08. உங்கள் வீடு எப்படி - காதல் கடிதங்கள் 2022


18/01/2022

------

அன்பு தோழிக்கு, ஆசை தோழன் எழுதுவது,

     பொங்கல் நல்வாழ்த்துகள்!

     வருடத்தின் கடைசி நாளும் முதல் நாளும் உந்தன் கடிதத்தோடே கழிந்தது உன் ஆசைபடியே!

     நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையைதான் நிறைவேற்ற முடியவில்லை. மன்னிக்கவும்.

     இங்கு பொங்கல் நல்லபடியாக முடிந்தது. உங்கள் வீட்டில்?

     இங்கு அம்மாவும் தங்கையும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொரு தின்பண்டம் செய்து அசத்தினர்.  எங்கள் வீட்டில் பொங்கல் என்றாலே கொஞ்சம் கலாட்டா கலந்துதான் இருக்கும். சொந்தங்கள் எல்லாம் வந்து வாழ்த்திவிட்டு சென்றார்கள். வடை பாயாசம் சாம்பார் அப்பளம் மூன்றுவகை பொரியல் என்று சைவ விருந்து நடக்கும். என் அம்மாவின் சாம்பாருக்கு என் நா அடிமை. உனக்கு சமையல் தெரியுமா? தெரியவில்லை என்றாலும் பாதகமில்லை. அம்மா கற்றுத்தருவார்கள். கவலை வேண்டாம்.

     அடுத்த பொங்கலுக்கு வீட்டில் இன்னொரு ஆள் இருக்கும் என்று எங்கள் உறவுக்காரர்களும் கேலிசெய்துவிட்டு போனார்கள். எனவே அடுத்த பொங்கலுக்கு  மறக்காமல் இங்கு வந்துவிடு. குடும்பத்தோடு வந்துவிடுங்கள்.

     கேட்க வேண்டும் என்று நினைத்தேன், உன் குடும்பம் பற்றி கொஞ்சம் எழுதேன். உன் அடுத்த கடிதத்தில் அதை நான் எதிர்பார்க்கிறேன். எனவே இந்த கடிதத்தில் நான் என் குடும்பத்தை பற்றி சுருக்கமாக எழுதுகிறேன். அம்மா வீட்டின் முதலாளி, அப்பாவிற்கு சொந்த தொழில், எனவே அவரை கையில் பிடிப்பதே கடினம். அதனால் அம்மா தான் மொத்தச் செல்லமும்.  தங்கை மிகவும் பாசமானவள். நாங்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. பொதுவாக இருக்கும் எலியும் பூனையும் போல இல்லாமல் நாங்கள் நெருக்கமான நண்பர்கள் போலவே பழகுவோம். நம் செய்திதான் நான் அவளிடம் காத்த முதல் ரகசியம். விரைவில் அதையும் அவளிடம் சொல்ல ஆசைபடுகிறேன்.

     கேள்விபதில் செல்வோமா?

     எழுதுவது படிப்பின் வெளிபாடு. நல்ல புத்தகங்கள் நிச்சயமாய் நல்ல எழுத்துக்களை கொடுக்கும். உனக்கு அதில் என் உதவி கிடைக்கும். சீக்கிரமே ஒன்றிணைந்து கற்போம்.

     தெளிவு என்பது கஷ்டங்களை கடந்துதான் அடையவேண்டி இருந்தது. அந்த கஷ்டத்தின் பட்டியலை நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன்.

     சம்மதம். அத்தனை ஆசைகளையும் ஒன்றிணைந்து செய்ய பரிபூரண சம்மதம்.

     எனக்கு ஊர் சுற்றுவது என்றால் ரொம்ப இஷ்டம். உனக்கு பிடிக்குமா? எங்கெல்லாம் சென்றிருக்கிறாய்? எங்கெல்லாம் செல்ல ஆசை? உன் விருப்பங்கள் அறிய காத்திருக்கிறேன்.

 

என்றும் என்றென்றும் உந்தன்

நான்..!


<---Previous Post      ------      Next Post--->

__________________________________________

இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள். 

இது என் அன்பு வேண்டுகோள்...!  

__________________________________________

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


காதல் கடிதம் எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments