08/02/2022
------
அன்பு மனம் கொண்ட உங்களுக்கு,
கனத்த மனத்தோடு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். சென்ற முறை நீங்கள் வந்து எங்கள் வீட்டில் பேசி சென்றது மகிழ்ச்சி. ஆனால் எங்கள் வீட்டோரால் நீங்கள் பட்ட காயத்திற்கு மன்னிப்பு வேண்டுகிறேன். மன்னிப்பு கிடைக்குமா?
இத்தனை பயங்கரமாய் எங்கள் வீட்டில் பேசுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தாங்கிக்கொண்டீர்கள்? என்மீது கொண்ட பாசம் அத்தனை வார்தைகளையும் பொறுத்துக்கொள்ள செய்ததா? ஆனால் அதற்கு கைமாறாக நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. நீங்கள் சிறிதும் எதிர்பாராத செய்தியாய் இது இராது என்பதை நான் நன்கு அறிவேன். எல்லாம் பேசி முடித்துவிட்டு நீங்கள் வீட்டைவிட்டு செல்லும்பொழுது உங்கள் கண்ணால் ஒரு பார்வை பார்த்தீர்கள் அல்லவா, அந்த பார்வை எனக்கு எக்கச்சக்க கேள்விகளையும் பதில்களையும் கொடுத்தது.
ஆம், என்
வீட்டில் நம் செய்தி தெரிந்த நாள்முதல் நான் இங்கு ஒரு அன்னியமாகதான் வாழ்ந்து
வருகிறேன். அப்பா முகம் கொடுத்து பேசுவதில்லை. அம்மா ‘இவளை ஏன்
பெற்றோம்..?’ என்ற கேள்விக்கு பதில் தேடுவதாக யாரிடமோ தொலைபேசியில்
சொல்லிக்கொண்டிருந்தார். தம்பிக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும்
புரியவில்லை.
இல்லை, ‘இது அனைத்திற்கும்
நீங்கள் தான் காரணமா?’ என்ற கவலையை உங்கள் கண்களில் பார்த்தேன். இல்லவே இல்லை.
இது என் சுயநலம். என் சந்தோஷதிற்காக நான் எடுத்த முடிவு. எப்படியும் கடந்துவிடலாம்
என்ற நம்பிக்கையில், நான் கையில் எடுத்த போராட்டம். இனி அந்த நம்பிக்கை இல்லை.
இந்த சமுதாயத்தை நான் குறை சொல்லவில்லை. எத்தனையோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடந்துக்கொண்டுதான்
இருக்கிறது. நம்மை சுற்றி அப்படிப்பட்ட ஒரு வட்டம் உருவாகவில்லை என்பது தான் இங்கு
பிரச்சனை. நம் சுற்றத்தார் அந்த மாற்றங்களை புறக்கணிப்பவராக அமைத்துவிட்டனர். இது
நம் தவறு.
உங்கள்
பெற்றோர் முகங்களையும் அதில் படர்ந்திருந்த கவலை ரேகைகளையும் கவனித்தேன். உங்கள்
தங்கையின் வாழ்க்கையை குறித்து அவர்கள் கவலைக்கொள்வது நியாயம் தானே... நம் ஆசை
நிறைவேறினால் அதிக பாதிப்பு அந்த குழந்தையின் வாழ்க்கைக்குத்தான். ‘என்
பொண்ணு வாழ்க்கையை கொஞ்சம் யோசிம்மா’ என்று உங்கள்
அம்மா கண்ணீரால் தெரிவித்தார்கள். எப்படி உங்கள் குடும்பத்தை இங்கு
அழைத்துவந்தீர்கள்? அவர்களிடம் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் மிக
உயர்வாக சொல்லி அழைத்தீர்களா? வந்து பேச தொடங்கிய ஐந்து நிமிடத்தில் என் அம்மா
அழத்தொடங்கியதுமே நீங்கள் அவர்கள் மனதில் கட்டிய கோபுரங்கள் எல்லாம் தரை மட்டம்
தொட்டுவிட்டதுதானே? என்ன சொன்னார்கள் அம்மாவும் அப்பாவும் இங்கு வந்து சென்ற
பிறகு?
என்
மனதில் எத்தனையோ குழப்பங்களும் கேள்விகளும் ஓடுகிறது. இது தேவைதானா? நம்
முடிவு சரிதானா? உண்மையில் நமக்குள் இருக்கும் உணர்வுகள் உண்மைதானா? இல்லை
இது வெறும் வயசின் கோளாரா? என்று ஆரம்பகாலத்தில் வந்த அதே கேள்விகள் மீண்டும்
வருகின்றது. இல்லை இல்லை நான் அத்தனை முட்டாள் அல்ல. இது உண்மைதான். இந்த
உணர்வுகள் உண்மைதான். எத்தனையோபேரை என் வாழ்வில் நான் கடந்துள்ளேன். சிலரை பிடித்தும்
இருந்தது. ஆனால் இந்த உணர்வு யாரிடமும் இல்லை. உங்களை முதல் முறை பார்த்தபோது வந்த
உணர்வு வேறு யாரிடமும் இல்லை. இது அனைத்தும் உண்மை தான். ஆனால் ஏன் மற்றவர்களுக்கு
இது புரியமறுக்கிறது? என்னதான் பிரச்சனை இவர்களுக்கு? ஒன்றும்
புரியவில்லை. இந்த நொடி இந்த உலகம் அழிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா? இல்லை இல்லை!
இந்த வாழ்வில் இருந்து நான் மட்டும் அப்படியே மறைந்துபோனால்கூட நன்றாகதான்
இருக்கும். அம்மா, அப்பா, தம்பி, நீங்கள், உங்கள் அம்மா, அப்பா, தங்கை,
அனைவருக்கும் இருக்கும் ஒரே தொல்லை நான் மட்டும்தான். நான் இல்லையெனில் எந்த தொல்லையும்
யாருக்கும் இல்லை.
பயப்பட
வேண்டாம்! இது தற்கொலை கடிதம் இல்லை. நான் அத்தனை கோழையும் இல்லை.
இந்த குழப்பத்தில்தான் நான் முடிவெடுத்தேன். சரியோ
தவறோ அந்த முடிவின் விளைவுகளை எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன். தயாராகிவிட்டேன்
என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை எத்தனை உண்மை என்று தெரியவில்லை. ஆனால் வேறு
வழி இல்லை. என் முடிவு தெரிந்ததும் கோபம் கொள்ள மாட்டீர்களே? எந்த
முடிவினால் அதிகம் பாதிப்பு இருக்காதோ அந்த முடிவையேதான் நான் எடுத்திருக்கிறேன். காரணம்
உங்களுக்கும் எனக்கும் நன்கு தெரியும். இந்த முடிவோடு உங்களால் வாழ்க்கையை வாழ
முடியுமா என்ற கவலை எனக்கு இல்லை. காலத்தின் மீது முழு நம்பிக்கை உண்டு எனக்கு.
நமக்கு சாதகமாக அவன் செயல்படமாட்டானே தவிர, மறதிக்கு
நல்ல நண்பன் அவன். என்னை மன்னியுங்கள்.
மன்னிப்பீர்களா?
இக்கடிதம்
அத்தனை வேதனைகளுக்கும் முற்றுப்புள்ளிகளாக அமையட்டும்.
‘என்றும்’ என்ற
வார்த்தைக்கு உரிமையில்லா
நான்...
<---Previous Post ------ Next Post--->
__________________________________________
இது என் புது முயற்சி.
பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள்.
இது என் அன்பு வேண்டுகோள்...!
__________________________________________
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment