கொரோன காலத்துக் கதைகள்
1.தேவதை
2. காலம்
“பள்ளிக்கூடம் பயில்கயிலே ஆலங்கட்டி மழைக் கண்டோம்...! கல்லூரி பயில்கயிலே வெள்ளம் வந்து முழு நாடும் சேதம் அடைந்து அதிலிருந்து மீளக்கண்டோம்...! இன்று நோய் தொற்று காரணமாக உலகமே அடைந்து கிடக்க காண்கிறோம்...!
சந்தோஷம்... சோகம்... ஏற்றம்... தாழ்வு... பாதிப்பு... மீட்ப்புப்பனி... அத்தனையும் கண்டோம்...!
இன்னும் என்னென்ன காண்போம்...? காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.”
கொரோனா காலம் முடிந்த பிறகு கல்லூரி திறந்த நாளன்று கந்தன் தன் கல்லூரி நண்பர்கள் முன்னால் நின்று முதல் நாள் உரையாற்றினான்.
அவன் பேச்சும் அவன் கூறிய எடுத்துக்காட்டுகளும் அநேகரை கவர்ந்தது.
“இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்தில் பிளேக் நோய் பரவத்தொடங்கியது. கொரோனா போலவே அதுவும் சுவாசம் வழியாகவே மனிதர்களை பலிக்கொண்டது. அதிலிருந்து மீண்டு வந்து இத்தனை காலமாக மருத்துவ துறையும் தொழில்நுப்பத் துறையும் அடைந்திருக்கும் உயரம் நாம் எல்லோரும் அறிவோம். அப்படி இருக்க நாம் பயம் கொள்ள தேவையில்லை. இருந்த போதிலும் இந்த நோய்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டு மரணித்த அணைத்து ஆன்மாக்களும் சாந்தம் அடைய அந்த இறைவனை வேண்டுவோம்.”
கந்தன் பேசி முடித்தான். அனைவரும் ஒரு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தினார்கள். கூட்டம் கலைந்தது.
“நல்லா பேசுன டா...! நரையா ப்ராக்டிஸ் பண்ணியோ...?” பிரியா கந்தனை வாழ்த்திக்கொண்டே கேலியாக கேட்டாள்.
“இல்லடி... எல்லாம் மனசுல இருந்து பேசுனது....”
“தெரியும் டா... சும்மா கிண்டலுக்காக கேட்டேன்...”
“ம்ம்ம்...”
இருவரும் மௌனமாக நடந்தார்கள். தினம் அமரும் பெஞ்சில், கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு அமர்ந்தார்கள். லாக்டவுன் முன்பு தினம் தினம் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடும் இடம் அது. இன்று இவர்கள் இருவர் மட்டும்.
“ஐ மிஸ் தெம்” பிரியா சொன்னாள்.
“மீ டூ...”
“ம்ம்ம்...” இருவரும் பெருமூச்சி விட்டு மீண்டும் அமைதியானார்கள்.
நாட்கள் முன்பு போல் இல்லை. மீண்டும் அந்த காலம் திரும்புமா? தெரியவில்லை. அடிக்கடி கை கழுவலாம், தினம் இருமுறை குளிக்கலாம், வெளியே சென்று வந்தால் கை கால்கள் கழுவலாம், சமூக இடைவெளி கடைபிடிக்கலாம், இத்தனையும் செய்தாலும் அனைவரின் மனதில் பதிந்துள்ள இந்த பயம் காணமல் போக இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ தெரியவில்லை.
பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி வந்த பிறகும் இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கூட்டம் இருக்கும் என்பதால் வெளியே அனுப்பவில்லை. கந்தனும் பிரியாவும் கல்லூரியின் ச்டோன் பெஞ்சில் அன்று தனிமையில் அமர்ந்திருந்ததற்கு அதுவே காரணம்.
“என்னடா இது... பத்து பேருக்கு கம்மியா நம்ம இங்க உக்காந்ததே இல்ல... இப்போ பாரு... எல்லாம் வீட்ல ஜாலியா உக்காந்து நெட்ப்ளிக்ஸ் பாத்து ஸ்டேடஸ் போடுதுங்க”
“விடுடி.. பசங்களும் கண்டிப்பா நம்மள மிஸ் பண்ணுவானுங்க....”
“கிளிசானுங்க....”
“கொஞ்ச நாள்ல எல்லாம் சரி ஆய்டும்...”
“எவ்ளோ நாள்...?”
மீண்டும் மௌனம் நிலவியது.
கல்லூரி மணி ஒலித்ததும் அவர்கள் வகுபிற்குச் சென்றனர்.
“காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்”.
நாம் காத்திருப்போம்...!
_________________________________________________________________
3.அவமானம்
“எல்லாரும் குறை சொல்லுற அளவுக்கு இது ஒன்னும் அவ்ளோ மோசம் இல்ல...” புலம்பிக்கொண்டே வந்தான் கந்தன்.
“என்ன டா ஆச்சி... யாரு மோசமில்ல?” பிரியா கேட்டாள்.
“நம்மெல்லாம் வெளிய போகாததுனால ஊரு நல்லா இருக்கு... உலகம் நல்லா இருக்கு... பொல்யூஷன் இல்லனு ஊரு பூராவும் சொல்லிட்டு சுத்துராங்களே அது” மகந்தன் தொடர்ந்து வந்த மணி சொன்னான்.
அன்று ஞாயிறு, ஒரே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்று மொட்டை மாடியில் ஒன்று கூடினர். கொரோனா காரணமாக வீட்டினுள் அடைந்து கிடக்கும் வாலிபக் கூட்டத்தில் இவர்களும் ஒன்று. வாரம் முழுக்க வீட்டிலேயே வேலை செய்யும் இவர்கள் அறுவரும் ஞாயிறு அன்று இப்படி சந்திப்பது வழக்கம்.
கந்தன், பிரியா, மணி, மேகலா, அருண் மற்றும் அனன்யா. அனைவரும் IT கம்பெனியில் பணிபுரிபவர்கள். வெவ்வேறு கம்பெனி என்றாலும், இவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர்.
கந்தன் வாழ்வில் எது நடப்பினும் “பார்த்து கொள்ளலாம்” என்று பாசிடிவாக பார்க்கும் மனம் உள்ளவன். பிரியா சில சமயம் கோபப்படுவாள் ஆனால் மற்றவர்கள் மீது வைக்கும் பாசத்தில் அவளே முதலிடம். மணி எதையுமே ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். எல்லாம் விதிப்படி நடக்கும் என்று எண்ணுபவன். மேகலா மணியின் பெண் உருவம். இருவருக்கும் மனம் ஒத்து போவதாலேயே அதிக வாக்குவாதம் வரும். அருண் வேலை என்றால் புலியாகவும் மற்ற இடங்களில் பூனையாகவும் இருப்பான். மற்றவர்கள் பேசுவதை நன்கு அர்த்தம் அறியாமல் பதில் பேசுவது குற்றம் என்று கருதும் ஒரு நல்ல உள்ளம்.
“மணி சொன்னது ஒரு வகையில சரிதான....?” என்றாள் மேகலை.
“ஏய்... அது நான் சொல்லல... ஃபேஸ்புக்ல வாட்சாப்ல எல்லாம் வருதுல அத பாத்து சார் அப்செட்டா இருக்காரு”.
“விடு மச்சி... பேசுறவன் என்னவேனா பேசுவான்” அருண் சொன்னான்.
“ஒரு நியாயம் வேணாமாடா?” பிரியா நக்கல் செய்தாள்.
“அத தான் நானும் கேக்றேன்” கந்தன் தொடர்ந்தான்.
“மக்கள் இல்லாத நாடு நல்லா இருக்கு... நகரம் நல்லா இருக்கு... ரோடு நல்லா இருக்கு.... பீச் நல்லா இருக்கு.... நம்மள நாமளே அவமானபடுத்துறோம். மக்கள் இல்லாம இதெல்லாம் இருந்தா என்ன...? இல்லனா என்ன?”
“ஓசோன் தன்ன தானே சரி பண்ணிக்க ஆரமிச்சி பல வருஷம் ஆச்சி. இப்போ வந்து 2 மாசம் யாரும் வெளிய வராதனால தான் சரி ஆச்சினு போஸ்ட் போடரானுங்க”.
“தன்னோட கடமைய ஒழுங்கா செய்றது இல்ல... எவனாச்சும் செஞ்சா அத கொற சொல்றது.... யாரோ இதெல்லாம் சரி செய்ணும்னு எதிர்பாக்குறோம் நம்ம என்ன செய்யணும்னு எவனும் யோசிக்கிறது இல்ல”
ஒரு வழியாக கந்தன் முடித்தான். அங்கு இருந்து மற்ற நால்வரும் அவன் உதிர்த்த வார்த்தைகளை சிந்தனையில் போட்டு அமைதியாக சிந்தித்தனர்.
“டேய்... சாப்பாடு ரெடி... வரிங்களா இல்லையா?” அனன்யா அனைவரையும் சமையல் முடித்துவிட்டு அழைத்தாள்.
“காப்பாத்திட்டடி ஆத்தா...” முதல் ஆளாக தப்பி ஓடினான் அருண்.
கடமை அறிந்து செயலாற்றுவோம்!
_________________________________________________________________
4.அழகு
அன்று காலை எப்போதும் போல விடிந்தது. கந்தன் தன் படுக்கை விட்டு எழுந்தான். காலைக்கடன்களை முடித்துவிட்டு அம்மாவிடம் டீ கேட்டு குடித்தான். குளித்துவிட்டு வெளிவந்து ஹாலில் அமர்ந்தான். டிவி போட மனம் வரவில்லை. செல்போனில் பேஸ்புக்கோ வாட்சாப்போ போக மனம் விரும்பவில்லை. காரணம் அவைகளில் ஒளிபரப்பப்படும் கொரோனாப்பற்றிய செய்திகளும், பதிவிடப்படும் போன்மிகளும் தான்.
தொடர்ந்து அவைகளை பார்க்க பார்க்க மனிதர்கள் இல்லாத உலகம் அழகாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. அவ்வாறு தோன்றியதும் அது மடத்தனம் என்றும் தோன்றியது.
யோசித்துக்கொண்டே கந்தன் வீட்டின் வாசலுக்கு வந்தான். தன்னுடைய இருசக்கர வாகனம் போர்வை போத்தி அழகாக உறங்குவதைக் கண்டான். மனம் லேசாகியது. அவனுக்கு வண்டி ஓட்டுவது என்றால் பிரியம். தன் வண்டியின் அருகில் அமர்ந்தான். சமீபத்தில் தன் நண்பர்கள் இருவரோடிணைந்து தமிழத்தின் எல்லைகள் எங்கும் பயணம் செய்தது ஞாபகம் வந்தது. மனம் அதில் லயித்தது.
பயணம் தொடங்கிய அன்று காலை எட்டு மணியளவில் ஓ.எம்.ஆர். சாலையில் மூவரும் சந்தித்து அங்கிருந்து பயணம் தொடங்கியது. தமிழக எல்லை தாண்டி பாண்டிச்சேரி சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து முடிக்கும்போது மணி பதினொன்று. காலை உணவு முடிக்கவில்லை என்பதே அப்போது தான் ஞாபகம் வந்தது. அது விடுமுறை நாளளில்லை எனவே கடைகள் எல்லாம் மூடும் நேரம் ஆகியிருந்தது. சிற்றுண்டி கடைகளை தேடவே பன்னிரெண்டு ஆகிவிட்ட நிலையில், இவர்கள் சுற்றித்திரிவதைக் கண்ட ஒரு பெரியவர் என்ன என்று விசாரித்தார். கந்தன் விவரம் சொல்லவும், மூடுவதற்காக எல்லாம் தயார் செய்யப்பட்டிருந்த தன் கடைக்கு அழைத்துச் சென்றார். அவர் துணைவியாரிடம் விவரம் சொன்னார். இன்முகத்தோடு மூவரையும் வரவேற்று அமரச்செய்தார்கள். பெரியவர் எங்கோ சென்று தோசை மாவும் முட்டையும் வாங்கி வந்தார். மூவருக்காக அடுப்பு மூட்டப்பட்டு சமைக்கப்பட்டது. அந்த உள்ளங்கள் எத்தனை அழகானது.
பாண்டிச்சேரி தாண்டி வேளாங்கண்ணி போகும் வழியில் மூவருக்கும் இலேசாக கண் அசந்தது. எங்காவது ஒரு டீ கடையில் நிறுத்தி சற்று ஓய்வெடுக்கத் தோன்றியது. சாலை ஓரம் ஒரு கடையில் ஓய்வெடுக்க முடிவுசெய்தனர். அப்பளம் பொறித்துக்கொண்டிருந்த அக்காவிடம் அனுமதி பெற்று, திண்ணையில் தங்களது உடைமைகளை எல்லாம் வைத்து விட்டு இருவர் உறங்க கந்தன் மட்டும் பொருட்களுக்குப் பாதுகாப்பாக விழித்திருந்தான். ஓய்வு முடிந்து அங்கிருந்து கிளம்பும்போதுதான் தெரிந்தது, அது கடையல்ல, அப்பளம் பொரித்துக்கொண்டிருந்த அக்காவின் இல்லம் என்று. உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்காக ரேடியோ அமர்த்தப்பட்டது. தண்ணீர் கொண்டுவரப்பட்டது. கந்தனிடம் கைவிசிறி அளிக்கப்பட்டது. விடைப்பெறுகையில், “ரொம்ப தூரம் போறாப்ல இருக்கு.... பாத்து பத்தரமா போங்க... நீங்களும் யாருக்கும் தொல்ல தராம, யார்னா தொல்ல தந்தாலும் உங்க வேலைய பாத்துட்டு பத்தரமா வீடு போய்சேரனும்” என்று வழியனுப்பினார்கள்.
அந்த பயணத்தில் இப்படி சந்தித்த மனிதர்கள் ஏராளம். இந்த உலகமும் அதில் வசிக்கும் மனிதர்களும் அழகுதான். கந்தன் சிந்தனையில் சிரித்துக்கொண்டான்.
“அழகு, ரசிக்கும் கண்களுக்கும் மனதிற்கும் மட்டுமே காட்சியளிக்கும்.
ரசிக்கப் பழகுவோம்...!
வாழ்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம்...!”
_________________________________________________________________நன்றி...!

Comments
Post a Comment