11. முதல் பதில்கடிதம் - காதல் கடிதங்கள் 2022


05/01/2022

------

ஆச்சரியம் நிறைந்தவருக்கு,

     வணக்கம்.

     இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

     பள்ளிக்கூடம் முடித்தபிறகு நான் எழுதும் முதல் கடிதம் இதுதான் என்று நினைக்கிறேன். கல்லூரியில் தமிழும் இல்லை, கடிதம் வரையும் பத்து மதிப்பெண் கேள்வியும் இல்லை.

     அப்பப்பா... எத்தனை ஆழமான சிந்தனை உங்களுக்கு. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை. வேகம் என்ற ஒன்றை, தேவை இல்லாத இடங்களில் பயன்படுத்திவிடுகிறோம். ஒரு நிமிடத்தில் பத்து பகிரி செய்திகள் அனுப்பி பதில் எதிர்பார்த்து, அந்த சில நொடி காத்திருப்பிற்கு, எத்தனை கூச்சல்கள், எத்தனை சண்டைகள். அதற்கு இந்த கடிதம் எத்தனையோ மேல் என்று நம்புகிறேன். உணர்ச்சிகளை பரிமாற கடிதங்கள் ஒரு நல்ல வழியே.

     உங்களுக்கும் எனக்குமான புரிதலை அதிகரிக்க நிச்சயமாய் கடிதங்கள் உதவும் என்பது உங்கள் முதல் கடிதத்திலேயே எனக்கு நன்கு புரிந்துபோயிற்று. உணர்ச்சிகளின் ஆழம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் நீங்கள் போன கடிதத்தில் எழுதியிருந்தது நான் சிறிதும் எதிர்பாராதது. நானும் மனதை அமைதிப்படுத்தி யோசித்தேன். கடிதம் எழுத முடிவெடுத்தேன்‌.

     உங்களை முதல் முறை கோவிலில் சந்தித்தபோது இதை நான் எதிர்பார்க்கவில்லை. பேசிய கொஞ்ச நேரத்தில் என் மனம் உங்களிடம் பறிபோனது உண்மைதான். ஆனால் நான் அத்தனை ஏக்கத்தில் இருந்தேனா அல்லது நீங்கள் அத்தனை உயர்ந்தவரா என்ற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. குறுஞ்செய்திக்கும், பகிரி செய்திக்கும் பதில் வராமல் போகவே, நீங்கள் ஏதோ அன்று ஒருநாள் பொழுதுபோக்கிற்காக, கோவிலில் நேரத்தை கழிக்க அத்தனை இனிமையாக பேசிவிட்டு மறுநாள் ஊருக்கு சென்றதும் என்னை மறந்துவிட்டீர்கள் என்று முடிவே செய்துவிட்டேன். இன்றைய நிலைமை அப்படிதானே உள்ளது. ஏதோ ஒரு வேகத்தில் ஒரு முடிவெடுத்து அதையே பற்றிக்கொள்ளும் மனநிலை இன்றைய இளைஞர்களாகிய நம்மிடத்தில் பெருவாரியாக இருக்கத்தான் செய்கிறது. ஒரு வகையில் நம் முடிவும் அப்படிதான் என்று நான் நினைத்தேன். ஒரு நாள், முழு நாள்கூட இல்லை, சில மணி நேரங்களே நாம் நேரில் பேசினோம். அதை தொடர்ந்து இரண்டு செல்போன் அழைப்புகள், அவ்வளவே தான்.

     சொந்த ஊர்காரர் என்ற முறையில் பல வருடங்களாக ஒருவரை ஒருவர் தெரிந்திருந்தாலும் வெறும் திருவிழாக்காலத்தில் மட்டுமே நாம் சந்தித்திருக்கிறோம். அதில் ஒரே ஒருமுறைதான் அதிகம் பேசினோம். அதுவே நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டது. பல ஆண்டுகள் இல்லாமல் இந்த ஆண்டில் அப்படி என்ன நேர்ந்தது என்று புரியவில்லை ஆனால் இது பிடித்திருக்கிறது. உங்களை, உங்கள் சிந்தனைகளை பிடித்திருக்கிறது. மேலும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள நிச்சயமாய் கடிதங்கள் உதவும். எனவே ஒவ்வொரு கடிதத்திலும் கேள்வி பதில் என்று தனி பிரிவு வைத்துக்கொள்வோமா? கடிதத்தின் ஆரம்பத்தில் தெரிவிக்க வேண்டிய செய்திகளை சொல்லி, இறுதியாக சென்ற கடிதத்தில் குறிப்பாய் கேட்டிருந்த கேள்விக்கு பதில்களையும், அந்த கடிதத்தை படிக்கும்போது உதித்த கேள்விகளையும் இந்த பிரிவில் எழுதலாம் அல்லவா? கடித இலக்கணத்தில் அதற்கு இடம் உண்டல்லவா?

     பகிரியில் ஒரு கேள்வி கேட்டுவிட்டு அதன் பதிலை எழுதும் முன்பே மேலும் பத்து கேள்விகள் தொடரும், பதில் தாமதம் ஆனால் சண்டை வரும், புரிதலுக்கு முன்பே பிரிவு வரும். நீங்கள் குறிப்பிட்டிருந்ததுபோல கடிதம் அமைதியை கற்பிக்கிறது. நிதானத்தை பழக்கப்படுத்தும் என்று தோன்றுகிறது. இந்த கடிதம் எழுத ஆரம்பித்தபோதிருந்த சின்ன தயக்கம், ஒவ்வொரு வார்த்தைகளாக ரசித்து எழுதுகையில் விலகி போயிற்று. மாறாக, உங்களை நேரில் பார்த்து இது அத்தனையும் சொல்வதுபோல நாணம் தோன்றுகிறது. ஆனால் வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது. உங்கள் இந்த சிந்தனைக்கு நன்றிகள்.

     இந்த கடிதத்தின் பதிலுக்காக எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த காத்திருப்பை நினைக்கும்போதே மினம் லேசாய் இன்பத்தில் மூழ்கத் தொடங்குகிறது. வாழ்வில் இந்த மனநிலை இதுவே முதல்முறை. இன்னும் பலமுறை இதை அனுபவிக்கும் ஆசையுடன் இந்த கடித்தத்தை நிறைவு செய்கிறேன்.

 

இப்படிக்கு

இனிய தொடக்கத்தை ஏற்கும்

நான்!

<---Previous Post      ------      Next Post--->

__________________________________________

இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள். 

இது என் அன்பு வேண்டுகோள்...!  

__________________________________________

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


காதல் கடிதம் எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments