05.
நம்ம ஃப்ரெண்ட்
“நீங்க ஏன் தாத்தா பார்க் பக்கம்
போகாம ரோட் ஸைட்ல வாக்கிங் போறீங்க...?”
வழக்கம்போல காலை
நடைபயிற்சி முடித்துவிட்டு மதுமிதா டீ ஸ்டாலில் கணேசன் தாத்தாவும் சித்ரா
பாட்டியும் அமர்ந்து லெமன் டீயும், காஃபியும் பருகிக்கொண்டிருக்க, யாழினி, கணேசன் தாத்தாவிடம் கேட்டாள்.
“ஆமா தாத்தா... சொல்லுங்க... ஏன்
பார்க் பக்கமே வரமாட்றீங்க...?” சித்ரா பாட்டி யாழினி கேட்டது போலவே ஆனால் ‘பக்கமே’ என்ற வார்த்தையை அழுத்தி
குறும்புத்தனம் ததும்ப கேட்டாள்.
“பாட்டி...!” சித்ரா பாட்டி தன்னை கிண்டல் செய்வதாக நினைத்த
யாழினி, சிணுங்கினாள்.
“அட யார்ரா இவ... உன்ன சொல்லலடி
பட்டு... இவனைதான்...” என்று சலித்தபடி சொல்லி, “நீங்க சொல்லுங்க தாத்தா..” என்று கணேசன் தாத்தா பக்கம்
சித்ரா பாட்டி திரும்பினாள்.
“அப்போ உங்களுக்கு காரணம் தெரியும்...!
அப்படிதான பாட்டி...?”
“எனக்கு தெரியாமையா.... ஆனா அவன்
சொல்லி கேட்டா நல்லா இருக்கும்...”
“அதுவும் சரிதான்...”
தன்னிடம்
கேள்வியை கேட்டுவிட்டு, பெண்கள் இருவரும்
அவர்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்
கணேசன் தாத்தா.
“பதில் சொல்லுங்க தாத்தா...” யாழினி கணேசன் தாத்தா கையில் இருந்த செய்தி தாளை
பிடுங்கி தன் கையில் வைத்துக்கொண்டு, மீண்டும்
கேட்டாள்.
“அதுவந்து பட்டு....”
“ஹாய் தாத்தா... குட் மார்னிங்...
வணக்கம் பாட்டி...” என்று உற்சாகமாக சொல்லியபடி ஆதித்யா மதுமிதா டீ ஸ்டாலின் வெளியே
போடப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்துக்கொண்டிருந்த கணேசன் தாத்தாவுக்கும் சித்ரா
பாட்டிக்கும் காலை வணக்கம் சொல்லி கடைக்குள்ளே போடப்பட்டிருந்த டேபிளில் சென்று
அமர்ந்தான்.
அவன் குரல்
கேட்டவுடன் திடுக்கிட்ட யாழினி, கையில் பிடுங்கி
வைத்திருந்த கணேசன் தாத்தாவின் செய்தித்தாளை கீழே போட்டுவிட்டு டீ மேடை நோக்கி
விரைந்தாள். இதை கவனித்த சித்ரா பாட்டி, கணேசன் தாத்தாவை
பார்த்து ஏதோ ஜாடை செய்ய, அவர் லேசாக சிரித்துவிட்டு ‘இல்லை’ என்பதுபோல தலையை ஆட்டினார்.
ஆதித்யாவும்
வள்ளியும் இராவணபுரிக்கு வந்து ஒரு வாரகாலம் ஆகிவிட்டிருந்தது. முதல் நாள் யாழினி
வள்ளிக்காக கொடுத்த ஐஸ் கிரீம் அவளை சென்று சேரவில்லை என்று அன்று இரவு கடையை
அடைத்தப்பின் வீடு திரும்பிய யாழினி வள்ளியிடமே கேட்டு தெரிந்துக்கொண்டாள்.
“ஓய் யாழு குட்டி... இங்க வா...
எப்படி இருக்க...?”
இரவு கடையை
மூடிவிட்டு வீடு திரும்பிய யாழினியை பார்த்து வள்ளி கேட்டாள்.
“நல்லா இருக்கேன் ஆண்டி... நீங்க...?” எதிர் வீட்டில் புதியதாக
குடிவந்திருப்பவரும் தனது பெற்றோரின் வாலிப காலத்து குடும்ப நண்பருமான வள்ளியை
பார்த்து யாழினி கேட்டாள்.
“ஏய்... என்ன அது ‘ஆண்டி’?? அத்தைன்னு கூப்டு…
அப்படிதான கூப்டுவ...” மிகவும் உரிமையுடன் வள்ளி பேசினாள்.
இராவணபுரியில்
சின்னாவுக்கு நெருங்கிய நண்பரான அன்பழகனின் ஒரே மகள் யாழினி. ஆதித்யாவைவிட இரண்டு
வயது சிரியவள். குழந்தை பருவத்தை அதிகமாக வள்ளியுடனே யாழினி கழித்தாள். யாழினியின்
தாயான அழகியின் பெற்றோர்கள் அவள் கல்யாணம் முடிந்த கொஞ்ச காலத்திலேயே மேலோக பயணம்
மேற்கொண்டார்கள். எனவே அழகியின் மகப்பேறு நாட்களில் அவளை முழுவதுமாக
கவனித்துக்கொண்டது வள்ளிதான்.
“சாரி அத்தை… ரொம்ப வருஷம் ஆச்சில... அதான்...” யாழினி இழுக்க,
“ஓ...ஹோ... மறந்துட்டேன்னு முடிவு
பண்ணிட்டியா...? உன் அம்மாக்கு பிரசவம் பாத்தவடி
நானு... உன்ன மொதல் மொதல்ல கைல தூக்குனது நான் தான்... நியாபகம் வச்சிக்கோ...” கோபமும் பாசமும் கலந்த குரலில்
வள்ளி சொல்லி முடிக்க, யாழினிக்கு கண்கள்
கலங்கியது.
தனது தாயையும்
தன்னையும் தாய் போல பார்த்துக்கொண்டவர் என்னும் நினைப்பு நெஞ்சுக்குள் எழ, கண்கள் கண்ணீரால் நிறைந்தது. வாயில் வார்த்தைகள் ஒன்றும்
வராமல் என்ன சொல்வது என்றும் தெரியாமல் தனது வண்டியில் சாய்ந்தபடி
நின்றுக்கொண்டிருந்தவளை அருகில் தோளில் சாய்த்துக்கொண்டாள் வள்ளி. வெகு
நாட்களுக்கு பிறகு தாயின் அன்பு கிடைதாற்போல யாழினிக்கு மனம் நிறைந்தது. அந்த
நிறைவு கண்ணீராக வெளியே வந்தது. அழுதவளின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு,
“அழாத யாழு… நான் வந்துட்டேன்ல... அழகி விஷயத்தையும் சேத்து நான்
பாத்துக்குறேன்...” என்று சொல்லி ஆறுதலாக முதுகு தடவி விட்டாள் வள்ளி.
என்ன பதில்
சொல்லுவது என்று தெரியவில்லை, பதில் ஏதும்
சொல்லவும் தோன்றவில்லை. அமைதியாக வள்ளியின் அரவணைப்பை அனுபவித்தபடி யாழினி
நின்றாள்.
தனது தோளில்
சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தவளை லேசாக விலக்கி, தாடையை தொட்டு அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டாள்.
“சாப்டியா யாழினி...?” கரிசனத்தோடு வள்ளி கேள்வி கேட்க, இல்லை என்று யாழினி தலை அசைத்தாள்.
“பிரியாணி இருக்கு...
கொண்டுவரட்டா...?” என்று வள்ளி கேட்க, பதில் சொல்ல
யாழினி தயங்கினாள்.
“என் அண்ணனுக்கும் சேத்துதான் தரேன்...
பயப்படாத...” என்று சொல்லி, தனது தந்தைக்கும்
சேர்த்து உணவு வேண்டும் ஆனால் அதை கேட்க தயங்கியவளை லேசாக தலையில் குட்டினாள்.
“இப்போதான இவ்ளோ பேசுனேன்...
மறுபடியும் என்னடி தயக்கம் என்கிட்ட...?” அதட்டலாக வள்ளி கேட்டாள்.
“இரு கொண்டுவறேன்...” என்று சொல்லி தனது வீடு நோக்கி
நகர்ந்தவளை,
“அத்தை...” என்று அழைத்து நிறுத்தினாள் யாழினி. ‘என்ன’ என்பதுபோல திரும்பி பார்க்க, தனது வண்டியின் சீட்டை திறந்து, அதனுள் இருந்து ஏதோ
எடுத்துக்கொண்டு,
வள்ளியிடம் நெருங்கி வந்து,
“இந்தாங்க” என்று நீட்டினாள்.
“என்ன இது...?” என்று கேட்டபடி கைநீட்டி யாழினியிடம் இருந்து வெண்ணிலா கப் ஐஸ் கிரீம் ஒன்றை
வள்ளி பெற்றாள்.
“ஹேய்...!” என்ற உற்சாக கூச்சலோடு, கண்கள் விரிய ஆசையோடு ஒரு வாய் ஐஸ் கிரீமை தனது ஆள்காட்டி
விரலில் எடுத்து வாயில் வைத்தாள்.
“ரொம்ப தாங்க்ஸ்டி...” என்று மன மகிழ்வோடு சொன்ன வள்ளியை, இன்பம் படர்ந்த கண்களோடு யாழினி பார்த்தாள்.
“உங்க பையன் கொண்டு வந்து
குடுக்கலதான...?” லேசாக நக்கல் கலந்து கேட்டாள்.
“என்ன குடுக்கணும்...?” மீண்டும் ஒரு வாய் ஐஸ் கிரீம்
சாப்பிட்டபடி வள்ளி கேட்க,
“காலைல உங்க பையனும் அவர்
ஃபிரண்ட்ஸும் கடைக்கு வந்தாங்க, திரும்பி போறப்போ
உங்களுக்குன்னு சொல்லி ஒரு கப் வெண்ணிலா ஐஸ் கிரீம் குடுத்து விட்டேன், கண்டிப்பா அதை எங்கயாச்சும் மறந்து போய்டுவாருன்னு தெரியும், அதான் நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்து உங்களுக்கு குடுக்கலாம்ன்னு இதை
கொண்டுவந்தேன்” வள்ளியின் கையில் இருந்த ஐஸ் கிரீமை சுட்டிக்காட்டி சொன்னாள்.
“ஓய்... என்னடி... என் புள்ளைய என்
கிட்டையே கொற சொல்ற...? பாத்த ஒடனே இடை
போட்டுட்டியா... அது எவ்ளோ தெளிவான புள்ள தெரியுமா...?” மீண்டும் ஒரு வாய் ஐஸ் கிரீம் உள்ளே சென்றபடி தனது
பையனின் பெருமை வெளியே வந்தது.
“என்ன புகழ் பாடி என்ன அத்தை
பிரயோஜனம்..? ஒரு ஐஸ் கிரீமை கொண்டு வந்து சேக்கலையே...” இப்போது குரலில் மட்டும் இல்லாமல்
முகத்திலும் உடல் பாவத்திலும் நக்கல் தெரிந்தது.
“பிரியாணி வேணுமா வேண்டாமா...?” வள்ளி கராராக கேட்டாள்.
“ஹான்ன்... வேணும் வேணும்... உங்க
பையன்தான் வோர்ல்ட்ஸ் பெஸ்ட் சன்... எனக்கு பிரியாணி கொண்டு வாங்க பிளீஸ்...” என்று புகழ்வதுபோல யாழினி சொல்லி, மீண்டும் பிரியாணி பக்கம் வர, இருவரும்
சிரித்தனர்.
அன்று முதல்
வள்ளி வீட்டுக்கு யாழினி வருவது வாடிக்கை ஆகிவிட்டது. தினமும் வள்ளியிடம்
ஒருமணிநேரமாவது பேசாமல் யாழினியின் பொழுது முடிவதில்லை. சென்னை வாழ்க்கை பற்றியும், ஆதித்யாவின் படிப்பு, வேலை பற்றியும்
அவ்வபோது பேசுவார்கள். இவை எல்லாம் சித்ரா பாட்டிக்கும் கணேசன் தாத்தாவுக்கும்
தெரியும். ஆதித்யா, தினம் காலையும்,
மாலை வேலை முடிந்தவுடனும் மதுமிதா டீ ஸ்டாலுக்கு வருவதும் வாடிக்கை
ஆகிவிட்டது.
“இஞ்சி டீ..” கடையின் உள்ளே இருந்த டேபிளில் அமர்ந்திருந்த
ஆதித்யாவுக்கு அவன் கேட்காமலேயே இஞ்சி டீ கொடுத்தாள் யாழினி.
“ஹே... தேங்க்ஸ்...! இஞ்சி டீ தான்
சொல்லலாம்ன்னு நெனச்சேன்...” முகம் முழுக்க ஆனந்தத்துடன் அவன்
பேசினான்.
“ம்ம்ம்...” மிகவும் சாந்தமாக முகத்தை வைத்துக்கொண்டு யாழினி
பேசினாள், “அம்மாக்கு டீ பார்சல் கட்டவா?”
“இல்ல இல்ல... வீட்ல டீ
போட்ருப்பாங்க...” என்று சொல்லிவிட்டு இஞ்சி டீயை ஒரு வாய் பருகினான்.
“செம்மையா இருக்கு... ரொம்ப
தேங்க்ஸ்...!” என்று சகஜமாக ஆதித்யா சொல்ல, தினம் வந்து அவன்
மட்டும் டீ குடித்துவிட்டு போவதும், வள்ளிக்கு டீ எதுவும்
வாங்காமல் போவதும் ஏன் என்று புரியாதவள், அன்று அவனிடம்
கேட்கவேண்டும் என்று நினைத்து, யாழினி அவனை கேள்விக்
கண்களோடு பார்த்தாள்.
“என்ன ஆச்சு..? எங்க வீட்டு டீ நல்லா இருக்காது... அதான் உன் கடைல
குடிக்கலாம்ன்னு வந்தேன்...” மீண்டும் ஒரு வாய் டீ பருகினான். யாழினி புருவம் உயர்த்தினாள். இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன...ப்பா இப்போவே அம்மா சமையல குறை
சொல்ல ஸ்டார்ட் பண்ணிட்ட போல...” கணேசன் தாத்தாவை தனியே விட்டுவிட்டு ஆதித்யா டேபிளுக்கு சித்ரா பாட்டி
நகர்ந்தாள்.
இனி நிம்மதியாக
லெமன் டீ குடித்தபடி செய்திதாள் படிக்கலாம் என்று நினைத்தவர் சட்டென்று சித்ரா
பாட்டியிடம் ஆதித்யா மற்றும் யாழினியை தனியே விடலாமா என்று யோசித்தார். கூடாது, அது ஆபத்தானது என்று முடிவெடுத்து தானும் அந்த டேபிளுக்கு
நகர்ந்தார்.
“ ‘டீ’ன்னு தான சொன்னான் அவன்... நீ என்ன சமையல சேத்துட்ட..? வள்ளி சமையல பத்தி இராவணபுரிக்கே தெரியும்... பலதடவ ஹோட்டல் வைம்மான்னு
வைதேகி கூட சொல்லிருக்கா... ஹம்ம்...” அப்டியே தனது வைதேகி நினைபிற்கு கணேசன் தாத்தா
சென்றார்.
“டேய்... நாட் நவ்...” என்ற சித்ரா பாட்டியின் குரல்
அவரை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது.
யாழினியும்
சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அவர் மீண்டும் பேப்பர்
படிக்க ஆரம்பித்தார். இது அத்தனைக்கும் நடுவில் அந்த இஞ்சி டீயை ரசித்து
பருகிக்கொண்டிருந்தான் ஆதித்யா.
“டீ புடிச்சிருக்கா கண்ணா..?” சித்ரா பாட்டி இதமாக கேட்டாள்.
“ஆமா பாட்டி... இஞ்சி டீ இஸ் மை
ஃப்பேவ்ரட்...” மீண்டும் ஒரு வாய் டீ பருகியபடி பதில் வந்தது.
“அப்போ டெய்லி குடிக்க
வேண்டியதுதான... நீ ஆசபட்டா உன் வீட்டு கிச்சன் அடுப்புலையே டெய்லி கிடைக்குமே”
“தாத்தா சொன்ன மாதிரி அம்மா
நல்லாதான் சமைப்பாங்க... எல்லாமே பயங்கரமா செய்வாங்க... ஆனா இஞ்சி டீ... வள்ளிக்கு
வராத ஒரே விஷயம் அதுதான்...” மீண்டும் ஒரு வாய் டீ பருகியபடி சோகமாக பதில் வந்தது.
“இப்போ யாரு வள்ளிய பத்தி பேசுனா..?” கோபப்படுவது போல முகபாவம் செய்து
சித்ரா பாட்டி கேள்வி கேட்க,
“எனக்கு சமையல் வராது பாட்டி...
அதும் டீ... வள்ளியாலயே முடியல.. என்னால எப்படி முடியும்...?”
“ரொம்ப கரெக்ட்ரா கண்ணா... உனக்கும்
வராது, வள்ளிக்கும் வராது... ஆனா யாழினிக்கு
நல்லா வருமே...!” என்று சொல்லி சித்ரா பாட்டி பல்லிளித்தாள்.
யாழினி மனதில்
வெட்கம் புகுந்தது, ஆனால் முகத்தில்
கோபத்தை வரவழைத்து சித்ரா பாட்டியை ஒரு பார்வை பார்த்தாள். அங்கிருந்து சட்டென்று
திரும்பி டீ மேடைக்கு சென்றாள். சித்ரா பாட்டி அவள் பார்வையை கணேசன் தாத்தா பக்கம்
திருப்ப, அவரும் முறைத்தார்.
“பட்டு.. என்னோட பார்சல் ரெடியா...? நா கிளம்புறேன்..” என்று கூவியபடி ஆதித்யா டேபிளை விட்டு எழ முயன்றாள்.
“என்ன பாட்டி அதுக்குள்ள
கிளம்புரிங்க? நல்லா தான பேசிகிட்டு இருக்கோம்...?” இஞ்சி டீ பருகியபடி வெகுளியாக ஆதித்யா கேட்க,
“அப்படியா…? இதோ உக்காந்துட்டேன்டா கண்ணா... பட்டு.. பார்சல் அப்பறம்
கட்டலாம்.. இங்க நான் நல்லா தான் பேசிக்கிட்டு இருக்கேனாம்... நீயும் வா... சேந்து
பேசுவோம்...” பற்களை காட்டி சிரித்தபடியே சித்ரா பாட்டி மீண்டும் ஆதித்யா அருகில்
அமர்ந்தாள்.
“வேலையெல்லாம் நல்லா போகுதா
கண்ணா...?” சித்ரா பாட்டியிடமிருந்து இருவரையும் காப்பாற்ற கணேசன் தாத்தா கேட்டார்.
“நல்லா போகுது தாத்தா... வொர்க்
ஃப்ரம் ஹோம் தான... அலைச்சல் இல்லாம போகுது...”
“நல்லது நல்லது...”
“அந்த டீ...” சித்ரா பாட்டி ஆதித்யாவிடம் கேட்க,
“ரெடி பாட்டி..” யாழினி பார்சல் டீயை கொண்டுவந்து
சித்ரா பாட்டியின் முன்னே வைத்தாள்.
“சூப்பர் டா... அப்போ நாங்க
கிளம்புறோம்” கணேசன் தாத்தா செய்திதாளை வேகமாக மூடிவிட்டு எழுந்தார். சித்ரா பாட்டி பாவம்
போல யாழினியையும் கணேசன் தாத்தாவையும் பார்த்தாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டு சிரித்தார்கள்.
“நானும்...” என்று சொல்லி, இஞ்சி டீயை
ரசித்து குடித்துவிட்டு ஆதித்யா புறப்பட்டான்.
சித்ரா
பாட்டியும் கணேசன் தாத்தாவும் தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டனர். ஆதித்யா
கல்லாவின் அருகில் சென்று நின்றான். யாழினி கல்லாவிற்கு அந்த பக்கம் வந்தாள்.
“அம்மாகிட்ட நான் சொன்னது எதுவும் சொல்லிடாத யாழினி...”
“எது..?” அவள் புருவம் உயர்த்தினாள்.
“ஆமா எதை சொல்லவேண்டாம்...?” இருவரின் பேச்சுக்கு இடையில்
சித்ரா பாட்டி நுழைந்தாள். இருவரும் திடுக்கிட்டார்கள்.
“சாரி டா... கப் மறந்துட்டேன்… அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்...”
“நீங்க எப்பவுமே கப் வாங்க
மாட்டீங்க பாட்டி..” சிரித்தபடி பற்களை கடித்துக்கொண்டு யாழினி சொல்ல,
“ஓ... அத மறந்துட்டேன் பாரேன்...
சரி சரி நான் கிளம்புறேன்... நீங்க ரகசியம் பேசுங்க...” சொல்லிவிட்டு சித்ரா பாட்டி உண்மையிலேயே அங்கிருந்து
நகர்ந்தாள்.
“டீ நல்லா இருக்காதுன்னு சொன்னதை
அம்மா கிட்ட சொல்ல வேண்டாம்..”
“டோன்ட் வொர்ரி... சொல்லல...”
“நன்றி...”
காசு கல்லாவில்
போடப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள். ஆதித்யா அங்கிருந்து
நகர்ந்து சென்றான். யாழினி உதட்டில் இருந்து வெகுநேரம் அந்த சிரிப்பு நீங்கவில்லை.
“ம்ம்ம்... நீ ஸ்டார்ட் பண்ணு டா...” மதுமிதா டீ ஸ்டாலில் இருந்து
சாலையை கடந்து எதிரில் இருந்த பாரதி நகர் வாசலை அடைந்ததும் சித்ரா பாட்டி கணேசன்
தாத்தாவிடம் சொன்னாள்.
“என்ன ஸ்டார்ட் பண்ணனும்..?”
“உன்னோட லெக்சர்...?”
“எதுக்கு...?”
“டேய்...!”
கணேசன் தாத்தா
அமைதியாக நடந்தார்.
“சீரியஸ்லி...? எதுவுமே சொல்ல போறது இல்லயா நீ...?”
“நீ எத பத்தி பேசுறனே புரியல...”
“யாழினி ஆதித்யாகிட்ட இப்போ நான்
பேசுனதுபத்தி...”
“ஹோ...! அத பத்தியா...!”
“ம்ம்ம்... ஸ்டார்ட்... ‘வயசுக்கு ஏத்த மாதிரியா நடந்துக்குற...?’
‘உனக்கும் பேர பசங்க இருக்கு... அவங்ககிட்ட இப்படிதான்
பேசுவியா...?’ ‘கொஞ்மாச்சும் பெரியவங்க
மாதிரி நடந்துக்கோ...’”
“சித்ரா...” கணேசன் தாத்தா இடைமறித்தார்.
“ம்ம்ம்...” என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வமாக அவர் முகத்தை பார்த்தாள்.
“சின்ன பசங்க... நாளைக்கு ஏதாச்சும்
யார்கிட்டயாச்சும் சொல்லனும்னா உன் கிட்டயோ என் கிட்டயோ ஷேர் பண்ணிக்றது நல்லது...
அதுக்காக தான அவ்ளோவும் பண்ண..?”
“ஆமா...!” ஆச்சரியாமான தொனியில் கண்களை சிமிட்டாமல் கணேசன் தாத்தாவை
பார்த்தபடி சித்ரா பாட்டி சொன்னாள்.
“ம்ம்ம்... நல்லதுதான்...” அமைதியான முகபாவத்தோடு அவர் சொல்ல, நடந்துக்கொண்டிருந்த சித்ரா பாட்டி அங்கேயே நின்றபடி,
“டேய் கணேசா... ஒடம்பு ஏதும் சரி
இல்லயா உனக்கு...? ஏன் இப்படிலாம்
பேசுற..? ஹாஸ்பிடல் போலாமா...?” படபடப்பாக சித்ரா பாட்டி கேட்டாள்.
“ஏய்... என்ன நக்கலா...?”
“பின்ன… நா செஞ்சது சரின்னு நீ சொன்னா அது ஒண்ணு கனவா இருக்கணும் இல்ல
உனக்கு பைத்தியமா இருக்கணும்... இது ரெண்டும் இல்லன்னா...” என்று சொல்லி சில நொடிகள் இடைவெளி
விட்டு, “கனவுல எமன் வந்தானா...? நீ சாக போறியா...?” உற்சாகமான குரலில் கேட்டாள்.
“உனக்கு முன்னால நா எப்படி...?” என்று அவர் கேட்டார்.
இருவரும் ஒருவரை
ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். சிரித்தபடியே வீடு நோக்கி நடந்தார்கள்.
“இருந்தாலும் அந்த கல்லா பக்கத்துல
பண்ண சேட்டைய பண்ணாம இருந்துருக்கலாம்...”
“அதான பாத்தேன்... நீ ஸ்டார்ட்
பண்ணு கணேசா...”
தங்கள் வீடு
நோக்கி நடந்தபடி அந்த இரண்டு நண்பர்களும் பேசிக்கொண்டு சென்றார்கள்.
“டேய்... நீ ஈவினிங் டீ குடிக்க
போகலையா?”
“இல்ல தாயே... ஏன்... என்ன ஆச்சு...? எட்டு மணிக்கு என்ன டீ ஞாபகம்...?” தனது அறையில் இருந்தபடி சமையலறையில் இருந்து வள்ளி
கேட்ட கேள்விக்கு ஆதித்யா பதில் சொல்லி, பதில் கேள்வியும்
கேட்டான்.
சிலநிமிடங்கள்
தாண்டியும் தனது கேள்விக்கு எந்த பதில் வராத காரணத்தால் தனது அறைவிட்டு வெளியே
வந்து சமையலறையில் வள்ளியை தேடினான். அவள் அங்கு இல்லை. வாசல் பக்கம் பார்க்க, யாரையோ எதிர்பார்த்தபடி சாலையை பார்த்தவண்ணம்
நின்றுக்கொண்டிருந்தாள்.
“இந்த டைம்க்கு யார எக்ஸ்பெக்ட் பண்றிங்க
நீங்க...?”
பதில் இல்லை.
“உங்க ஊருக்கு வந்ததுல இருந்து
வித்யாசமா பிஹேவ் பண்றியே வள்ளி நீ...”
பதில் இல்லை. தானும் வாசலுக்கு வந்து சாலையை பார்த்தான்.
நகரம் போல இல்லாமல் அந்த எட்டு மணிவேலையிலேயே சாலை வெறிச்சோடி இருந்தது ஆதித்யாவுக்கு
புதிதாக இருந்தது. தன்னுடைய வீடு பிரதான சாலையில் இல்லை என்பதும் தான் இத்தனை
நாட்கள் இரவு வேளையில் வெளியே வந்து பார்க்காததும் ஆதித்யாவுக்கு அப்போது தான்
நினைவிற்கு வந்தது.
“நீ யாழினி கடை வரைக்கும் போய்ட்டு
பாத்துட்டு வா...?” திடீரென்று விழித்துக்கொண்டவளாய் வள்ளி பேச, அவள் சொன்னது என்ன என்று புரியாமல் ஆதித்யா விழித்தான்.
“முழிக்காதடா... அவ ஏழு மணிக்குலாம்
கடைய சாத்திட்டு வீட்டுக்கு வந்துருவா... மணி ஒன்பது ஆகுது இன்னும் ஆள காணும்...
போய் பாத்துட்டுவா போ...” படபடப்பாக வள்ளி பேசினாள்.
“தாயே எட்டுதான் ஆகுது”
“எப்படியும் ஒன்பது ஆகும்... வண்டி
எடு... நானும் வரேன்... கிளம்பு...” வள்ளி பரபரத்தாள்.
“ஓவர் ஸீன் போட வேண்டாம்... நானே
போறேன்... வெயிட் ஹியர்”
வண்டி எடுத்து
மதுமிதா டீ ஸ்டால் நோக்கி ஆதித்யா சென்றான். தூரத்தில் இருந்தே கடையின் விளக்குகள்
அணையாமல் இருப்பது தெரிந்தது. ‘ஏன் இன்னும் கடை
அடைக்கவில்லை?’ என்று யோசித்தபடி கடையின் அருகில் சென்று
தனது வண்டியை நிறுத்தினான். உள்ளே யாழினி தனியே அமர்ந்துகொண்டிருந்தாள். டீ
மேடையில் அடுப்பு அணைக்கப்பட்டு, வெளியே இருக்கும் டேபிள்கள்
அனைத்தும் உள்ளே அடுக்கப்பட்டிருந்தது. கடை முழுக்க நன்கு பெருக்கி சுத்தமாக
இருந்தது. இதை எல்லாம் கவனித்தபடி, முதல்
டேபிளில், வாசல் பக்கம் திரும்பியவாறு அமர்ந்து ஏதோ
புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த யாழினியை நோக்கி, ஆதித்யா
நடந்து வந்தான். யாரோ வருவது தெரிந்து புத்தகத்தில் இருந்து கவனம் திருப்பி தலை
நிமிர்ந்து யாழினி பார்த்தாள்.
“ஹாய்...! வாங்க... அடுப்பு ஆஃப்
பண்ணிடனே... பால் கூட காலி...” என்று சொல்லியபடி தான் அமர்ந்திருந்த நாற்காலியைவிட்டு எழுந்தாள்.
“உக்காரு... உக்காரு... உன்ன ஆள
காணும்னு எங்க வீட்ல ஒரு ஜீவன் பொலம்பிக்கிட்டு இருக்கு... நீ என்ன இங்க உக்காந்து
கதை படிச்சிட்டு இருக்க...? லேட் ஆகுதுல...
வீட்ல வந்து படிக்க கூடாதா...?” சுற்றும் முற்றும் பார்த்தபடி அக்கறையோடு பேசினான்.
முதல்முறையாக
இராவணபுரிக்கு வந்து இரவு நேரம் வெளியே வந்தபோதுதான் ஆதித்யாவுக்கு தெரிந்தது, அந்த ஊரில் இரவு எழு மணிக்கு மேலே ஆள் நடமாட்டம் அத்தனை
குறைவு என்று. தனது வீடு இருக்கும் சாலை மட்டும் அப்படி என்று
எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு, பிரதான சாலையை அடைந்ததும் அந்த
எண்ணம் மாறியது. அரசு அலுவலகங்கள் இருக்கும் காம்பவுண்ட் மொத்தமும் இருள்
சூழ்ந்திருந்தது. அதன் அருகில் மதுமிதா டீ ஸ்டால் மட்டுமே சாலைக்கு வெளிச்சம் தந்துக்கொண்டிருந்தது.
தூரத்தில் சில தெரு விளக்குகள் தென்பட்டது. அது நிச்சயமாக பஜார் சாலையின்
விளக்குகளாகவே இருக்கவேண்டும் என்று அவன் யூகித்தான். அப்படிபட்ட சூழலில் அவள்
தனியாக கடையினுள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவனுக்கு ஏனோ அவள்மேல் கரிசனம்
தோன்றிற்று. அது அவன் குரலிலும் தெரிந்தது.
“ஐயோ கதை இல்ல, கணக்கு பாத்துட்டு இருக்கேன்... நாளைக்கு எல்லாருக்கும்
செட்டில் பண்ணனும். இது என்னோட வீக்லி வொர்க்... வாரத்துக்கு ஒருநாள் லேட்
ஆகும்... நீங்க வீட்டுக்கு போங்க, அத்தைக்கிட்ட நான் வந்து
பேசிக்கிறேன்...” பொறுமையாக அவள் பதில் சொல்ல,
“வீட்ல வந்து பாத்தா ஆகாதா அந்த
கணக்கு...?” குரலில் சிறிது கோபமும் அக்கறையும் கலந்த தொனியில் ஆதித்யா கேட்டான். அவள்
பதில் சொல்லவில்லை. லேசாக சிரித்துவிட்டு மௌனமானாள்.
“சரி சீக்ரம் முடி... நான் வெயிட் பண்றேன்...
உன்ன விட்டுட்டு போனா அம்மா என்ன உள்ள விட மாட்டாங்க...”
“இல்ல பரவால்ல...” என்று அவள் ஏதோ சொல்லவர, டேபிளின் எதிர் முனையில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு
அமர்ந்து, ‘ஆகட்டும்’ என்பதுபோல அவளை பார்த்து தலையசைத்தான். அவளும் மீண்டும் கணக்குகளை
பார்க்கத் தொடங்கினாள்.
“ஓய் மம்மி... உன் யாழுக்குட்டி
கடைல உக்காந்து கணக்கு பாக்குறாங்க... இன்னும் டைம் ஆகுமாம்... நான் ‘சரி’னு சொல்லிட்டு வந்துட்டேன்…” வள்ளிக்கு திரன்பேசியில் தகவல் சொன்னான்.
“வந்துட்டியா...?” கோபமும் அதிர்ச்சியும் கலந்து
வள்ளியின் கேள்வி வந்தது.
“ஆமா... வேற என்ன பண்றது...? லேட் ஆகும்னு சொன்னா... அதுபோக வார வாரம் இப்படித்தானாமே...
ஸோ... நோ வொர்ரிஸ்ன்னு சொல்லி என்ன அனுப்பிவிட்டுட்டா...” வேண்டுமென்றே வள்ளியை சீண்டி
பார்த்தான்.
“அப்படியா ராஜா... கிளம்பிட்டியா? இல்ல இன்னும் அங்கதான் இருக்கியா...?” இந்த கேள்வி என்ன விதமான உணர்வுகள் கலந்தது என்று
ஆதித்யாவுக்கு புரியவில்லை, ஆனாலும் பதில்
மட்டும் சொன்னான்.
“இதோ கிளம்ப போறேன்...”
“சரி ஒரு கப்ஐஸ் மட்டும்
கொண்டுவந்துரு...” என்று சொல்லிவிட்டு அழைப்பை வள்ளி துண்டித்தாள்.
லேசாக
சிரித்தபடி தனது திரன்பேசியை பார்த்து, ‘உன் வளர்ப்பு மேல அவ்ளோ நம்பிக்கை...’ என்று
சொல்லிவிட்டு நிமிர்ந்து யாழினியை பார்த்தான். அவள் மும்முரமாக கணக்கு
எழுதிவைத்திருந்த புத்தகத்தை பார்த்து பேனாவில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். யாழினி
பேனா பிடித்திருக்கும் அழகையும், கணக்குகளை பார்க்க இரண்டு
நோட்டுகளின் மேலும் மாறி மாறி பாயும் அவள் விழிகளில் இருந்த தெளிவையும், ஆதித்யா தன்னை மறந்து ரசிக்க தொடங்கினான். கடையின் வாசலில் வந்து நின்ற
ஒரு வண்டியின் சத்தம் அவனை தெளிவுர செய்தது.
கருப்பு பல்ஸர்
ஒன்று மதுமிதா டீ ஸ்டால் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து வாலிபன் ஒருவன்
இறங்கி நேராக கடைக்குள் வந்தான். யாழினி அவனை நிமிர்ந்து ஒரு பார்வை
பார்த்துவிட்டு மீண்டும் கணக்கு புத்தகத்தில் மூழ்கினாள். கடைக்குள் வந்தவன், மேசைகள் அனைத்தையும் கடந்து உள்ளே ஃப்ரீஸர் இருக்கும்
இடதிற்கு சென்று, ஃப்ரீஸரை திறந்து ஒரு கப்ஐஸ்கிரீமை எடுத்து
சாப்பிட தொடங்கினான். அங்கேயே நின்றபடி அந்த கப்ஐஸ்கிரீமை உண்டு முடித்துவிட்டு, கப்பை குப்பையில் போட்டுவிட்டு, வாஷ் பேசினில்
கைகளை கழுவிவிட்டு, கைகளை உதறியபடியே யாழினியை நோக்கி
நடந்துவந்து அவள் தோள் மீது போட்டிருந்த துப்பட்டாவில் கை வைத்தான்.
அதுவரை அமைதியாக
அமர்ந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதித்யா, சட்டென்று எழுந்து துப்பட்டாவை பிடிக்க வந்த கையை தனது
இடக்கையால் மறித்து, அந்த வாலிபனை முன்னே இழுத்து தனது
இரண்டு கைகளை கொண்டு அவன் கையை முறுக்கி முதுகு பக்கம் கொண்டுவந்து மேசைமீது அவன்
முகத்தை அழுத்த, கணக்கு பார்த்துக்கொண்டிருந்த யாழினி, பதறியபடி எழுந்து,
“ஐயோ ஆதி, அது நம்ம ஃப்ரெண்ட் விமல்...” என்று அலறினாள்.
பயணம் தொடரும்..!
தொடர்ந்து படிக்க - Episode 06
இக்கதை பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
அன்பு நண்பன்
-டெக்ஸ்டி
__________________________________________
Comments
Post a Comment