அழகிய விடியல்
வானில்
வடமேற்கில் திங்கள் இன்னும் மறையவில்லை. ஆனால் ஞாயிறு தன் கதிர்களை பிரகாசமாக
நீட்டிக்கொண்டு கிழக்கில் குடியிருந்த மேகங்களில் இருந்து வெளியே வரத்தொடங்கிவிட்டான்.
அவன் தன் ஒளியால் பூமி எங்கும் படர்ந்து அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பினான்.
புட்களில் உறங்கிக்கொண்டிருந்த பனித்துளிகள் கரைந்தன. கூட்டினில்
உறங்கிக்கொண்டிருந்த பட்சிகள் தங்கள் சிறகுகளை உதறிக்கொண்டு எழுந்து அந்த
காலைபொழுதினில் சூரியஒளிபட்ட ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. குயில்களும் குருவிகளும்
ஒன்றிணைந்து பாடல்கள் புனைந்தன. கண்மணியின், வீட்டு
சாளரம் வழியே, அந்த இசையும், கதிரவனின் ஒளியும், காலை
வெப்பத்தின் இதமும் புகுந்து அவளை எழுப்பியது.
விழித்தபடி
கண்மணி தன் படுக்கையிலேயே வெகுநேரமாக படுத்தே இருந்தாள். மனம் முழுமையாக விழித்துவிட்டது
ஆனாலும் உடல் சோர்வு அவளை விட்டு நீங்கவில்லை. படுக்கையில் போர்வையை போர்த்தி
படுத்தபடியே சாளரம் வழியே ஓங்கி வளர்ந்திருக்கும் மரத்தையும் அதில் குடியிருக்கும்
அழகு பறவைகளையும் அவை போடும் கூச்சல்களையும் கவனித்தபடி, கடந்த ஒன்றரை
ஆண்டிற்குள் தன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று யோசித்தவண்ணம்
இருந்தாள்.
“இது சரியா வருமா
மணி”
“உங்க பயம் எனக்கு
புரியுது கதிர், பட் ஐ ஃபீல் இட்ஸ் த ரைட் டைம்”
“இன்னும் கொஞ்ச
நாள் போனா என்ன?”
“என்ன.. எனக்கு
கல்யாணம் ஆகிடும்... வேற ஒருத்தரோட... நானும் ‘சரி இது
தான் வாழ்க்கை’ன்னு முடிவு பண்ணிட்டு வாழ ஸ்டார்ட் பண்ணிடுவேன்... உங்க
நிலைமைதான் கஷ்டம்”
“அப்படீலா ஆக
விடமாட்டேன் மணி... டோன்ட் வொர்ரி”
“அப்போ வந்து வீட்ல
பேசுங்க”
திட்டவட்டமாய்
கண்மணி சொல்ல, கதிர் தன் வீட்டில் பேசி தனது பெற்றோர்களை கண்மணி
வீட்டிற்கு பெண்கேட்க அழைத்து வந்தான். பேசினார்கள்.
கண்மணி
அவள் வீட்டின் இரண்டாம் மற்றும் கடைசி பெண்பிள்ளை. அப்பா இல்லாமல் அம்மாவின்
சம்பாத்தியத்திலும் சிறிது கடன்வாங்கியும் அக்காவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
கல்யாணம் முடிந்தது. அந்த கடன் மொத்தமும் தானே ஏற்றுக்கொண்டாள். சமீபத்தில்தான் அந்த
கடனை அடைத்து முடித்தாள்.
“என்னோட கல்யாணம்
சிம்பிளா கோவில்ல பண்ணலாம் மா... பெருசா எதுவும் வேண்டாம்”
தன்
பிள்ளை சொன்ன வார்த்தையை கேட்டு மனம் ஒடிந்துபோனாள் அம்மா. அந்த பாசம் கோபமாக வெளிப்பட்டது.
“அப்படி ஒண்ணும்
அவசியம் இல்லடி… என் சம்பாத்தியம் கம்மிதான் ஆனா அக்காக்கு ஒருமாதிரியும்
தங்கச்சிக்கு ஒரு மாதிரியும் பிரிச்சி பாக்குற அம்மா இல்ல நானு... கடன
பத்திஎல்லாம் நீ கவலை படவேண்டாம்... என் காலத்துக்குள்ள நானே அடச்சிடுவேன்...
அவ்ளோ ஒண்ணும் உன் அம்மா கையாலாகாதவ இல்ல...” கோபத்தோடு
கண்ணீரும் வந்தது.
“அம்மா... பட
படன்னு பேசாம கொஞ்சம் யோசிச்சி பேசுங்கம்மா...”
“ஆமா..டி யோசிச்சி
தான் பேசுறேன்... அவ கடனை நீ ஏத்துக்குறன்னு சொன்ன அப்போ சரின்னு சொன்னதுக்கு
காரணம்... என்னால முடியாதுன்னு இல்ல... பொறுப்பா கேக்குறியே தட்ட வேண்டாம்னு
தான்...! அது உன்னால முடியலன்னா ஒண்ணும் பிரச்சனை இல்ல... நீ சேத்து வை.. என்
சம்பளம் போதும் அந்த கடனை அடைக்க... உன் கல்யாணத்துக்கு வாங்குர கடனையும் சேத்து
அடைக்க முடியும் என்னால...!” கோபமும் கண்ணீரும் கலந்து தன்னம்பிக்கையுடன் அம்மா
பேசினாள்.
“இப்பவும் நான் பொறுப்பாதான்
பேசுறேன்... வாழ்க்கை முழுக்க கடன் கட்டிட்டே இருக்கப்போரீங்களா?”
“இதுக்கு மேல
எனக்கு என்னடி வாழ்க்கை... உங்க சந்தோஷம்தான் என் வாழ்க்கை”
“நீங்க கடனாலியா
வாழ்றதுதான் எங்க சந்தோஷம்னு நாங்க சொன்னோமா?”
“அதிகம் பேசாத
கழுத... போ போயி ஆகுற வேலைய பாரு”
வேறொரு
சூழ்நிலையில் வேறுவிதமாக பேசி தன் முடிவை அம்மா ஏற்றுக்கொள்ளும்படி கண்மணி செய்தாள்.
ஆனால் அவள் என்ன பேசினாலும் தன் காதலை ஏற்கும் மனநிலைக்கு அம்மாவை கொண்டுவருவது
அவளால் முடியாது என்பது அவள் நம்பிக்கை. எனவே கதிரை தன் வீட்டாரோடு வந்து
பெண்கேட்கும்படி வேண்டுகோள் விடுத்தாள். கதிர் தன் பெற்றோர்களிடம் தங்கள் காதலைப்பற்றி
பேசும்போது தானும் உடனிருப்பதாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவன்
தன் வீட்டில் பேசிய மறுநாளே கண்மணியை வீட்டிற்கு அழைத்து சென்று அம்மா அப்பாவிடம்
நேரில் அறிமுகம் செய்தான்.
“எங்களுக்கு பொண்ண புடிச்சிருக்குடா..
எப்போன்னு சொல்லு போய் பேசிட்டு வந்துடலாம்” கதிரின் அம்மா
சொன்னார்கள்.
“என்ன மணி பேசுன
அப்படி...? அம்மா மொகத்துல அவ்ளோ சந்தோஷம்.. எப்படி...?”
“அதெல்லாம்
அப்படிதான்... என் அம்மாகிட்ட பேசுறதுதான் எனக்கு கஷ்டம்...”
அந்த
கஷ்டத்தை கதிரின் அம்மா கவனித்துக்கொண்டார்கள்.
“நீங்க
பயப்படவேண்டாம்...! எனக்கு பொண்ணு இல்லை... இவளை என் பொண்ணு மாதிரி
பாத்துக்குறேன்...! என் பையனுக்கு உங்க பொண்ண என்னை நம்பி கொடுங்க” பாசமாய்
கதிரின் அம்மாவும் அப்பாவும் கண்மணியின் அம்மாவிடம் சொல்ல, அவர்களால்
மறுக்க முடியவில்லை.
“நகை, ரொக்கம்
அப்படி எதுவும் வேண்டாம். எப்படியும் கல்யாணம் முடிஞ்சி தீபாவளி பொங்கல்ன்னு
பசங்கள கவனிக்கணுமில்லயா... உங்கள கடன்ல தள்ளிட்டு இவங்க வாழ்க்கை ஆரமிக்க
வேண்டாமே.. நீங்க முடிஞ்சதை மட்டும் செய்ங்க... எப்பனாலும் உங்க பொண்ணுக்கு நீங்க
செய்றதுதானே” கதிரின் அப்பா சொன்னார்.
கல்யாண
செலவுகள் மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண்வீட்டிற்கும் சரிசமமாக பிரிக்கப்பட்டது.
“நகைய பத்தி
உங்களுக்கு கவலை வேண்டாம் அத்தை... நான் பாத்துக்குறேன்”
அக்காவின் கணவர் தானே முன்வந்தார். தன்னால் இயன்றதை அவர் செய்தார்.
தேதி
குறிக்கப்பட்டது. ஆசைபடி கோவிலில் கல்யாணம் என்று முடிவாகியது. கண்மூடித் திறப்பதற்குள் கல்யாணம் நடந்து
முடிந்தது. சொன்னசொல்படியே மகளை போலவே அவளை நடத்தினார்கள். அவ்வபோது அம்மாவை
சென்று பார்த்து வந்தாள். கல்யாணதிற்கு பிறகும் காதல் குறையாமல் கதிர் இருந்தான்.
வேக
வேகமாக இத்தனையும் எப்படி நடந்தது என்ற வியப்பில் ஆறுமாத கற்பினியான கண்மணி தன்
வயிற்றின்மீது கைவைத்து தடவிக்கொடுத்தபடியே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி தன்
படுக்கையில் படுத்தபடி சாளரம் வழியே காலை வெயிலையும் கூச்சலிடும் குருவிகளையும்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
வாழ்வில்
இது அடுத்த கட்டம் என்று நினைக்கும்போது மனதில் ஒருவித பயம் தோன்றுகிறது.
குடும்பத்தார் உதவியின்றி இத்தனை காரியம் நடந்திருக்காது. அது போல அவர்களின்
அரவணைப்பில் இனியும் எல்லாம் இனிமையாகவே நடக்கும் என்று தனக்குதானே
சொல்லிக்கொண்டாள்.
“குட் மார்னிங்
ப்ரின்சஸ்” கையில் காஃபி ஏந்தியபடி கதிர் அவள் முன் தோன்றினான்.
“குட் மார்னிங்...
பட் ஐ எம் நாட் ப்ரின்சஸ், ஐ எம் குயின்” என்று சொல்லியபடி
தன் வயிற்றை சுட்டிக்காட்டினாள்.
“உனக்கு யார்
சொன்னா...? நான் என்னோட இளவரசிக்கு சொன்னேன்” என்று
சொல்லி கண்மணியின் அருகில் அமர்ந்து அவள் வயிற்றில் கதிர் முத்தமிட்டான்.
இவை அனைத்தையும் கண்மணிவீட்டின் சாளரத்தின் வழியே மரத்தில் இருந்த பட்ச்சிகள் கவனித்தன. அந்த அழகிய விடியலின் காட்சிகளை கண்டு மேலும் இன்புற்று தங்கள் பாடல்களை வெகுநேரம் தொடர்ந்தன.
முற்றும்..!
<---Previous Post ------ Next Post--->
__________________________________________
இப்பதிவு பிடித்திருந்தால் தமிழ் வாசிக்கும் நண்பர்களுக்கும், நேசிக்கும் உள்ளங்களுக்கும் பகிருங்கள்..!
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment