06. நல்ல செய்திகள் - காதல் கடிதங்கள் 2022


26/01/2022

------

அன்பு சகிக்கு ஆசை நான் எழுதுவது,

         நலம் நலமறிய ஆவல்..! உன் குடும்பத்தை பற்றி தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி!

     ஒரு இன்பமான செய்தி...! எனக்கு நான் எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைத்துவிட்டது. இப்போது இருக்கும் வேலையைவிட அதிக சம்பளம். இதற்காகதானே காத்திருந்தோம்... நம் செய்தியை வீட்டில் சொல்லிவிடுவோமா? இனி அதில் உனக்கெதுவும் சிக்கல் இல்லையே? இரண்டு குடும்பமும் வேறு வேறு என்றாலும், இந்த, வேலை உத்யோகம் ஜம்மென்று இருந்தால் எந்த கேள்வியும் வராது என்று நாம் எடுத்த முடிவு சரிதானே? இந்த சமுதாயம் அதைதானே எதிர்பார்க்கிறது?

     உயர்ந்த இடம்..! ம்‌ம்‌ம்...!

     எத்தனை மாயை அது சகி...! உண்மையான உணர்வுகளுக்கு இங்கு மரியாதை குறைவுதான். உன்மீது நானும் என்மீது நீயும் கொண்ட பாசத்தின் ஆழத்தை இந்த சமுதாயம் புரிந்துக்கொள்ளாது. எனவே நாமும் அந்த பிம்பத்தின் நிழலை நாட வேண்டியிருக்கிறது.

     அது எல்லாம் போகட்டும் விடு சகி. நீ என் வாழ்வில் வந்தபிறகுதான் எத்தனை மாற்றங்கள் அதில். அத்தனையும் மிக அழகான மாற்றங்கள். வாழ்வில் நான் பலநாள் வேண்டி காத்திருந்த மாற்றங்கள். என் மனம் மகிழ்ச்சியில் நிரம்பியுள்ளது. நீ அருகில் இல்லை என்பதே பெரிய குறையாக இருக்கிறது. உன் கரம் பிடிக்கும் நாளும் வெகுதூரம் இல்லை என்று நம்புகிறேன் சகி.

     கேள்வி பதில் செல்வோமா?

     ஆம்... புதிதாக வந்த படங்கள் எல்லாம் இயல்பை காட்டுகிறேன் என்ற பெயரில் சமூகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது. ஒரு நல்ல படம் பார்த்து பல மாதங்கள் ஆனதுபோல்தான்  இருக்கிறது. விரைவில் நீயும் நானும் செல்வோம். எந்த படத்திற்கு என்று நீயே முடிவு செய்.

     இப்போது புதிய புத்தகங்கள் எதுவும் நான் படிக்கவில்லை. வேலை பளுதான் காரணம். குட்டி குட்டி கதைகள் படிக்கும் பழக்கம் உண்டு. சில கதைகளை உனக்கும் பகிரியில் அனுப்புகிறேன் படித்துவிட்டு உன் கருத்துக்களை சொல். நீ வாசித்த புத்தகங்களில் உன் மனதிலும் குணத்திலும் மாற்றங்கள் உண்டுசெய்த கருத்துக்கள் என்னென்ன? 

     கடவுள் நம்பிக்கை எனக்கு பெரிதாய் இல்லை. ஆனால் நம்மைவிட மிகப்பெரிய ஆற்றல் ஒன்று இருக்கிறது என்று நம்புகிறேன். அதன்மீது மரியாதையும் இருக்கிறது. இதில் உன் கருத்துக்கள் என்ன?

     இன்னும் நாம் அரசியல் பேசவே தொடங்கவில்லையே... அதை எப்போது தொடங்கலாம்? அதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

     இந்த பறந்து விரிந்த உலகத்தை உன்னோடு சேர்ந்து அனுபவிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.     

என்றென்றும் உன்னவனான

நான்!


<---Previous Post      ------      Next Post--->

__________________________________________

இது என் புது முயற்சி. 

பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள். 

இது என் அன்பு வேண்டுகோள்...!  

__________________________________________

அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!


காதல் கடிதம் எழுதும் இந்த முயற்சியில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! 

நண்பன்
டெக்ஸ்ட்டி

__________________________________________

மேலும் சில முயற்சிகளின் விளைவுகள்..!


படித்து மகிழுங்கள்..!
கருத்துக்களை  பகிருங்கள்..!

Comments