கொரோனாவிற்கு கடிதம்


பூமி

2020

விட்டுப் பிரிந்த கொரோனாவிற்கு,

நீ ஒன்றும் அத்தனை பெரிய கொடூரம் இல்லை தெரியுமா...! தமிழகத்தில்(1876 – 1878) ஏற்பட்ட பஞ்சம் பற்றி அறிவாயா நீ? பசி வந்தால் பத்தும் பறந்து போகும். மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் இவை எல்லாம் பறந்து மறந்து எலிகள் உண்டு, எறும்புகள் சேமித்த தானியங்களும் உண்டு பசி தீராது மடிந்து போனாலும் மீண்டுவரும் வழி கண்டறிந்து வாழ்ந்து காட்டியவர்கள் நாங்கள்.

காலரா நோய் பற்றி கேள்வியுற்றதுண்டா...? காரணமே புரியாமல் மாண்டவர்கள் பலர். அதனிலிருந்தும் மீண்டோம்.  பிளேக்...? உன்னை போலவே காற்றில் கலந்து மூச்சின் வழியே உடலை கெடுக்கும் நோய் அது. இரண்டாம் உலகப்போரின்போது எண்ணற்ற உயிர்களை தன்வசப்படுத்திக்கொண்டது. அதிலிருந்தும் மீண்டுவந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு நீ ஒன்றும் அத்தனை பெரிய கொடூரம் இல்லை! உன்னை நாங்கள் கடந்து வென்றதில் அத்தனை பெரிய ஆச்சரியமும் இல்லை!!

அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு வித்தியாசம் மட்டுமே. அன்று நோய் பற்றிய செய்திகள் மட்டுமே பரப்பப்பட்டது. இன்று, செய்திகளோடு சேர்ந்து செய்தியைப் பற்றிய வதந்திகளும் பரப்பப்படுகின்றது. தினம் தினம் வறுமையாலும், உடல் நலம் குறைபாட்டினாலும் மாண்டவர்களின் எண்ணிகையை விடவும் உன்னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தில் மூன்று பங்கு தான்.

எனினும், நீ வந்து மறைந்ததால் ஏற்பட்ட நன்மைகளும் பல. முன்னோர்கள் சொன்னார்கள்... முன்னோர்கள் சொன்னார்கள்... என்று பல யுகங்களாக சொல்லப்பட்ட பல செயல்கள் அறிவியல் என்று நாங்கள் உணர்ந்தோம். நோய்த்தொற்றோ இல்லையோ சமூக இடைவெளி நல்லது என்பதை உணர்ந்தோம். இயற்கை தன்னை சீர் படுத்திக் கொண்டது. பல நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு நீ மறைந்தாய் என்ற செய்தி மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. அதே ஊரடங்கின்போது நாங்கள் செய்த சேட்டைகள் முடிந்துவிட்டது என்றெண்ணும்போது இலேசான சோகமும் அடைந்தோம்.

பிடிக்கிறதோ இல்லையோ தினம் தினம் செய்யும் அன்றாட பணிகளில் இருந்து உன்னால் சில நாட்கள் விடுமுறை பெற்றோம். மனதிற்கு என்ன பிடிக்கிறது என்று யோசிக்க நேரம் கிடைத்தது. நான் என்ற தேடல் இலேசாக தலை தூக்கியது. உறவினர்களிடம் நிம்மதியாய் உரையாட நேரம் கிட்டியது. விலகி இருந்த போதிலும் தொழில்நுட்பம், தொல்லையான இன்பமாகிய நண்பர்களும், இன்பமான தொல்லையாகிய காதலர்களும் இணைந்திருக்க வழி செய்தது. பல இணையதள விளையாட்டுகளும், பல வகையான சமையல் குறிப்புகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

என்ன நேர்ந்தாலும் வீட்டில் தாய்க்கும், தாய் ஸ்தானத்தில் இருக்கும் எந்த ஒரு பெண்ணிற்கும், மருத்துவ துறைக்கும், காவல் துறைக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் என்றும் ஓய்வும் இல்லை, விடுமுறையும் இல்லை என்றறிந்தோம். நீ மறைந்த பிறகு, அதிக பாராட்டுப் பெற்றவர்கள் அவர்கள் தான். எப்போதும் போல கொஞ்ச நாட்களில் உன்னை மறந்தது போலவே அவர்களின் சேவைகளையும் மறந்தோம். இது மனித இயல்பு என்று சொல்ல கேவலமாக இருந்தாலும், இதுவே நிதர்சனம்.

நீ தங்கி மறைந்த கொஞ்ச நாட்களில் மனிதன் வாழ அத்தியாவசியம் எது? தேவையற்ற ஆடம்பரம் எது? எதை எல்லாம் இத்தனை நாட்கள் தேவையின்றித் தேக்கி வைத்தோம்? எத்தனை அலுவலகங்களுக்கு உண்மையில் ஒரு கட்டிடம் தேவை? இத்தனை நாள் மெய் என்றெண்ணியவை எத்தனை பொய்? பொய் என்றெண்ணியவை எத்தனை மெய்? என்று பல கோணங்களில் வாழ்க்கையை காண நேரம் கிடைத்தது.

நீ மறைந்த பிறகு மீண்டும் இயல்புக்கு திரும்ப சிறிது கடினமாகவே இருந்தது. உடல் வலிமையை விடவும் மனவலிமை மிகுதியாக தேவைப்பட்டது. முன்பு எதை எல்லாம் செய்தோம்? இனி எதை எல்லாம் செய்யலாம்? செய்யக்கூடாது? எது இயல்பு? என்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் உதித்து தீர்வுக்கு ஏங்கினோம். எப்போதும் போல காலம் ஒரு நல்ல பதில் தந்தது. காலத்தின் பதில் இது என்றறியாமலேயே அதை நாங்கள் பின்பற்றத் தொடங்கினோம், எப்போதும் போல.

நீ மறைந்ததில் மிக்க மகிழ்ச்சி...!

மீண்டும் உன்னை காண விரும்பாத

-          மனிதர்கள்

 

எத்துயர் கண்டபோதிலும் மனிதம் ஒன்றே வெற்றி பெறும்...!

ஒற்றுமையின் வேரிலுள்ள வலிமை நினைவிருக்கும் வரையில்...!

                                                                                                              - தமிழின் காதலன்!

Comments

  1. Wow!! Letter on a positive note... Nice one...
    Keep doing my dear...

    ReplyDelete
  2. Positive vibe...
    best of work mr.tamizin kadhalan

    ReplyDelete

Post a Comment