30/01/2022
------
என்னவரே,
உங்கள்
நலமறிய கண்ணீருடன் காத்திருக்கிறேன்.
கண்ணீர்
என்று சொன்னவுடன் நீங்கள் கலங்க வேண்டாம். சென்ற கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது
போல எங்கள் வீட்டில் நமது செய்தியை தெரிவித்தேன். மிகப்பெரிய பூகம்பம் வெடித்தது.
அதனால் ஏற்பட்ட கண்ணீர்தான் அது.
இங்கு
என்னென்ன நடந்தது தெரியுமா? என் திரன்பேசிதான்(smartphone) முதலில்
பறிமுதல் செய்யப்பட்டது. அதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நம் கடிதம் மூலமாக
மட்டுமே பேசிக்கொள்கிறோம் என்று நான் அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால்
எனது அறையில் ஒரு பொட்டு காகிதம் கூட விட்டிருக்க மாட்டார்கள். பேனாக்களோ, தங்கம்
போல பூட்டிவைக்கப்பட்டிருக்கும். எத்தனை மாற்றங்கள் வந்துவிட்டது இந்த சமுதாயத்தில்.
ஆனால் ஏன் என் பெற்றோர்கள் இன்னும் மாறவில்லை என்று ஒன்றும் புரியவில்லை. என் தோழி
ஒருத்திகூட இப்படித்தான், பிடித்திருக்கிறது என்று அவனோடு ஓடிவிட்டாள். வீட்டில் ஒரு
வார்த்தைகூட சொல்லவில்லை. நாம் என்ன அப்படியா திட்டமிட்டோம்?
அவர்களுக்கு மரியாதை கொடுத்துதானே அவர்களிடம் நம் விருப்பத்தை சொல்கிறோம். கொஞ்சம்
கூட அந்த இங்கீதம் இல்லாமல் என் திரன்பேசியை ஏன் அவர்கள் பிடுங்கி வைக்க வேண்டும்?
எங்கள்
வீட்டில் கலவரம் ஆகும் என்பது நாம் எதிர்பார்த்தது தான், ஆனால்
அவர்கள் இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ‘நாங்க அப்படி
என்ன குறை வச்சொம் உனக்கு?’ ‘பெத்து வளத்தவங்களுக்கு கட்டிவைக்க தெரியாதா?’ ‘அப்படி
என்ன அவசரம் உனக்கு?’ இப்படியெல்லாம் கேள்விகள். எனக்கு என்ன அவசரம்ன்னு
கேட்க்ராங்க, ஆனா வாரம் பொறந்தா பத்து ஜாதகத்த எடுத்துட்டு போயி
பொருத்தம் பாத்துட்டு நாலு போட்டோ எனக்கு காட்ராங்க. என்னத்த மனசுல நெனச்சி இந்த
கேள்விய என் கிட்ட கேட்டாங்கன்னு தெரியல.
எல்லாம்
சபைல பேசிமுடிச்ச அப்றமா அம்மா தனியா கூட்டிட்டு போயி ‘சுத்தமாதான
இருக்க’ன்னு கூசாம கேட்டாங்க. இத்தனை நேரம் கோபம் மட்டுமே
இருந்தது. இதை எழுதுகையில் கண்களில் கண்ணீர் தேங்குகிறது. அடக்க முடியவில்லை. என்ன
செய்ய.. பெண்ணாக பிறத்தது பெரிய குற்றம் போலும். இனி என் நம்பிக்கை
எல்லாம் நீங்கள்தான்.
நம்
திட்டப்படி உங்களுக்கு வேலை கிடைத்தவுடன் நான் நம் செய்தியை வீட்டில்
சொல்லிவிட்டேன். அடுத்தது என்ன என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். உங்கள்
வீட்டில் எத்தனை பிரளயம் வெடிக்குமோ தெரியவில்லை. இது எல்லாம் நாம்
எதிர்பார்த்ததுதான். ஆனாலும் மனம் ஓரளவுதானே வேதனைகளை தாங்கும். சொந்தவீட்டில்
இத்தனை கொடுமைகளை நான் அனுபவிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இத்தனை வீரியத்துடன்
எதிர்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இது என் தாய் தந்தை தானா
என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் கேள்விகளும் அறிவுரைகளும் இருக்கிறது. அறிவு
மட்டும் இருபது ஆண்டுக்கு முன்னரே வளர்வதை நிறுத்திக்கொண்டது போல.
சென்ற
கடிதத்தில் நீங்கள் கேட்ட பெரிய கேள்விக்கு பதில் மேலே சொல்லபட்டது என்று
நம்புகிறேன். மற்ற கேள்விகளுக்கு பதில் எழுதும் நிலையில் நான் இப்போது இல்லை.
இந்நிலை மாறும் என்று நம்புகிறேன். பதில் கடிதத்திற்காக காத்திருக்கிறேன்.
சொல்லிலடங்கா
உணர்வுகளோடு
உங்கள் சகி
<---Previous Post ------ Next Post--->
__________________________________________
இது என் புது முயற்சி.
பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள்.
இது என் அன்பு வேண்டுகோள்...!
__________________________________________
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment