12. முதல் கடிதம் – தொடக்கம் - காதல் கடிதங்கள் 2022


 01/01/2022

------

அன்பு தோழிக்கு,

     வணக்கம்.

     இனிய புத்தாண்டு நல்வழ்த்துகள்!

     நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி. இந்த நன்றியை நானும் அலைபேசியிலேயே சொல்லிவிட்டேன் இருப்பினும் கடிதத்தில் எழுத ஆசை கொண்டேன். பகிரியில்(whatsapp) உன் வாழ்த்துசெய்தி படித்தேன். பதில் சொல்லவில்லை என்ற கோபம் இருந்தால் மன்னிக்கவும். பண்டிகையின்போது பொதுவாகவே யாரெல்லாமோ வாழ்த்து செய்தி அனுப்புவது வழக்கம். உந்தன் வாழ்த்தும், உனக்கு எந்தன் வாழ்த்தும் அப்படி பத்தில் ஒன்றாய் இருக்கவேண்டாம் என்று ஆசை கொண்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

     உணர்ச்சிகள் வெளிப்படுத்தபடும் முறை, காலத்திற்கு ஏற்றார்போல மாறத்தான் செய்கிறது.  கத்தி கூச்சலிட்டும், முரசுகள் ஒலித்தும், கை தாளம் போட்டும், கண்ணீர் சிந்தியும், சிரித்தும், மௌன மொழியிலும், இன்னும் எத்தனையோ வழிகளிலும் உணர்ச்சிகள் வெளிபடுத்தபடுகிறது. இன்று பகிரியிலும், முகநூலிலும், படவிரியிலும்(Instagram) பதிவுகளை செய்து தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

     ஆனால் எனக்கு கடிதங்கள் வழியே அதை செய்ய ஆசை. குறிப்பாய் உன்னிடம் நான் கொண்ட உணர்வுகளை அப்படி வெளிப்படுத்தவே ஆசை கொள்கிறேன். உனக்கு இது விசித்திரமாய் தோன்றலாம். கடிததின் சிறப்புகளை சொல்கிறேன் கேள்.

     உணர்ச்சிகளை தெளிவாய் வெளிப்படுத்தும், வளர்க்கும் ஒரு வழியே கடிதங்கள். கடிதங்கள் ஒரு தனி மொழி. தனக்கென்று ஒரு இலக்கணம் கொண்டது. விடுநருக்கும் பெறுனருக்கும் மட்டும் அது தனி கதை ஒன்று சொல்லும்.

     இந்த அதிவேகமான காலத்திற்குமுன், ‘உலகம் என் உள்ளங்கையில்’ என்று மாறுதட்டும் காலத்திற்கு முன், கடிதங்கள் எழுதப்பட்ட காலகட்டத்தில், வாழ்வில் ஒரு மென்மை இருந்தது, மற்றவர் நேரத்திற்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்ற மனப்பான்மை அதிகம் இருந்தது, இன்றைய சூழல் போல குழப்பம் நிறைந்ததாய் இல்லை. காரணம், அன்று தெளிவான கருத்துக்கள் உணர்வுப்பூர்வமாகப் பரிமாறபட்டது. இன்று வெறும் வார்த்தைகள் மட்டுமே பரிமாறப்படுகிறது. உணர்ச்சிகளை வெளிக்காட்ட பலர் மறந்துவிட்டனர். குறிப்பாக இளைஞர்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது பலவீனம் என்று கருதும் சமுதாயம் உருவாகி வலுபெற்றுக் கொண்டிருக்கிறது.

     இந்த சூழலில், தெளிவான அழகான ஆழமான உண்மையான மென்மையான உணர்வுபூர்வமான வார்தைகளை கொண்டு கடிதங்கள் வரைந்து ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள இதுவே சிறந்த வழி என்று நம்புகிறேன்.

     நாம் நேரில் அதிகம் பேசியதில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள அதிக நேரம் செலவழிக்கவில்லை. ஆனால் நம்மிடையில் தோன்றிய இந்த உணர்ச்சிகள் பொய்யல்ல என்று நம்புகிறேன். குறுகிய காலத்தில் நாம் எடுத்த பல முடிவுகளுக்கு இந்த கடித வழி உரையாடல் பலம் சேர்க்கும் என்று நம்புகிறேன். மனதை அமைதிப்படுத்த நீ சொல்லிக்கொடுத்த வழியில் இந்த சிந்தனைகளை அலசி ஆராய்ந்தபிறகே இந்த கடிதத்தை எழுதினேன். நீயும் அவ்வாறே யோசித்து சரி என்று தோன்றினால் பதில் கடிதம் எழுது.

இப்படிக்கு

இனிய தொடக்கத்தை எதிர்பார்க்கும்

நான்!

<---Previous Post

__________________________________________

காதல் கடிதங்கள் முற்றும்...!

__________________________________________


கடிதங்களின் கவிதை...!


புது மாயை அது…!
இத்தனை ஆண்டுகளில் இல்லாத மாயை
கண்டதும் காதலில் நம்பிக்கையில்லை ஆனாலும்
இவர்கள் முகம்பார்த்து மனம் உணர்ந்த அந்த நொடி
மாயை இல்லை உண்மைதான்..!
இவர்கள் பேசிய எதிர்கால திட்டங்கள்
மாயை இல்லை உண்மைதான்..!
திட்டங்கள் எல்லாம் கைகூடும் என்ற நம்பிக்கை
மாயை இல்லை உண்மைதான்..!
மனதில் உதித்த ஆசைகளும் பயங்களும்
மாயை இல்லை உண்மைதான்..!
எதிர்ப்பை ஒன்றாக வெல்வோம் என்ற வார்த்தைகள்
மாயை இல்லை உண்மைதான்..!
அந்த எதிர்ப்புகள் வந்ததும் தோன்றிய பயங்கள்
மாயை இல்லை உண்மைதான்..!
பெற்றோரின் பாசமும் அதன் கண்ணீரும்
மாயை இல்லை உண்மைதான்..!
குடும்பம் என்ற கூட்டின் அஸ்திவாரம் ஆடியது
மாயை இல்லை உண்மைதான்..!
பிறர் நன்மைக்காக செய்யப்பட்ட தியாகங்கள்
மாயை இல்லை உண்மைதான்..!
ஆசைகள் தோன்றிய அந்த தருணங்கள் எல்லாம்
உண்மை இல்லாமல்...
மாயையாக இருந்துவிடக்கூடாதா என்று வேண்டிய வரம்
மாயை இல்லை உண்மைதான்..!
 
இந்த உலகில் எதுவும் மாயையில்லை எல்லாம் உண்மைதான்
முடிவுகள் எதுவும் இன்பம் இல்லை எல்லாம் துன்பம்தான்
துன்பங்களை தேர்ந்தெடுத்து சந்திக்க மனம் தயாரானால்
இன்பம் என்பதை போராட்டத்தின்போதே மனம் அடையும்

நன்றி!

__________________________________________

காதல்  சிறுகதைகள் 

01. அழகிய விடியல் 

02. அமைதியின் அழகு

__________________________________________

இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..! 

காதலின் ஒவ்வொரு சாயலையும் வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆசையில், இந்த சாயலை வெளிக்காட்ட எழுதப்பட்ட பதிவுகள் இது...!

இந்த முயர்ச்சியில் என்னோடு பயணித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!  

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!

கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments