08/01/2022
------
என்
உயிருக்கு,
இந்த
ஆன்மா ஆசைகளுடன் எழுதுவது.
கடிதங்களின்
ஆழத்தை நீ புரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி. ‘இந்த
காலத்தில் என்ன கடிதம்?’ என்று நீ குறுஞ்செய்தி அனுப்பி என் கடிதத்தை கேலி செய்வாயோ
என்று பயந்தேன். உன்னிடம் இருந்து ‘கடிதம் வந்ததா?’ என்ற
குறுஞ்செய்தி வந்தபோது என் மனதில் ஏற்பட்ட ஆனந்ததிற்கு அளவே இல்லை சகி.
ஆம், ‘சகி’ எனக்கு
தமிழில் பிடித்த ஒரு அழகான வார்த்தை. உன்னை நான் அப்படியே அழைக்க விரும்புகிறேன்.
அழைக்கலாம் அல்லவா?
சகி, இந்த
வாழ்க்கை மிக அழகானது. வேகவேகமாய் அனுபவிக்க எனக்கு ஆசை இல்லை. நிதானித்து ஒவ்வொரு
நொடியும் என்னவென்று உணர்ந்து வாழவே ஆசைகொள்கிறேன். என் ஆசைகளின் பட்டியலை
சொல்கிறேன் கொஞ்சம் பொறுமைகாத்து படிக்க வேண்டும்.
இவ்வுலகின்
அழகு இன்பங்கள் அனைத்தும் அனுபவிக்க ஆசை. என் தொழிலில்
நான் சிறக்க ஆசை. அம்மை அப்பன் பெருமைகொள்ள நான் ஏதேனும் சாதிக்க ஆசை. இந்த
ஆசைகளை எல்லாம் பகிர்ந்துகொள்ள உனைபோன்ற ஒரு ஆன்மா உடனிருக்க ஆசை. உன்னோடு
சேர்ந்து பேருந்து பயணம் ஆசை, வானில் பறக்க ஆசை, வங்கிப்படிவங்கள்
நிரப்ப ஆசை, காலை மதியம் இரவு உணவு திட்டமிட ஆசை, இருவர்
இணைந்து ஒன்றாய் பல பண்டிகைகள் கொண்டாட ஆசை. துன்பங்கள் நிறைந்த இவ்வுலகில் உன்
கரம்கோர்த்து குடும்பம் என்ற சுமை ஏற்க ஆசை. ஆளுக்கொரு செல்லப்பெயர் வைக்க ஆசை.
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த வாழ்க்கை ஒன்றை அமைக்க ஆசை. உன்னோடு இணைந்து அனுபவிக்க
இன்னும் எத்தனையோ ஆசைகள் உண்டு. இவை எல்லாம் நடக்குமா என்ற எதிர்பார்ப்போடு பயமும்
கொஞ்சம் உண்டு. அந்த பயம் விலகி தைரியம் பிறந்து நிம்மதியாய் வாழ ஆசை.
இத்தனை
ஆசைகள் கொஞ்சம் பேராசைதான் சகி. ஆனால் அனைத்தும் அனுபவிக்கப்பட வேண்டியவை என்று
நம்புகிறேன். உன் ஆசைகளையும் இந்த பட்டியலில் இணைக்க ஆசைகொள்கிறேன். இருவர்
கனவுகளும் பலிக்க இருவரும் உழைப்போம். பிறர் மனதை காயப்படுத்தாத எந்த ஒரு இன்பமும்
தவறில்லை. அவை அனைத்தையுமே நாம் அனுபவிப்போம் சகி.
கேள்வி பதில் : -
இது
ஒரு நல்ல வழிமுறை சகி. கடிதத்தில் கேள்வி பதில் பாகம் அமைவது வழக்கம்தான்.
கருத்துக்களை பரிமாற நான் கடிதங்களை தேர்ந்தெடுத்தேன். நீ அதை மெருகேற்றுகிறாய்.
நம் வாழ்வும் இதுபோலவே அமையும். ஒருவரை ஒருவர் மேன்மையடைய செய்வோம்.
உன்
ஆசைகளை நான் அறியவிரும்புகிறேன். அடுத்த கடிதத்தில் அதை குறிப்பிடு. இந்த கேள்வி
பதில் பாகம் நாம் நம்மை கடிதத்தில் புரிந்துகொள்ள மிக அருமையாக உதவும் என்று
நம்புகிறேன். உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
இன்னும் பல
ஆசைகளுடன்
என் சகியின் நான்!
<---Previous Post ------ Next Post--->
__________________________________________
இது என் புது முயற்சி.
பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள்.
இது என் அன்பு வேண்டுகோள்...!
__________________________________________
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment