11/02/2022
------
அன்பு சகிக்கு,
என்னவென்று
உன் நலன் விசாரிக்க? அதை கெடுத்தவன் நான் என்ற குற்ற உணர்ச்சியோடு? நான்
இங்கு நலம். என்றுதான் நினைக்கிறேன். பல சந்தேகங்கள் தீர்ந்தன. என்னால் நீ பட்ட
பாடு போதுமானது என்று முடிவெடுத்தேன். மனதை சாந்தப்படுத்தினேன். நினைவிருக்கிறதா
சகி...? (சகி என்று அழைப்பதற்கு மன்னித்து பொறுத்துக்கொள்ளவும்).
மனதை சாந்தப்படுத்த நீதான் எனக்கு கற்றுக்கொடுத்தாய். நம் சந்தித்த முதல் நாளே, “மனம்
அமைதியாக இல்லையெனில் எந்த முடிவும் எடுக்க இயலாது, அதை
அமைதி படுத்துங்கள். முடிவோ, பதிலோ, தானே வந்து சேரும்” என்று நீ
சொன்னாய். எப்படி என்று புரியாமல் விழித்த எனக்கு, கண்மூடி
அமர்ந்து மூச்சினிலே கவனம் செலுத்த சொல்லிக் கொடுத்தாய். இறுக்க மூடிய இமைகளின் உள்ளே
இருக்கும் இருளின் பின்னால் போனால் வெளிச்சம் தெரியும் என்று தத்துவம் பேசிய
உந்தன் குரல்தான் எனக்கு அன்று வழிகாட்டியது. அது இந்த சூழ்நிலையில் உதவும் என்று
நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உதவியது. அமைதி படுத்தினேன். முடிவும்
எடுத்தேன்.
ஆனால்
அந்த முடிவை என்னால் எழுத முடியவில்லை. எழுத முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்
கண்கள் நீரில் மூழ்கி, மூச்சுமுட்டி, ஆழத்திற்கு
சென்று இருளையே அடைகிறது. அந்த இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துவர உன்
குரல் என்னோடு இருக்கபோவது இல்லை என்ற நினைப்பு வர வர இருதயமும் அந்த ஆழத்தின்
இருளில் மூழ்கிவிடுகிறது.
எனவே
நான் முடிவெடுத்தேன். இது எல்லாம் விதி செய்யும் சதி தான் சகி. நீயும் நானும்
என்ன செய்வோம்? விதியது வலியது..! நான் செய்த குற்றதிற்கு பழி ஏற்க ஒரு
ஆள் கிடைத்ததுபோல மனம் லேசாக இது உதவியது. முயற்சித்துபார்...! ஒருவேளை உனக்கும்
இது உதவலாம்.
சென்றதினி மீழாது.
இப்போது
கேள்வி பதில் செல்வோமா..? இதுவே கடைசி என்று நினைக்கிறேன். இதை எழுதுகையில் என்
உதட்டில் ஏனோ ஒரு மெல்லிய சிரிப்பு வருகிறது. நக்கல் சிரிப்பு போல. என்
உணர்ச்சிகள் என்னை நக்கல் செய்கிறது போல. இருக்கட்டும் இருக்கட்டும்.. அவைகளால்தான்
இந்த மொத்த பிரச்சனையுமே... இன்றோடு அவைகளுக்கும் ஒரு முடிவு கட்டுகிறேன். இந்த
கடிதம் முடியட்டும்.
முதல்
சந்திப்பை நினைவூட்டினாய் அல்லவா? ஆம். நன்றாக நினைவிருக்கிறது. எப்படி மனம் அதை மறக்கும்.
ஆனால் இன்று அதில் அதிகம் கவனம் செலுத்த மனம் விரும்பவில்லை. அந்த அழகு நினைவுகள்
எல்லாம் இன்று வேதனை தருகிறது. நினைக்க நினைக்க ‘ஏன்
இப்படி செய்தாய்?’ ‘ஏன் அந்த வார்தைகளை உதிர்த்தாய்?’ ‘ஏன்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தவறினாய்?’ ‘எதற்காக அவளை
இத்தனை பாடுபடுத்துகிறாய்?’ ‘அத்தனை சுயநலவாதியா நீ?’ என்று
என் மனம் என்னை பல கேள்விகள் கேட்டு கொல்கிறது சகி.
‘மன்னிப்பு
கிடைக்குமா?’ என்ன கேள்வி இது. இது எத்தனை அபத்தம் தெரியுமா? நான்
கேட்கவேண்டிய வரம் அது. எனக்கு நீ அதை மறுக்காமல் வழங்கவேண்டும்.
‘கோபம்
கொள்ள மாட்டீர்களே?’ இல்லை சகி என் மனதில் துளியளவும் உன்மீது கோபம் இல்லை. மாறாக
உன்னை இந்த நிலைக்கு தள்ளிய என் மீதும், என் ஆசைமீதும்தான்
கோபம் அதிகம் இருக்கிறது.
உன் ஒவ்வொரு
கேள்விக்கும் பதில் எழுத ஆசைதான் சகி ஆனால் என்ன பயன்? முடிவுகள்
எடுக்கப்பட்டது. முடிக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது. இனி
கேள்விகள் என்ன... பதில்கள் என்ன.. எல்லாம் முற்றுப்புள்ளிகள் தான். முற்றுப்புள்ளி
தனித்து நிற்பது தான் முடிவை குறிக்கும். இணைந்து நிற்பின் அது தொடரும் என்று
பொருள். தொடராத நம் கதைக்கு, இந்த கடிதம் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். கடைசி கடிதமாக
தனித்து இருக்கட்டும் சகி. சகி, உன்னை கடைசி முறையாக “சகி” என்று
அழைக்க விரும்பியே இந்த வரியை எழுதினேன். என் சுயநலத்தினால் பாதிக்கபட்ட உன் தாய்
தந்தை மற்றும் தம்பிக்கும் என் மன்னிப்புகள்.
நன்றி...!
முற்றுப்புள்ளி
வைக்கும்
தனி நான்.
<---Previous Post ------ Next Post--->
__________________________________________
இது என் புது முயற்சி.
பொறுமை காத்து மொத்த பதிவுகளையும் படியுங்கள்.
இது என் அன்பு வேண்டுகோள்...!
__________________________________________
அழகிய தமிழ் போல என்றென்றும் வாழ்க..!
Comments
Post a Comment