சிறுகதை - முதல் நாள்

முதல் நாள்

இந்த நிலை புதியது..!
விசித்திரமானது..!
ஏனோ பயமளிக்கிறது...!

குமுதா தன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு பேருந்து நிலையத்தை தேடி அலைந்துக் கொண்டிருந்தாள். மனதில் பல கேள்விகள் எழுந்தன. எப்போதும் போல அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவள் தந்தையோ, தோழிகளோ யாரும் அவளுடன் அன்று இல்லை.

"தனியா போயிட்டு வாடா... என்ன பயம்...? பொம்பளபுள்ளைங்க தைரியமா இருக்கணும்... போயிட்டு வா..."

இன்று வேலைக்கு செல்லும் முதல் நாள். 
காலையில் புறப்படும்போது அப்பா சொன்ன வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தது.

அதை காலையில் கேட்க மிக உற்சாகமாக இருந்தது. எண்பதுகளில் இதுபோன்று முற்போக்கு சிந்தனைகளுடைய அப்பாக்கள் மிக குறைவு. அப்படிப்பட்ட அப்பா கிடைத்தது தான் எப்பிறப்பிலோ செய்த புண்ணியம் என்று தன் வாழ்வை நினைத்து பெருமைப் பட்டுக்கொண்டாள். 

யோசித்துக்கொண்டே நடந்துக் கொண்டிருந்த குமுதா, தான் இரண்டாவது முறையாக அதே 'மகிழன் டீ ஸ்டால்'ஐ பார்ப்பதை உணர்ந்தாள்.

இரண்டு நிமிடத்திற்கு முன்புவரை தன் அப்பாவை எண்ணிப் பெருமைக்கொண்ட அவள், தான் இவ்வாறு வழி தெரியாமல் அலைந்து கொண்டிருப்பதற்கும் அப்பாவே காரணம் என்பதை எண்ணி அவளுக்கு கோபமாக வந்தது. என்னதான் தைரிய வார்த்தைகள் கூறினாலும், ஒரு நாள் தன்னுடன் வந்திருக்கலாம் என்று நொந்துக் கொண்டாள். 

"சார்... இங்க பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்கு?"

பலநேர தயக்கத்திற்குப் பின் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த காவல் துறை அதிகாரியிடம் வழி கேட்டாள்.

மாலை ஆறு மணிக்கு மேல் அந்த ரோட்டினில் வேலைக்கு செல்லும் பெண்கள் யாரும் தனியே வழியறியாமல் அலைவது எண்பதுகளில் கிடையாது. அண்ணனோ தம்பியோ தந்தையோ கணவரோ எவரேனும் ஒருவர் உடன் இருந்து அழைத்து செல்வதே வழக்கம். குமுதாவை கண்ட காவல்துறை அதிகாரி அவளை மேலும் கீழும் பார்த்தார். 

'ஐயையோ... இவர் ஏன் இப்படி பாக்குராரு... அப்பா... எல்லாம் உங்களால தான்... இன்னிக்கு நான் வீடு வந்து சேந்துட்டா... நீங்க காலி...!'

மனதினுள்ளே அப்பாவை திட்டியபடி இருந்தாலும் முகத்தில் பயமும் மனதில் படபடப்பும் பெரிதாக இருந்தது.

பதிலுக்காக காத்திருந்த குமுதாவிற்கு அவ்வதிகாரியின் திசை காட்டிய சைகையே பதில். அவர் கை காட்டிய பக்கம் குமுதா திரும்பிப் பார்த்தாள். இத்தனை நேரம் அவள் தேடி அலைந்த பேருந்து நிலையம் அவள் கண்ணெதிரேயே இருந்தது.

வழி காட்டிய அதிகாரிக்கு நன்றிகூட சொல்லாமல், அத்திசை நோக்கி நடக்க தொடங்கினாள். 

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், அவள் கண் என்னும் குளத்தினில் கண்ணீர் என்னும் நீர் பெருகி கொண்டே வந்தது. இந்த சிறிய விஷயம் கூட தனக்கு தெரியவில்லையே என்று தன் அறியாமையை எண்ணி தன்னை தானே நொந்துக் கொண்டாள். 

பேருந்து நிலையத்தில் நின்றாள். 
பேருந்து வந்தது. 
வீட்டை அடைந்தாள். 

அப்பா சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.  ஓடிச்சென்று அவர் அருகில் விழுந்தாள். கலங்கிய கண்களோடு நடந்த சம்பவத்தை அதே பதட்டத்துடன் மூச்சுவாங்க சொல்லி ஓவென்று முகம்பொத்தி அழத்தொடங்கினாள். 

"எனக்கு எதுவுமே தெரியல.. நா இனிமேல் வேலைக்கும் போகல எங்கேயும் போகல" 

அப்பா அவளை கருணை கண்களோடு பார்த்தார். 

"எதுவுமே தெரியலனா எல்லாமே கத்துக்கோ. வெளியவே போகாமல் இருப்பது முடிவல்ல"

அப்பாவின் பதில் கேட்டு தலை தூக்கி பார்த்தாள் குமுதா. 

"இங்க பாரு டா.. ஏதோ பொறந்தோம் இருந்தோம் இறந்தோம்னு இருக்கிறது ஒரு வாழ்க்கையா? உலக விஷயங்கள் ஆயிரம் இருக்கு. உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ கத்துக்கோ. நீ கத்துகிட்டது நாலு பேருக்கு பயன்பட்டா இன்னும் சிறப்பு! 

இப்போவே நம்ம சொந்தகாரங்க கேக்ராங்க, பொம்பள பிள்ளய போய் வேலைக்கு அனுப்ரியே அதுக்கு என்ன தெரியும்னு... 

என்ன பொறுத்தவரை ஆம்பள பிள்ள பொம்பள பிள்ள எல்லாம் ஒண்ணுதான். எல்லாரும் இந்த உலகத்துல தான வாழ்றோம். எல்லார்க்கும் இந்த உலகம் பொது தான.. இவன் இதை தெரிஞ்சிகிட்டா போதும். இவள் இதை தெரிஞ்சிக்க கூடாதுனு சொல்றவன்லாம் முட்டாள். தன்னலத்துக்காக பேசரவங்க. யாரா இருந்தாலும் கத்துக்கனும்னு நினைச்சா கத்துக்கனும்...! கத்துக்கலாம்...!

தெரியலனு வீட்ல இருக்க போறியா..? தெரிஞ்சிக்கணும்னு கத்துக்க போறியா..? உன் இஷ்டம் டா". 


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 
குறள்:612

கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் என்பது பாடலின் பொருள்.


Written By
எழில் & டெக்ஸ்ட்டி  

Comments

  1. அருமையோ அருமை. குறள் விளக்கமும் போட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

    ReplyDelete

Post a Comment