும்... டும்... டும்... டும்... டும்... டும்... என்று பறை சத்தம் கேட்டது. கொஞ்சம் எட்டிப்பார்க்க, கூட்டதின் நடுவே ஒருவர் பெரிய மேளம் ஒன்றை மடியில் கட்டிக்கொண்டு அதை அடித்துக்கொண்டிருந்தார்.

“இதன் மூலம் இராவணபுரி மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்... வருகின்ற ஆடி  மாதம் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நம்ம சிவன் கோவில் மாரியம்மன் திருவிழா நடக்கப்போகுது…”

டும்... டும்... டும்... டும்... டும்... டும்...

கட்டியங்காரன் தொடர்ந்தான்...

“அதாவது... ஆங்கில மாதத்துல ஆகஸ்ட் 2 ஆம் தேதில இருந்து 11 ஆம் தேதி வரைக்கும் பத்து நாட்கள், வருடா வருடம் நடைபெறும் சிவன் கோவில் மாரியம்மன் திருவிழா நடக்கப்போகுது....”

டும்... டும்... டும்... டும்... டும்... டும்...

“ஆடியின் கடைசி ஞாயிறு, அதாவது ஆடி 27 ஆம் தேதி ஆத்தாவுக்காக பூக்குழி திருவிழா நடக்கவிருக்கு... அதுல கலந்துக்க விரும்பும் பக்தர்கள் விழா கமிட்டியிடம் பேர் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது”

டும்... டும்... டும்... டும்... டும்... டும்...

“திருவிழாவை முன்னிட்டு வரும் ஆடி 8, அதாவது ஜூலை 23 ஆம் தேதி காப்பு கட்டப்படுகிறது என்பதனை விழா கமிட்டியினர் சார்பாக மகிழ்ச்சியுடன் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்”

டும்... டும்... டும்... டும்... டும்... டும்...

     கட்டியங்காரன் அடுத்த இடதிற்கு நகர்ந்தான். கூட்டம் கலைந்து மக்கள் தங்கள் வேலைகளை பார்க்க சென்றனர். நிறுத்தப்பட்ட வண்டிகள் ஊர் சுற்ற புறப்பட்டது.


பயணம் தொடரும்..!

தொடர்ந்து படிக்க - Episode 02 – மதுமிதா டீ ஸ்டால்


இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!

அன்பு நண்பன்

-டெக்ஸ்டி



__________________________________________

தொடர்கதை எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 
நண்பன்
டெக்ஸ்ட்டி
__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!


Comments